15 December 2011
வெள்ளிச்சங்கு
அன்றையதினம் விடிவதற்கு சற்றுமுன்பாகவே கிஷ்ணனின் உயிர்த்தோழன் அருண் தன்னுடைய ஆன்ட்ராய்ட் மொபைலிலிருந்து குறுஞ்செய்தியொன்றை அனுப்பினான். அதை ஆதியில் செல்போனாக கருதப்பட்ட இரட்டை ஒன்று இரட்டை பூஜ்யம் ரக செல்போனில் கிஷ்ணன் பார்த்தான். அதில் ‘’மச்சான் ஐயாம் பிளஸ்ட் வித் ஏ பாய்’’என்று சொல்லியிருந்தான் அருண்.
கிஷ்ணன் அதை அரைத்தூக்கத்தில் பார்த்துவிட்டு மீண்டும குப்புறப்படுத்து தூங்கிவிட்டான். அந்த குறுஞ்செய்தி பின்னாளில் அவனுடைய வாழ்க்கையையே புரட்டிப்போடப்போகிறதென்பது தெரியாது. விடிந்ததும் தோழனுக்கு எதையாவது பரிசு கொடுக்கணுமே என நினைத்து, வீட்டிலே பரணில் உறங்கிக்கொண்டிருந்த வெள்ளிச்சங்கினை எடுத்து தூசி தட்டி புளிபோட்டு கழுவி பளபளவென்றாக்கி ஜிகினா பேப்பரில் சுற்றி புதிதுபோல மாற்றிப் பரிசளித்தான். அருண் அதைக்கண்டு நண்பனின் நட்பை வியந்து உச்சிமுகர்ந்தான். கிஷ்ணனுக்கு பெருமையாக இருந்தது.
அந்த வெள்ளிச்சங்கு அவனுடைய குடும்பத்தில் பரம்பரையாக உபயோகித்து வந்த ஆதிகாலத்து பால்குடி சங்கு. கிஷ்ணனுக்கு அதில்தான் பால் புகட்டப்பட்டது. என்றைக்கு கிஷ்ணன் டியூப் வைத்த டம்ளரில் பால் குடிக்கத்தொடங்கினானோ அன்றையதினத்திலிருந்து வெள்ளிச்சங்கு பரணுக்குள் முடங்கியது. கிட்டத்தட்ட 25ஆண்டுகளாக அது வைத்த இடத்திலேயேதான் கிடக்கிறது. அதைப்பற்றி வீட்டிலிருக்கும் அம்மாவுக்கோ ஆயாவுக்கோ அப்பாவுக்கோ ஒரு கவலையுமில்லை. பிறகு என்ன மயித்துக்கு அந்த கெரகத்த அங்க வச்சிருக்கணும்.. எனவே அது அருணுடைய குழந்தைக்கு பரிசளிக்கப்பட்டது.
ஓர் இரவில் கிஷ்ணனின் அம்மாவுக்கு ஒரு நல்ல கனவு வந்தது. அந்தக்கனவில் பூச்சூடியம்மன் காட்சியளித்தது. அம்மனோடுனான கனவுரையாடலில் ‘’கிஷ்ணனுக்கு ஒரு கல்யாணங்காச்சி பண்ணிப்பாக்கணுமாத்தா! அதுக்கு நீதான் ஒதவோணும்’’ என்று கிஷ்ணனின் அம்மா வேண்டுகோளை முன்வைக்க.. யோசித்துவிட்டு அம்மன் சொன்னது ‘’என்ர கோயிலுக்கு வாராவாரம் வந்து உன்ர வூட்டுபரணுமேல கெடக்கற வெள்ளிச்சங்குல வெளக்கேத்தி வச்சியன்னா மூன்ற மாசத்துல டான்னு கல்யாணமாகிப்போயிடும்’’ என்றது. இப்படியாக அந்த கனவு நீண்டது. விடிந்தது.
