ஒரு புயலைப்போல புதிய இளைஞர்களின் வரவு மலையாள சினிமாவை மையங்கொண்டிருக்கிறது. 2012 ஆம் ஆண்டு முழுக்கவே ஏகப்பட்ட புதிய இயக்குனர்கள், புதிய நடிகர்கள், புதிய சிந்தனைகள், புதிய கதை, புதிய களம், புதிய தொழில்நுட்பங்கள் என எல்லாமே புதிதாக மலையாள சினிமாவின் பக்கங்கள் புத்தம் புதிதாக எழுதப்பட்டது இந்த ஆண்டுதான்.
2012ஆம் ஆண்டில் மட்டும் மலையாளத்தில் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி மாலிவுட்டின் போக்கையே மடைமாற்றி காட்டியுள்ளன! தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களின் ஆதிக்கத்தில் கொஞ்சமல்ல நிறையவே சோர்ந்து போய் சூம்பிப்போயிருந்த மாலிவுட்டுக்கு இந்த இளைஞர்கள் பெற்றுத்தந்திருக்கிற இந்த வெற்றி உற்சாக டானிக்காக அமைந்தது.
வினீத் ஸ்ரீனிவாசன், அஞ்சலி மேனன், அன்வர் ரஷீத், ஃபர்ஹாத் ஃபாசில், ஆசிக் அபு, ஆசிஃப் அலி என நமக்கு அதிகமாய் பரிட்சயமில்லாத புதிய மலையாள இளைஞர்கள் மாலிவுட்டினை மகத்தான் உயரங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர். மம்முட்டியின் வாரிசு துல்கீர் சல்மான், ஸ்ரீனிவாசனின் வாரிசு வினீத், ஃபாசிலின் வாரிசு ஃபர்ஹாத் என அந்தக்கால பெரிசுகளின் இந்தக்கால வாரிசுகள் தங்களை நிரூபித்து மலையாள திரையுலகில் கால்பதித்திருக்கும் ஆண்டு 2012.
அதற்காக பழைய நட்சத்திரங்களான மம்முட்டியும் மோகன்லாலும் தீலிப்பும் ப்ருதிவிராஜூம் குஞ்சாகபோபனும் முடங்கிவிடவில்லை. இளைஞர்களோடு போராடி புத்தம்புது கதை களங்களில் தங்கள் வயதிற்கும் உடலுக்கும் ஏற்ற யதார்த்தமான பாத்திரங்களில் நடித்து சிலபல ஹிட்டுகளை கொடுத்து தங்களுடைய இருப்பினை தக்கவைத்துக்கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டின் மிகச்சிறந்த பத்து படங்களை தேர்ந்தெடுக்க நினைத்து பட்டியலிட்டால் ஒவ்வொரு திரைப்படமும் இன்னொன்றுக்கு கொஞ்சமும் சளைக்காதவையாக இருந்தன. தொழில்நுட்பமாக இருக்கட்டும் கதைக்களனாக நடிப்பாக இருக்கட்டும் பாக்ஸ் ஆபீஸ் வசூலாக இருக்கட்டும் மக்களை கவர்ந்த வகையிலும் கூட ஒவ்வொன்றும் இன்னொன்றை தாண்டுகின்றன. அதனால் ஒன்று இரண்டு என ரேங்கிங்கில் வரிசைப்படுத்தாமல் சிறந்த படங்களின் பட்டியலாக வரிசைபடுத்திவிடுவோம். இவற்றில் ஒருசில படங்களை மட்டுமே பார்த்தாலும் கூட மாலிவுட்டின் வளர்ச்சியை கண்கூடாக பார்த்துவிட முடியும்.
இந்த பட்டியலில் சேர்க்கப்படாத ‘’செகன்ட் ஷோ, ஸ்பானிஷ் மசாலா, ஆர்குட் ஒரு ஓர்மகுட், மாஸ்டர்ஸ், கிராண்ட் மாஸ்டர், தப்பண்ணா’’ போன்ற நல்ல படங்களும் இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்றன. காசனோவா மாதிரியான ஹைபட்ஜெட் ஃபிளாப்புகளும் இல்லாமல் இல்லை. இதோ இந்த வாரம் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் ஆசிக் அபுவின் ‘’டா தடியா’’ வெளியாகவிருக்கிறது. அதுவும் கூட இப்பட்டியலில் இடம்பிடிக்க கூடிய படமாக இருக்கலாம்.
