Pages

24 January 2012

வேட்டை - கதற... கதற...




‘’சரியான முட்டாப்பசங்க சார் இவனுங்க!’’ என்று தமிழ்சினிமா ரசிகர்களை நினைத்துக்கொண்டிருக்கிற ஒருவரால் மட்டும்தான் இப்படி ஒரு படம் எடுக்க முடியும். அப்படி ஒருபடம்தான் வேட்டை! படமெடுத்தவர் லிங்குசாமி! லாஜிக்கோ கதை குறித்த அக்கறையோ இல்லாமல் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாக்கியராஜ் படமொன்றின் கதையை லேசாக தட்டிஒட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. ஆதிகாலத்து ஆள்மாறட்டக்கதையை இன்னும் எத்தனை முறைதான் பார்க்க வேண்டியிருக்குமோ.. மசாலா படம் பார்க்கிறவர்களை முட்டாள்கள் என்று நினைத்து படமெடுப்பதை நீங்கள் நிறுத்தாவிட்டால் மசாலா படம் பார்ப்பதை முட்டாள்கள் நிறுத்திவிடக்கூடிய ஆபத்திருக்கிறது.

இந்திய கமர்ஷியல் மசாலா படங்களுக்கென ஒரு பார்முலா உண்டு. அந்த பார்முலாவை கொஞ்சம்கூட மீறாமல் அதே குத்துப்பாட்டு, அதே மொக்கை ஹீரோயின் காமெடி, அதே கொலைசெய்யும் கொடுரமான ரவுடி வில்லன்,நடுவில் பஞ்ச் டயலாக்,குத்துப்பாட்டு, கிளைமாக்ஸில் சண்டை என்கிற அடிப்படைகளோடு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் சூட்டிங் கேப்பில் அதே மேக்கப்பில் அதே சட்டை பேண்ட் ரேபன் கண்ணாடியோடு இந்த படத்திலும் நடித்துக்கொடுத்திருப்பார் போல! அதுக்கொசரம் கேரக்டரை கூடவா மாத்தாம வச்சிருக்கணும்! படம் முழுக்க பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டேயிருக்கிறார். இவருக்கும் அடுத்த முதல்வர் ஆகிற ஆசை வந்திருக்கலாம். அல்லது இப்படம் வெற்றியடைந்து ‘மாஸ்’ அந்தஸ்து கிடைக்கநேர்ந்தால் இந்த டபரா ஸ்டாரிடமிருந்து தமிழகம் தப்பவே முடியாது. ஒவ்வொரு காட்சியிலும் அவர் பஞ்ச் வசனம் பேசும்போதும் தியேட்டர் குலுங்கி குலுங்கி சிரிக்கிறது. வசனம் லிங்குசாமியே எழுதியிருப்பாரோ என்னவோ! சம்பந்தா சம்பந்தமில்லாமல் பஞ்ச்!

மாதவன் படம் முழுக்க பயப்படுவதுபோலவே நடிக்கிறார். ஏன் இப்படி என்று வெளியே வந்து டிக்கட் கிழிப்பவரிடம் விசாரித்தபோதுதான் அவர் காமெடியனாக இந்தப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரியவந்தது. மங்காத்தா அஜித்போலவே மாதவனுக்கும் நல்ல அழகான உருண்டு திரண்ட தொப்பை.  ஒரே பாட்டில் பணக்காரனாவது போல நம்ம ''சின்ன தல'' மாதவன் எக்ஸைஸ் செய்து தொப்பையை குறைத்து பக்கா ஜென்டில்மேனாகிவிடுகிறார். ஒருகாலத்துல மாதவன் எப்படி இருந்தாரு.. பாவம் ஒரு டூயட்டு கூட இல்லை..

படத்தின் நாயகிகளை பார்க்க சகிக்கவில்லை. மேக்கப் மேனுக்கு சம்பள பாக்கியோ என்னவோ வாய் முழுக்க லிப்ஸ்டிக்கையும் முகம் முழுக்க ரோஸ்பவுடரையும் அப்பிவிட்டு அனுப்பியிருப்பார் போல!. (கவுண்டமணி ஒருபடத்தில் தன் தங்கைக்கு பெயின்ட் அடித்து ஏமாற்றுவாரே அதுபோல) அதிலும் படத்தின் முக்கிய நாயகியான சமீரா ரெட்டியை குளோஸ் அப்பில் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது! நாம் பார்த்துக்கொண்டிருப்பது வேட்டையா அல்லது ஈவில் டெட்டா என்கிற சந்தேகம் வரும் அளவுக்கு அழகாக இருக்கிறார் சமீரா! கேமராமேன் நீரவ்ஷா இன்னுமும் உயிரோடிருப்பது அவருடைய மனைவியின் தாலிபாக்கியமாகத்தான் இருக்க வேண்டும்.

சமீராவுக்கு பதிலாக இந்த சமரசீமா ரெட்டியோ சமோசாக்குள்ள ரொட்டியோ அவரையே ஹீரோயினாக போட்டிருக்கலாம்! பெரிய வித்தியாசமேயிருந்திருக்காது. அமலாபால் படம் முழுக்க வறுமையால் வற்றிப்போன வயிறோடு தொப்புள் காட்டிக்கொண்டு வலம்வருகிறார். பேருக்கு தாவணியை போட்டுக்கொண்டிருந்தாலும் படம் முழுக்க ரசிகர்களுக்கு எதையோ காட்ட முயல்கிறார். ஏனோ சொல்லிக்கொள்ள பெரிதாக ஒன்றுமில்லை.

பாடல்களுக்கும் ரீரெகார்டிங்குக்கும் பெரிதாக மெனக்கெடாமல் யுவன் தன் முந்தைய படங்களிலிருந்தே சுட்டு அப்படியே மாற்றி மாற்றி கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. பப்ப பப்பாம் பபரப்பாம் பாட்டு மட்டும் ஓக்கே! மாதவனும் ஆர்யாவும் ஓடும் காட்சி சில்வஸ்டர் ஸ்டாலனின் ராக்கியில் சுட்டதாக இருக்கிறதே என ஆச்சர்யபட்டுக்கொண்டிருக்கும்போதே பிண்ணனியில் அதே படத்தில் இடம்பெற்ற அதே இசை! இருந்தாலும் தமிழ்மக்கள் மேல் லிங்குசாமிக்கு ஏகப்பட்ட நம்பிக்கை. ஆரம்பிச்ச படத்தை முடிக்கணுமே முடிச்சி.. முடிச்ச படத்தை வெளியிடணுமேனு வெளியிட்டிருப்பார்களோ என்கிற ஐயம் படத்தின் கிளைமாக்ஸில் படம் பார்க்கும் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் கட்டாயம் ஓடும்.

ஒரு பாகவதர் காலத்து கதை எடுத்துக்கொண்டு அதை காமெடிப்படமா எடுக்கறதா? இல்ல சீரியஸ் ஆக்சன்படமா எடுக்கறதா? ஃபேமிலி சென்டிமென்ட் டிராமாவா எடுக்கறதா? ரொமான்டிக் காமெடியா எடுக்கறதா? என பெருங்குழப்பத்தில் படமெடுத்திருப்பார் போல லிங்கு. காமெடி ஆக்சன் கலந்த பேமிலி எமோசனல் நிறைந்த ரொமான்டிக் மொக்கைப்படமாக வந்திருக்கிறது வேட்டை!