விடிந்ததும் அம்மா அரக்கபரக்க கிஷ்ணனை எழுப்பினாள். ‘’கிஷ்ணா கொஞ்சம் பரண் ஏறி அந்த வெள்ளிச்சங்கை எடுத்துக்குட்ரா’’. தூங்கிக்கொண்டிருந்த கிஷ்ணன் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தான். ‘’என்னகேட்ட.. வெள்ளிச்சங்கா?’’.. அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் வேறுவழியின்றி அதை தேடுவதுபோல பாவலா காட்டினான். ‘’இங்கே இல்லம்மா..’’ என கடிந்துகொண்டான். ‘’தம்பீ பத்துரூவா வேணா வாங்கிக்க.. அதை எப்படியாச்சும் எடுத்துக்குட்றா’’ என்றாள்.
‘’ இப்ப என்னத்துக்கு அத வேலமெனக்கெட்டு தேடிக்கிட்டிருக்க.. அப்படியென்ன கொள்ளகொண்டுபோற அவசரம்’’ என மேலும் கோபங்கூட்டினான் கிஷ்ணன்.
‘’இல்ல தம்பீ..நேத்து நைட்டு கனவுல...’’ என பூச்சூடியம்மனுடனான உரையாடல் குறித்து ஃபிளாஷ்பேக்கில் விளக்கினாள். கிஷ்ணன் கோபமாக தேடிதேடி நடித்தான். தேடலில் எதுவுமே அகப்படவில்லை என்கிற வருத்ததுடன் ‘’வேற வழியில்ல தம்பீ பேசாம மொளகாயரைச்சிர வேண்டியதுதான்’’ என தன் முடிவையும் தெரிவித்தாள். ம்க்கும் என்ன செஞ்சிடும் மொளகா.. என தெனாவெட்டாக மனதுக்குள் நினைத்துக்கொண்டாலும் ஒருவித பயம் அவனுடைய இதயத்தில் உருவானது.
‘’அடப்போம்மா அதெல்லாம் சும்மா , அந்த பூசாரிப்பய ஊர ஏமாத்திட்டு திரியறான் நீ வேற.. என்னமோ பீடத்துல மொளகாவ அரைச்சு தேப்பாய்ங்களாம்.. உடனே உடம்பு எரிஞ்சிருமாம்.. ரத்தம் கக்குமாம், மெட்ராஸ் வெயில்ல அவனவன் இதெல்லாம் இல்லாமயே வெந்துபோய் ரத்தம் கக்கிட்டுதான் அலையறான்.. நீ வேற, இன்டெர்நெட்டு த்ரீஜி ஃபோர்ஜினு போய்கிட்டிருக்கோம்..ஒன்னு பண்ணு பேசாம போலீஸ்டேசன் போவோம் கம்ப்ளைன்ட் குடுமப்போம். சட்டப்படி செய்வோம்’’ என கடிந்துகொண்டான். தண்ணீரில் விட்ட ஒருதுளி சொட்டுநீலம் போலவே பயம் மெதுவாக உள்ளுக்குள் கரையத்தொடங்கியது.
‘’என்ரா பெரிய போலீஸு மயிராண்டி.. சாமியவுட உன்ர போலீஸு பெரிய இதுவா.. பூச்சூடியம்மனோட மகிமை உனக்கெங்க தெரியப்போவ்து.. போன வாரம் நம்ம சுப்பு கம்மல் தொலைஞ்சிருச்சினு மொளகா அரைச்சு தேச்சி வச்சு.. ஒரே ஒரு வாரந்தான்.. அவ தெருவுல ஒருத்தன் ரத்தங்கக்கி கைகால் விளங்காம போயி கண்ணு அவுஞ்சு உடம்பு எல்லாம் கொப்புளமா கிடந்து அழுகிப்போய் செத்துப்போனான் தெரியுமில்லே... டாக்டருங்களாலயே ஒன்னும் பண்ணமுடியல’’ என்றாள். அது சொட்டுநீலத்தை மேலும் கரைத்தது.
முடிந்தவரை அம்மாவின் பேச்சுக்கு காதுகொடுக்காமல் அதைப்பற்றி கவலைப்படாமல் சுவரில் மாட்டியிருந்த சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பும்போது ஹாலிலிருந்த பீரோகண்ணாடியில் ஒருமுறை பார்த்துவிட்டு வெளியே கிளம்பினான். வ.உ.சி பூங்காவில் பூச்சூடியம்மன் கோயில் பூசாரியின் மகளான உஷா காத்திருப்பாள்!
