Pages

02 August 2012

குடிபொலி!





நம் நண்பர்களில் சிலர் ‘’பாஸ் நான்லாம் எப்பயாச்சும்தான் குடிப்பேன்.. அதுவும் ஃப்ரண்ட்சோட மட்டும்தான்.. அப்பகூட லைட்டாதான் சாப்பிடுவேன்’’ என பீத்திக்கொள்வதை பார்த்திருக்கலாம். அதை சொல்லி முடித்த அடுத்த நிமிடம் குவாட்டர் ஆஃப் ஃபுல் என பாட்டில் பாட்டிலாக உள்ளே தள்ளுவதையும் ஓசி குடி குடிப்பத்தையும் பார்த்திருப்போம். நொந்திருப்போம். இன்னும் சிலர் வேறுமாதிரி ‘’ஐ ஒன்லி டேக் பீர்டா, ஆக்சுவலி பீர் ஈஸ் நத்திங் பட் கூல்ட்ரிங்ஸ்னா' ‘ என்று ஷேக்ஸ்பியர் போல பீட்டர் விட்டு, ஓசியிலேயே பீர் வுட்டு அடுத்த நொடி மட்டையாவதையும் பார்த்திருக்கலாம்.

குடிப்பழக்கத்தை விடவும் குடிப்பதற்கு காரணம் சொல்லும் பழக்கம் நம் தாய்த்தமிழ்நாட்டில் அதிகரித்துவருகிறது. இது ஒரு கொடிய நோயைப்போலவும் மாறிவருகிறது. இந்த காரணகர்த்தாக்கள் அவர்களுடைய காசில் குடிப்பதற்கு ஆயிரம் காரணங்களையும் ஓசிகுடி குடிக்க ஒராயிரம் காரணங்களையும் எப்போதும் மனபாட்டிலுக்குள் மிக்ஸிங் போட்டுக்கொண்டே அலைகின்றனர். இதுமாதிரி காரணங்கள் யாரை திருப்திப்படுத்த சொல்லபடுகிறது என்பதில் எனக்கு அநேக சந்தேகங்களுண்டு.

''தினமும் ஒரு பெக் ஓட்கா குடிக்கறது உடம்புக்கு நல்லது'' , ‘’விஸ்கி குடிக்கறது விரலுக்கு நல்லது’’ என்று அறிவியல் பூர்வமாக குடிப்பதற்கான விளக்கத்தினை தருபவர்களும் உண்டு. இந்த விஞ்ஞானிகளுக்கு மாலை ஆறுமணியாகிவிட்டால் குடித்தே ஆகவேண்டும் இல்லையென்றால் நடுக்கம் நரம்பு தளர்ச்சியெல்லாம் வந்துவிடும் என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கும். இருந்தும் ஊருக்குள் பெரியமனுஷனாக உலாவருவதால் அந்த கெத்தை மெயின்டெயின் பண்ண உடல்நலத்துக்காக குடிக்கிறேன் என சொல்லிக்கொண்டு திரிவதை பார்க்கலாம்.

அண்மையில் மதுரையின் ஒரு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வகுப்பறையிலிருந்து பெஞ்சை திருடிக்கொண்டு போய் விற்று அந்தக்காசில் குடித்து மகிழ்ந்திருக்கிறார்கள். இந்த செய்தி உங்களுக்கு சிரிப்பை வரவழைத்தால் நிச்சயம் உங்களுக்குள் வெட்டி பெருமைக்கு குடிக்கிற குடிகாரன் ஒருவன் மறைந்திருப்பான். இதே செய்தி கோபத்தை உண்டாக்கினால் உங்களுக்கு உள்ளேயும் ஒரு காந்தி தாத்தா குடியிருக்கலாம். அவரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்! ஜெய் ஹிந்த்.

இந்த பையன்களிடம் போய் ஏன் குடிக்கிறாய் என்று கேட்டால் அவனுடைய பதில் என்னவாய் இருக்கும்! போடங்.. என்று ஏதாவது பலான கெட்டவார்த்தையில் திட்டுவான். அதை வாங்கிக்கொண்டாலும் அவனிடமும் ஒரு காரணம் இருக்கும் என்பதை உணரவேண்டும். அது அவனுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அது தெரியாமலிருக்கும். ஆனால் நமக்கு தேவையில்லை. ஏற்கனவே இரண்டு பத்தி எழுதியாகிவிட்டது.

ஒரு குடிகாரனாகப்பட்டவன் எதற்காக குடிக்கிறோம் என்கிற தெளிவோடு குடிக்க வேண்டாமா! கைநடுக்கத்தினால் குடிப்பது, நண்பர்களுக்காக குடிப்பது, கொலை செய்வதற்காக குடிப்பது, கற்பழிப்பதற்காக குடிப்பது, கவிதை எழுதுவற்தகாக குடிப்பது, காதல் தோல்வியில் குடிப்பது, வெற்றியில் குடிப்பது, பொண்டாட்டி தொல்லையால் குடிப்பது, சம்பளம் வந்த்தெற்கெல்லாம் குடிப்பது என எத்தனை காரணங்கள். இப்படி குடிப்பவர்களிலரும் போதையில்லாத அதிக வாடையில்லாத பீர்,ஜின்,வோட்கா மாதிரி சமாச்சாரங்களை குடிப்பது என.. இதெல்லாம் குடிப்பழக்கத்திற்கே இழுக்கில்லையா? இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களை பற்றி எழுதும்போதே கொலைவெறி வருகிறது. சைட் டிஷ் சாப்பிடுவதற்காகவெல்லாமா குடிப்பார்கள்.. என்ன கோராமை! கொடுமையிலும் கொடுமை. இதையெல்லாம் கேப்டனாவது தட்டிகேட்டிருக்கவேண்டும். ஏனோ கேட்கவில்லை. முதல்வரானபிறகாவது நீங்கள் கேட்க வேண்டும் கேப்டன்.

