07 January 2012
புத்தக கண்காட்சி 2012
புத்தக கண்காட்சி தொடங்கிவிட்டது. சென்ற ஆண்டு வாங்கி குவித்த புத்தகங்களில் பாதிகூட இன்னும் படித்து முடிக்கப்படவில்லை. அதனால் இம்முறை மிக குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகங்களை வாங்க திட்டமிட்டிருக்கிறேன். ஏகப்பட்ட பதிப்பகங்கள் கோடிக்கணக்கான நூல்கள். அடுத்த பத்து நாட்களுக்கு கண்களுக்கும் கால்களுக்கும் நிறைய வேலையிருக்கும் என்றே நினைக்கிறேன். முடிந்தவரை அங்கே காண்பதையும் கேட்பதையும் நம் இணையதளத்தில் தரமுயல்கிறேன்.
எப்போதும் போல இந்த ஆண்டும் கிழக்கு,நக்கீரன் மாதிரியான பெரிய பதிப்பகங்கள் ஏகப்பட்ட பினாமி ஸ்டால்களை போட்டிருப்பதை பார்க்க முடிந்தது. போலவே ஏகப்பட்ட சாமியார் மார்க்கெட்டிங் ஸ்டால்கள்ளை காண முடிந்தது. இதில் மத வேறுபாடே கிடையாது. யுனானி சித்த மருத்துவ ஸ்டால்களும் நிரம்பியிருந்ததை பார்க்க முடிந்தது. நோனி மருந்து விற்கும் ஸ்டால் பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. புத்தக கண்காட்சியில் இந்த சாமியார்களுக்கும் மருத்துவர்களுக்கும் என்ன வேலை என்கிற கேள்வியிருந்தாலும் பொருளாதார அடிப்படையில் இதையெல்லாம் தவிர்க்க முடியாதோ என்றும் தோன்றுகிறது.
ஆண்டுதோறும் புத்தக காட்சி அரங்கில் கிழக்கு பதிப்பக சந்துகளில் நடைபெறும் எழுத்தாளர் பாராவின் வாசகர் சந்திப்பு இந்த முறை மிஸ்ஸிங். அதனாலேயே என்னவோ புத்தக கண்காட்சியை பூரணமாக அனுபவித்த சுகமேயில்லை. பீரில்லாத டாஸ்மாக்கும் சாரு இல்லாத புக்ஃபேரும் ஒன்றுதான். கடந்து சில ஆண்டுகளாக உயிர்மை ஸ்டாலில் அமர்ந்து வாசகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொடுக்கும் அல்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதா
இந்தமுறை இல்லை என்பது வெந்த எதிலோ வேல் பாய்ச்சுவதாக அமைந்தது. ஆனால் உயிர்மை அரங்கில் சாருவுக்கு பதிலாக இம்முறை எஸ்ரா அமர்ந்திருக்கிறார். ஆட்டோகிராஃப் போடுவதோடு மட்டுமல்லாமல் புத்தகங்கள் குறித்த சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறார். நேரமிருந்தால் யார் வேண்டுமானாலும் அவரோடு பல மணிநேரங்கள் உரையாட முடியுமென நினைக்கிறேன். அவரோடு எப்போதும் போல மனுஷ்யபுத்திரனும் இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
சுஜாதாவின் பல புத்தகங்கள் மீனாட்சி புத்தக நிலையத்தில் மலிவு விலையில் கிடைக்கிறது. நமக்கு அறிமுகமில்லாத அவருடைய பல நாவல்களும் 50ரூபாய்க்கும் கம்மியாக கிடைப்பது அவருடைய பெருந்திரளான ரசிகர்களுக்கு நிச்சயம் நல்ல செய்தியாகத்தான் இருக்கும். கண்காட்சி தொடங்கிய இரண்டே நாளில் கொண்டு வந்த புத்தகங்களில் முக்கால் வாசி காலி என கடைக்காரர் பெருமிதமாக சொன்னார். ‘’யாரோ இன்டர்நெட்டுல எழுதிருப்பாங்க போல சார்.. வரவங்க பூரா நெட்ல பார்த்தோம் சுஜாதா புக்கு எங்கேனுதான் கேக்கறாங்க’’ என்றார். ஸ்டாக் தீர்வதற்குள் முந்துங்கள். சுஜாதா புத்தகங்கள் மலிவு விலையில் கிடைக்கிற இன்னொரு பதிப்பகமான விசாவில் எல்லாமே ரீப்ரின்டில் ஏகத்திற்கும் விலையேற்றி விட்டனர்.
