சென்ற வார இறுதியில் இரண்டு திரைப்படங்கள் வெளியானது. ஒரு படம் மணிரத்னம் இயக்கிய பிரமாண்டமான கடல். இன்னொன்று விக்ரம் மற்றும் ஜீவா இணைந்து நடித்திருக்கும் டேவிட். இரண்டு படங்களுக்கும் ஏகப்பட்ட தொடர்புகள் உண்டு.
இரண்டுமே கடல் தொடர்பான படங்கள். டேவிட் படத்தின் இயக்குனர் பிஜோய் நம்பியார் கடல் பட இயக்குனர் மணிரத்னத்தின் சிஷ்யர்! கிறித்தவர்களின் வாழ்க்கை பின்னணியில்தான் இரண்டுபடங்களுமே இயங்குகின்றன. இரண்டிலும் பாதிரியார்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். சாத்தானுக்கும் கடவுளுக்கும் நடக்கிற அக மற்றும் புற யுத்தம்தான் இரண்டுபடங்களிலுமே கதையின் கரு. இரண்டுபடங்களிலும் இரண்டு வெவ்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன.. இரண்டுமே வித்தியாசமான முயற்சிகள். அதோடு இரண்டு படங்களுமே நம் பொறுமையை சோதிக்கக்கூடிய மரணமொக்கைகள்!
மணிரத்னத்தின் முந்தைய படமான ராவணன் பார்த்து அகில உலகமே அய்யோ எங்களை விட்ருங்க மணிசார் எங்களால முடியல என வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அலறியதை அனைவருமே அறிவோம். மணிசார் அந்த சாதனையை இந்த படத்தில் முறியடிக்க முயற்சி செய்திருக்கிறாரோ என்கிற சந்தேகங்களும் உண்டு.
கிரிக்கெட்டில் உலக லெவன் அணி என்று ஒன்றை உருவாக்கி, உலக சாம்பியனாக இருக்கிற நாட்டின் அணியோடு காட்சி போட்டியொன்றில் மோதவிடுவார்கள். உலக லெவன் அணியில் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவார்கள். அது கனவு அணியினைப்போல இருக்கும். இப்படி ஒரு டீம் இருந்தா யாராலயும் ஜெயிக்கவே முடியாதுப்பா என்று நினைக்கிற அளவுக்கு வலுவான அணியாக அதை உருவாக்குவார்கள்.
ஆனால் பாருங்க இதுவரை அதுபோல உருவாக்கப்பட்ட எந்த உலக லெவன் அணியும் உருப்பட்டதாக சரித்திரமே கிடையாது. மிகமோசமான முறையில் அந்த அணிகள் மண்ணைக் கவ்வும். அதுதான் கடலுக்கும் நடத்திருக்கிறது.
TOO MANY COOKS SPOIL THE BROATH என்றும் ஒரு பழைய வாக்கு இருக்கிறது. அதுபோலவேதான் மணிரத்னம்,ரஹ்மான்,ராஜீவ்மேனன்,ஸ்ரீகர்பிரசாத் என ஜாம்பவான்களின் டீம். போதாக்குறைக்கு இலக்கியப்புலியான ஜெயமோகனும் வேற! என்னமாதிரியான கூட்டணி. அர்ஜூன் வில்லன். அர்விந்த்சாமி ஆப்டர் ஏ லாங் டைம் ரிட்டர்ன். கார்த்திக் பையன் ராதாபொண்ணு.. அடடா!
ஆனால் படம் பார்த்து முடித்தபின் இந்த கதைக்கு ஏன் இவ்ளோ பேர கஷ்டப்படுத்திருக்காரு மணிசார்.. ஏன் இவ்ளோ செலவு.. இதை ரொம்ப சாதாரணமான ஆளுங்களை வச்சு ரொம்ப ரொம்ப குறைஞ்ச செலவுல எளிமையா எடுத்திருந்தாலே அழகா வந்திருக்குமே... என்கிற எண்ணம்தான் எஞ்சி நிற்கிறது.
