புலிகளுக்கான ரிசர்வ் காடுகளில் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். இது பல்வேறு தரப்புகளில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது
புலிகள் வாழும் காடுகளில் இனி சுற்றுலா கிடையாது’ என அதிரடியாக அறிவித்துள்ளது உச்ச நீதிமன்றம். கூடவே புலிகள் சரணாலயங்களிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் (TIGHER RESERVES) சுற்றுலா நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கடைகள், கட்டிடங்கள் போன்றவற்றை நீக்கவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு, புலிகள் சரணாலயங்களுக்கு அருகில் வாழும் ஏழை மக்களின் வாழ்க்கையைப் பெரிய அளவில் பாதிக்கும் என்றும், நம் நாட்டின் இயற்கை வளங்களை சாதாரணப் பொதுமக்கள் பார்க்க முடியாத நிலையை உருவாக்கி விடும் என்றும் எதிர்ப்புக்குரல்கள் கிளம்பின. புலிகள் சரணாலயப் பகுதிகளில் வாழும் மக்களுடன் பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநில அரசுகள் தொடர்ந்து இந்த உத்தரவை நீக்கக் கோரியதையடுத்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய கேட்டுக்கொண்டது. ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதியோ,‘முன்பு 13 ஆயிரமாக இருந்த புலிகளின் எண்ணிக்கை இப்போது 1,200 ஆக குறைந்துள்ளது. வனப்பகுதியில் நடக்கும் வர்த்தக நடவடிக்கைகள் பற்றிதான் கவலைப்படுகிறீர்கள்? புலிகளைக் காப்பாற்ற என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பி, தடையை நீட்டித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போதும் மூன்று புலிகள் சரணாலயங்கள் உள்ளன. முதுமலை, களக்காடு முண்டந்துறை மற்றும் ஆனைமலை என இந்தப் புலிகள் சரணாலயங்களையும் சுற்றி எண்ணற்ற சுற்றுலா தலங்களும், சிறு நகரங்களும் கடந்த 50 ஆண்டுகளில் உருவாகியுள்ளன. சுற்றுலா மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் காடுகளை அழித்து பல்வேறு ரிசார்ட்களும், காடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து சுற்றுகிற தனியார் சுற்றுலா திட்டங்களும் கூட அதிகமாகியிருக்கின்றன.
இதனால் காடுகளின் இயற்கைச் சூழல் வெகுவாகப் பாதித்திருப்பதுடன், இது புலிகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்திருப்பதாகவும் அரசு கருதுகிறது. அதற்கான காரணங்களும் உண்டு.
புலிகளைக் காப்பாற்றினால் காடுகளைக் காப்பாற்றலாம் என்கிற கருத்து பல ஆண்டுகளாகவே முன்வைக்கப்படுகிற ஒன்று. புலிகளைக் காப்பாற்றினால் எப்படிக் காடுகளைக் காப்பாற்ற முடியும்? நம்முடைய காடுகளிலுள்ள விலங்குகளில் பலம் வாய்ந்ததுடன் சூழலியல் முக்கோணத்தில் உச்சியில் இருக்கிற விலங்கு என்றால் அது புலியும் சிங்கமும்தான்! தமிழகக் காடுகளில் சிங்கம் கிடையாது என்பதால் புலிகள்தான் டாப்.
புலிகள் தனித்து வாழும் தன்மை கொண்டவை. அது தனக்கென ஓர் ஏரியாவை (HOME RANGE) காட்டில் ஒதுக்கிக்கொண்டு, வேட்டையாடி வாழும். இந்த ஹோம் ரேஞ்சில் அதிகபட்சம் மூன்று புலிகளே வசிக்கும். அதுகூட நட்பு அடிப்படையில்தானாம்! ஒருவேளை பெண் புலி ஒன்று இரண்டு குட்டிகள் போடுகிறதென்று வைத்துக்கொள்வோம். இரண்டு ஆண்டுகளில் பெண் புலி தன் குட்டிகளை விரட்டி விடும். தனித்து விடப்படும் இரண்டு புலிகளும் தங்களுக்கான ஹோம் ரேஞ்சை தேர்ந்தெடுக்க காடுகளில் சுற்றித் திரியும்.
