22 January 2013
காத்தாலையாம்ல காத்தாலை!
ஜப்பான்காரர்களுக்கு மூக்குதான் சப்பை என்றால் மூளையும் அப்படித்தான் இருக்கும் போலிருக்கு! ஃபுகுஷிமா அணு உலையை இடித்து தரைமட்டாக்கிவிட்டு அங்கே காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க போகிறார்களாம் இந்த காமெடியன்ஸ்!
நாங்கள்லாம் பல ஆயிரக்கணக்கான அணு உலைகளை திறந்து உலகத்துக்கே முன்மாதிரியாக மாறி வல்லரசாகிடலாம் என ப்பிளான் போட்டுக்கொண்டிருக்கிறோம். இவனுங்க என்னடானா இருக்கற அணு உலைய மூடிட்டு அதுல காத்தாலை கட்ட போறாய்ங்களாம்ல காத்தாலை.. பொளைக்கத்தெரியாத பொடலங்காயா இருப்பாய்ங்க போல... முட்டாப்பசங்க..
இரண்டுவருடங்களுக்கு முன்பு, அதாவது 2011ஆம் ஆண்டு ஜப்பானில் 9.0 என்கிற அளவில் பூகம்பம் உண்டானது. அதனால் சுனாமி உருவாகி ஜப்பானின் கடற்கரையோர பகுதிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. சகல பாதுகாப்புகளோடு கட்டி வைக்கப்பட்டிருந்த அழகான சுபிட்சம்தரும் புதையலான புகுஷிமா அணு உலையும் இந்தக்கொடூரமான சுனாமிக்கு தப்பவில்லை.
ஃபுகுஷிமா அணு உலையிலிருந்த ரியாக்டர்கள் மோசமாக டேமேஜ் ஆகிவிட.. பயந்தாங்கொள்ளி ஜப்பான் தன் மக்களையெல்லாம் அங்கிருந்து அப்புறப்படுத்தியது. அதோடு பல நூறு கோடிகளை கொட்டி ரியாக்டர்களிலிருந்து அணுக்கதிர்வீச்சு லீக் ஆகி பிராப்ளம் வந்துவிடக்கூடாது என மாங்கு மாங்கென்று போராடியது. அதுவும் போதாதென்று ஜப்பான் முழுக்க எம்பெருமான் அருளால் திவ்யமாக இயங்கிக்கொண்டிருந்த 54 ரியாக்டர்களையும் இழுத்து மூடியது. இனிமே ஒன்லி ரினியூவபிள் எனர்ஜி சோர்ஸ்லதான் மின்சாரம் என முடிவும் பண்ணிட்டாங்க!
பயந்தாங்கொள்ளி ஜப்பான் ஜாங்கிரிஸ். 2040க்குள் ஜப்பான் முழுக்கவே ரினீயவபிள் எனர்ஜி சோர்ஸ் மூலமாக மட்டும்தான் மின்சாரம் உற்பத்தியாம்.. அணுவும் கிடையாது ஆயாவும் கிடையாதுனு என்று பீத்திக்கிறாய்ங்க.
இவ்வளவு சிரமப்பட்டதுக்கு சிம்பிளா நம்மூர் வில்லேஜ் விஞ்ஞானியான நாராயணசாமிகிட்ட உதவி கேட்டிருந்தால். வெறும் வாயை மட்டுமே பயன்படுத்தி.. அணு உலை கதிர்வீச்சிலிருந்து எப்படி பொதுமக்களுக்கு பூர்ணமான பாதுகாப்பு வழங்குவதுனு வெளக்கி சொல்லிருப்பாரில்ல! காசுதான் தண்டம். நமக்கென்ன!
ஃபுகுஷிமாவில் கட்டப்போகிற இந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையம்தான், உலகிலேயே மிகப்பெரிய கடற்கரையோர காற்றாலை உற்பத்தி நிலையமா இருக்கபோகிறதாம். பெருமைதான். 16 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் 143 டர்பைன்களை நிறுவப்போறாய்ங்களாம். இதன்மூலமாக ஒரு ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்மிகை நாடாகவும் மாற முயற்சி செய்ய இருக்கிறது ஜப்பான். இதற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. 2020ல இந்தியா வல்லரசாகும்போது ஜப்பான்ல இந்த காற்றாலைகள் மின் உற்பத்தியை தொடங்கிடுமாம்! அதுபோக அருகிலேயே மாபெரும் சோலார் மின் உற்பத்தி நிலையமும் அமைக்க திட்டமாம்!
காற்றாலைதான் என்றாலும் அதனுடைய பாதுகாப்பையும் உறுதி செய்ய கடந்த ஒருவருடமாக தீவிரமாக ஆராய்ச்சி செய்துவருகிறார்கள் ஜப்பான் விஞ்ஞானிகள். சுனாமி அல்லது பூகம்பம் வந்தாலும் தாக்குபிடிக்க கூடிய டர்பைன்களை உருவாக்கி வருகிறார்கள். இதற்கென மிகப்பெரிய தொகையை ஒதுக்கி தீயாக வேலை பார்த்து வருகிறார்கள் ஜப்பான் விஞ்ஞானிகள்.
ஜப்பானின் இந்த நடவடிக்கைகளைக் கண்டதும் அதிர்ச்சியாக இருந்தது. மக்கள் மீதும் நாட்டின் முன்னேற்றித்திலும் சுற்றுசூழல் மேலும் கொஞ்சமாவது அக்கறையிருக்கிறதா இந்த கொலைபாதகர்களுக்கு! ச்சே. என்னமாதிரியான உலகத்தில் நாம் வாழ்கிறோம்.
இந்த ஜப்பான்காரர்களை பார்க்கும்போதுதான் நம் பெருமதிப்பிற்குரிய அண்ணல்களான நாராயணசாமி, அப்துல்கலாம், விவேக், கஞ்சாகருப்பு, வையாபுரி முதலானவர்களின் அருமையை உணர முடிகிறது. அணு உலைக்காக போராடுகிற இந்தப்போராளிகள் மட்டும் இல்லையென்றால் இந்தியாவின் நிலையை நினைக்கவே பதட்டமாக இருக்கிறது.அய்யகோ!
எப்படியும் ஜப்பான்காரர்கள் தங்களுடைய நாட்டில் தடை செய்த 54 ரியாக்டர்களையும் பேரிச்சம்பழத்துக்காக பழைய இரும்புக்கடையில் போடுவார்கள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நம்முடைய வல்லரசர்கள் மொத்தமாக பொறுக்கிக்கொண்டு வந்து இங்கே கொட்டினால் சிறப்பாக இருக்கும் என்பதே அகண்ட பாரத குடிஜனங்களுடைய ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது. எதிர்பார்ப்பு நிறைவேறுமா?