நமக்குநாமே திட்டம்போல கிஷ்ணன் தனக்கான மொளகாயை தானே அரைக்க அம்மாவினால் அழைக்கப்பட்டான். முதலில் மறுத்தாலும் தற்போது வேலைவெட்டியில்லாமல் இருப்பதாலும் அவ்வப்போது பெட்ரோலுக்கும் தம்முக்கும் அம்மாவிடம் அஞ்சுபத்துக்கு போயி நிற்கவேண்டும் என்கிற காரணத்தாலும் பைக்கை எடுத்துக்கொண்டு அம்மாவை பின்னால் அமர்த்திக்கொண்டு கோயிலை நோக்கி புறப்பட்டான். வயிற்றுக்குள் ஏதோ எரிவதைப்போலவும், இதயம் என்றைக்கும் இல்லாமல் இன்று அதிவேகமாய் துடிப்பதாகவும் உணர்ந்தான். மொம்மது தெருவில் இருந்தது பூச்சூடியம்மன் கோயில்.
தெருவில் இருக்கிற நூறு கடைகளுக்கு நடுவே பெரிய இடத்தை வளைத்துப்போட்டு ஒரு கரையான் கட்டிய புற்றுதான் பூச்சூடியம்மன் கோவில். அந்த புற்றில் ஆதிகாலத்தில் பாம்பு வசித்திருக்கலாம். ஊரின் சந்தை சாலையாக மாறிவிட்ட காலத்திலும் அதில் பாம்பு இருப்பதாக ஊர் நம்பியது. அதனால் புற்றை சுற்றி சுவர் எழுப்பி நடுவில் புற்றை வைத்து அதன் மீது மஞ்சள் குங்குமம் கொட்டி.. அதன் துளைகளில் பால் ஊற்றி.. முட்டையை உடைத்து போட்டு.. பூவைத்து.. பொட்டு வைத்து.. புற்றுக்கு கண்மலர்கள் வைத்து.. வெள்ளியில் மூக்கு வைத்து வாய் வைத்து.. கிட்டத்தட்ட அந்த புற்றை அம்மன் சிலைபோல மாற்றிவைத்திருந்தனர்.
அதை பார்த்தால் யாருக்குமே பக்தி பீறிட்டு வந்துவிடும். புதிதாக வருகிறவர்களுக்கு அந்த பூச்சூடியம்மனே இறங்கி ஆட்கொண்டு அருள்வாக்கு சொல்வதும் உண்டு! எந்த ஊரில் எது தொலைந்தாலும் இங்கே வந்து மொளகாயரைக்கலாம். மாவட்டத்திலேயே பவர்ஃபுல் அம்மன் என்றால் அது பூச்சூடியம்மன்தான்! இங்கே வாசலிலேயே சூனியம் வைக்க வருகிறவர்களுக்கு வசதியாக அம்மிக்கல்லும் குளவியும் வைத்திருப்பார்கள். அதில் மிளகாயை அரைத்து அந்த காரமான சட்னியை கொண்டுபோய் புற்றுக்கு முன்னால் இருக்கிற கல்லில் பூசிவிட்டால் போதும். சோளி முடிந்தது! ரத்தம் கக்க அம்மன் கியாரண்டி என்பார் பூசாரி! பூசாரியின் குடும்பம்தான் பரம்பரையாக அங்கே பூஜை செய்துவந்தது.
‘’அம்மா இதெல்லாம் எதுக்கும்மா.. ஆப்டரால் வெள்ளிச்சங்கு.. ஐநூறு ரூவா பொறுமா.. அதுக்குபோயி மொளகாயரைச்சி சூனியம் வைக்கறேனு கிளம்பிருக்கியா.. திருடினங்களுக்கும் குடும்பங்குட்டி இருக்கும்ல.. நாளைக்கே ஏதாச்சும் ஒன்னாயி செத்துப்போயிட்டான்னா அவன் குடும்பம் அநாதையா நிக்காதா? யோசிச்சு பாரு.. அந்த வெள்ளிச்சங்க கொண்டுபோயி அவனென்ன லச்சுமிமில்ஸையா வெலைக்கு வாங்கப்போறான்.. வுட்டுத்தொலையேன்..’’ என பைக் ஓட்டியபடி அம்மாவோடு பேசிக்கொண்டே வந்தான்.