இனி பட்டியல்!
1.உஸ்தாத் ஹோட்டல்
மம்முட்டியின் வாரிசான துல்கீர் சல்மானுக்கு சொல்லிக்கொள்ளும்படி அமைந்த முதல் சூப்பர் டூப்பர் ஹிட்.அந்தகாலத்து பூவே பூச்சூடவா டைப் தாத்தா பேரன் சென்டிமென்ட் கதைதான். ஆனால் அது சொல்லப்பட்ட விதமும், அன்பும் காதலும் சிநேகமுமான உறவுகளின் நெருக்கமுமாக பின்னப்பட்ட திரைக்கதையும் நெகிழவைத்தது. மலையாள சினிமாவின் ஒப்பற்ற நடிகனான திலகனின் அலட்டலில்லாத அற்புதமான நடிப்பு இப்படத்தினை மறக்கமுடியாத சிறந்த படமாக மாற்றியது. நம்ம மதுரைக்கார பாசக்கார பயபுள்ளைகளப்போல கேரளாவில் கோழிக்கோடு இஸ்லாமியர்கள். அவர்களுடைய துள்ளலான நக்கலும் நையாண்டியும் நிறைந்த வாழ்வினை மிக சிறப்பாக படமாக்கியிருந்தார் இயக்குனர் அன்வர் ரஷீத். ஏற்கனவே சால்ட் அன் பெப்பர் மூலமாக புகழ் பெற்ற அஞ்சலிமேனன் இப்படத்திற்கான திரைக்கதை வசனத்தினை எழுதியிருந்தார். சமையல் என்கிற விஷயத்தின் மூலமாக மனிதாபிமானத்தை புகட்டிய திரைப்படம். படத்தில் மதுரையை இதுவரை எந்த தமிழ் இயக்குனரும் காட்சிபடுத்தாத வகையில் பிரமாதமாக காட்டியிருப்பார்கள்.. அதற்காகவேணும் அனைவரும் பார்க்கணும்!
2.தட்டத்தின் மறையாத்து
உம்மாச்சி குட்டிய பிரேமிச்ச ஒரு நாயருட கதா! ( முஸ்லீம் பெண்ணை காதலிச்ச ஒரு நாயர் பையனுடைய கதை) என்று டைட்டில் டேக்லைனிலேயே கதையை சொல்லிவிட்டு வெளியான படம் தட்டத்தின் மறையாத்து. கதை பழசுதான் என்றாலும், அதை கதற கதற வன்முறையாக ரத்தமும் கண்ணீருமாக சொல்லாமல் உணர்வூப்பூர்வமாக காதலோடும் நிறைய கிண்டலும் கேலியுமாக சொன்னது கேரளாவையே கொண்டாட வைத்தது.குஷி படத்தினைப்போல ஒரு ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி படம். கேரள மிடில் கிளாஸ் இளைஞர்களின் வாழ்க்கையை இன்னொரு கோணத்தில் எளிமையாக காட்சிபடுத்தியிருந்தார் வினீத். அவருடைய அப்பா ஸ்ரீனிவாசனின் திரைப்படங்களில் கண்ட அதே நக்கலும் நையாண்டியும் அவருடைய வாரிசுக்கும் வாய்த்திருக்கிறது. அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை என பேர்வாங்கி கொடுத்ததோடு வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றிபெற்றது.
3.ஆர்டினரி
சாதாரண மக்களின் வாழ்க்கையில் அசாதாரண பிரச்சனை வருகிறது. அதை எப்படி எதிர்கொண்டு சமாளிக்கிறது இந்த சாதாரணர்களின் படை என்பதை சாதாரண நடிகர்களை வைத்துக்கொண்டு கொஞ்சமும் போர் அடிக்காத திரைக்கதையால் வெற்றிபெற்ற படம். பட்டணம்திட்டாவின் எழிலான பின்னணி படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தது. சித்திக் படங்களின் பாணியில் முதல்பாதி முழுக்க விலா நோக வைக்கும் காமெடி சரவெடி, இரண்டாம் பாதியில் கண்களை கலங்க வைக்கிற மெலோடிராமா என்று டிரேட் மார்க் மாலிவுட் படம். குஞ்சகபோபன் மற்றும் பிஜூ மேனன் இருவருடைய நடிப்பும் படத்தின் மிகப்பெரிய பலம். இப்படம் தமிழிலும் ‘ஜன்னல் ஓரம்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. கரு.பழனியப்பன் இயக்கத்தில் பார்த்திபன்,விமல் நடிக்கவிருப்பதாக தெரிகிறது.
