Pages

04 March 2013

தேவையா?





நேற்று எங்கள் வீட்டுபக்கமாக இரண்டு இளைஞர்கள் அல்லது பெரிய சிறுவர்கள் கட்டிப்புரண்டு சண்டைப்போட்டுக்கொண்டிருந்தனர். ஒரு சிறுவனின் தலையில் அடிபட்டு ரத்தம் முகத்தை மூடியிருந்தது. அவனுடைய மூக்கிலிருந்து ரத்தம் வந்துகொண்டேயிருந்தது. இருவருக்கும் மூர்க்கமான சண்டை. ஊரே நின்று வேடிக்கை பார்க்க அவர்களுடைய சண்டை தொடர்ந்து நடந்துகொண்டேயிருந்தது.

இன்னொருவனின் முழங்கையிலிருந்து ரத்தம். அவனுடைய காதுமடல்களிலும் அடிபட்டிருக்க வேண்டும். அதிலிருந்தும் ரத்தம். இருவருடைய உடைகளுமே கிழிந்தும் ரத்தம் தோய்ந்தும் இருந்தன. உடைகள் நிச்சயமாக அதிக விலை பெறக்கூடியவைதான். ஒரளவு வசதியான மிடில்க்ளாஸ் வீட்டு பையன்கள் என்பதை அவதானிக்க முடிந்தது. அந்த இருவருமே ப்ளஸ்டூவோ கல்லூரி முதலாண்டோ படிக்கிறவர்களாக இருக்கவேண்டும்.

இருவரில் ஒருவன் கையில் கிடைத்த பெரிய கற்களை எடுத்து இன்னொருவன் மேல் வீசுகிறான். அது எதிரில் இருப்பவனை காலை பதம் பார்க்கிறது. மீண்டும் ரத்தம்.

அங்கே நாங்கள் போவதற்கு முன்னால் இருவரையும் விலக்கிவிட சென்ற ஒரு பெரியவரையும் பிடித்து தள்ளிவிட அவரும் குப்பைத்தொட்டியில் மோதி விழுந்துருக்கிறார். இருவருடைய செல்ஃபோன்களும் பர்சும் கூட கேட்பாரற்று கிடந்தன.

இருவருமே நாம் நினைக்கவும் தயங்குகிற வசைசொற்களால் திட்டிக்கொண்டே கட்டிபுரண்டு சண்டையிட்டபடியிருந்தனர். இருவருக்குமே வயது 17அல்லது 18தான் இருக்கவேண்டும். என்ன சண்டை என்பது புரியவில்லை. அவர்களை பிரித்துவிடுகிற முயற்சியை யாருமே செய்யவில்லை. காவல்நிலையத்துக்கு அலைபேசியில் அழைத்து விஷயத்தைச்சொன்னோம்.

நல்லவேளையாக சண்டை முற்றி அசம்பாவிதமாக ஏதும் நிகழ்வதற்கு முன் ஒரு கான்ஸ்டபிள் வந்து சண்டையை நிறுத்தினார். அவருடைய லத்தியாலேயே இரண்டு போட்டதற்கு பிறகுதான் இரண்டுபேருமே கொஞ்சமாவது அடங்கினர். இருவரிடமும் யார் என்ன என்கிற விபரங்கள் கேட்டால்.. எதுவுமே சொல்ல மறுக்கின்றனர். அழவும் தொடங்கிவிட்டனர். சார் வீட்டுக்கு தெரிஞ்சா பிரச்சனையாகிடும் என்கிறான் முகத்தில் ரத்தம் வடியும் ஒருவன்.

இருவருக்குமே கடுமையான போதை தலைக்கேறியிருந்தது. நன்றாக குடித்திருப்பார்கள் போல. இருவருமே நண்பர்களாம். ஒரே பைக்கில் ஒன்றாகத்தான் குடிக்க வந்திருக்கிறார்கள்.