05 March 2012
அரவான் - உலக மகா காவியம்
இதெல்லாம் தமிழ்நாட்டில் மட்டும்தான் சாத்தியம். சென்னை உதயம் தியேட்டரில் பத்து ரூபாய்க்கு தரைடிக்கட் வாங்கினால் சுளையாய் இருபது ரூபாய் வண்டி நிறுத்த பார்க்கிங்கிற்கு நொட்டவேண்டும். மொத்தம் முப்பது ரூபாய்! இடைவேளையில் தம் அடிக்கும் சுதந்திரம் கூட இல்லை! இருந்தாலும் தொடர்ந்து வெளியாகிற எல்லா மொக்கை படங்களையும் பார்த்து தமிழ்சினிமாவை ஆதரித்து வளர்த்தே வருகிறான் அறிவேயில்லாத தமிழ்சினிமா ரசிகன். அட இவனுக்கு அறிவுதான் பூஜ்யம் என்றால் ரசனை கூடவா மங்கிப்போயிருக்க வேண்டும்.
அண்மையில் அரவான் என்றொரு காவியமான படம் பார்க்க சென்றிருந்தேன். எப்பேர்ப்பட்ட படம்! படம் முழுக்க இலக்கியம்னா இலக்கியம் உங்க வீட்டு இலக்கியம் கிடையாது எங்கூட்டு இலக்கியம் கிடையாது… இலக்கியத்தை ஆத்து ஆத்தென்று நாயர்கடை பாய்போல நீட்டி நீட்டி ஆத்தியிருக்கிறார்கள். அதோடு படத்தில் குத்துப்பாட்டு கிடையாது, கவர்ச்சி நடனம் கிடையாது பஞ்ச் டயலாக் கிடையாது.. அப்படி இருக்கும் பட்சத்தில் அது ஆகச்சிறந்த கலைப்படைப்பாகத்தானே இருக்க முடியும்.
மயிர்கூச்செரியவைக்கும் அதிதீவிர படுபயங்கர இலக்கியப்பிரதிதான் அரவான்!. ஏற்கனவே ஏழாம்அறிவு படம் பார்த்து நட்டுக்கொண்டிருந்த தமிழன் என்கிற பெருமை இந்தப்படம் பார்த்ததும் மேலும் புடைத்து வீங்கி வெடிக்கும் அளவுக்கு ஆகி பிதுங்கிவிட்டது!
ஆனால் பாருங்கள் தியேட்டரில் என்னோடு படம் பார்த்துக்கொண்டிருந்த சராசரி சாதாரண இலக்கியம் தெரியாத முட்டாள்களுக்கு இந்தப்படம் பிடிக்கவில்லை. சிலர் என்ன எழவுடா இது என்று சொல்லிக்கொண்டே இடைவேளைக்கு முன்பாகவும் மீதிபேர் இடைவேளை முடிந்ததும் அரக்க பரக்க தியேட்டரைவிட்டே ஓடத்தொடங்கினர்.
( அந்த அரூபமான காட்சி எனக்கு ஜூராசிக் பார்க் என்கிற அமெரிக்க வல்லாதிக்க ஏகாதிபத்திய ஹாலிவுட் காட்சிப்பட பிரதியில் ஒரு காட்சியை நினைவூட்டியது. கொடிய மிருகமான டைனோசர் மனிதர்களை கொன்றுபுசிக்கிற ஆவேசத்தோடு கதாபாத்திரங்களை துரத்துவதை நியாபக அடுக்குகளிலிருந்து மீட்டெடுக்கிறேன்.. டைனோசருக்கு முன்னால் ஓடுகிற ஒருவர் சொல்லுவார் ‘’ஓடுங்க அந்த மிருகம் நம்மை நோக்கிதான் வருது’’ என்று! )
புதுமையான கதைக்களம், புத்தம் புதிய காட்சிகள், ‘இலக்கிய நாவலை படமாக்கியிருக்கிறார்கள்!’ ஒவ்வொரு தமிழனும் (பெருமைப்படவேண்டிய) தெரிந்துகொள்ளவேண்டிய வரலாறு.. என ஏகப்பட்ட காரணங்கள் இந்த படத்தைப்பற்றி பாராட்ட இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் பற்றி எவனுக்குமே கவலை இல்லை.. சரியான மொக்கை படம் பாஸ் என்று போகிற போக்கில் ஒரு வார்த்தையை உதிர்த்துவிட்டு கிளம்புகிறார்கள்.
