17 February 2012
சென்னைக்கு வெண்ணை... கோவைக்கு சுண்ணாம்பு!
கோவையில் எங்கு பார்த்தாலும் ஒரே சோகமயம். மக்கள் பார்ப்பவரிடமெல்லாம் புலம்புகிறார்கள். யார் முகத்திலும் மகிழ்ச்சியில்லை. இடியே ஆனாலும் தாங்கிக்கொள்ளும் இதயம் கொண்டவர்கள் கோவை மக்கள். அவர்களையே கதறவிட்டிருக்கிறார் மாண்புமிகு கருணையுள்ளம் கொண்ட அம்மா! எட்டு மணிநேர மின்வெட்டு பலரையும் தற்கொலையை பற்றியெல்லாம் பேசவைத்திருக்கிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிற தொழில் நகரமான கோவையில் ஒரேவாரத்தில் பல ஆயிரம் கோடிரூபாய் அளவுக்கு நஷ்டத்தை உண்டுபண்ணியிருக்கிறது இந்த தொடர் மின்வெட்டு! (கொடீசியா தலைவர் கந்தசாமி சொன்ன தகவல்படி முதல் மூன்றுநாளில் 1550கோடிக்கு நஷ்டமாம்! பத்துநாட்களில் எவ்வளவு ஆகியிருக்கும் தெரியவில்லை)
சென்ற ஆட்சியில் நான்குமணிநேர மின்வெட்டுக்கு எதிராக பொங்கியெழுந்த கோவை மக்கள், இப்போது அதைக்கூட சகித்துக்கொள்ள தயாராகிவிட்டனர். எங்களுக்கு முன்னாடிமாதிரியே நாலுமண்ணேரம் கட்பண்ணிகிட்டா கூட பரவால்ல! இந்த மின்வெட்டை தாங்கமுடியல என கண்ணீர் வடிக்கின்றனர்.
2011 தேர்தலில் திமுகவுக்கு எதிராக வாக்கு வங்கியை மடைமாற்றி விட்ட பெருமை மின்வெட்டுக்கு மட்டுமேயுண்டு. ஆட்சிக்கு வந்ததும் மின்வெட்டுக்கு குட்பை சொல்வேன்! இனி 24மணிநேர தடையில்லா மின்சாரம்! கரண்ட்டு குஜராத்துலருந்து வருது.. ஜப்பான்லருந்து வருது.. வருது வருது விலகு விலகு என்றெல்லாம் பீலா விட்டு மக்களின் பெரும் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஜெவின் அரசு, நான்கு மணிநேரமாக இருந்த மின்வெட்டு நேரத்தை எட்டுமணிநேரமாக்கியிருக்கிறுக்கிருப்பதே எட்டுமாத அதிமுக ஆட்சியின் மகத்தான சாதனை!. கலைஞர் கொண்டுவந்த திட்டங்களிலேயே இந்த மின்வெட்டு திட்டத்தை மட்டும்தான் ஆளும் ஆரசு சிறப்பாக அதிக அக்கறையுடன் செயல்படுத்தி வருகிறது!
திமுக ஆட்சியில் ஒட்டுமொத்தமாக அம்மா ஆதரவு மாவட்டமாக மாறிப்போயிருந்த கோவையை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது இந்த முட்டாள்த்தனமான மின்வெட்டு. கோவையின் வீதிகளில் ஜெவை வசைமாறி பொழிகின்றனர். ஆபாச வார்த்தைகளை உதிர்க்கின்றனர். கோவை மக்கள் ஒவ்வொருவரும் நேரடியாகவே பாதிக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது. மாணவர்கள் படிக்கமுடியாமல் தெருவில் இறங்கி போராடுகின்றனர். புலியகுளத்திலும்,பீளமேட்டிலும் மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபடுகின்றனர்.
கிட்டத்தட்ட நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய மற்றும் குறு தொழில் நிறுவனங்க நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. முதலாளி தொழிலாளி வித்தியாசமில்லாமல் காந்திபுரத்தில் பதினைந்தாயிரம் பேர் திரண்டு போராட்டம் நடத்துகின்றனர். பிரிகால் மாதிரியான பெரிய கம்பெனிகளுக்கு பிரச்சனையில்லை! மிகச்சிறிய பணிமனைகள் வைத்திருக்கிறவர்களுக்குதான் மரண அடி! ஆட்சி மாற்றம் அனைத்தையும் மாற்றும் என நம்பியவர்களுக்கு பட்டைநாமம் பரிசளிக்கப்பட்டிருக்கிறது.
