புரிந்து கொண்டால் மட்டுமே அதன்மேல் அக்கறை காட்ட முடியும்
அக்கறையோடு இருந்தால் மட்டுமே அதற்காக உதவ முடியும்
உதவினால் மட்டுமே அதை காப்பாற்ற முடியும்
-டாக்டர்.ஜேன் குட்ஆல் (இயற்கை ஆர்வலர்)
வங்காள விரிகுடா கடல்பகுதியில் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்த்த கருணா என்கிற அந்த கடலாமைக்கு வயது 11. கடலாமைகளுக்கே உள்ள பொதுவான குணம் கருணாவிடமும் இருந்தது. மகப்பேறு காலத்தில் தாய்வீட்டுக்கு வரும் மகளைப்போல , கடலாமைகளும் அவை எந்த இடத்தில் பிறந்ததோ அதே இடத்திற்கு திரும்பிவந்து முட்டையிடும்.
பல நூறு ஆண்டுகளாக கடலாமைகள் காஞ்சிபுரம் மாவட்டத்தின் கடற்கரைகளில்தான் முட்டையிடுகின்றன. சென்னைக்கு அருகில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள மீனவ கிராமங்களே இந்த ஆமைகளுக்கு மிகப்பிடித்த இடமாக இருக்கிறது. அப்படித்தான் கருணாவும் சென்னையை நோக்கி பயணமானது.
மகிழ்ச்சியாக கடலில் நீந்தி சென்னைக்கடற்கரையை நெருங்கிக் கொண்டிருந்த கருணாவின் துடுப்புகள் எதிலோ சிக்கிக்கொண்டது. துடுப்புகளை அசைக்க இயலவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் அது மீனவர்களின் படகில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. கையில் கத்தியுடன் ஒரு மீனவர் கருணாவை நோக்கி வருவதுதான் கருணாவிற்கு கடைசியாக தெரிந்தது. கருணாவின் நான்கு துடுப்புகளில் மூன்று வெட்டப்பட்டன. ஒற்றை துடுப்புடன் ரத்தம் சொட்ட கடலில் வீசப்பட்டது. துடுப்புகளில்லாமல் நீந்த முயன்று தோல்வியடைந்து மயங்கி கடலில் மிதந்தது கருணா.
அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்து கரையொதுங்கிய கருணாவை ‘’ட்ரீ பவுண்டேசன்’’ அமைப்பினர் காப்பாற்றினர். கால்நடை மருத்துவர்களைக் கொண்டு அவசர சிகிச்சை அளித்தனர். வெட்டப்பட்ட துடுப்புகளில் வழிந்த ரத்தம் சுத்தம் செய்யப்பட்டு அந்த இடம் தைக்கப்பட்டது. இனி கருணாவிற்கு மீண்டும் துடுப்புகள் வளராது. இனி கடலில் சுதந்திரமாய் சுற்றமுடியாது.
சராசரியாக 60 ஆண்டுகள் வாழும் கடலாமைகள் இனத்தைச் சேர்ந்த கருணாவின் அடுத்த 50 ஆண்டுகள் ஒரு சின்ன தண்ணீர் தொட்டியில்தான். நடக்க முடியாது. நீந்த முடியாது. தண்ணீரில் போட்டால் மிதக்கலாம். யாராவது உணவுகள் தந்தால் சாப்பிடலாம்.
மீனவர்களையும் குற்றஞ்சொல்ல முடியாது. காஸ்ட்லியான தங்களுடைய வலைகளை அறுத்தெரிய முடியாமல் ஆமைகளின் துடுப்புகளை வெட்டியெறிந்துவிடுகின்றனர். உண்மையில் கடலாமைகளை மீனவர்களின் நண்பர்கள் என்று அழைக்கலாம். ஆனால் அது மீனவர்களுக்கு தெரியாது என்பதுதான் சோகம்.