நாம் எதற்காக குடித்தாலும் என்ட் ஆஃப் தி டே போதை ஈஸ் த வின்னர் என்பார் கவிசாஸ்திரி என்கிற கவிஆர்டி ஷரண் சுந்தர்! அது உண்மைதானே..

சிலரோ நான்கு ஃபுல் அடித்தும் போதையே ஏறவில்லை என பெருமைபீத்தி கொள்வதை பார்க்கலாம். காரண குடிகாரர்களை விடவும் மோசமானவர்கள் இந்த பார்ட்டிகள். போதை ஏறவில்லையென்றால் அந்த நபர் குடிக்காமலேயே இருந்துவிடலாமே. அல்லது கஞ்சா அபின் மாதிரியான நார்காடிக்ஸ்களை முயற்சித்து சாகலாமே! (போலீஸ் பிடித்தால் நசுக்கிவிடுவார்கள் சட்டையை.. ஆமாம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்தான்). கஞ்சா அபினிலும் போதை கிடைக்கவில்லையென்றால் எழுத்தாளர் ஜெயமோகனின் பதிவுகள் நாலைந்தையாவது தினமும் படித்துவரலாமே. அதைவிட்டுவிட்டு ஏன் தொடர்ந்து போதை தராத சப்பையான ஒன்றை கட்டிக்கொண்டு மாறடிக்க வேண்டும் என்கிற தத்துவார்த்தமான கேள்வி ஏன் எந்த ஒரு குடிகாரரின் மனதிலும் எழுவதில்லை.

இதற்கு குடிக்காமயே இருந்துவிடலாமே? ஏன் குடிக்க வேண்டும். நான் கேட்கிறேன், உண்மையான குடிகாரன் யாரென்று தெரியுமா உங்களுக்கு.. நல்லா குட்ஸ்ட்டு நடுரோட்ல வாந்தியெடுத்துட்டு வாந்திமேலயே மட்டையாகுறானே அவன்தான் உண்மையான குடிகாரன். ஒரு குவாட்டரை வாங்கி சைட் டிஷ், வாட்டர் பாக்கெட், மிக்ஸிங் கூல் ட்ரிங் ஏன் பிளாஸ்டிக் கப்பு கூட இல்லாமல் ராவாக ஒரே கல்ப்பில் குடிக்கிறானே அவன்தான் உண்மையான குடிகாரன். காரணமேயில்லாமல் கடன்வாங்கியாவது காலங்காத்தால டாஸ்மாக் வாசல்ல நின்னு கோட்டர் வாங்கி குடிக்கறானே அவன்தான் உண்மையான குடிகாரன்.

சிக்கன் பீஸில்லாமல் குடிக்க மாட்டேன் என சீன் போடுகிறானே அவனா குடிகாரன்... ஆயா செத்துப்போச்சு அதனால் குடிக்கிறேன் என்கிறானே அவனா குடிகாரான்.. அல்லது ஏதாவது காரணம் சொல்லி ராயலாக பெருமைக்காக குடிப்பவனும் குடிகாரனா?

இவர்களால் உண்மைகுடிகாரர்களுக்கே இழுக்கு! ராணுவத்துல சேர்ந்தவன் பார்டர்ல எதிரியால சுடப்பட்டு செத்தாதான் மரியாதை.. குடிகாரன்னா குட்ச்சு குட்ச்சு குடல்வெந்து செத்தாதான் மரியாதை. கொடலு வேக குடிப்போம். குடும்பத்தை அழிப்போம். மீண்டும் ஜெய்ஹிந்த்.

****

உண்மையான குடிகாரர்களுக்காக மட்டும் இப்பாடல் சமர்ப்பணம். கோவை படைப்பாளிகள் எப்போதும் சோடை போவதில்லை. அவர்களுக்கென்றே ஒரு ஸ்டைலும் தனித்தன்மையும் இருக்கும். அது இப்பாடலில் நன்றாகவே தெரிகிறது. இன்று இப்பாடல் இடம்பெறும் மதுபானக்கடை திரைப்படம் ரிலீஸாகிறது. பார்த்துவிட்டு விமர்சனம் எழுதிகிறேன்.




****

பின்குறிப்பு – மாண்புமிகு புரட்சிதலைவி அவர்கள் விரைவில் மதுவிலக்கை அமல்படுத்த இருப்பதாக வதந்தி உலவிவருவதால் அதற்கு முன் ஒரு முறையாவது இந்த பீர் என்று சொல்லபடுகிற உற்சாக பானத்தை குடித்துப்பார்த்துவிட நினைத்திருக்கிறேன். பார்ப்போம்.