Pages

11 July 2012

ஈரோயிசம்!






சூப்பர் ஸ்டார் நடித்த வேலைக்காரன் படத்தில் ஈயும் ரஜினியும் வருகிற அந்தக்காட்சி தவிர்த்து அப்படத்தின் வேறெந்த காட்சியும் இப்போது நினைவில் இல்லை. அந்தப் படத்தை செல்வபுரம் சிவாலயா தியேட்டரில் பார்த்த நினைவு. அப்போது நான் ரொம்ப ரொம்ப குட்டிப்பையன். கிளாசிக்கான காட்சி அது.

ரஜினி ஒரு மாட்டு ஈ யை வைத்துக்கொண்டு விளையாடியிருப்பார். ஒரு கான்ப்ரன்ஸ் ஹாலில் ஒரு ஈயை விரட்டி விரட்டி சரத்பாபுவையும் பிற வில்லன்களையும் புரட்டி எடுப்பார். அதிலும் மொட்டை மண்டையனின் தலையில் மாட்டு ஈ அமர்ந்துவிட அதை அடிப்பதற்கு ரஜினி பாயும் காட்சியை மறக்கவே முடியாது. கடைசி வரைக்கும் ரஜினி கையில் அந்த ஈ சிக்கவே சிக்காது! ஒரு சூப்பர் ஸ்டார் ஈயிடம் தோற்றுப்போவார். அந்த ஈ ரஜினியின் மூக்கில் போய் அமர்ந்துகொள்ளும் அதை அடிக்க சரத்பாபு பாய்ந்து ரஜினி முகத்தில் குத்துவிடுவார். மறக்கவே முடியாத காட்சி அது.

அப்போது நீங்களும் குழந்தையாய் இருந்திருக்கலாம். அக்காட்சியை ரொம்பவே ரசித்திருக்கலாம். உங்களுக்கும் அது மறக்கமுடியாத காட்சியாக இருந்திருக்கும். நானெல்லாம் சீட்டிலிருந்து துள்ளிக்குதித்து சிரித்து மகிழ்ந்து ரசித்திருக்கிறேன். ரஜினி ஈயிடம் தோற்றாலும் பாம்பிடம் தோற்றாலும் கரப்பான் பூச்சியிடம் தோற்றாலும் ரசிக்க கூடியதாகவே இருக்கும்! ஒருவேளை அதே காட்சியில் ரஜினிக்கு பதிலாக வேறொரு நடிகர் இருந்திருந்தால் நம்மால் ரசித்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

அதே காட்சிதான், அதே கான்ப்ரன்ஸ் ஹாலில் அதே ஈ! அதே மொட்டை மண்டையன். அவனை அடிக்கப்பாய்வது மட்டும் ரஜினி கிடையாது. வேறொரு நடிகர். ஆனால் அதே மகிழ்ச்சி. அதே கொண்டாட்டம். சேம் ஆராவாரம். அண்மையில் வெளியான நான் ஈ படத்தில் இதே காட்சி இடம்பெறுகிறது. ஒரே ஒரு வித்தியாசம்தான்.. அந்த படத்தில் ரஜினி ஹீரோ, இந்த படத்தில் ஈதான் ஹீரோ!

நம்முடைய ஹீரோக்கள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வந்திருக்கிறார்கள். தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்தே அதி உத்தமனமாக இருந்த ஹீரோ, சுதந்திரத்துக்கு பிறகு லட்சிய வீரர்களாகி எம்ஜிஆர் காலத்தில் நாலு பேருக்கு நல்லது செய்கிற, நாட்டுக்காக போராடுகிற, தீயவர்களை புத்திமதி சொல்லி திருத்துகிறவனாக, மக்களை காக்கிற நீதிகாவலனாக இருந்திருக்கிறான்.

அதற்கு பிறகு ரஜினி கமல் காலத்தில் (எமர்ஜென்ஸி!) அவன் கோபக்கார இளைஞனாகவும், பழிவாங்குபவனாகவும் புரட்சியாளனாகவும் குடும்பத்தை நேசிக்கிறவனாக இருக்கிறான். உலகமயமாக்கல் உள்ளே நுழையத்தொடங்கிய தொன்னூறுகளின் ஹீரோ நேர்மையாக போராடி வெற்றிபெற தொடங்கினான்.

இது மங்காத்தா காலம். நாம வாழணும்னா எத்தனை பேர வேணாலும் கொல்லலாம், கொள்ளையடிக்கலாம், பித்தலாட்டம் பண்ணலாம், காதலித்த பெண்ணை ஏமாற்றலாம், குடித்துவிட்டு கற்பழிப்பதுகூட ஹீரோயிசம்தான்.. எல்லாமே ஹீரோயிசமாக மாறத்தொடங்கிவிட்டது. இந்த ஆன்ட்டி ஹீரோயிசம்தான் இப்போதைய டிரென்ட்! மக்களும் அதைத்தான் ரசிக்கிறார்கள். விசிலடிக்கிறார்கள் ரசிக்கிறார்கள். சுறா வேட்டைக்காரன் ராஜபாட்டை மாதிரியான எம்ஜிஆர் காலத்து ஹீரோயிசத்தை பின்னால் தட்டி பரணில் போட்டாகிவிட்டது!

