Pages

26 February 2013

முறிக்கப்படுகிறது முதுகெலும்பு!





மத்திய அரசு நிறுவனத்தின் எரிவாயுக்குழாய்ய் அமைக்கும் திட்டத்தால் தமிழகத்தில் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது

தென்னை மரங்களும், மாமரங்களும் வேரோடு பிடுங்கி எறியப்படுகின்றன. கரும்பு, பருத்தி, கடலை, செவ்வந்திப்பூ என செழித்து வளர்ந்த செடிகள் முற்றிலுமாக அகற்றப்படுகின்றன. பொக்லைன் இயந்திரங்கள், மூர்க்கமாக அந்த வயல்வெளியின் இதயப்பகுதியை தன் இரும்புக்கரங்களால் கிழித்துக்கொண்டிருக்கின்றன. அதை எதிர்த்து அலறுகிறார் ஒரு மூதாட்டி! ‘என் நிலத்தை விட்டு வெளியே போங்கடா... பாவிங்களா!’ -அவரது நடுங்கும் குரல் அந்தப் பகுதி முழுவதும் ஒலிக்கிறது.

அந்த மூதாட்டியையும் அவரது குடும்பத்தினரையும் காவல்துறை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு போய் அவர்களுடைய நிலத்துக்கு வெளியே வீசி, ‘எங்க வேலை முடியறவரைக்கும் காட்டுக்குள்ளார வரக்கூடாது. மீறி வந்தா, அரெஸ்ட் பண்ணி 15 நாள் ரிமாண்ட்ல வச்சுடுவோம்’ என்று மிரட்டுகிறது. அதிகம் படித்திராத அந்த விவசாயக் குடும்பம் வேறுவழியின்றி அழுதபடி தங்களுடைய நிலத்தினுள்ளே செல்லமுடியாமல் வெளியே காத்திருக்கிறது.

பதினோரு தலைமுறையா இந்த நிலத்துலதானுங்க சாமீ நாங்க வாழறோம்... எங்களை வெளிய நிக்கவச்சுட்டு எங்க கண்ணு முன்னால நாங்க கஷ்டப்பட்டு உருவாக்குன வயக்காட்டை அழிக்கிறாங்களே... எங்களால எதுமே பண்ண முடியல... செத்துப்போயிரலாம் போல இருக்குங்க...சாமீ! நீங்கதான் எங்களுக்காக அரசாங்கத்துக்கிட்ட பேசணும்" என்று சோல்லும்போதே, கஞ்சம்மாவின் கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்கிறது. அதற்குமேல் பேசவும் முடியாமல் கதறி அழுகிறார்.

கஞ்சம்மா, ஊத்துக்குளி அருகேயிருக்கிற முல்லைநாயக்கனூர் கிராமத்தில் வாழும் மிகச் சிறிய விவசாயி. அவருடைய நிலத்துக்கு மத்தியில்தான் கெயில் (GAIL - Gas Authority of India Ltd) அமைப்பின் எரிவாயு பைப் லைன் பதிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. அந்த பைப் லைன் செல்லும் பாதை, அவருடைய அரை ஏக்கர் நிலத்தினையே இரண்டாகப் பிளந்து கூறுபோடுகிற வகையில் அமைந்துள்ளது. அரை ஏக்கர் நிலத்தின் மத்தியில் இருபது மீட்டர் அகலத்துக்கு ஒரு பாதை போட்டால் எவ்வளவு நிலம் எஞ்சியிருக்கும்? அங்கே என்ன பயிர் பண்ண முடியும்? எப்படி ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு தண்ணீர் பாச்சுவது? டிராக்டரால் உழுவது?