ஒரு சாதாரண கதையில் தேவையில்லாத பிரமாண்டத்தையும் ரிச்னஸ்ஸையும் வலிந்து திணித்தால் என்னாகும் என்பதற்கு கடல் ஒரு நல்ல உதாரணம். சில கதைகளுக்கு எளிமைதான் அழகே.. உதாரணத்துக்கு இதே மணிரத்னம் இயக்கிய மௌனராகம் படத்தை பல கோடி செலவில் பிரமாண்டமாக எடுத்தால் எப்படி இருக்கும்!
கடலின் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஒருவித அன்னியத்தினை உணர முடிகிறது. தாஜ்மகால் என்கிற படம் பார்க்கும்போது நாம் பார்ப்பது தமிழ்படம்தானா அல்லது பீகாரில் எடுக்கப்பட்ட டப்பிங் படமா என்று சந்தேகம் வந்து பக்கத்து சீட்டு நண்பரிடம் கேட்டது நினைவிருக்கிறதா..? அதேதான். இதுபோன்ற மீனவ கிராமம், சந்தை, மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கை.. எல்லாமே கொஞ்சமும் கதையோடு சேராமல் தனித்து நிற்கின்றன. எல்லாமே செட்டுதான்.. அங்கே சுற்றுகிறவர்கள் எல்லோருமே நடிகர்கள்தான் என்றுதான் தோணுதே தவிர.. அந்த கடல் வாசனையும் முரட்டு மனிதர்களையும் நம்மால் எங்குமே பார்க்க முடியவில்லை.
படத்தின் இயக்குனர் ஒவ்வொரு காட்சியிலும் எதையோ நிரூபிக்க ரொம்பவே மெனக்கெடுகிறார். பைபிளின் வார்த்தைகளை ரொப்பி ரொப்பி ஜெயமோகன் வசனாபிஷேகம் பண்ணுகிறார். ராஜீவ்மேனன் கேமரா வேறு அவ்வளவு அற்புதமாக இருக்கிறது.. ஆனால் காட்சியின் தன்மையை பார்வையாளனின் மனதில் பதிக்கிற ஒளியும் நிறமும்தானே நமக்கு வேணும்.
நாகர்கோவிலோ தூத்துக்குடியோ கொஞ்சம் எடக்கு மடக்கான தமிழில் பாத்திரங்கள் பேச.. அதை புரிந்துகொள்ள நாம் போராடிக்கொண்டிருக்கும்போது நடுவே ஜிச்சாம் பிச்சாம் பக்காம்.. பிக்காம் என ரஹ்மான்சார் வேறு டிஸ்டர்ப் பண்ணுகிறார்.
செட் ப்ராப்பர்ட்டி தொடங்கி வசனங்கள், கதாபாத்திரங்களின் உடை நிறங்கள் என பார்த்து பார்த்து பலவிஷயங்களும் செய்திருந்தாலும் எல்லாமே கதையோடு ஒட்டாமல் எளிய மனிதர்களின் வாழ்க்கையை பதிவு செய்யாமல் தனித்து நிற்பதே படத்தின் மிகப்பெரிய சறுக்கலாக இருக்கிறது.
சமகாலத்தில் தெலுங்கு சினிமாவின் மிகமுக்கியமான திறமையான நடிகையான லட்சுமி மஞ்சுவை ஏன் கொசுறுபோல பயன்படுத்தினார் என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. அதோடு அர்ஜூன் ஏன் படம் முழுக்க ‘’நான் சாத்தான்டே நான் சாத்தான்டே’’ என சொல்லிக்கொண்டேயிருக்கிறார். அவர் இதற்குமுன்பு பல படங்களில் ஹீரோவாக நடித்தவர்தான்.. முதல்முறையாக வில்லனாக நடிக்கிறார்தான்.. அதற்காக அவர் வில்லனாகிவிட்டார் என்று படம் முழுக்க சொல்லிக்கொண்டே இருக்கவேண்டுமா.. மக்களே புரிந்துகொள்ள மாட்டார்களா? அர்விந்த்சாமி எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்.. ம்ம் ஆன்ட்டிகள் சாபம் மணிசாரை சும்மாவிடாது பார்த்துக்க மக்கா!
