முன்பெல்லாம் தீபாவளி வந்துவிட்டால் ஒருமாதத்துக்கு முன்பே மனசு முழுக்க படபடப்பும் த்ரில்லும் நிறைந்துவிடும். பட்டாசு வாங்கணும், புது உடை எடுக்கணும், பட்சணம் செய்யணும் எனப் பரபரப்பாகிவிடுவோம். எங்கள் வீட்டில் பாட்டிக்குக் கையும் ஓடாது காலும் ஓடாது.
நடுவீட்டில் வாணலியை வைத்துக்கொண்டு அதிரசம்,ரவாலட்டு,முறுக்கு என பிஸியாகிவிடுவார். குடும்பமே உட்கார்ந்து வாழை இலையில் மாவுதட்டி கொடுக்கும். அருகிலேயே உட்கார்ந்து கொண்டு குழந்தைகள் ருசிபார்க்கும்.
கட்பீஸ் துணிகள் வாங்கி.. டெய்லரிடம் தைக்கக் கொடுத்து அவருடைய தீபாவளி பிகுவை சமாளிக்க வேண்டும். தீபாவளிக்கு முந்தைய நாள் தைத்த துணி கிடைக்குமா கிடைக்காதா எனக் காத்திருந்து சஸ்பென்சாக உடை வாங்கி அணிவோம். உடைக்கு மேட்சான கவரிங் நகைகள் வாங்குவதில் தங்கைகள் கடைவீதிகளின் சந்துபொந்தெல்லாம் வேட்டையாடிவிட்டு வருவார்கள். பட்டாசு கடைக்குச் சென்று லட்சுமி வெடி, நேதாஜிவெடி, குட்டீஸுக்கு குருவி வெடி, சீனிவெடி,கம்பி மத்தாப்பு என பார்த்து பார்த்து வாங்குவோம். புதிய காலணி, புதிய பெல்ட்.. புதிதாக பிறப்போம்.
நான்கு மணிக்கே எழுந்து தலைக்கு எண்ணெய்வைத்துக் குளித்து பட்டாசு வெடித்து.. பட்சணம் தின்று.. முதல்நாள் முதல்ஷோ தலைவர் படமும் பார்த்துவிட்டு நண்பர்களோடு ஊர் சுற்றினால்தான் தீபாவளி முழுமையடையும். அது ஓர் உற்சாக அனுபவம்.
இன்று தீபாவளி நிறையவே மாறிவிட்டது. தீபாவளிக்கும் பொங்கலுக்கும்தான் புத்தாடை என்பது பழைய கதையாகிவிட்டது. நினைத்த போதெல்லாம் உடைகள் வாங்குகிறோம். அதனாலேயே தீபாவளி டிரஸ்ஸுக்கு பெரிய மரியாதை கிடையாது.
ஏதாவது பிரமாண்டமான துணிக்கடையில் ரெடிமேட் உடை ஒன்றை கூட்டநெரிசலில் எடுத்துவந்து அணிகிறோம். நாலுகம்பி மத்தாப்பு, இரண்டு ஊசி வெடி, ஒரு யானைவெடி என பட்டாசுகள் கூட கிப்ட் பேக் கிடைக்கிறது. ஆர்டர் செய்தால் டோர்டெலிவரி செய்கிறார்கள்.
அடையார் ஆனந்தபவனிலோ கிருஷ்ணா ஸ்வீட்ஸிலோ அதிரசம்,முறுக்கு,ரவா லட்டு தீபாவளி பேக்கேஜ் கிடைக்கிறது. நாள்முழுக்க தொலைக்காட்சிகளில் மூழ்கிப்போகிறோம். அதிகாலையில் அருளுரை, பின் பட்டிமன்றம், நடிகைகள் பேட்டி, பின் சினிமா, குட்டித்தூக்கம், மீண்டும் ஒரு சினிமா.. இரவில் இரண்டு கம்பி மத்தாப்பைக் கொளுத்திவிட்டு, ஒரு ராக்கெட்டையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திவிட்டால்.. தீபாவளி முடிந்தது.
இன்று நம்முடைய பண்டிகைகள் இன்னொரு விடுமுறை நாளாகவே கழிகிறது. பழைய உற்சாகமும் த்ரில்லும் நிறையவே மிஸ்ஸிங்! தீபாவளியில் மட்டுமல்ல நம் வாழ்க்கையிலும் கூட நிறையவே மாற்றங்கள் வந்துவிட்டன.
எல்லாமே விரல்நுனியில் வந்துவிட்டது. எதையும் வாங்குவதற்காக சுற்றித் திரியத் தேவையில்லை. அங்கே இங்கே அசையத் தேவையில்லை. பாக்கெட்டில் பணமும் கையில் ஒரு கணினியோ, செல்போனோ இருந்தால் எதுவும் சாத்தியம்.