இந்தக் கொடுமை நிகழ்வது கஞ்சம்மாவின் நிலத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் இருக்கிற 131 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குறு மற்றும் சிறு விவசாயிகளின் விளைநிலங்களின் ஊடாகத்தான் இந்த எரிவாயு பைப் லைன் அமைக்கப்படவுள்ளது. எந்த விவசாயியிடம் பேசினாலும் இதே மாதிரியான சம்பவங்கள்தான். முழுமையான அடக்குமுறை. நிலம் கொடுக்க மறுக்கிற விவசாயிகள், காவல்துறையால் மிரட்டி பணியவைக்கப்படுகிறார்கள். ‘மரியாதையா இழப்பீடு காசோலைய வாங்கிட்டு கையெழுத்தப் போட்டுக்குடுத்துட்டு ஓரமா நின்னு வேடிக்கை பாரு’ என்பதுதான் அரசு அதிகாரத்தின் ஒரே குரல்.

ஏழு மாவட்டங்களிலும் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் அறிவிக்கப்படாத 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கெயில் நிறுவன வேலை நடக்கும் பகுதிகளெங்கும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் தொடர் மிரட்டலுக்குப் பயந்து, ஊருக்குள் பல விவசாயிகளும் பக்கத்து ஊர்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவ்விவகாரத்தில் போராட்டம் நடத்திய இரண்டுபேர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு, பதினைந்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், பல நூறு ஹெக்டேர் அளவுள்ள விவசாய நிலங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிடும். இந்த நிலங்களை ஒட்டியுள்ள நிலங்களிலும் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகும்" என்கிறார், சென்னிமலை பகுதி விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த கோபிநாத்.

கேரள மாநிலம், கொச்சியிலிருந்து தமிழ்நாடு வழியாக கர்நாடக மாநிலம், பெங்களூருவுக்கு இயற்கை எரிவாயுயைக் கொண்டு செல்லும் திட்டம்தான் கேகேபிஎம் புராஜெக்ட் (கொச்சின்-கோட்டநாடு-பெங்களூரு-மங்களூர் புராஜெக்ட்) . இதற்கென மத்திய அரசுத் துறை நிறுவனமான ‘கெயில்’ மூன்று மாநிலங்களிலும் குழாய்ய்களைப் பதிக்க முடிவுசெய்துள்ளது.

தமிழ்நாட்டில் 370 கி.மீ. மற்றும் கர்நாடகா மற்றும் கேரளாவுக்கும் சேர்த்து 840 கி.மீ. தொலைவுக்கு குழாய்ய்கள் பதிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டது. தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி வழியாக குழாய்ய்கள் பதிக்கவுள்ளது. 3,263 கோடி ரூபா செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள விவசாயிகள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கெல்லாம் இதற்கான வேலைகள் பல இடங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில்தான் காவல்துறை உதவியோடு வேலையை முடுக்கிவிட்டுள்ளது கெயில் நிறுவனம். ஆனால், காவல்துறை கெயில் நிறுவனத்துக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என சென்ற மாதம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2011ம் ஆண்டே இத்திட்டத்தினை நிறைவேற்ற விவசாய நிலங்களில் வேலையை தொடங்கியது கெயில் நிறுவனம். அந்த நேரத்திலும் சென்ற ஆண்டு ஆகஸ்ட்டிலும் விவசாயிகள் ஒன்றிணைந்து போராடி, இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைகளை தடுத்து நிறுத்தினர். இதனால், கெல் தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டும், எங்களுடைய வேலைக்கு இடையூறாக இருக்கிறார்கள், அவர்களை தடுத்திட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்துக்குச் சென்றது. அதோடு, விவசாயிகளிடம் அனுமதி பெற்று உரிய இழப்பீடு வழங்கியே இவ்வேலைகள் நடைபெறுவதாகவும் பெரும்பாலான விவசாயிகளிடமிருந்து ஆட்சேபனை இல்லை, மிகச் சிலர்தான் தொந்தரவு கொடுக்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டியது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், கெயில் நிறுவனத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கூடாது என்றும், விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டு அவர்களோடு கலந்துபேசி, எரிவாயுக்குழாயை மாற்றுவழிகளில் அமைப்பது பற்றி யோசிக்கவும் வலியுறுத்தியது. அதோடு, ஏழு மாவட்ட ஆட்சியர்களும் கூடிப் பேசி விவாதித்து மாற்றுவழிகளில் எப்படி இந்த எரிவாயுக்குழாய்யினை எடுத்துச்செல்வது என்பதை முடிவுசெய்யவும் வலியுறுத்தியது. இதையடுத்து, கெயில் நிறுவனம் மேல்முறையீடு செய்தபோதும் கோர்ட் முந்தைய தீர்ப்பையே வழிமொழிந்தது. இந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு, ‘தமிழகத்திலும் ஒரு
சிங்கூர், நந்தி கிராமத்தை உருவாக்காதீர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், கோர்ட் பரிந்துரைத்த எதையுமே கெயில் நிறுவனமோ தமிழக அரசோ முன்னெடுக்கவில்லை. மாறாக, கோர்ட் உத்தரவையும் மீறி காவல்துறையைக் குவித்து, விவசாயிகளின் நிலத்தில் குழாய்கள் பதிக்கும் வேலையைச் செய்ய ஆரம்பித்துள்ளது.