‘’இவரு பெரிய இவரு.. சொல்லிட்டாரு.. அடப்போடா.. அப்படியே வண்டிகாரன்வீதிகிட்ட நிறுத்து..’’ என கிஷ்ணனின் பேச்சுக்கு துளிகூட மரியாதை கொடுக்காமல் பேசினாள் அம்மா. வண்டிக்காரன் வீதியில்தான் உஷாவின் வீடிருந்தது. துன்பத்திலும் ஒரு இன்பம் என நினைத்துக்கொண்டு வீதிக்குள் வண்டியை நுழைத்தான். வேண்டுமென்றே உஷாவின் வீட்டு வாசலுக்கு அருகில் வண்டியை நிறுத்தி இரண்டொருமுறை ஹாரன் அடித்தான். ‘’நீ போயி அண்ணாச்சிக்கிட்ட நான் சொன்னேனு சொல்லி ஒரு கிலோ காஞ்ச மொளகா வாங்கிக்க.. அப்படியே ஒர்ரூவாக்கு கற்பூரமும், ரெண்ட்ர்ரூவாக்கு வெத்தல பாக்கும்.. ஊதுபத்தி அஞ்சுரூவா பாக்கட்டும் வாங்கிக்க..’’ என்று கட்டளையிட்டாள் அம்மா. தனக்கு சூனியம் வைக்க தானே இதையெல்லாம் வாங்கவேண்டிய பாக்கியம் யாருக்கு கிடைக்கும்.
உஷாவீட்டுத்திண்ணையில் அமர்ந்துகொண்டு ‘’ஏன்டி இவளே கொஞ்சம் தண்ணிகொண்டாடி’’ என சப்தமிட்டாள் அம்மா. உஷா வெளியே ஓடிவந்து சுடிதார் ஷாலை சரிசெய்தபடி ‘’வாங்த்த.. எப்படி இருக்கீங்’’ என சொன்னாலும் வாசலில் நின்ற கிஷ்ணனின் பைக்கை பார்த்து அவனெங்கே என நோட்டம்விட்டாள். கிஷ்ணன் எதிர்த்த கடையில் சாமான் வாங்கிக்கொண்டிருந்தான். ‘’எங்கே கிளம்பிட்டீங்க..’’ என அம்மாவிடம் கேட்டபடி அண்ணாச்சிகடையையே பார்த்துக்கொண்டிருந்தாள். ‘’உங்க அய்யனெங்கே.. கோயில்லயா.. அங்கதான் போறோம்’’ என்றாள் அம்மா. ‘’காத்தால போனவரு இன்னும் வரலீங்த்த.. ‘’ என பேச்சிக்கொண்டிருக்க கிஷ்ணன் வந்தான்.
அவளைப்பார்த்து மெல்லிய புன்னகையை உதிர்த்தான். அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள். அம்மா அதை கவனித்தாள். ‘சரிடி இவளே நான் கிளம்பறேன்..’’ என இடுப்பில் கையை வைத்துக்கொண்டு பொறுமையாக எழுந்து பைக்கில் அமர.. கண்களாலேயே உஷாவுக்கு ஒரு டாட்டாவை உதிர்த்துவிட்டு கிளம்பினான் கிஷ்ணன்.