‘’அடேய் முட்டாள்களா இது எப்படிப்பட்ட படம் தெரியுமா.. இதை எடுத்தவர் எழுதியவர் யார் தெரியுமா.. இந்தப்படத்தில் இருக்கிற நுண் அரசியல் குறியீடெல்லாம் தெரியுமா? கள்ளர்கள் வரலாறு தெரியுமா? எவ்ளோ கஷ்டப்பட்டு ஆர்ட் டைரக்சன் பண்ணிருக்காங்க..அந்தக்காலத்துக்கே நம்மளை கூட்டிகினு போகலையா? தமிழன்தான் தமிழுக்கே எதிரி..’’ என்று படத்தை திட்டிய நண்பர் ஒருவரின் சட்டையை பிடித்து .நாக்கை பிடுங்கிக்கொள்வதைப்போல கேட்டேன்.
‘’எது இருந்து என்ன பிரயோஜனம் பாஸ்.. படத்துலதான் சுத்தமா சுவாரஸ்யமும் இல்ல ஒன்னும் இல்லையே! மகா மட்டமான இசை, கேவலமான எடிட்டிங், ஒன்னுக்கொன்னு தொடர்பில்லாத காட்சிகள், தியேட்டர்காரன் எடிட் பண்ணினதா இல்ல டைரக்டர் ஓவரா படமெடுத்து எதை வெட்டறதுனு தெரியாம வெட்டினாரானு தெரியல..
படத்தின் முதல் பாதியில ஹீரோயின் மாதிரி ஒருபொண்ணு வருதே.. அந்த பொண்ணும் படத்தோட ஹீரோ ஆதியும் சேர்ந்து வர காட்சிகள் மொத்தமா இரண்டுதானு நினைக்கிறேன்.. திடீர் ஒருநாள் கட்டிக்கின்னா ஒன்னதான் கட்டிப்பேன் இல்லாட்டி செத்துடுவேனு சொல்லுது.. காரணம் வேணாமா பாஸு.. படம் பாக்கும்போது ஒருத்தர் யாரு சார் அந்தப்பொண்ணுனு வேற கேக்கறாரு.. அதை விடுங்க கடைசில எதுக்கு மரணதண்டனை பில்டப்பு.. பலி குடுக்கறதுக்கும் மரணதண்டனைக்கும் என்ன பாஸ் சம்பந்தம்..
திரைக்கதைக்கு வருவோம்.. இது ஆதியோட கதையா? இல்ல பசுபதியோட கதையா? இல்ல இரண்டுபேத்தோட கதையா? இல்ல வரலாற்றோட ஒருபகுதியா? எந்தக்கதைய முழுசா சொல்றதுனு ஒரே குழப்பத்தோடயே படமெடுத்திருப்பார் போல வசந்தபாலன்! அதனால எதையும் முழுசாவும் சொல்லாம , எல்லா கதையையும் மென்னு முழுங்கிருக்காப்ல.. இரண்டாம் பகுதில வர துப்பறியற சீன்லாம் எதுக்குனே தெரியல.. அதுவும் காவலில் சிறந்த ஊருக்குள்ள ராஜாவே புகுந்து கொலையெல்லாம் செஞ்சிட்டு போயிடறாராம் யாருக்குமே தெரியலையாம்? என்னங்க லாஜிக்கு! பத்து வருஷம் மறைஞ்சி வாழறவன் கொள்ளையடிச்சி வாழ்வானாம் அதுவும் ராஜாகொள்ளையாம்ல..