அவர்களுக்கு தேவை எப்படியாவது வெற்றிபெறுகிற ஹீரோயிசம். அவன் நல்லவனாகவோ நாட்டை காப்பவனாகவோ புரட்சி வீரனாகவோ இருக்கத்தேவையில்லை, யாருக்கும் எந்த அறிவுரையும் சொல்லத்தேவையில்லை. அவனுக்கு அடையாளமோ குடும்பமோ கூட அவசியமில்லை. நூறு பேரை அடிக்க வேண்டும், கதறகதற கவர்ச்சி கன்னிகளோடு குத்தாட்டம் போடவேண்டும். அதன் பரிணாம வளர்ச்சியாகவே நான் ஈ படத்தினை பார்க்கிறேன். எனக்கு மனுஷனே வேணாம் ஒரு ஈ போதும் என நினைத்தாரோ என்னவோ ஒரு ஈயை ஈரோவாக்கியிருக்கிறார் தெலுங்கு பட இயக்குனர்லு எஸ்.எஸ்.ராஜமௌலிகாரு!

நான் ஈ படத்தில் ‘’ஒரு சுமால் ஈ’ படுபயங்கரமான திட்டம் போட்டு மாபெரும் பணக்கார ஹீரோவை கொல்லுகிறது. கோபம் கொண்டு சீறுகிறது. காதலியோடு ரொமான்ஸ் பண்ணுகிறது. விஜய் போல சிம்புவைப்போல வளைந்து வளைந்து நடனமாடுகிறது. ஒரு காட்சியில் ஐஸ்க்ரீம் பார்லருக்கு சென்று காதலியோடு காப்பூசினோ குடிக்கிறது. காரில் சேஸிங் பண்ணி வில்லனை மிரட்டுகிறது. ஊசி முனையில் அதிரடி ஆக்சன் பண்ணுகிறது. காதலியை பிடித்து வைத்திருக்கும் வில்லனின் கால்களில் சரண் அடைந்து கொடுமைகளுக்கு ஆளாகிறது. தன்னையே இழந்து தியாகம் செய்கிறது. பஞ்ச் டயலாக் மட்டும்தான் கிடையாது.

இங்கே இருக்கிற தலதளபதி சிங்கிள்ஸ்டார் டவர் ஸ்டார்களின் அத்தனை சேஷ்டைகளையும் அச்சுபிசகாமல் செய்கிறது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தென்னாட்டு ஹீரோயிசங்களையும் ஒரு சுமால் ஈ காலி பண்ணுகிறது.

நாம் அடிக்கடி பார்த்து சலித்த பழைய கதையையே குட்டி குட்டி விலங்குகளை வைத்து அனிமேஷன் படங்களாக களமிறக்கும் வேலைகளை ஹாலிவுட்டில் பிக்சாரும் டிஸ்னியும் ஏற்கனவே வெற்றிகரமாக தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு முன்பாகவே எலியை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட மௌஸ் ஹன்ட் மாதிரியான ஹிட்டுகளும் வெளியாகியுள்ளன. இதுமாதிரி படங்களில் ஹீரோ மிகப்பொடியனாக அன்டர்டாகாக (UNDERDOG) இருப்பான். பலமில்லாத ஹீரோ அழிக்க இயலாத பலம் கொண்ட வில்லனை தன்னுடைய பிரச்சனைகளை கனவினை போராடி வெல்கிறான் என்பதை ஆக்சன் காமெடி சென்டிமென்ட் கலந்து திரைக்கதை அமைத்து ஹேப்பி எவர் ஆஃப்டராக படம் முடியும்.

இந்த வகை அன்டர்டாக் அனிமேஷன் படங்களில் ராட்டடூயில் திரைப்படத்தினை நல்ல உதாரணமாக கூறலாம். சாக்கடையில் பிறந்துவளரும் ஒரு சிறிய எலி எப்படி பாரிஸ் நகரே போற்றும் ஒரு சமையல்காரனாக மாறுகிறது என்கிற கதையை செம ஜாலியாக படமாக்கியிருப்பார்கள். ரியோ என்னும் படத்தில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கூண்டுக்குள் வாழும் பறவை வெளியுலகிற்கு வந்து தன் எஜமானர்களையும் கடத்தப்படும் பறவைகளையும் வில்லன்களிடமிருந்து காப்பாற்றும்! அழிந்து போன உலகில் சின்ன ரோபோவின் தனிமையை சொன்ன வால்ஈ, ஆஸ்கார் விருது வாங்கிய ராங்கோ என்னும் அனிமேஷன் படத்தில் பச்சோந்திதான் ஹீரோ! கடைசியாக வெளியான பூனையார் புஸ் இன் பூட்ஸ் வரைக்கும் இதே பாணி படங்கள் வெளியாகி அதன் வெற்றிகளும் தொடர்கின்றன. இவையெல்லாம் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தன என்பதோடு பெரியவர்களையும் தியேட்டருக்கு இழுத்துவந்தன என்பதே மிக முக்கியம்.