பீட்சாவும் நியூஸ் பேப்பரும்தான் முன்பெல்லாம் வீடுதேடி வரும். இப்போது வீட்டிலிருந்தபடியே கார் முதல் கணினி வரை எதுவும் வாங்க முடியும். மளிகைச் சாமான்கள் வேண்டுமா? ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியும். இலக்கியம் படிக்கணுமா, இந்தியச் சுற்றுப்பயணமா? சாமிதரிசனம் கூட இணையத்தில் சாத்தியமாகியிருக்கிறது. பிரசாதம் கொரியரில் வீடுதேடி வந்துவிடும்.
பஸ்,ரயில்,விமானம் எனப் பயணத்துக்காக திட்டமிட்டு ஆன்லைனில் டிக்கட் புக் பண்ணலாம். குப்பைத்தொட்டி டாட் காம் என்கிற இணையதளம் காய்லாங்கடைச் சமாச்சாரங்களைக் கூட வீட்டிற்கே வந்து எடுத்துசெல்கிறது. கோவையில் ஒரு நவீன சுடுகாடு உண்டு. பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கும்போது பெற்றோர்கள் இறந்துவிட்டால் இணையம் மூலமாகவே கொள்ளியும் போட முடியும்.
பொறுமையாக நிதானமாக எழுதப்பட்ட கடிதங்கள் வழக்கொழிந்துவிட்டன. போஸ்ட் பாக்ஸுகளில் கடிதங்கள் குறைந்துவிட்டன. எங்கும் ஈமெயில்தான் எஸ்எம்எஸ்தான்! நெருங்கிய உறவுகளோடு கூட சுறுக்கென.. ஹாய் ஹவ் ஆர்யூ.. ஃபைனாக முடிந்துபோகிறது.
ஒருகாலத்தில் வீட்டில் டெலிபோன் இருக்கிறதென்பது மிகப்பெரிய கௌரவம். டெலிபோன் வைத்திருப்பவர்கள் டிவிவைத்திருப்பவர்கள் எல்லாம் நம் ஜம்பமாகச் சுற்றுவார்கள். டிரங்கால் என்பதோ, அதில் ‘’PP கால்” என்கிற ஒன்று இருந்ததோ சமகால சந்ததிகளுக்குத் தெரியாது.
SMS எல்லா மொழிகளையும் நறுக்கியிருக்கின்றன.பெயர்ச் சொல் உயிர்ச் சொல் எல்லாம் பெயரும் உயிரும் இழந்து கைபேசிக்குள் சுருங்கிக்கிடக்கின்றன. 140 கேரக்டர்களுக்குள் எழுதும் குருவி வாசகங்கள் கோர்ட்டுக்கு இழுக்கவும் சிறைக்கு அனுப்பவும் சக்தி கொண்டவையாகிவிட்டன. ஃபேஸ்புக் மாதிரியான சமூக வலைதளங்கள் குடும்ப உறவுகளையே பாதிக்கத்தொடங்கியிருக்கின்றன.
தூர்தர்ஷன் காலத்தில் ஒன்பது மணிக்கெல்லாம் இரவாகிவிடும். செய்திகள் முடிந்து உறங்க சென்றுவிடுவோம். இப்போதெல்லாம் நமக்கு இரவே கிடையாது. பிரபல மியூசிக் சேனல் ஒன்றில் அர்த்தராத்தியில் கூட லைவ் ப்ரோகிராம் ஒன்று போகிறது. அதற்கும் இளைஞர்கள் போன்போட்டு எனக்கு அந்த பாட்டு போடுங்க அதை தன்னுடைய பாட்டிக்கு டெடிகேட் பண்ணுகிற கூத்துகளும் நடக்கிறது. நம் குடும்பத்தினர் டிவியோடு வாழ்கிறார்கள், டிவியைப் பற்றியே பேசுகிறார்கள்.நம் வாழ்க்கையின் பல விஷயங்களை, சேமிப்பு, முதலீடு போன்ற முக்கியமான விஷயங்களைக் கூட்த் தீர்மானிக்கின்றன எப்போது டிவியை திறந்தாலும் யாராவது ஒரு சீரியல் பிரபலம் நிலம் விற்கிறார். பிரபல நடிகர் நகை விற்கிறார்.
முன்பைவிட நம்மிடம் இப்போது நிறையவே பணம் புழங்குகிறது. சின்னச் சின்ன வேலை செய்கிறவர்களுக்கும் ஓரளவு கணிசமான ஊதியம் கிடைக்க தொடங்கியிருக்கிறது.