புதிய இடத்தைக் கண்டறிந்து அங்கே ஏற்கெனவே வாழும் புலிகளை தாஜா செய்தோ, சண்டையிட்டோ இடத்தைப் பிடித்து வாழத் தொடங்கும் (கஷ்டமான ஜீவிதம்தான்). இது ஒரு பக்கமென்றால் இன்னொரு பக்கம் ஒரு புலி தன்னுடைய ஹோம் ரேஞ்சில் உடல்நலத்தோடு, நல்ல உணவு பலத்தோடு ஓர் ஆண்டு வாழ கிட்டத்தட்ட 500 மான்கள் அல்லது அதற்கு இணையான இரை மிருகங்கள் இருக்க வேண்டியது அவசியம். 500 மான்கள் வாழவேண்டுமென்றால் அந்தக் காட்டில் அத்தனை மான்களுக்கும் தேவையான உணவு இருக்க வேண்டும். நல்ல செழிப்பான தாவரங்கள் இருக்கிற காடுகளில்தான் இந்த நிலைமை சாத்தியம். எந்தெந்தக் காடுகளில் புலிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறதோ அந்தக் காடுகள் எல்லாம் நல்ல அடர்த்தியாக, செழுமையாக இருக்கிறதென்று பொருள்.
ஆனால், கடந்த நூறாண்டுகளில் நாற்பதாயிரமாக இருந்த நம் புலிகளின் எண்ணிக்கை, அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி வெறும் 1,706 ஆக குறைந்துள்ளது. புலிகளின் எண்ணிக்கை குறைய பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. காடுகளின் பரப்பளவு குறைந்தது, காடுகளில் மனிதர்கள் நடமாட்டம், மருத்துவத்திற்குப் பயன்படும் என்கிற மூடநம்பிக்கையால் தொடர்ந்து வேட்டையாடப்படுவது, புலிகளின் வாழிடங்களில் போதிய உணவு, நீர் இல்லாமை என ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதனால்தான் தற்போது உச்சநீதிமன்றம் இப்படி ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது, புலிகள் வாழும் காட்டினுள் மனித நடமாட்டத்தை வெகுவாகக் குறைப்பதன் மூலம் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது. இதுதான் தற்போதையத் திட்டம்.
ஆனால் வடமாநிலங்களிலும், தமிழகத்திலும் இதை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்திலும் புலிகள் சரணாலயக் காடுகளைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலும், வால்பாறை, கூடலூர் மாதிரியான சிறுநகரங்களிலும் வாழ்கிற வணிகர்கள், தொழில்முனைவோர், தொழிலாளர்கள் எனப் பலரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அண்மையில் கட்சிப் பாகுபாடின்றி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளனர். அதோடு ஒரு நாள் முழு அடைப்பு நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர். அதேபோல வால்பாறையில் ஓட்டுநர்கள் சங்கமும் ஒரு போராட்டத்தை நடத்தி முடித்துள்ளது.
இந்தப் போராட்டம் குறித்து இதில் பங்கேற்ற கூடலூர் தொகுதி எம்.எல்.ஏ. திராவிடமணியிடம் பேசினோம். "2006 வன உரிமைச் சட்டத்தின்படி இந்த உத்தரவு தவறானது. சுற்றுலா நடவடிக்கைகளை நிறுத்துவதாக இருந்தாலும், காடுகளை ஒட்டியுள்ள கிராமங்களில் எந்தவித நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் அங்கு வாழும் மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் கலந்தாலோசித்த பின்பே எந்த முடிவையும் எடுத்திருக்க வேண்டும். இந்த முடிவினால் ஏழை மக்கள் அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடுகிற சூழல் உருவாகியுள்ளது. கூடலூர் மசினகுடி பகுதி மக்களுக்குச் சுற்றுலா ஒன்றுதான் அடிப்படையான வாழ்வாதாரமாக உள்ளது. இங்கே பலரும் வாகன ஓட்டுநர்களாகவும், கைடுகளாகவும், சிறியதும் பெரியதுமாக ஹோட்டல்கள் நடத்துபவர்களாகவும், அங்கே வேலை பார்க்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். சுற்றுலா நிறுத்தப்பட்டால் இவர்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்" என்று வருத்தம் தோய்ந்த குரலில் பேசினார்.
