31 January 2013
ஒரு முதல்வரும் ஒரு திரைப்படமும்!
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சிதலைவி.. மற்றும் பல பட்டங்கள் பெற்ற மேன்மைதங்கிய முதல்வர் அவர்களின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பினை தொலைகாட்சிகள் வாயிலாக லைவாக பார்க்க முடிந்தது.அடேங்கப்பா எவ்வளவு அழகாக ஆங்கிலத்தில் பேசுகிறார். அதுவும் கேட்கிற அனைவருக்கும் புரிகிற வண்ணம் எளிமையாகவும் அதே சமயம் இனிமையாகவும் பேசியதை மிகவும் ரசிக்க முடிந்தது.
அதைவிட பேசவேண்டிய விஷயங்களை மட்டும் எந்த அளவுக்கு கன்வீன்சிங்காக முடியுமோ அந்த அளவுக்கு தேவையான புள்ளி விபரங்கள் கணக்குகள் மற்றும் அறிவியல் சமூகவியல் ஆதாரங்களுடன் பேசியதையும் ரசிக்கவே முடிந்தது. நமக்கு வாய்த்த முதல்வர் நல்ல திறமைசாலி.
குறிப்பாக தமிழகத்தில் சட்ட ஒழுங்கின் மீது அவருக்கு இருக்கிற அக்கறையை கண்டு என் தொலைகாட்சி பெட்டியே வியந்துவிட்டிருக்கும்.
ப்ரிவென்சன் ஈஸ் பெட்டர் தேன் க்யூர் என்றான் ஒரு மேல்நாட்டு இவன். அவனேதான். அதற்கேற்ப அம்மாவும் கூட விஸ்வரூபம் திரைப்படம் வெளிவந்து அதனால் உண்டாகப்போகிற சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை கணக்கில் கொண்டு அதை மனதில்வைத்தே விஸ்வரூபம் படத்தை தடைசெய்திருப்பதாக சொன்னதை கேட்டபோது நிஜமாகவே காதுக்கு இனிமையாகவும் கண்களுக்கு குளுமையாகவும் இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஒரு மாநிலத்தையே கட்டிக்காக்கிற முதல்வருக்கு இந்த அளவுக்கு சமயோஜிதமும் பிரச்சனைகளை வருவதற்கு முன்பே தடுக்கிற திட்டமிடலும் இருப்பது அபூர்வம். ஆச்சர்யம். அந்த விதத்தில் அம்மாவின் இந்த ஆற்றலை கண்டு இந்த சமூகம் வியக்கிறது.
போகட்டும். ஆனால் ஏதோ தமிழகத்தில் எந்த பிரச்சனையுமே இல்லாததுபோலவும், இந்த விஸ்வரூப பிரச்சனை மட்டும்தான் விஸ்வரூபமெடுத்து நிற்பதைப்போலவும் பேசியதுதான் கொஞ்சம்.. கொஞ்சமே கொஞ்சம் கடுப்பேற்றியது. காவிரி டெல்டாவில் எத்தனை விவசாயிகள் இறந்துபோனார்கள் அப்போதெல்லாம் கூட இதுபோல டிவியில் தோன்றி எதையாவது பேசியிருக்கலாம்தான்.. போகட்டும்.
விஸ்வரூபம் என்கிற ஒரு திரைப்படத்தால் இச்சமூகத்திற்கு ஏதோ கேடு வந்துவிடும் சட்ட ஒழுங்கு கெட்டுவிடும் என்று நினைத்து அப்படத்துக்கு தடைவிதித்துள்ள தமிழக அரசு.. விஸ்வரூபத்தை விட ஆபத்தானதும் ஏற்கனவே நம்முடைய சட்ட ஒழுங்கினை மோசமாக்கி வரும் மதுவுக்கும் கூட தடை விதிக்கலாம். யெஸ் ப்ரிவென்சன் ஈஸ் பெட்டர்தேன் அதுதான்.
அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களை வரும் முன்பே தடுக்க இது நிச்சயமாக உதவும். அதோடு இன்று எந்த டாஸ்மாக் பார் வாசலிலும் குறைந்தது ஐம்பது இருசக்கர வாகனங்களாவது நின்றுகொண்டிருக்கின்றன. பெரிய பார்களில் அதே அளவுக்கு கார்கள் நிற்கின்றன.
குடித்துவிட்டு வாகனமோட்டி எத்தனை விபத்துகளுக்கு காரணமாயிருக்கிறார்கள் குடிவெறியர்கள். அதையெல்லாம் கூட தடுத்து நிறுத்தலாம். குடிவெறியால் அழிந்துபோகிற பல குடும்பங்களை காப்பாற்றலாம்.
விஸ்வரூபம் தடையால் என்ன கிடைக்குமோ அதைவிடவும் பலமடங்கு அதிகமான பலனை மதுவிலக்கால் நமக்கு கிடைக்கும். சட்ட ஒழங்கு பேணிக்காக்கப்படும்.
மதுவிலக்கினை அமல்படுத்திவிட்டு தொடர்ந்து எப்போதோ செத்துப்போன தலைவர்களுக்கு அந்த பூஜை இந்த பூஜை என சாதிக்கட்சிகள் பண்ணுகிற அலப்பறைகள், ஊர்வலங்கள் பொதுக்கூட்டங்களுக்கும், மேடைகளில் கலப்பு திருமணம் செய்பவர்களை வெட்டுவேன் குத்துவேன் என்று பேசுவதற்கும் கூட தடைவிதித்தால் பல கலவரங்களையும் இழப்புகளையும் கூட வருமுன் தடுக்கலாமே.
அதைப்பற்றியும் நம்முடைய மாண்புமிகு.. புரட்சி.. இதய... தியாகத்தின்.. அன்புக்குரிய அம்மா அவர்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
அவ்ளோதான்.
(படம் உதவி - http://dbsjeyaraj.com)