இங்கே குழாய்ய் பதிக்கும் வேலைகளை முடித்துவிட்டால்... இதைக் காட்டியே கேரளா மற்றும் கர்நாடகாவிலும் விவசாயிகளை மிரட்டி அங்கும் வேலையைத் தொடங்க, கெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கருதுகிறோம். ஆனால், இதை நிச்சயமாக அனுமதிக்க மாட்டோம். காவல்துறை அடக்குமுறையை ஏவி, விவசாயிகளின் விளைநிலங்களைப் பறிக்கும் மத்திய - மாநில அரசுகளின் செயல்களை எங்கள் போராட்டத்தினால் முறியடிப்போம்" என்கிறார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி. சண்முகம்.

இத்திட்டத்துக்காக 1962ம் ஆண்டின் நில கையகப்படுத்துதல் சட்டத்தைப் பயன்படுத்தி, ஏழு மாவட்ட விவசாயிகளின் நிலங்களின் உபயோக உரிமையை கையகப்படுத்தியது கெயில் நிறுவனம். அதோடு, இந்த நிலத்துக்கு இழப்பீடாக அரசு நிர்ணயித்துள்ள சந்தை மதிப்பில் பத்து சதவிகிதம் தொகையைத்தான் வழங்கி வருகிறது (அதாவது நிலத்தை எடுத்துக்கொள்வதில்லை, அதைப் பயன்படுத்தும் உரிமையை எடுத்துக்கொள்வதால் வெறும் பத்து சதவிகிதம்தானாம்).

இழப்பீடு நிர்ணயிக்க மதிப்பிடப்படும் அந்த சந்தை மதிப்பும் கூட பழைய விலைதான். சென்ற ஆண்டு ஏப்ரலில் தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட புதிய மதிப்பு கூட கிடையாது. இது விவசாயிகளை மேலும் காயப்படுத்துகிற வகையில் அமைந்தது.

பத்து வருஷத்துக்கு முன்னாலயே எங்க நிலத்துல வாக்கால் வரப்போகுதுனு சொல்லிதான் எங்ககிட்ட கையெழுத்து வாங்கினாங்க. நாங்களும் நிலத்துக்குப் பக்கத்துலயே வாக்கா இருந்தா சௌகரியமா இருக்குமேனுதான் கையெழுத்துப்போட்டோம்.திடீர்னு போன வருஷம் வந்து, ‘எரிவாயு பைப்லைன் போடப்போறோம்... அதுவும் இருபது மீட்டர் அகல இடம் வேணும்’னு சொன்னப்பதான் எங்களுக்கு விஷயமே புரிஞ்சுது. போன வருஷமே வேலை பார்க்க வந்தவங்கள, எதிர்ப்பு தெரிவிச்சு விரட்டினோம். இதோ இப்போ நூத்துக்கணக்குல போலீஸ்காரங்களக் கூட்டிவந்து வேலை செய்யறாங்க. எங்களால என்ன பண்ண முடியும்?" என்கிறார், ஊத்துக்குளி பகுதி அயர்தோட்டம் விவசாயியான வேலுச்சாமி.

