மார்ச் 12 2011, நாக்பூரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி! 111 ரன்களை அதிரடியாக ஆடிக் குவித்தார் சச்சின்.
சச்சின் அடித்த 99வது சதம். நாடே கொண்டாடியது. இன்னும் ஒரே ஒரு சதம்தான் உலக கிரிக்கெட் அரங்கில் யாருமே தொட்டிடாத நூறு செஞ்சுரிகள் என்னும் சிகரத்தை அடைந்துவிடுவார். ஒரே வருடத்தில் (2001) ஏழு சதங்களை அடித்தவர் சச்சின்! இதென்ன ஒன்னே ஒன்னு.. ச்சும்மா சொடுக்கு போடும் நேரத்தில் அடித்துவிடுவார் ஜூஜூபி என பலரும் நினைத்தனர்.
ஆனைக்கும் அடிசறுக்கும் என சொல்வதுண்டு! ‘ஆண்டவர்’(GOD) என செல்லமாக அழைக்கப்படுகிற சச்சினுக்கும் அடி சறுக்கியது. அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார் அந்த நூறாவது சதம் இந்த அளவுக்கு அவரை பாடாய் படுத்துமென்று!
கடந்த ஒரு ஆண்டில் ஒவ்வொரு முறையும் இந்தியா ஆடுகிற ஒவ்வொரு போட்டியிலும் ‘’இந்தமுறை சச்சின் சதமடிப்பாரா.. இந்தமுறை சாதிப்பாரா.’’. என மீடியாக்கள் அலறின! சதமடிக்க தவறியபோதெல்லாம் சச்சின் அவ்ளோதாம்பா ரிடையர்டாகிட வேண்டியதுதான்.. என இகழ்ந்தன. அடுத்த போட்டியில் மீண்டும் சச்சின் சதம்.. சதம் சதம்.. என அலறின..
99 சதமடித்து முடித்து ஒருவருடம் நான்கு நாட்களுக்கு பிறகு தன்னுடைய நூறாவது சதத்தை அடித்தே விட்டார் சச்சின். சச்சின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். அதைவிடவும் அதிகமாக சச்சின் நிம்மதியாகியிருக்கிறார்.
ஆனால் நூறாவது சதமடித்த போட்டியில் இந்தியா கத்துக்குட்டி பங்களாதேஷிடம் தோல்வியடைந்தது. சச்சின் 99சதமடித்த போட்டியிலும் தென்னப்பிரிக்காவிடம் இந்தியா தோற்றது.. கிரிக்கெட் விமர்சகர்கள் உடனே பழைய பல்லவியை பாடத்தொடங்கிவிட்டனர்.
சச்சின் தன் சுய பெருமைக்காகவும் சாதனைகளுக்காகவும் விளையாடுகிறார், நாட்டிற்காக விளையாடுவதில்லை, வங்காளதேசத்துடனான போட்டியில் அதிக பந்துகளை வீணடித்துவிட்டார், சச்சின் சதமடிக்கும்போதெல்லாம் இந்தியா தோற்றது என சேம் ஒல்டு சாங்ஸ்!
நிஜமாகவே சச்சின் செஞ்சுரி அடித்து எத்தனை முறை இந்தியா தோற்றுப்போயிருக்கிறது என கிரிக்கெட் புத்தகங்களை புரட்டிப்பார்த்தால்.. கதை வேறு மாதிரியிருக்கிறது. சச்சின் செஞ்சுரி அடித்த நூறு ஆட்டங்களில் 23 போட்டிகளில் மட்டுமே இந்தியா தோல்வியை தழுவியுள்ளது! 67 போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்காகத்தான் விளையாடியுள்ளார் சச்சின்!
1989ஆம் ஆண்டு சச்சின் புதுமுகமாக 16வயதில் களமிறங்கி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் தொடர். அதன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகள் மளமளவென சரிந்துகொண்டிருக்க களமிறங்கினார் சச்சின்.
தன் விக்கெட்டை மட்டும் இழந்துவிடக்கூடாது என்கிற மன உறுதி மட்டுமே நிறைந்திருக்கிறது. எப்படி பந்துவீசினாலும் தடுத்து ஆடுகிறார். எதிரணியில் இரண்டு புதுமுகங்கள்.. ஒருவர் வாசிம் அக்ரம், இன்னொருவர் வக்கார் யூனிஸ்.. பவுன்ஸர்களாக போட்டு தாளிக்கின்றனர். வக்கார் யூனிஸின் ஒரு பவுன்ஸர் எதிர்பாராத விதமாக சச்சின் மூக்கில் பட்டு ரத்தம் கொடகொடவென கொட்டுகிறது!