கூடலூர் மக்கள் வாழ்வுரிமை இயக்கம் என்ற பெயரில் கூடலூர் மக்களை ஒன்றுதிரட்டி, இந்த உத்தரவுக்கு எதிராகப் போராடிவரும் வாசு என்பவர் மேலும் சில பிரச்சினைகளை முன்வைத்தார். "இந்த மக்களுக்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாது, ஆடு மாடுகள் மேய்ப்பதுதான் பிரதானம். அதைவிட்டால் சுற்றுலா. இத்தனை ஆண்டுகளும் இதே புலிகளோடும், யானைகளோடும்தான் அவர்கள் வசிக்கிறார்கள். ஆனால், யாரும் புலிகளை வேட்டையாடுகிறவர்களாகவோ, யானைகளை வெடிவைத்துக் கொல்கிறவர்களாகவோ இருந்ததில்லை. காடுகளின் பாதுகாப்பில் அரசை விடவும் இந்த மக்களுக்கு அதிக அக்கறை உண்டு. வால்பாறையில் ஒருலட்சம் பேர், கூடலூரில் மூன்று லட்சம் பேர் என ஏகப்பட்ட ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கை அரசின் ஒரே ஓர் உத்தரவினால் கேள்விக்குறியாகியுள்ளது. இது தடுத்து நிறுத்தப்படவேண்டும், அதற்காகவே போராடுகிறோம்" என்று குமுறினார்.
வனவிலங்குகள் ஆராச்சியாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான முகமது அலி, அரசின் மீது குற்றஞ்சாட்டுகிறார். "அரசின் இந்த நடவடிக்கை நம்முடைய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இன்று ஓரளவுக்காவது சுற்றுச்சூழல் குறித்து நம் மக்களுக்கு அக்கறை வருகிறதென்றால் அதற்குக் காரணம், இந்தக் காட்டுப்பகுதி சுற்றுலாக்கள்தான். அதையும் தடுத்து நிறுத்திவிட்டால், நம் நாட்டின் ஏழை நடுத்தர வர்க்கக்குழந்தைகள் காடுகளை டி.வி.யில் மட்டும்தான் பார்க்க வேண்டியிருக்கும்.
முதலில் நம் ஊரில் வனங்களை நிர்வகிப்பதில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. போதிய வனத்துறை அதிகாரிகள் கிடையாது. பாதுகாப்புக் குளறுபடிகள். வனத்துறை அதிகாரிகளுக்கும், காடுகளில் வாழும் பழங்குடியினருக்கும் நல்ல நட்பு கிடையாது. சொல்லப் போனால் அந்த மக்களை மிக மிகக் கேவலமாக நடத்துவதுதான் இங்கே நடக்கிறது. நமக்குப் புலிகளின் எண்ணிக்கையைப் பெருக்கணும். புலிகளின் எண்ணிக்கையை எப்படிப் பெருக்க இயலும்? நம்மிடம் இருப்பதே ஒரு சதுர அடி நிலம்தான் என்றால் அதில் ஓர் ஆள்தானே நிற்க இயலும். இரண்டு பேரை நிற்க வைத்தால் ஆபத்துதான். அதுதான் புலிகள் விஷயத்திலும். நம்மிடம் இருக்கிற காடுகளின் அளவுக்கு ஏற்ற எண்ணிக்கையில்தான் புலிகள் இருக்க வேண்டும். முதலில் காடுகளின் பரப்பளவை அதிகரிக்கும் வழியைப் பார்க்க வேண்டும். பெரிய முதலாளிகள் கையில் மாட்டிக்கொண்டு ரிசார்ட்களாகவும், கெஸ்ட் ஹவுஸ்களாகவும், ஆசிரமங்களாகவும் மாறியிருக்கிற வனத்துறை நிலங்களை அரசு கையகப்படுத்தி காடுகளின் பரபரப்பளவை அதிகரிக்கலாம்" என்று காரசாரமாகக் கூறினார்.
"இப்பிரச்சினையில் மூன்று விஷயங்கள் பிரதானமாக உள்ளன. ஒன்று, புலிகள் பாதுகாப்பு. இரண்டாவது, பழங்குடியின மக்களின் வாழ்க்கை. மூன்றாவது, சாதாரண மக்களின் சுற்றுலா உரிமை.இவை மூன்றையும் காக்கும் வகையில்தான் அரசின் உத்தரவு அமைந்திருக்கவேண்டும். ஆனால், அரசோ புலிகளின் பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த உத்தரவை அறிவித்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டுகளில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாகவே உயர்ந்துள்ளது. அதையும் இப்பிரச்சினையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதோடு சுற்றுலாநடவடிக்கைகள் தடைசெய்யப் பட்டால் தீவிரவாதிகள், வேட்டைக் காரர்களுக்கு நம் காடுகள் நல்ல பாதுகாப்பான புகலிடமாக அமைந்துவிடுகிற ஆபத்துக்களும் உண்டு" என்கிறார், பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் வனத்துறை அலுவலர் ஒருவர்.
கோவையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பின் ஓசை காளிதாசனோ, "உச்சநீதிமன்ற உத்தரவால் பெரிய கேடில்லை. இந்த உத்தரவு நிச்சயம் நம் சுற்றுச்சூழலுக்கு நல்லதுதான் என்றாலும் சில குறைகளோடு இருக்கிறது. இந்த உத்தரவை எதிர்க்கும் பலரும் காடுகளோடு பெரிய தொடர்புகள் இல்லாத வெளியாட்கள்தான்" என்கிறார். மேலும் அவர் பேசுகையில்,
"கூடலூர், வால்பாறை பகுதிகளில்சுற்றுலாத்துறை மூலமாகக் கிடைக்கும் வருவாயை விட தேயிலைத் தோட்டங்கள்தான் ஏழைகளுக்கான வருமானம் தருமிடமாக இருக்கிறது. இந்தப் பகுதிகளில் காலங்காலமாக வசிக்கிற பழங்குடியின மக்கள், யாரோ சிலருடைய ரிசார்ட்களில் கூலிக்கு வேலை பார்க்கிறவர்களாகத்தானே இப்போதும் இருக்கிறார்கள். எந்தப் பழங்குடியினத்தவர் ரிசார்ட், ஹோட்டல் வைத்திருக்கிறார்?. ஒருவரையாவது உங்களால் காட்ட இயலுமா? அரசு அந்த ஏழை பழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதோடு காடுகளைப் பாதுகாப்பது குறித்த பிரச்சார இயக்கத்தைத் தொடங்க வேண்டும்.
இன்று குடித்துவிட்டு கூத்தடிக்கும் இடங்களாக நம் காடுகள் மாறிவிட்டன. இன்று நம் காடுகளின், அருவிகளின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் உடைந்த பீர் பாட்டில்களையும், வீணான பிளாஸ்டிக் குப்பைகளையும் காணலாம். இதுமாதிரியான விஷயங்கள் முதலில் தடுத்து நிறுத்தப்படவேண்டும். நகரத்திலிருந்து புறப்பட்டுப் போய் காடுகளுக்குள் கேம்ப் ஃபயர் பண்ணுகிறேன், பட்டாசு வெடித்து பர்த்டே கொண்டாடுகிறேன் என அலம்பல் பண்ணுகிறவர்களைத்தானே இந்த அரசு கட்டுப்படுத்த வேண்டும். இந்த கேம்ப் ஃபயர் மற்றும் குடிகாரக் கும்பல்களுக்கு இடம் கொடுப்பது யார்? காஸ்ட்லி ரிசார்ட்டுகள்தானே.
கேரளாவில் பரம்பிக்குளம் மாதிரியான புலிகள் சரணாலயப்பகுதிகளில் இருப்பதுபோல ஈகோ டூரிசம் (ECO TOURISM) மாதிரியான விஷயங்களை இங்கேயும் கொண்டுவரலாம். இந்த ஈகோ டூரிசத்தினால் அரசுக்கு கிடைக்கும் வருவாயானது உள்ளூர் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்கே பயன்படுத்தப்படும். அதோடு தனியார்களால் கட்டுக்கடங்காமல் போயிருக்கிற காடுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யலாம். மேலும் வாகனப் போக்குவரத்தினை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும். ஒட்டுமொத்தமாகச் சுற்றுலாவுக்குத் தடைவிதிக்காமல், ஈகோ டூரிசம் மாதிரியான விஷயங்களை அரசு ஊக்குவிப்பதே, இப்பிரச்சினைக்கு சரியான தீர்வாக இருக்கமுடியும்" என்கிறார்.
புலிகளைக் காப்பாற்ற வேண்டும் என முனைப்புக் காட்டுகிற அரசு, அங்கே வாழ்கிற மக்களின் நலன் குறித்தும் அக்கறை காட்டவேண்டும் அதோடு அவர்களுடைய வாழ்வாதாரங்களை பாதிக்காத வண்ணம் சுற்றுசூழலையும் பாதுக்காக்க வேண்டும் அதுவே சரியான தீர்வாக இருக்கமுடியுமே தவிர நீதிமன்ற தீர்ப்பு நடவடிக்கைகள் கோமாளித்தனமாகவே முடியும் என்பது நிச்சயம்.
நன்றி - புதியதலைமுறை