ஊத்துக்குளி பகுதியில் மட்டுமல்லாது, சங்ககிரி, சென்னிமலை, ராயக்கோட்டை, தருமபுரி பகுதி விவசாயிகளிடமும் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி நிலம் கையகப்படுத்தும் உரிமையைப் பெற்றுள்ளது மத்திய அரசு. சிலரிடம் வயல்வெளி ஓரமாக சிறிய பைப்தான் வரப்போகிறதென்றும், வாக்கல் வெட்டப்போகிறோம் என்றும், பெரிய இழப்பீடு தருவோம் என்று எரிவாயுக் குழாய் பற்றிய உண்மைகளை மறைத்து, போதிய விவரங்களை தெரிவிக்காமலே அனுமதி பெற்றுள்ளது. அதோடு, யாருக்கும் இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. கிருஷ்ணகிரியை சேர்ந்த ராஜி என்கிற விவசாயிக்கு வெறும் 13 ரூபா காசோலை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சங்ககிரி பகுதியைச் சேர்ந்த அன்பு என்கிற விவசாயி, வெறும் 50 சென்ட் நிலத்தில் கடலை பயிரிட்டு வாழ்ந்து வருகிறார். திருமண வயதில் இரண்டு பெண்கள். இந்த நிலத்தை நம்பித்தான் இருவருக்கும் திருமணம் செய்துவைக்கும் கனவில் இருந்தவருக்கு இந்த எரிவாயுக்குழாய் பதிப்பு இடியாக இறங்கியது. அவருடைய நிலத்தின் மையப்பகுதியில்தான் இந்தக் குழாய் செல்கிறது. கிட்டத்தட்ட, இதிலேயே 25 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இழப்பீடாக கொடுக்கப்பட்ட தொகை என்ன தெரியுமா? 5,000 ரூபா! இன்று அதே பகுதியில் ஒரு சென்ட் நிலம் இருபத்தைந்தாயிரம் வரைக்கும் கூட விலைபோகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு, இந்த வேலைக்காக நன்கு வளர்ந்த மாமரங்களும் தென்னைமரங்களும் கூட வேரோடு பிடுங்கப்படுகின்றன. ஒரு தென்னைமரத்தை வளர்க்க, மூன்றாண்டுகளில் பத்தாயிரம் ரூபாக்கும் மேல் செலவாகும், முழுமையாக வளர்ந்த தென்னைமரம் 90 ஆண்டுகள் பலன்தரக் கூடியது. ஆனால், கெயில் நிறுவனம் வெறும் 6,000 ரூபாயைதான் இழப்பீடாக வழங்குகிறது, மாமரங்களுக்கு வெறும் 18,000தான்.இதோ இப்போது இங்கே பருத்தி, சோளம், வாழை பயிரிட்டவர்கள் அறுவடைக்காக காத்திருக்கிறார்கள். மொத்தமாக எல்லாமே போய்விட்டது. அதோடு, பம்பு செட்டுகளும் அகற்றப்பட்டுள்ளன" என்று கோபத்தோடு பேசுகிறார், திருப்பூர் விவசாயி கருப்புசாமி.

''ஒரு விவசாய நிலத்தில் இந்த எரிவாயு பைப்லைன் அமைக்கப்பட்டால், அந்த இடத்தில் மரங்கள் வளர்க்கக் கூடாது. அதைச் சுற்றி வீடுகள் கட்ட முடியாது. ஆழ்குழாய்ய் கிணறு அமைக்கவும் கூடாது என்று கெயில் முன்பே குறிப்பிட்டுள்ளது. அவர்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், முற்றிலுமாக விவசாயமே பார்க்க முடியாது. அப்படி இருக்கும்போது, இந்த நிலத்தை யாரும் வாங்கவும் முன்வரமாட்டார்கள். எங்களால் இந்த நிலத்தை நல்ல விலைக்கு விற்கவும் முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் விவசாயிகளால் என்னதான் செய்யமுடியும்? இந்தத் திட்டம் குறித்து எந்த விவரமும் கொடுக்காமலேயே வாய்க்கால் வெட்டுகிறோம், சிறிய இடம்தான் எடுக்கப்போகிறோம் என்றெல்லாம் பொய் சொல்லி, முதலிலேயே கெல் நிறுவனம் பஞ்சநாமா பத்திரத்தில் கையொப்பம் வாங்கியுள்ளது. இது தவறில்லையா?" என்று கேள்வியெழுப்புகிறார், திருப்பூரைச் சேர்ந்த சுதா. இவர், விவசாயிகள் வாழ்வுரிமைக் குழு என்கிற அமைப்பில் இணைந்து செயலாற்றி வருபவர்.