4.மாயமோகினி
மம்முட்டி,மோகன்லாலுக்கு பிறகு கேரளாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டார் திலீப். அதே பழைய லாஜிக்கில்லா பழிவாங்கும் கதை. அதை முழுக்க முழுக்க காமெடியாக சொன்னவிதத்தில் கவர்ந்தது. படம் முழுக்க அசல் பெண்ணைப்போலவே வேடமிட்டு நடித்திருந்தார் திலீப். ஒரு கவர்ச்சி நடிகை அணிகிற எல்லாவித உடைகளிலும் (டூ பீஸ் பிகினி உட்பட) திலீப் தோன்றினார். அவரை விரட்டி விரட்டி கற்பழிக்க முயலும் வில்லன்களிடமிருந்து (நம்ம கட்டதொர ரியாஸ்கான்தான்) தப்பினார். படம் முழுக்க அவரும் கூட்டாளிகளும் பண்ணுகிற காமெடி அலப்பறைகளுக்கு கேரளாவே விழுந்து விழுந்து சிரித்தது. கதை பழசு ஆனால் ட்ரீட்மென்ட் புதுசு! ஜாலியாக திரைக்கதை பண்ணி ரொம்ப சிரமப்படாமல் சூப்பர் ஹிட் அடித்தது மாயமோகினி! திலீப்தான் மலையாளத்தின் மாஸ் மஹாராஜா என்பதை நிரூபிக்கும் வகையில் படத்தின் வெற்றி அமைந்தது.
5.ரன் பேபி ரன்
ரன் பேபி ரன் என்று பேர் வைச்சாலும் வச்சாங்க.. படம் கேரளாவின் பட்டிதொட்டியெல்லாம் பாக்ஸ் ஆபீஸ் ரெகார்டுகளை உடைத்துக்கொண்டு பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிக்கொண்டேயிருக்கிறது. இந்த ஆண்டில் அதிக வசூலை குவித்த மலையாள படம் இதுதான். செய்தி சேனல்களின் அரசியலை பின்னணியாக வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட படம். சேனல் ஒன்றின் கேமரா மேனாக மோகன்லால் , ரிப்போர்ட்டராக அமலா பால், அவர்கள் இருவரிடையேயான காதலும் ஊடலும், அதனால் உண்டாகும் தொழில்முனை போட்டிகள், செய்தி சேனல்களுக்கு நடுவே நடக்கிற அரசியல் யுத்தம் என புதிய கதைக்களனை எடுத்துக்கொண்டு ஒரு ஆக்சன் த்ரில்லராக கொடுத்திருந்தார் இயக்குனர் ஜோஷி! சென்ற ஆண்டு ஜோஷி-மோகன்லால் கூட்டணியில் வெளியான ''கிறிஸ்டியன்பிரதர்ஸ்'' மலையாள சினிமா வரலாற்றிலேயே அதிக வசூலை (33கோடி) குவித்த படம்!. அதே கூட்டணியின் தொடர்ச்சியான இரண்டாவது ஹிட்டாக இப்படம் அமைந்தது. இளைஞர்களின் புயலில் தடுமாறாமல் தன் வயதுக்கும் உடலுக்குமேற்ற கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து ஹிட்டடித்தார் சூப்பர்ஸ்டார் மோகன்லால்!