பவழப்பாறைகள் நிறைந்தது நம்முடைய கடற்ப்பகுதிகள். அதில் வளரும் பாசி,புல் முதலான கடற்தாவரங்களை தின்று அவற்றை சுத்தம் செய்வதில் பெரும்பங்கு கடலாமைகளுடையது, அப்படி சுத்தம் செய்யப்படும் இடங்கள் மீன்கள் முட்டையிட ஏற்ற சூழலை உருவாக்குகிறது கடலாமைகளின் அழிவு கடலின் மற்ற வளங்களை பாதிக்கும். இந்த கடலாமைகளின் பாதுகாப்பு மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்புடையது.
தினமும் இரவு நேரங்களில் ட்ரீ பவுன்டேஷன் அமைப்பினர் தங்களுடைய கடல் ஆமை பாதுகாவலர்களோடு கிளம்புகின்றனர். இதை ட்ர்ட்டிள் வாக் என்கின்றனர். இது நவம்பர் தொடங்கி ஏப்ரல் வரை தொடர்கிறது. இந்த காலங்களில்தான் ஆமைகள் நம் கடல்பகுதிகளுக்கு மகப்பேறுக்காக படையெடுக்கின்றன.
ஆமைகள் கடலோரங்களில் முட்டையிட ஏற்ற இடமாக தேர்ந்தெடுத்து குழிதோண்டி முட்டையிடுகின்றன. அடைகாப்பது கிடையாது. அதனால் தனித்துவிடப்படும் முட்டைகளை பறவைகள்,நாய்கள் சேதப்படுத்திவிடுவதுண்டு. சமயங்களில் குழந்தைகள் விளையாடக்கூட உபயோகிக்கின்றனர். இன்னும் சில கிராமங்களில் உணவுக்கும் கூட இந்த முட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. தூத்துக்குடி பகுதிகளில் ஆமையின் முட்டைகளும் அதன் ரத்தமும் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறதாம்.
இரவில் நிலா மற்றும் நட்சத்திரத்தின் ஒளி கடலில் பிரதிபலிக்கும் , முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக்குஞ்சுகள் ஒளி வரும் திசைநோக்கியே நகரும் தன்மை கொண்டவை. நிலவொளியை வைத்துதான் கடலுக்குள் செல்லும் குணம் கொண்டவை. கடற்கரைகளில் வைக்கப்பட்டுள்ள அலங்கார விளக்குகளின் ஒளியை நிலவொளி என எண்ணி சாலையை நோக்கி வரத்தொடங்கிவிடுகின்றன. இதில் வாகனங்களில் மோதியும் , அதிக வெப்பத்தாலும் இந்த ஆமைக்குஞ்சுகள் மடிகின்றன.
இத்தனையையும் தாண்டி உயிர் பிழைக்கும் ஆமை குஞ்சுகளில் கடலுக்கு செல்லும் 1000 ஆமைகளில் ஒன்றுதான் பிழைக்கும். மீதமுள்ள 999ம் கடலில் வாழும் பிற உயிரினங்களுக்கு உணவாகும் என்பது இயற்கையின் உணவு சங்கிலியில் ஒரு பகுதி.
இப்படி கடலுக்கு திரும்பிச்செல்லும் கடலாமைகளின் எண்ணிக்கையை அதிகமாக்க ‘’ட்ரீ பவுண்டேஷன் அமைப்பு’’ டர்ட்டிள் வாக்கின் போது கடலோரங்களில் ஆமைகள் முட்டை வைக்கும் இடத்திற்கு சென்று , முட்டைகளை பாதுகாப்பாக எடுத்து வேறு இடத்தில் தகுந்த வெப்பநிலையில் அடைகாக்கப்படுகின்றன. சரியான வெப்பநிலைகள் கூட மருத்துவர்களை கொண்டு கண்காணிக்கப்படுகிறது. 48முதல் 50 நாட்களுக்கு பின் இந்த முட்டைகளிலிருந்து வெளியேறும் ஆமைக்குஞ்சுகள் சில மணிநேரங்களில் மீண்டும் கடலுக்கே பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்படுகின்றன. இப்படி இதுவரை 50,000க்கும் மேற்பட்ட ஆமைக்குஞ்சுகள் கடலுக்குள் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதவிர படகுகளில் அடிபட்டு , வலைகளில் சிக்கி வெட்டப்பட்டு கரையொதுங்கும் பெரிய ஆமைகளை பாதுகாப்பாக மீட்கப்படுகிறது. அவை தகுந்த சிகிச்சைக்குப் பின் மீண்டும் கடலிலேயே விடப்படுகிறது. அவற்றால் கடலில் மீண்டும் பழையபடி இயங்க முடிகிறதா என்பதும் கண்காணிக்கப்படுகிறது.