இவர் மேலும் பேசுகையில், ஒருவேளை குழாய்ய்கள் பதிக்கப்பட்ட பின் அக்குழாய்களில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதற்கு நிலத்துக்கு உரிமையுள்ள விவசாயிதான் பொறுப்பு. உடனடியாக அவரை கைது செய்யவும் மூன்றாண்டுகள் வரை சிறையிலடைக்கவும் அரசுக்கு அதிகாரம் உண்டு. இது குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினரான பி.ஆர்.நடராஜன் கூட நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.ஆனால், அதற்கெல்லாம் பதில் சொல்ல கெயில் நிறுவனம் தயாராக இல்லை. இப்படி ஒரு நிலையில் எந்த விவசாயி இதற்கு சம்மதிப்பான்?" என்று காட்டமாக தன் வாதங்களை முன்வைக்கிறார் சுதா. திருப்பூர் பகுதி விவசாயியான மயில்சாமி தன் தோட்டத்தின் ஒரு பகுதியில் சில லட்சங்கள் செலவில், மூன்று குட்டைகளை உருவாக்கி வைத்துள்ளார். இந்தக் குட்டைகளில் தேங்கும் மழைநீர்தான் சுற்றியுள்ள மற்ற விவசாயிகளுக்கும் பயன்படுகிறது. இந்த எரிவாயுக்குழாய் அந்தக் குட்டைகள் வழியாகத்தான் செல்கிறது. அதனால், குட்டைகளைப் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக நம்மிடம் மிகுந்த மனவருத்தத்தோடு பேசினார். அதோடு, அண்மையில்தான் தன்னுடைய தென்னந்தோப்பில் சோட்டுநீர்ப் பாசனத்துக்கான குழாய்கள் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். அதையும்கூட இந்த எரிவாயுக்குழாய் திட்டத்திற்கென இழக்க வேண்டியிருக்கும் என அஞ்சுகிறார்.

கோர்ட் உத்தரவின்படி மாற்றுவழிகளைப் பற்றி எந்த முன்னெடுப்பும் இல்லாமல், திடீரென ஏன் இவ்வளவு அவசரமாக காவல்துறை உதவியோடு இத்திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்துகிறது? தமிழக அரசு ஏன் இவ்விஷயத்தில் விவசாயிகளுக்கு எந்த உதவியையும் செய மறுக்கிறது? " என்று கேள்விகளை அடுக்குகிறார், திருப்பூர் பகுதி
விவசாயியான கருப்புசாமி. இவர் பட்டப்படிப்பு முடித்தபிறகு, விவசாயத்தை தொடர்பவர். இவருடைய நிலத்தையும் கூறுபோட்டிருக்கிறது கெயில்.

சரி, இதற்கு தீர்வுதான் என்ன?

விவசாயிகள் சங்கத்தலைவரான பி.சண்முகமே அதையும் கூறுகிறார். கேரளாவில் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு வந்தபோது, 40 கிலோமீட்டர் அளவுக்கு விவசாய நிலங்களில் போடவேண்டிய குழாய்களை,தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக கொண்டு வருகிறார்கள். அதை ஏன் இங்கும் செய்யக்கூடாது? கேரளாவில் எடுபடுகிற விவசாயியின் குரல், இங்கே ஏன் ஏற்கப்படவில்லை? நம்முடைய தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியோ அல்லது ரயில்வே டிராக்குகளை ஓட்டியோ, ஆற்றுப்படுகைகளிலோ இந்த எரிவாயுக்குழாய்களை தாராளமாக கொண்டுவரலாமே? இத்திட்டத்தை நாங்கள் யாருமே எதிர்க்கவில்லை. ஆனால், விவசாயிகளின்வயிற்றில் அடித்துதான் இதை நிறைவேற்ற வேண்டுமா என்பதை மத்திய - மாநில அரசுகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என்கிறார்.