கிஷ்ணனுக்கு வழியெல்லாம் பதட்டமாகவே இருந்தது. மொளகா அரைக்கும் முன்னமே வயிறு எரிவது போலவும் கண்கள் சிவப்பது போலவும் ஒரு உள்ளுணர்வு. லேசாக இடதுகால் கொஞ்சம் வீங்கி அதன் எடை அதிகரிப்பதைப்போலவும் இருந்தது. இதயம் வேறு திக்திக் என அடித்துக்கொண்டும் எரிச்சலாகவும் இருந்தது. விரல்கள் நடுங்கின. வியர்த்துக்கொட்டியது. அதோடு வண்டியோட்ட முடியாமல் ஓரிடத்தில் நிறுத்தினான். ‘’தம்பீ என்னடா ஆச்சு..’’ பதறினாள் அம்மா. ‘’ஒன்னுமில்லே லைட்டா தலைசுத்தல்’’ என சமாளித்தான். ‘’கண்டபசங்களோட சேர்ந்து கண்டதையும் குடிக்கறது.. கேட்டா அதெல்லாம் இல்லனு சொல்லவேண்டியது’’ என சலித்துக்கொண்டாள் அம்மா. அப்படியே ஒரமாக வண்டியை நிறுத்தி இருவருமாக வேப்பமர நிழலில் கொஞ்சநேரம் நின்றனர்.
வேப்பமரம் அருகிலேயே ஒரு கரையான் புற்று.. ஏன் இந்த இடம் இன்னும் கோயிலா ஆகல என்கிற கேள்வி அவனுக்குள் எழுந்தது.
அம்மா எதையாவது பேச வேண்டுமே என பேசினாள். ‘’உனக்கு தெரியுமா.. ஒருக்கா பூச்சூடியம்மன் கோயில்லயே ஒருத்தன் கைய வச்சிட்டான்.. உண்டியல உடச்சிட்டான்.. பூசாரி வுடுவாரா.. ஒருமூட்டை .. நாப்பது கிலோ மொளாகா வாங்கிட்டு வந்து அரைச்சு தேய்ச்ச மூனாம்த்து நாளு அவனா வந்து கால்ல வுழுந்தான்.. சாமீ என்ன காப்பாத்துங்க தெரியாம கைய வச்சிட்டேன்.. எடுத்த காச திருப்பிகுடுத்துட்டான்.. ஏன்னு பார்த்தா.. அவனுக்கு யானைக்கால் வந்து ஒரு காலே வீங்கிப்போயி கிடக்கு..நாம எவ்ளோ மொளகா அரைக்கிறமோ அவ்ளோக்கவ்ளோ திருடனுக்கு ஆபத்து.. வெள்ளிச்சங்குக்கு ஒரு கிலோ போதும்னுதான் விட்டுட்டேன்’’ என்றாள் அம்மா. கிஷ்ணனின் பயத்தை இது இரட்டிப்பாக்கியது. முன்னைவிடவும் வேர்த்துக்கொட்டியது. காலுக்குள் புழு ஊறுவதைப்போலவும் கண்கள் இருண்டு தூரத்தில் மரணம் காத்திருப்பதாகவும் உணர்ந்தான்.
பேசாம கிஷ்ணா உண்மைய சொல்லிடு.. என்றது மனசாட்சி. அதை சொன்னா ஏற்கனவே தொலைந்து போன மூக்குத்தி.. குத்துவிளக்கு கேஸெல்லாம் மீண்டும் தூசித்தட்டப்படும் என்பதால் அதுவும் முடியாது. சங்கை போய் திருப்பிக்கேட்டா அருண் மட்டுமா காறித்துப்புவான்.. ஊரே துப்புமே.. நமக்கு ஒரு ஆபத்துன்னா ஆண்டவன்கிட்ட போகலாம்.. ஆனா ஆபத்தே அந்த ஆண்டவனாலதான்னும் போது யாருகிட்ட போறது! மனதிற்குள் புலம்பிக்கொண்டே அங்கிருந்து பயணத்தை தொடர்ந்தான்.