தொழிலாளர்கள் நிலைமை இன்னும் மோசம். தினக்கூலி அடிப்படையில் வேலை பார்க்கிறவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்திற்கும் மேல்! (அதாவது பத்து லட்சம் குடும்பங்கள்) இந்த மின்வெட்டு ஒட்டுமொத்தமாக இந்த தொழில்களை நேரடியாக பாதித்துள்ளது. ஒவ்வொரு நாளும் பகலில் ஆறுமணிநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் பகலில் வேலை பார்க்க முடியாமல் பாதிக்கூலியை பெருகிற நிலை உருவாகியுள்ளது.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு எல்லாமே மாறிவிடும் என்கிற நம்பிக்கையோடு கடனை உடனை வாங்கி தொழில் தொடங்கிய இளைஞர்கள் பலரும் கடனை கட்டவழியில்லாமல் தற்கொலை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். ஒருவித சுடுகாட்டு மனநிலையில் கடும் மன உளைச்சலில் கோவைவாசிகள் இருப்பதை இரண்டுநாள் பயணத்திலேயே உணர முடிந்தது.
கோவையை சுற்றியுள்ள கிராமங்களில் இன்னும் மோசம் எப்போதாவதுதான் மின்சாரம் வருவதால் எத்தனை மணிநேரம் மின்வெட்டு என்பதையே சரியாக சொல்லமுடியாது. இது விவசாயத்தையும் பாதித்துள்ளது. விவசாயம் நலிந்துபோய் விசைத்தறி ஓட்டுகிறவர்களுக்கும் பாதிப்பு! கிட்டதட்ட கோவையில் தொழில் செய்கிற யாருமே இந்த மின்வெட்டுக்கு தப்பவேயில்லை. மேட்டூர் அணையிலிருந்து வரவேண்டிய மின்சாரம் வரவில்லை என்பதால் இந்த நிலை என்கின்றனர் கோவை மின்ஊழியர்கள்!
மேட்டூர் பிரச்சனை கோவைக்கு சரி! தமிழ்நாடு முழுக்கவே இந்த மின்வெட்டு தலைவிரித்தாடுகிறதே! எப்போது கேட்டாலும் 2500 மெகாவாட் பற்றாக்குறை என பஜனை பாடுவதை நம் மின்சாரத்துறையும் வழக்கமாக்கி வைத்திருக்கிறது.
கோவை முழுக்கவே ஒரே குரலில் ‘’தயவுசெஞ்சு எவன் செத்தாலும் பரவால்ல கூடங்குளத்தை திறந்து எங்களுக்கு கரண்ட்டு குடுங்க’’ என மக்கள் காலை பிடித்துக்கொண்டு கெஞ்சுகிறார்கள். அதிகாரம் எதை எதிர்பார்த்து கோவையின் ஃப்யூஸைப்புடுங்கியதோ அது நிறைவேறிவிட்டதாகவே நினைக்கலாம்! கூடங்குளத்துக்கு மக்கள் ஆதரவை பெருக்க மிகச்சிறந்த வழியை மத்திய அரசு கண்டுபிடித்துவிட்டதாகவே நினைக்கிறேன்.
அதோடு தமிகழகத்தில் மின் உற்பத்தி செய்கிற பிபிஎன்,சாமல்பட்டி,மதுரைபவர் கார்ப்,ஜிஎம்ஆர் வாசவி உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டன. காரணம்? மின்வாரியம் தரவேண்டிய சொற்பமான நிலுவைத்தொகையை தரவில்லையாம்! அதை தரும்வரை உற்பத்தி கிடையாது என முரண்டுபிடிக்கின்றன. பிபிஎன் நிறுவனத்தோடு போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி உற்பத்தி பண்ணினாலும் பண்ணாட்டியும் அந்நிறுவனத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒருகோடிரூபாயை தமிழக அரசு தண்டமாக கொடுத்தேதீரவேண்டுமாம்.
இந்த மின்வெட்டில் சென்னையின் பங்கு கணிசமானது. சென்னைக்கு மட்டுமே ஒருநாளைக்கு 3500மெகாவாட் மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால் கோவைக்கு வெறும் பிச்சாத்து ஆயிரம் மெகாவாட்தான்! அந்த ஆயிரத்தை கூட ஒழுங்காக கொடுக்கமுடியாமல் 300மெகாவாட்டுக்கு தட்டேந்தி திரிகிறது மின்சாரவாரியம். சென்னைக்கு ஒருமணிநேரம்தான் கரண்ட் கட். அதிலும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆட்டம்போடுகிற ஸ்ரீபெரும்புதூர் மாதிரியான பகுதிகளில் அந்த ஒருமணிநேரமும் கூட கிடையாது என்றே நினைக்கிறேன்! சென்னையில் கூடுதலாக இரண்டு மணிநேரம் மின்வெட்டை அமல்படுத்தினாலும் கூட கோவையை வாழவைக்க முடியும் என்கின்றனர் சிலர்.
என்னைக்கேட்டால் சென்னையிலும் எட்டுமணிநேரம் மின்வெட்டை அமல்படுத்தினால் மட்டும்தான் ஆளும் வர்க்கத்துக்கு இந்த மின்வெட்டின் உண்மையான பிரச்சனை புரியும். அப்படி செய்யாத வரை யாருக்கும் இதன் பாதிப்பு தெரியவே போவதில்லை.