விவசாயிகள் சங்கங்கள் இதுவரை கெயில் நிறுவனத்திடம் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்துமே தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. மாற்றுப்பாதையில் எரிவாயுக் குழாய்யினை எடுத்துச் செல்வதைப் பற்றி பேசவே மறுத்துவிட்டது கெயில் நிறுவனம். ‘என்ன ஆனாலும் விவசாய நிலங்களின் ஊடாக மட்டும்தான் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும்; தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகள் குறுக்கும் நெடுக்குமாக இருப்பதால், அது சாத்தியமில்லை’ என்றும் மறுக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்புதான் பெருந்துறை - பவானி இடையே நாற்கரச் சாலை அமைப்பதற்கென விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதில் எண்ணற்ற விவசாய நிலங்களும் தென்னைமரங்களும் பம்புசெட்டுகளும் வீடுகளும் கூட பறிபோயின. ஏற்கெனவே இப்பகுதியில் சாயப்பட்டறைக் கழிவுகளால் நொய்யல் ஆறு முற்றிலுமாக அழிந்துவிட்டது. மின்சாரம் இல்லாமல், பம்பு செட்டுகளை இயக்கவும் முடியாமல்
விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த எரிவாயுக்குழாய் பதிக்கும் பணியால் தமிழகத்தின் மேற்குப்பகுதி முழுக்க, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

பருவத்தில் பெய்ய வேண்டிய மழை பொத்துவிடுவது ஒருபுறம், பயிராகும் நேரத்தில் தரவேண்டிய நீரைத் தர மறுக்கிற அண்டை மாநிலம் மறுபுறம், இதனால் கட்டவேண்டிய கடனை கட்ட வழி இல்லாமல், விவசாயிகள் உயிரை மாத்துக் கொள்கிற அவலம் போதாதென்று, இதோ இப்போது இந்த எரிகுழாய் பிரச்சினை வேறு எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுகிறது! பேசாமல், ஒரேயடியாக ஒட்டுமொத்த விவசாய நிலங்களையும் சுடுகாடாக ஆக்கிவிடுங்களேன்!

****************



தகவலுக்காக

இதுவரை இந்தியா முழுக்க 53,189 கிலோமீட்டர் தூரத்துக்கு பெட்ரோலிய மற்றும் எரிவாயு பைப்லைன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த 20 ஆண்டுகளில் மட்டுமே 10,119 விபத்துகள் நடந்துள்ளன. இதில் பாதிக்கும் மேல், விவசாய நிலங்களில் நடைபெற்றுள்ளன. விவசாய நிலங்களில் உண்டாகும் இவ்வகை விபத்துகள், அந்த நிலத்தையே முற்றிலுமாக எதற்குமே பயன்படாத ஒன்றாக மாற்றிவிடுகின்றன. அதோடு, இவ்விபத்துகளால் இதுவரை 391 பேர் பலியாகியுள்ளனர். 1,599 பேர் காயமடைந்துள்ளனர். 2010ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடைபெற்ற எரிவாயுக்குழாய் விபத்தில் 500 தென்னைமரங்கள் முற்றிலுமாக சாம்பலாயின. 30 ஏக்கர் பரப்பளவுக்கு நிலத்தடிநீரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாயின. 8 செப்டம்பர் 2008ம் ஆண்டு இதே ஆந்திர மாநிலம் அமலாபுரம் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் நடந்த விபத்தில் 8 பேர் இறந்து போனார்கள்.


**************

(புதியதலைமுறை வார இதழுக்காக எழுதிய கட்டுரை.
நன்றி-புதியதலைமுறை)