இப்படிப்பட்ட படங்களுக்கான முயற்சிகள் இந்தியாவில் ஒன்றிரண்டு இருக்கலாம். இல்லாமலும் போகலாம். அண்மையில் தொலைகாட்சிகளில் குழந்தைகள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள ‘’சோட்டோ பீம்’’ தொடரை திரைப்படமாக வெளியிட்டது ஒரு நிறுவனம். டிவி அளவுக்கு வெள்ளத்திரையில் வரவேற்பில்லை. காரணம் படத்தினை பெரியவர்களால் ரசிக்கமுடியவில்லை என்பதே. தமிழில் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்கவே குழந்தைகளுக்கான படங்கள் குறைந்து போக இரண்டு காரணங்களை சொல்ல்லாம். ஒன்று குழந்தைகளுக்கு படம் பிடிக்காது, அல்லது பெரியவர்களால் அதை சகிக்க முடியாது!

இந்த இருவரையும் திருப்தி படுத்தும் வகையில் தமிழில் வெளியான படங்கள் மிககுறைவு. மைடியர் குட்டிச்சாத்தான் அந்தவகையில் முழுமையான படமாக கொள்ளலாம். எப்போது வெளியிடப்பட்டாலும் எத்தனை முறை வெளியிட்டாலும் சூப்பர் ஹிட் அடிக்கிற குழந்தைகள் படம் அதுவாகத்தான் இருக்கவேண்டும்.

மிகச்சரியாக பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான லிட்டில் ஜான் தமிழில் வெளியான இந்த வகை படங்களில் ஒரு சுமாரான முயற்சி. படத்தில் ஹீரோ ஜான் மந்திரவாதியின் சாபத்தினால் மிகமிக குட்டியாக மாறிவிடுவார். அவருக்காக சின்ன சைஸ் சட்டை, பேன்ட்,வீடுகளெல்லாம் செய்வார் படத்தின் நாயகி ஜோதிகா. அப்போதிருந்த மிக குறைந்தபட்ச கிராபிக்ஸ் உதவியோடு ஒரளவு நன்றாகவே செய்திருந்தாலும், சில காட்சிகள் க்யூட்டாக இருந்தாலும் ஏனோ குழந்தைகளுக்கான படமாக அது வரவில்லை என்றே நினைக்கிறேன். போலவே அது குழந்தைகளுக்கும் பிடிக்கவில்லை. படம் பார்த்த பெரியவர்களும் நிராகரித்தனர். பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டே ஓரளவு நன்றாக படமாக்கியிருப்பார்கள். ஆனால் அதற்கு பிறகு அதுமாதிரியான படங்கள் எதுவும் வரவேயில்லை. குழந்தைகளை பற்றி சிந்திக்கவும் ஆளில்லை. ராம நாரயணன் குட்டிப்பிசாசு என்கிற மகா மொக்கை படத்தை எடுத்ததே கடைசி.

இன்று கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் நன்றாகவே புஷ்டியாக வளர்ந்துவிட்டது. இல்லாத ஒன்றை உருவாக்கும் வல்லமை நமக்கு கைவந்திருக்கிறது. ஆனால் வெறும் தொழில்நுட்பம் மட்டுமே சினிமாவாகிவிடாது. அதற்கும் மேல் அது உங்களை காரணத்தோடு பிரமிக்க சிரிக்க அழ ஏதோ ஒரு உணர்வை கொடுக்க வேண்டும். சுவாரஸ்யமான கதை இருக்க வேண்டும். பிட்டு படத்தில் கூட நல்ல திரைக்கதை இருந்தால்தான் பார்க்கும் போது ஏதோ ஒரு உணர்வு உண்டாகும்! மொட்டை கெழவன் குட்டையில் விழுந்தது போல படமெடுத்தால்..!

அந்த வகையில் இந்த நான் ஈ, மைடியர் குட்டிச்சாத்தான் செய்த மேஜிக்கினை மீண்டும் செய்திருப்பதாகவே நினைக்கிறேன். ராஜாசின்னரோஜா,அபூர்வ சகோதரர்கள் படங்கள் போல சில காட்சி அனிமேஷன், சில காட்சி பபூன் வேஷங்களை காட்டி குழந்தைகளை ஈர்க்கவில்லை. படத்தின் 20வது நிமிடத்திலிருந்தே இப்படம் குழந்தைகளுக்கான படமாக மாறிவிடுகிறது. இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம்.. நமக்குள் இன்னமும் மிச்சமிருக்கிற குழந்தையை உசுப்பிவிடுகிற படம். ராஜமௌலி நம் வீட்டு குழந்தைகளை மகிழ்விக்க புதிய கதைகளை பெரிய திரையில் சொல்லும் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார். இது தொடர வேண்டும்.