கோயிலை நெருங்க நெருங்க அவனையும் மீறி அவனுக்குள் ஒரு படபடப்பு. உஷாவின் காதல்வேறு கண்முன்னால் வந்துவந்து மறைந்த்து. ‘கண்ணே! உஷா! உன்னை வாழ்க்கைல கல்யாணமே பண்ணிக்காம செத்திடுவேன் போலருக்கேமா.. நான் செத்துட்டா வேற யாராயாச்சும் கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லபடியா வாழணும்.. ‘’ என மனசுக்குள் மத்தாப்பு கதறினான். தயங்கி தயங்கி மார்க்கெட் ரோடில் வண்டியைவிட்டான். பார்க் செய்தான். தூரத்தில் ஒரே கூட்டம். அம்மாவும் மகனும் பரபரக்க கோயில் இருந்த இடத்தை நோக்கி ஓடினர்.
கூட்டத்தை கலைத்துவிட்டுப்பார்த்தால் கோயிலையே காணோம்! புற்றையும் காணோம். மொளகா பீடத்தையும் காணோம். பதினெட்டாவது மாடியிலிருந்து விழும் ஒருவன் உயிர்பிழைத்தால் என்ன செய்வானோ எப்படி மகிழ்வானோ அப்படி ஒரு மகிழ்ச்சி கிஷ்ணனின் மனது முழுக்க நிறைந்தது. விஜய் ஆன்டனி இசையில் ஒரு குத்துப்பாட்டு போட்டு செம டான்ஸ் ஆடவேண்டும் போல இருந்தது.
அம்மா தன் இதயத்தில் கைவைத்தபடி அப்படியே கிஷ்ணனின் தோளில் சாய்ந்தாள். வத்தாத நதியெல்லாம் அந்த கடலை பார்த்து ஆறுதல் அடையும் அந்த கடலே காணாம போயிடுச்சின்னா.. கோயிலிருந்த இடம் காலியாக இருந்தது, ஓரமாக பூசாரி கண்கள் வீங்க அமர்ந்திருந்தார். அவர் முகமெல்லாம் இருண்டு போய்.. கவிழ்ந்து போன டைடானிக் கப்பலின் கேப்டன் போல கன்னத்தில் கைவைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். வெள்ளிசங்க காணோம்னு கோயிலுக்கு வந்தா இங்கே கோயிலையே காணோமேடா.. என்று அம்மா அலறினாள். அம்மாவை பூசாரிக்கு அருகில் அமரவைத்துவிட்டு கூட்டத்தில் விசாரித்தான்.
‘’பஞ்சாயத்துல புதுசா யாரோ ஆபீசரு.. மொத்தமா தூக்கிட்டான்!''
‘’கிரேன் வச்சி இடிச்சாங்களாம்யா.. ‘’
நான் பாக்காம போயிட்டேன்... தூங்கிட்டேன்பா..
புத்த இடிச்சப்பா உள்ளே பத்தடி நீளத்துல ராஜநாகம் வெளிப்பட்டுச்சாம்.. அதை பார்த்து ஆபீசரே அலறிட்டாராம்..
சன்டிவில படம் புடிச்சாங்களாம்யா.. ஊர்காரய்ங்களே பேட்டி வேற எடுத்தாங்களாம்.. நான் அப்பதான் பஸ் புடிச்சி கொழுந்தியா வீட்டுக்கு போனேன்பா..
ஆபீசருக்கு சாமினா புடிக்காதாம், அதான் மொத்தமா தகர்த்துட்டாராம்
போக்குவரத்துக்கு இடையூறுனு கோர்ட்டுல ஆர்டர் வாங்கிட்டாய்ங்களாம்பா ’’
என்று பலரும் பல கதைகள் சொன்னார்கள். கோயிலோடு சேர்ந்து இடிந்துபோய் அமர்ந்திருந்தார் பூசாரி. அவனுக்கு மனதுக்குள் ஒரே மகிழ்ச்சி. அந்த பலிபீடக்கல்லையும் கொண்டு போய்விட்டார்கள் போல காணோம். விட்டிருந்தா ஆபீசருக்கே மொளகா அரைச்சிருப்பாய்ங்க முட்டாப்பயலுங்க. கைகொட்டி கண்களில் நீர்வழிய சிரிக்க வேண்டும் போல இருந்தது.
அவனுடைய மகிழ்ச்சி குதூகலத்திற்கு மத்தியில் அம்மா எழுந்து நின்று ஓய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என அலற.. கூட்டம் அம்மாவை சுற்றி வளைத்தது. கிஷ்ணனும் அருகில் போய் நின்றான்.