6.மல்லுசிங்
நம்ம ஊர் பாட்ஷா கதைதான். ஆனால் அதையே குப்புறப்போட்டு கதை எழுதினால் எப்படி இருக்கும். ஊரை விட்டு ஓடிப்போன மாணிக்கம், மும்பை போய் பாட்ஷாவாகிறான். மாணிக்கத்தை தேடி அவருடைய தம்பி மும்பை போய் பாட்ஷாவை சந்திக்கிறான். பாட்ஷா நான் மாணிக்கமில்லை என மறுக்கிறான். அவனை மாணிக்கமென ஒப்புக்கொள்ள வைக்க தம்பிபடும் பாடுதான் மல்லுசிங்! ‘’ஆர்டினரி’’ படத்தில் ஏற்கனவே ஹிட்டு கொடுத்திருந்தாலும் அந்த ஆணவமெல்லாம் இல்லாமல் சப்பையான கேரக்டரை எடுத்துக்கொண்டு அதிலும் தன்னுடைய காமெடி முத்திரையை பச்சக் என பதித்திருந்தார். மலையாள சர்தார்ஜி கேரக்டருக்கு ஏற்ற உடல்வாகும் கம்பீரமும் கொண்டிருந்த உன்னி முகுந்தனும் சிறப்பாக நடித்திருந்தார். காமெடி,சென்டிமென்ட்,ஆக்சன் என ஜாலியான ஃபேமிலி என்டெர்டெயினராக இத்திரைப்படம் அமைந்தது.
7. 22 ஃபீமேல் கோட்டயம்
ஐ ஸ்பிட் ஆன் யுவர் க்ரேவ், கில்பில், கலைஞர் வசனமெழுதிய தென்றல் சுடும் மாதிரியான படம்தான் இதுவும். வஞ்சகர்களின் வலையில் வீழ்ந்த அப்பாவி பெண் பழிவாங்கும் கதைதான் இத்திரைப்படமும். ஆனால் அதையே ஹாலிவுட் ஸ்டைலில் படம் இயக்கியிருந்தார் ஆசிக் அபு. படம் பார்க்கிற ஒவ்வொரு ஆணையும் உறையவைக்கும் ஒரு அதிரிபுதிரியான க்ளைமாக்ஸ். ''சென்ற ஆண்டு வெளியாகி சக்கைபோடுபோட்ட சால்ட் அன் பெப்பர் மாதிரியான ஜாலியான மென்மையான படமெடுத்த ஆளாய்யா நீயி!'' என்று படம் பார்த்தவர்களெல்லாம் ஆச்சர்யப்பட்டுத்தான் போயிருப்பார்கள். முதல் பாதி முழுக்க மிகமிக அழகான பெப்பியான காதல், இரண்டாம் பாதியில் அதுக்கு நேர்மாறான வன்முறை! இரண்டையும் வித்தியாசப்படுத்துகிற இசை,கேமரா,எடிட்டிங்,லைட்டிங் என எல்லா துறைகளிலுமே புருவமுயர்த்த வைத்த படமாக இது அமைந்தது. படத்தில் நம்மூர் பிரதாப் போத்தன் மிகமுக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குனர் பாசிலின் மகனான ஃபர்ஹாத் பாசிலுக்கு சென்ற ஆண்டு வெளியான ‘சப்பகுரிசு’ படத்துக்கு பிறகு சொல்லிக்கொள்ளும்படி ஒரு வெற்றியையும் மாலிவுட்டில் நல்ல பெயரையும் பெற்றுதந்த படமாக அமைந்தது. இப்படத்தில் நாயகியாக நடித்த ரீமா கல்லிங்கலுக்கு இப்போதே விருதுகள் குவிய ஆரம்பித்திருக்கிறது! நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.
8.டயமண்ட் நெக்லஸ்
ஃபர்ஹாத் பாசிலுக்கு தொடர்ச்சியாக கிடைத்த இரண்டாவது வெற்றி. ஆள் பார்க்க சுமாராக இருந்தாலும், ஒரு காதல்மன்னனாகவும் அனைவரையும் கவர்ந்தார். லால்ஜோஸ் இயக்கிய இத்திரைப்படம் முழுக்க முழுக்க துபாயில் படமாக்கப்பட்டிருந்தது. துபாயில் பணிபுரியும் நாயகன் அங்கே அவன் சந்திக்கிற இரண்டு பெண்கள், அவர்களுடனான காதல் , நடுவில் ஊருக்குப்போய் பண்ணிக்கொள்கிற திருமணம் என சிக்கலான கதையை வேவ்வேறு விதமான உணர்வுகளுடன் கொஞ்சமும் போரடிக்காமல் படமாக்கியிருந்தனர். படத்தின் பாடல்களும் இசையும் , கலர்ஃபுல்லான காட்சியமைப்புகளும் அவ்வப்போது அசர வைக்கும் அழகான எளிய வசனங்களும் படத்தினை வெற்றிப்படமாக மாற்றியது. மெட்ரோ சிட்டிகளில் சக்கைபோடு போட்டாலும் பி அன்ட் சியில் சுமாராகவே ஓடியது. மலையாள திரைப்பட உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு திரைப்படத்தில் பிராண்டிங் செய்வதற்காக ஜோய் ஆலுக்காஸ் நிறுவனமும் மேக்ஸ் சூப்பர் மார்க்கெட் நிறுவனமும் 80 லட்சம் ரூபாய்க்கு இப்படத்தில் ஓப்பந்தம் போட்டது. (இது படத்தின் பட்ஜெட்டில் முக்கால்வாசி என்று வைத்துக்கொள்ளலாம்!)