லயோலா கல்லுரி, வனத்துறை மற்றும் கடலோர காவல்படையினரின் உதவியோடு இந்த பணிகளை நிறைவேற்றி வருகின்றனர். இது தவிர கார்பரேட் நிறுவனத்தை சேர்ந்தவர்களும் ட்ரீ பவுண்டேஷன் அமைப்பின் சுற்றுசுழல் பணிகளில் பங்கேற்று வருகின்றனர். இறந்த ஆமைகள் கடற்கரைகளில் தென்பட்டால் அவற்றை வனத்துறையின் அனுமதியோடு பெற்று அவற்றை ஆராய்ந்து எதனால் ஆமைகள் மடிகின்றன என்பதையும் ஆராய்ந்து வருகின்றனர்.
‘’சென்ற மாதம் கூட இரண்டு ஆமைகள் செயற்கைகோளுடன் தொடர்பு கொள்ள உதவும் கருவிகள் பொருத்தப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளது, செயற்கை கோள் மூலம் அதனுடைய இடப்பெயர்ச்சி மற்றும் அவற்றின் வாழ்க்கை முறை குறித்து ஆராய இது உதவும். இது கடலாமைகள் பாதுகாப்பில் மிகப்பெரிய உதவியாக இருக்கும். அந்த தகவல்களின் அடிப்படையில் மீன்வளம் குறித்தும் ஆராய உள்ளோம். இப்படி செயவது இந்தியாவிலேயே இரண்டாவது முறை , இது இந்திய கடற்பகுதிகள் குறித்த ஆராய்ச்சிகளுக்கு மேலும் உதவும்.
கடல் ஆமை பாதுகாப்பு மீனவ சமூகத்திலும் கடலின் சுற்றுசூழலிலும் நல்ல மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. தற்போது தமிழக கடற்கரைகளில் மட்டுமே செய்யப்படும் இந்த பணிகள் இந்தியா முழுக்க செயல்படுத்த முனைவோம் , ஆமைகள் காயமடைந்து கரைகளில் ஒதுங்கும் போது அவற்றை மீட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வாகனங்கள் கிடைப்பதில்லை. அது ஒன்றுதான் பிரச்சனை‘’ என்று கூறுகிறார் ட்ரீ பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் சுப்ரஜா.
ட்ரீ ஃபவுண்டேஷன் நடத்தும் ‘’டர்ட்டிள் வாக்’’கில் யார்வேண்டுமானாலும் கலந்துகொள்ள முடியும். இரவு நேரத்தில் கடலோர பகுதிகளுக்கு சென்று எங்கெல்லாம் ஆமைகள் முட்டையிட்டு வைத்திருக்கின்றன என்பதை தேடிக்கண்டுபிடிக்க வேண்டும். இரவு முழுக்க நீளும் இந்த வேலையில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களும், மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர். கல்ந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் கடலாமை பாதுகாப்பு குறித்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நீங்களும் கலந்துகொள்ள விரும்பினால் 9962428863 என்ற எண்ணையோ மேலும் விபரங்களுக்கு www.treefoundationindia.org இணையதளத்தையோ காணலாம்.