கண்கள் சிவக்க.. தலையை அவிழ்த்துவிட்டு.. குத்துப்பாட்டுக்கு நடனமாடுகிறவர்கள் நாக்கைமடிப்பதுபோல மடித்துக்கொண்டு ‘’யேய்.....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.’’ என்று சப்தமிட சலசலப்புடனிருந்த கூட்டம், மொத்தமாக அமைதியானது.
‘’எவன்டா என் கோயில இடிச்சது.. ம்ம்ம்ம்ம்ம்ம்..ஸ்ஸ்ஸ்ஸ் ‘’ , அம்மன் பாம்போடு தொடர்புடையவர்என்பதால் அம்மாவும் கைகளை பாம்பு போல் வைத்துக்கொண்டு ஸ்ஸ்ஸ் என பாம்பினைப்போல சத்தம் கொடுத்தார்.
பூசாரிக்கு தெம்புவந்துவிட்டது.. முகத்தில் உற்சாகம், மூலையில் கிடந்த அவருடைய பிரசாத தட்டையும் வேப்பில்லையையும் எடுத்துக்கொண்டு அருகில் ஓடி வந்தார்.
‘’தாயீ.. யாரு தாயீ வந்திருக்க..’’
‘’நான்தான்டா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பூச்சூடியாத்தாடா..’’ என்று கைகள் இரண்டையும் மேலே உயர்த்திப்பிடித்து நாக்கை மடக்கிக்கொண்டு, பல்லால் கடித்தபடி அச்சு அசல் சாமியாடுகிறவர்களை போலவே இருந்தாள். கிஷ்ணன் இதற்கு முன் அம்மா சாமியாடி பார்த்ததேயில்லை. இதென்ன புதுப்பழக்கம்! அவனுக்கு இதில் ஏதோ சூது இருப்பதாக புரிந்தது.
‘’ஊருக்கு வெளியே போ! அங்கே ஒரு புத்திருக்கு.. அங்கே எனக்கு கோயில வையி.. எனக்கு அமைதி வேணும்.. அமைதி வேணும்..’’ என்றாள் அம்மா!
வரும்வழியில் வேப்பமரத்தடியில் பார்த்த புத்து. இங்கே அதையே பிட் ஆக போட்டது அவனை சிரிக்க வைத்தது . அம்மா அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். பார்வையே பயமுறுத்தியது. அருந்ததி அனுஷ்காவையும் சந்திரமுகி ஜோதிகாவையும் கலந்து செய்த கலவைபோல பார்வை. ஆனாலும் அம்மாவின் பார்வைதான்.. நிஜமாவே சாமி வந்திருக்குமா?
‘’தாயீ இந்த கோயில என்ன பண்ணுறது..’’
‘’அதை இடிச்சவன நான் பாத்துக்கறேன்டா.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. நீ போயி கோயில கட்டுற வழியப்பாருடா.. ம்ம்ம்ம்ம்ம்’’ என்று தலையையும் உடலையும் ஒரேநேரத்தில் சுற்றி சுற்றி சொல்ல.. பூசாரியும் அம்மாவுக்கு ஏற்றபடி அதே சுருதியில் சுற்றினார். வாயில் ஒரு முழூ எலுமிச்சம்பழத்தையும் போட்டு அம்மா அதை நறநறவென கடித்து தின்ன கிஷ்ணனுக்கு பல் கூசியது! ஒரு கற்பூரத்தையும் வாயில் போட்டு அம்மனை சகல மரியாதைகளுடன் மலையேற்றிவைத்தார் பூசாரி. அம்மாவும் மற்ற சாமியாடிகளை போலவே மயங்கி விழுந்தார்.
அவள் விழித்த போது லேசாக இருட்டியிருந்தது. அம்மன் இறங்கி கிளம்பியபின் அம்மா தலையை வாரிமுடிந்துகொண்டு நார்மலானார். டீக்கடையில் ஸ்ட்ராங் டீ மூன்று சொல்லப்பட்டது.