மறுமுனையிலிருந்த சித்து பதறிப்போய் ஓடிவருகிறார். பவுண்டரியிலிருந்து மருத்துவர்கள் வருகிறார்கள். ‘’தம்பி நீ பெவிலியன் திரும்பிடு..’’ என அறிவுருத்துகிறார் சித்து. மருத்துவர்களும் அதையே கூறுகின்றனர். ஆனால் ‘’பரவால்ல நான் விளையாடுவேன்.. நான்விளையாடுவேன்’’ என்று ரத்தத்தினை துடைத்துக்கொண்டு சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தார் சச்சின். அந்த பிடிவாதமும் ஆர்வமும் இந்தியாவை வெற்றிபெற வைக்கவேண்டும் என்கிற வெறியும்தான் 23வருடங்கள் சச்சினை விளையாட வைத்திருக்கிறது.
எந்த விளையாட்டு வீரரும் சச்சின் அளவுக்கு காயமடைந்து விளையாடமுடியாமல் போயிருக்க முடியாது. கிட்டத்தட்ட 13 முறைகள் வெவ்வேறு விதமான காயங்களால் விளையாடமுடியாமல் ஓய்வெடுக்க நேர்ந்திருக்கிறது. முதுகு வலி, தோள்பட்டை காயம், கணுக்கால் வலி, டென்னிஸ் எல்போ என 23 ஆண்டுகளில் அவரது உடல் சந்திக்காத சோதனைகளே கிடையாது. ஆனால் அத்தனையையும் எதிர்த்து போராடித்தான் இன்று இந்த மகத்தான சாதனையை செய்து முடித்திருக்கிறார் சச்சின்.
1999 உலக கோப்பையின் போது இந்திய அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோற்று கிட்டத்தட்ட தொடரிலிருந்தே வெளியேறும் நிலை! அந்த நேரத்தில் சச்சினுடைய தந்தை இறந்த செய்தி இடியாக வருகிறது. சச்சின் தோல்விகளால் துவண்டுபோயிருந்த தன் அணியை விட்டுவிட்டு ஊருக்கு கிளம்ப வேண்டும். சச்சின் இந்திய அணிக்கே முக்கியத்துவம் கொடுத்தார். உடனடியாக மும்பை போய் காரியங்களை முடித்துவிட்டு உலக கோப்பைவிளையாட திரும்பிவிட்டார்.
அப்பா இறந்த துக்கத்தோடு கென்யாவுக்கு எதிராக விளையாடி சதமடித்தார். சாதனைக்காகவே விளையாடுகிற ஒருவரால் செய்யவே முடியாத காரியம். அந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதுபெற்ற சச்சின் என் தந்தை உயிரோடிருந்தால் இதைதான் விரும்பியிருப்பார் என கண்ணீரோடு பேசியதை யாருமே மறந்திருக்கவும் முடியாது!
சச்சினுடைய ரத்தமும் சதையும் நாடி நரம்புகளும் கிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட் மட்டும்தான். அப்படி இல்லாத ஒருவரால் இத்தனை சாதனைகளை செய்திருக்கவே முடியாது. சச்சினுக்கு எல்லாமே கிரிக்கெட்தான்.
‘’உங்கள் விளையாட்டை நேசியுங்கள், உங்கள் கனவுகளை துரத்துங்கள்!’’ இதுதான் சச்சினின் வெற்றி ரகசியம். தன் வாழ்நாள் முழுக்க தனக்கு பிடித்த வேலையை தன்னுடைய கனவினை நோக்கி ஓடிக்கொண்டேயிருக்கிறார் சச்சின். மூன்று தலைமுறை கிரிக்கெட் வீரர்களோடு விளையாடி முடித்துவிட்டார்!
யாருமே முறியடிக்க முடியாத சாதனைகளை செய்து காட்டியிருக்கிறார். ஆனால் எதுவந்தபோதும் அவரிடம் வராதது நான் என்கிற அகம்பாவமும் சாதனைகளால் உருவான கர்வமும்தான்!
வணங்குகிறோம் சச்சின்!
(நன்றி - புதியதலைமுறை)