அட ஆர்ட் டைரக்சன் பிரமாதம்னு சொல்றாங்களே.. நாலு குடிசையும் இரண்டு செட்டிநாட்டு வீடும்தான் ஆர்ட் டைரக்சனா? ஏன்ங்க் இப்படிலாம் கடுப்பேத்தறீங்க.. பில்லா படத்துல அஜித்து நடந்துகிட்டே இருப்பாரே அதே மாதிரி இந்தப்படத்துல ஏன் எல்லாரும் காரணமேயில்லாம ஓடிகிட்டே இருக்காங்க..
அப்போகலிப்டோ படம் மாதிரி ஒரு படம் எடுக்கணும்ங்கற ஆசை புரியுது.. அதுக்காக சில நூற்றாண்டுகளுக்கு முன்னால வரைக்கும் கூட தமிழர்கள் அப்போகலிப்டோல வர ஆதிவாசிங்க மாதிரி இருந்தாங்கன்னு காட்றதெல்லாம் அநியாயம். படத்தோட பல காட்சிகள் அபோகலிப்டோலயும் வருது.. கிளைமாக்ஸும் மெல்ஜிப்சனோட பேஷன் ஆப்தி கிரைஸ்ட் மாதிரியே.. நம்ம ஹீரோவும் சிலுவையெல்லாம் சொமக்குறாரு.. எதுக்குன்னே தெரியல.. இதுமாதிரி ஓட்டைகள் இன்னும் நிறைய இருக்கு.. கதைக்கு சம்பந்தமேயில்லாத இரண்டு மூணு காதல்கள், ஆதிக்கும் பசுபதிக்குமான நட்பு ஆழமேயில்லாம மொன்னையாக இருப்பதுனு நிறைய இருக்கு பேச..
இதெல்லாம் பார்த்து யாரும் படத்தை ரசிக்கறதில்லைதான். ஆனா இதையெல்லாம் பாக்கதவன் எதிர்பார்க்கிற அடிப்படையான விஷயம்.. சுவாரஸ்யம். அதுதான் இல்லையே! அதுக்கு பிறகுதான பாஸ் மத்த எல்லாமே..’’ என்று என்னிடமே சவடால் பேசினார் நண்பர்..
எனக்கு கோபம் வந்துவிட்டது. ‘’உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட இலக்கிய ரசனை கிடையாது.. அறிவும் கிடையாது. எவனாவது இங்கிலீஸில் பாம்பு பறக்குதுனு படமெடுத்தா பல்லை இளிச்சிகிட்டு கேள்வியே கேக்காம பார்ப்பீங்க ஆனா தமிழன் ஒருத்தன் படமெடுத்தா எல்லா நொட்டையும் சொல்வீங்களே’’ என வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டேன்.
பின்னே.. கஷ்டபட்டு எடுத்தப்படம் நன்றாக இருந்தால் என்ன.. இல்லாட்டி என்ன? அந்த கஷ்டத்தை தாங்கிக்கொண்டு படம் அருமை என்று சொல்வது கஷ்டமான காரியமா என்ன? அந்த பேஸிக் மேனர்ஸ் கூட இல்லாத தமிழனை எப்படிதான் திருத்துவது. பத்துரூபாய் டிக்கட்டு வாங்கி படம் பார்த்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் விமர்சிப்பதா? நாக்கில் நரம்பேயில்லாமல் பேசுவதா? உங்களையெல்லாம் திருத்தவே முடியாது என்றுதான் சொல்லவேண்டும்.
(பின்குறிப்பு - இந்த விமர்சனத்தை படிக்கும்போது உங்களுக்கு ஏற்பட்ட அதே குழப்ப மனநிலையில் இதே துன்பத்தை தியேட்டரில் அடியேனும் அடைந்ததன் விளைவே இதுமாதிரியான விமர்சனம்! கூல்! படம் மரண மொக்கை)