‘’பூசாரி.. நான் என்ன பாக்கியம் பண்ணினேன் அந்த பூச்சூடியம்மனே என்மேல வந்து எறங்க..’’
‘’அம்மா உங்கூட்ல ஏதோ நல்லது நடக்கபோவுதுனு நினைக்கிறேன்.. கைல என்ன மொளகா’’
‘’அதுவா.. அது பெரிய கதை.. மொதல்ல புதுக்கோயில கட்ற வேலைய பாருங்க.. அது யாரு நெலம்..’’ டீ குடித்தபடி பேசினாள் அம்மா. அது யாருநிலமா? கிஷ்ணன் திடுக்கிட்டு நின்றான்.. பூசாரி ஆச்சர்யத்தில் புருவம் உயர்த்தினார்.. அம்மா லேசாக நமுட்டு சிரிப்பை உதிர்த்தாள்.
‘’நம்ம மூலக்கட முருகனோடது.. கறாரான ஆளு.. அதான் என்ன பண்றதுனு யோசிக்கறேன்.. உஷாவுக்கு வேற கல்யாணம் பண்ணோனும்.. ஆடிமாசம் வரப்போவுதே கொஞ்சம் வருமானம் வரும் முடிச்சுட்ரலாம்னு இருந்தேன்.. இப்ப பாருங்க..’’ என்று சலித்துக்கொண்டார் பூசாரி.
‘’நிலத்த பத்தி கவல படாதீங்க பூசாரி.. ஆத்தா பாத்துக்குவா.. ஏன் என் பையன பார்த்தா பையனாட்டம் தெரியலையா.. அஞ்சு காசு குடுக்க வேணாம்… ‘’
பூசாரி அசையாமல் நின்றார். கிஷ்ணனுக்கு குலை நடுங்கியது. அப்படியே அம்மாவின் காலில் விழுந்தார். சூனியம் வைக்க வாங்கிய மொளகாயில் அடுத்த நாள் பூசாரிக்கு கறிக்கொழம்பு விருந்து வைக்கப்பட்டது.
கோயில் நிலம் மூலக்கடை முருகனுக்கு சொந்தமானது. அவன் அதெல்லாம் முடியாது.. ஆத்தாவாவது அம்மனாவது.. யோவ் அது நாலு லட்சம் போகும்யா.. என்று கொடுக்க மறுத்தான். அம்மாவின் மீது மட்டுமே பூச்சூடியம்மன் இப்போதெல்லாம் அடிக்கடி இறங்குவது போலவே அன்றைக்கும் இறங்கினாள்.
முருகனிடம் ‘’டேய் பன்னிப்பயலே ஒழுங்கா நிலத்தை குட்றா இல்ல குலத்தையே நாசம் பண்ணிருவேன்!ஏய்ய்ய்ய்’’ என மிரட்ட.. அவனும் அடிபணிந்தான். புதுக்கோவிலுக்கு புதுப்பீடம் வரவழைக்கப்பட்டது. அதில் அனுதினமும் மொளகாய் அரைக்கப்பட்டது. புது இடம் விசாலமாக இருந்ததால் பக்தர்கள் எண்ணிக்கை பெருகி அது வெரி ஃபேமஸ் டெம்பிளாக மாறியது. கிஷ்ணனின் மொளகாவுக்காக பீடம் காத்திருந்தது.
திருமணம் நிச்சயமாகிவிட்டதால்.. வெள்ளிச்சங்கை மறந்தேபோனாள் அம்மா! இதோ கிஷ்ணனுக்கு கல்யாணமாகி குழந்தையும் பிறக்கப் போகிறது. அம்மா வெள்ளிசங்கு எங்கேயென்று கேட்கலாம்.. அருணிடம் விஷயத்தைச்சொல்லி துப்பினாலும் கொடுத்த பரிசை திருப்பிக் கேட்டுவிட முடிவெடுத்தான்.. இந்த விதிதால் எத்தனை வலியது. அருண் வீட்டிலிருந்த வெள்ளிச்சங்கை யாரோ திருடிவிட்டார்களாம். கிஷ்ணனுக்கு தலை சுற்றியது.