படம் பார்த்து முடித்து வெளியே வரும்போது ஆவிகளின் எழுப்புதல் சுவிஷேச கூட்டத்தில் இரண்டு மணிநேரம் இடைவிடாத பிரசங்கம் கேட்ட உணர்வு.. பரலோகத்தில் இருக்கிற பரமபிதாவே இறங்கிவந்து நம் தலையில் கைவைத்து ஆசிர்வதித்து ஞான்ஸ்தானம் வழங்கியதுபோல உணரமுடிந்தது. பாப்கார்ன் அப்பமாகவும் ஐஸ்க்ரீம் யேசுவின் ரத்தமாகவும் மாறியதைப்போலொரு மாயை!
இதுதான் இப்படி என்று சிஷ்யப்பிள்ளை பிஜோய் நம்பியாரின் படம் பார்க்க போனால்.. கொடுமை கொடுமைனு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை கலாமாஸ்டரோட ஆடுதாம் என்பதற்கிணங்க.. டேவிட் படம் கடலோடு போட்டியிட்டு நம்மை துன்புறுத்துகிறது. ஆனாலும் கடல் அளவுக்கு கிடையாது. விக்ரம் கூட இப்படத்தில் ஒரு புரொடியூசர் என்று தெரிகிறது. அதனாலேயே அவருக்கு கொஞ்சம் ஓவர் பில்டப்பெல்லாம் போட்டிருக்கிறார் இயக்குனர். ஜீவாவின் கதை ஆறுதல். அண்மையில் இந்து பயங்கரவாதம் குறித்த நேர்மையான விமர்சனத்தை எந்த திரைப்படமும் பேசியதில்லை. அதற்காகவே பிஜோய் நம்பியாரை பாராட்டலாம். ஆனால் அதுமட்டுமே ஒரு திரைப்பட அனுபவத்தை கொடுத்துவிடுமா என்ன?
இதுமாதிரி இரண்டுவெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் வெவ்வேறு கதைகள் ஓரிடத்தில் சந்திப்பதுபோன்ற படங்கள் ஹாலிவுட்டில் நிறையவே எடுக்கப்பட்டாலும் நமக்கு புதுசுதான். ஆனால் இரண்டு கதைகள் மாறி மாறி காட்டப்படுவதால் காலக்குழப்பமும் கதைக்குழப்பமும் உருவாகி நம்மால் எந்த கதையுடனும் ஒன்றமுடியவில்லை. விக்ரமின் கதையில் வருகிற காதல்காட்சிகள் எல்லாமே செம திராபை. காமெடி என்றபெயரில் என்னென்னவோ குரங்கு சேஷ்டைகள் செய்தும் எதுவுமே எடுபடவில்லை. ஜீவாவின் கதை சீரியஸாக போய்க்கொண்டிருக்க திடீர் திடீர் என விக்ரம் தென்பட.. எரிச்சலே மிஞ்சுகிறது.
கடலும் சரி, டேவிட்டும் சரி தொழில்நுட்ப ரீதியில் மிக சிறப்பான படங்கள். அதிலும் கேமரா கோணங்களும் எடிட்டிங்கும் அசாத்தியமாக கையாளப்பட்டுள்ளன. ஆனால் வெறும் தொழில்நுட்பம் மட்டுமே ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்கிவிடாது. அதன் ஜீவநாடி திரைக்கதையில் இருக்கிறது. நம் ஒவ்வொருக்குள்ளும் இருக்கிற கடவுளுக்கும் சாத்தானுக்குமான போராட்டம், அதில் கடவுள் தன்மை எப்படி வெல்லுகிறது என்பதே இப்படங்கள் சென்றடையும் புள்ளி. அப்படி பயணிக்கும் திரைக்கதை, அந்த பயணத்தை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சி செய்திருக்க வேண்டும். அதோடு கதாபாத்திரங்கள் அதனுடைய இயல்பில் யதார்த்தத்தில் இருக்க வேண்டியதும் அவசியம். இரண்டுபடங்களுமே அந்த விதத்தில் பெரிய சறுக்கலையே சந்திக்கின்றன.
இரண்டு படங்களிலுமே அழகான தருணங்கள் ஏராளம் உண்டு.. ஆனால் அவை நல்ல காட்சிகளாக விரிவடையவில்லை.. ஒரு பூ மலர்வதற்கு முன்பே உதிர்ந்துவிடுவதைப்போல அவை தொடங்குவதோடு முடிந்துபோகின்றன.. அல்லது அந்த வியப்பை கொலைசெய்துவிடுகின்றன.
(நன்றி - www.cinemobita.com)