புத்தக சந்தையில் நம் கமர்ஷியல் தோழர் யுவகிருஷ்ணா எழுதிய அழிக்கப்பிறந்தவன் நாவல் நன்றாக விற்பதாக அங்கே கடை போட்டிருக்கும் டிஸ்கவரி புக்பேலஸ் வேடியப்பன் மகிழ்ச்சியுடன் கூறினார். (ஸ்டால் எண் – 334). விலை 50தான். சுஜாதாவின் கதைகளை விரும்பி படிக்கும் வாசகர்களுக்கு இந்நாவல் நல்ல தீனியாக இருக்கும் என பிரபல எழுத்தாளர் ஒருவர் அழிக்கபிறந்தவனை படித்துவிட்டு நேரில் பாராட்டினார். டிஸ்கவரியிலேயே பதிவர் உலகநாதன் எழுதிய நான் கெட்டவன் சிறுகதை தொகுப்பும், கேபிள் ஷங்கரின் தெர்மக்கோல் தேவதைகளும் கிடைக்கிறது. டிஸ்கவரி புக்பேலஸ் கடையில் இணையவாசி என அறிமுகம் செய்துகொண்டால் சிறப்பு சலுகைகள் கொடுக்கிறார்.
கலைஞர் கருவூலம் என்கிற ஸ்டாலில் திராவிட இயக்க வரலாறு என்கிற குண்டு புஸ்த்தகம் வெகுவாக கவர்ந்தது. விலையும் 300தான். 1999வரையிலான திராவிட இயக்க வரலாறு எளிய தமிழில் சின்னச்சின்ன சம்பவங்களுடன் எழுதப்பட்டுள்ளது. ஒன்று வாங்க நினைத்திருகிகறேன். கிழக்குப்பதிப்பகத்தில் இன்னமும் என்னென்ன புத்தகங்கள் வந்திருக்கிறது என்று பார்க்கவில்லை. ஆனால் இந்த புத்தக கண்காட்சியில் சிறந்த கேட்டலாக் அவர்களுடையதுதான். இலக்கிய நாவலினைப்போல பிரமாதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இலவசம் என்பதால் அந்தப்பக்கம் செல்பவர்கள் கேட்டுவாங்கிச்செல்லவும்.
காமிக்ஸ் ரசிகர்களுக்கு சரியான வேட்டை ஸ்டால் நம்பர் 372ல் காத்திருக்கிறது. முத்து மற்றும் லயன் காமிக்ஸ்கள் தரம் பிரித்து வகை வகையாக வரிசைபடுத்தி வைத்திருக்கின்றனர். கௌபாய்கதைகள், சயன்ஸ் பிக்சன் கதைகள், டெக்ஸ்வில்லர் கதைகள், மர்ம மனிதன் மாண்ட்ரேக், துப்பறியும் கதைகள், எனக்கு பிடித்த சிஐடி ராபின் சாகசங்கள் என ஏகப்பட்ட காமிக்ஸ்கள் குவித்துவைக்கப்பட்டுள்ளன. அதுபோக 900ரூபாய்க்கு லயன்+முத்துகாமிக்ஸ் ஃபுல்செட் ஒன்றும் வைத்துள்ளனர். மேலதிக விபரங்களை அடுத்த பதிவில் தருகிறேன். நேற்று ஒரே நாளில் பதினைந்துக்கும் மேல் ஃபுல்செட் விற்றுத்தீர்வதால் ஆர்வமுள்ள நண்பர்கள் இன்றே வாங்கிப்பயனடையலாம்! அதோடு லயன் கம்பேக் ஸ்பெஷல் என்கிற புதிய 200 பக்க காமிக்ஸ் களஞ்சியமும் விற்பனைக்கு வந்துள்ளது.
இதுதவிர சொல்ல இன்னும் நிறையவே இருக்கிறது.. அது அடுத்த பதிவில்!
படங்கள் - கிங்விஸ்வா