இந்தப்படம் சுமார்தான் என்று சொல்லக்கூட அச்சமாக இருக்கிறது. படம் பார்த்து மிரண்டுபோயிருக்கிற கல்யாண் ஜூவல்லர்ஸின் புரட்சிபோராட்டக்காரர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து என் முகத்தில் ஆசிட் அடித்தாலும் அடித்துவிடுவார்களோ என அஞ்சுகிறேன்.
வெள்ளிக்கிழமையே படம் ரிலீசாகிவிட்டாலும் சிலபல லௌகீக பொருளாதார காரணங்களால் நேற்றுதான் வழக்கு எண் 18/9 படத்தினை பார்க்க நேர்ந்தது. இணையத்திலும் பத்திரிகைகளிலும் விமர்சகர்கள் தலையில் வைத்து கூத்தாடிய அளவுக்கு ஆகச்சிறந்த நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல உலக படமெல்லாம் இல்லை, தமிழ்சினிமாவின் எந்த கிலோமீட்டர் கல்லும் இல்லை. நல்ல செய்தியை நாசூக்காக சொல்லியிருக்கிற இன்னொரு படம் அவ்வளவுதான்.
படத்தில் நாற்பது சதவீதம் நிச்சயமாக உலக சிறப்பு.. அறுபது சதவீதம் காண்பவரை அழவைப்பதற்கான ஓவர் மெனக்கெடல். அழுகையே வரல பாஸ். ஒரே படத்தில் உலகின் எல்லா பிரச்சனைகளையும் சொல்லிவிட வேண்டும் என்கிற ஆர்வம் வேறு இயக்குனருக்கு அதிகமாகி குழந்தை தொழிலாளர் பிரச்சனையில் தொடங்கி மருத்துவமனையில் லஞ்சம் வாங்குவது வரை ஏகப்பட்ட சமூக அவலங்கள்!! நிச்சயம் பாலாஜி சக்திவேல் நல்லவர் என்பதை ஒப்புக்கொள்ளும் வரை விடாமல் பிரச்சனைகளை அடுக்குகிறார்!
கமர்ஷியல் கண்களை கழட்டிவைத்துவிட்டு மேம்பட்ட பல்கலைப்பார்வையோடு இந்த ஆகச்சிறந்த படத்தினை அணுகினாலும் கிடைப்பதென்னவோ காதலுக்கு கீழே கல்லூரிக்கு மேலே! மாபெரும் இலக்கிய சமூகங்களுக்கும் விளிம்பு நிலைமக்களை சந்தித்தேயிராத நல்லவர்களுக்கும் இப்படம் நல்ல வேட்டையாக அமையலாம்.
படம் சுமார்தான் என்றாலும் படம் சொல்லும் பாடம் பணக்கார பெற்றோரும்,பள்ளிக்குழந்தைகளும் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டியவை. விடுமுறை காலத்தில் படம் வெளியாகியிருப்பதால் பணக்கார மற்றும் உயர் நடுத்தரவர்க்க பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சத்யம் தியேட்டருக்கு அழைத்துசென்று இப்பாடத்தினை பார்த்து பள்ளியில் படிக்கும் அவர்களுடைய பிள்ளைகள் என்னமாதிரியான சூழலில் வளர்கிறார்கள் என்பதை தெரிந்துபுரிந்து பதவிசாக நடந்துகொள்ளலாம்.
அது நிச்சயமாக பெற்றோர்-குழந்தைகள் உறவில் மாபெரும் மாற்றத்தினை கொண்டுவரலாம், வராமலும் போகலாம். அல்லது பெற்றோர்கள் பிள்ளைகளின் ஃபோனை நோண்டி நோண்டி பிரச்சனைகள் வளரலாம். பள்ளிக்குழந்தைகளின் அடிப்படை சுதந்திரங்களும் பறிக்கப்படலாம்.
பாலாஜி சக்திவேல் தன் காதல் படத்தில் பள்ளிக்குழந்தையின் பப்பிலவ்வை தெய்வீகமான காதலாக காட்டி மிகத்தவறான தண்டிக்கத்தக்க கருத்தினை பரப்பிவிட்ட பாவத்தை இப்படத்தின் மூலமாக கழுவிக்கொள்ள முயற்சித்திருப்பார் போல!!
நாம் வாழும் தெரு முனையில் இத்தனை காலமும் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ வாழுகிற ஏழைகளின் வாழ்க்கையை நன்றாக படம் பிடித்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். அந்த ஏழைகளை பற்றியே தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிற நமக்கு அந்த ஏழைகள் படும் பாட்டை திரையில் பார்த்து பெருமூச்சுடன் கண்ணீர் வடிக்க இப்படம் நிச்சயம் உதவும். பாவம் ஏழைகள் என உச்சுக்கொட்ட அநேக காட்சிகள் படத்திலுண்டு. (பாப்கார்ன் சாப்பிடும் போது உச்சுக்கொட்ட வேண்டாம் புரை ஏறிவிடும்!)
மற்றபடி எம்ஜிஆர் காலத்திலிருந்தே பிலிம் ரோலில் காட்டிய அதே ஏழைகளின் கஷ்டத்தையும், பணக்காரர்களின் கொடூரத்தையும், அதிகாரத்தின் அழிச்சாட்டியத்தையும் 5டி காமிராவில் துகிலிரித்த இந்தப்படத்தை விமர்சகர்கள் கொண்டாடுவதில் பிழையில்லை. காலங்காலமாக அப்படித்தானே செய்துகொண்டிருக்கிறோம்.
ஊரே ஒரு படத்தினை தலையில் வைத்துக்கொண்டாடுகையில் எனக்கே எனக்கு மட்டும் (துணையாக ஓரிருவர் இருக்கலாம்) இப்படம் சுமாராக தெரிய என்ன காரணமாயிருக்கும் என்கிற ஆராய்ச்சியில் இறங்கினேன். என்னுடைய ரசனை கமர்ஷியல் படங்களை தொடர்ந்து பார்த்துவருவதால் மங்கிப்போய்விட்டதா? கவர்ச்சி காட்களுக்காகவும் அதிரடி சண்டைகளுக்காவும் ரத்த வெறியோடு கண்கள் ஏங்குதோ? அல்லது ஹீரோயிசமும் தொடைதெரியும் ஹீரோயினும் இல்லாமல் படம் பார்க்க பிடிக்கலையோ? என என் மண்டையில் இல்லாத மயிரை பிய்த்துக்கொண்டு யோசித்தேன்! கடைசிவரை பிடிபடவேயில்லை.
இந்தப்படத்திலும் ஹீரோ உண்டு, ஹீரோயின் உண்டு. காதல் உண்டு, முக்கால் தொடையும், பிதுங்கும் மார்பும் தெரிகிற நாயகியுண்டு, அநேக வன்முறை முதல்காட்சியிலிருந்தே வலிக்க வலிக்க திணிக்கப்பட்டிருக்கிறது. தீயவர்களை கிளைமாக்ஸில் பழிவாங்குகிறார்கள். தர்மம் வெல்லுகிறது. தெய்வீகமான காதலன் தன் தெய்வீகமான காதலியின் முகம் சிதைந்தபோதும் அவளை தெய்வீகமாக ஏற்றுக்கொள்கிறான்! வில்லனான காதலன் நல்ல காதலியை நயவஞ்சகமாக ஏமாற்றி அவளை ஆபாசமாக படம் பிடிக்கிறான்.. இதுக்கு மேல ஒரு நல்லப்படத்துல வேற என்னதான்டா உனக்கு வேணும் என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். விடையே கிடைக்கல!