ஆனால் வாங்கிய சம்பளத்தை உடனடியாகச் செலவு செய்கிறோம் அல்லது செய்ய வைக்கப்படுகிறோம். சிறுசேமிப்பு என்பது இன்று வேறொரு அவதாரத்தை எடுத்திருக்கிறது. ம்யூச்சவல் பண்ட்ல போட்டிருக்கேன்.. ஷேர்மார்க்கெட்ல இறக்கிருக்கேன் என சொல்வது ஃபேஷனாகிவிட்டது.
சிக்கனமாக வாழ்ந்து மிச்சம் பிடித்துச் சேர்த்தத் தொகையைக் குருவி போல சிறுகச் சிறுக சேர்த்து வைத்துக் கல்யாணம் பண்ணி வீடுகட்டிக் குடியேறி வாழ்ந்த காலமெல்லாம் போயே போச்சு! இன்று ப்ளாட்தான் வாங்குகிறோம். அதுவும் இருபதாண்டு முப்பதாண்டு வங்கிக் கடனில்!. திருமணமா, படிப்பா, வீடு நிலம் வாங்குவதா.. வங்கிகள் கடன்கொடுக்க க்யூவில் நிற்கின்றன. சாகும் வரை கடன் கட்டிக்கொண்டேயிருக்கிறோம்.
நூறு ரூபாய்க்கு வாங்கின கைக்கடிகாரத்தை முப்பது முறை ரிப்பேர் பண்ணி அணிந்துகொண்டிருந்த கலாச்சாரம் இன்று கிடையாது. இருபதாயிரம் ரூபாய் கலர்டிவி ரிப்பேராகிவிட்டதா.. அதைச் சரிசெய்வதை விட புதிதாக எல்சிடி டிவி வாங்கலாமா எல்ஈடி டிவி வாங்கலாமா எனச் சிந்திக்கிறோம். லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டும் 3டி டிவி ஒவ்வொரு மாதமும் பல ஆயிரக்கணக்கில் விற்றுத் தீர்கிறது. நாற்பதாயிரம் ரூபாய் ஐ போனை வாங்க க்யூ நிற்கிறது. கடைக்கார்களோ ஐநூறு பேருக்குத்தான் கொடுக்க முடியும் போய்ட்டு அடுத்த வாரம் வாங்க என்கிறார்கள்.
திருமணத்திற்கு அழைப்பவர்கள் மூணு நாள் முன்னாடியே வந்துடுங்க என அழைப்பதுதான் நம் பாரம்பரியம். நாம் கூட ஒருநாள் முன்பாகவே திருமணங்களுக்கு செல்வோம். இன்று முகூர்த்த்துக்கு வராட்டி பரவால்ல ரிசப்சனுக்கு வந்துடுங்க என்று அழைப்பவர்களை அதிகம் பார்க்க முடிகிறது நெருங்கியவர்களது திருமணங்களுக்குக் கூட ஒருநாள்தான் ஒதுக்க முடிகிறது. திருமணத்துக்கு மட்டுமல்ல நெருங்கிய உறவினர்களின் மரணத்திற்கும் கூட அரைநாள்தான் டயம்.
நமக்கு எதற்குமே நேரமில்லை. சாப்பிடக்கூட நேரமில்லாமல் உழைக்கிறோம். இதனால் உடலும் உள்ளமும் பெரிதளவில் பாதிக்கப்படுவதையும் உணர்ந்தேயிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தகச் சந்தையில் அதிகம் விற்கிற புத்தகங்கள் மருத்துவம் தொடர்பானதுதான். ஆர்கானிக் உணவுகளை அதிக விலைகொடுத்து உண்கிறோம். யோகா கற்கிறோம். இருந்தும் உடல்நிலை முன்பைவிட மோசமாகத்தான் இருக்கிறது.
நாம் இழந்துவிட்ட உடல் மற்றும் மன நலத்தை புத்தகங்களிலும் டிவியிலும் தேடுகிறோம். இளைஞர்களுக்கு உடல்நலமென்பது சிக்ஸ்பேக்காக ஆகிவிட்டது!
அருகிலிருப்பவர்களோடு குறைவாகவும் எங்கோ இருப்பவர்களோடு மணிக்கணக்கிலும் பேசப்பழகிவிட்டோம்.
யோசித்துப் பார்த்தால், ஒருநாள் நம்மிடம் நிறைய பொருட்களும் பணமும் இருக்கும். ஆனால் மகிழச்சியும் கொண்டாட்டமும் இனிமையான நினைவுகளும் இல்லாமல் போய்விடலாம்.
(புதியதலைமுறை வார இதழ் தீபாவளி மலருக்காக எழுதியது. நன்றி . பு.த)