9.ஸ்பிரிட்
என்னதான் மாஸ் மசாலா படங்களில் நடித்தாலும் அவ்வப்போது நல்ல கதையம்சமுள்ள படங்களில் நடித்து நல்லபிள்ளை என பெயர் வாங்கிவிடுவது மலையாள நடிகர்களுக்கு வழக்கம். அதற்கேற்ப இந்த ஆண்டு ரன் பேபி ரன், கிரான்மாஸ்டர்,கேசனோவா மாதிரியான அதிரடி படங்களில் நடித்தாலும் ‘’ஸ்பிரிட்’’ திரைப்படம் மோகன்லால் நடிப்பில் வெளியான படங்களில் மிக முக்கியமான படமாக அமைந்தது. தமிழ்நாட்டு குடிகாரர்களை விடவும் குடிப்பழக்கத்தில் முத்தச்சன்கள் கேரளவாழ் குடிமக்கள். அதையே கதையின் பின்புலமாக கொண்டு, குடிநோய்க்கு ஆளான ஒரு திறமையான டிவி ஆன்கராக (நம்ம கோபிநாத் போல) நடித்திருந்தார் மோகன்லால். குடியால் அவர் வாழ்க்கையில் நடக்கிற அசம்பாவிதங்களால் குடியை கைவிட போராடுவதும், அதைத்தொடர்ந்து தன்னுடைய மீடியா பவரை பயன்படுத்தி கேரளாவில் குடிக்கெதிரான பிரச்சாரத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்வதுமாக திரைக்கதை அமைத்திருந்தார்கள். மோகன்லால் குடிநோயாளியாக பிரமாதப்படுத்தியிருந்தார். எதிர்பாரத விதமாக கேரள குடிமக்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு. இப்படத்தை பார்க்கிற குடிகாரர் யாருக்குமே மனதில் ஒரு சதவீதமாவது குடிப்பழக்கத்தை கைவிடுகிற எண்ணம் தோன்றும். என்னதான் கருத்து சொல்லுகிற படமாக இருந்தாலும் வணிக ரீதியிலும் படம் சூப்பர் ஹிட்டு! டாஸ்மாக் வாழ் தமிழர்களுக்காக இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினிகாந்தோ கமலஹாசனோ நடித்தால் நன்றாக இருக்கும்..
10.மஞ்சாடிக்குரு
பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை வாரிக்குவிக்கவில்லை என்றாலும் படம் பார்த்த ஒவ்வொருவரையும் மிகப்பெரிய அளவில் பாதித்த திரைப்படமாக அமைந்தது. இளம் இயக்குனரான அஞ்சலி மேனனின் முதல் திரைப்படம் இது. மலையாளத்தின் இளம் சூப்பர் ஸ்டாரான ப்ருதிவிராஜ் இப்படத்தில் நடித்திருந்தார். எளிமையான கதை, ஆர்பாட்டமில்லாத திரைக்கதை, மிக அழகான காட்சியமைப்புகள், அதைவிட திலகனின் பிரமாதமான நடிப்பு, நட்பு, காதல், அன்பு, நமக்குள் இருக்கிற குழந்தையை தூண்டிவிடும் வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதை, நிறைய நெகிழ வைக்கும் உணர்வுகளின் கலவையாக ஒரு கவிதையைப்போல இயக்கியிருந்தார் அஞ்சலிமேனன். இன்று நாம் இழந்துவிட்ட குடும்ப உறவுகளின் பிணைப்பினை சுவாரஸ்யமாக சொன்னதற்காகவே நிச்சயம் பார்க்கவேண்டிய படங்களின் பட்டியலில் சேர்க்கலாம்.