Pages

18 November 2011

டின்டின்



நண்பர்களில் சிலர் தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் குறித்து பேச ஆரம்பித்தால் மெய்மறந்து பரவசநிலையில் மணிக்கணக்கில் பேசுவதை கேட்டிருக்கிறேன். பல ஆயிரங்கள் செலவழித்து பழைய கிழிந்த குப்பையான காமிக்ஸ்களை வாங்குவதையும், கடைகடையாக சொல்லிவைத்து பழைய புத்தகங்கள் சேகரித்து வைப்பதையும் பார்க்க செமகாமெடியாக இருக்கும். இந்த காமிக்ஸ்களுக்காக அடிதடி வெட்டு குத்து கைகலப்புகள் கூட நடக்கும் என்றே நினைக்கிறேன். (காமிக்ஸ் ரசிகர்கள் கன்பார்ம் செய்து உதவலாம்) அப்படி என்னதான்யா இருக்கு இந்த தமிழ்காமிக்ஸ்ல என முஷ்டியை மடக்கிக்கொண்டு ஒருகை பார்த்துவிட முடிவெடுத்து சமகாலத்தில் பழைய காமிக் புத்தகங்களை நண்பர்களிடமிருந்து இரவல் வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

அதைப்படிக்கும்போதுதான் ச்சே! இரும்புக்கை மாயாவி படிக்காம விட்டுட்டோமே! லக்கிலூக் பற்றி தெரியாமல் போயிடுச்சே... அடேங்கப்பா மதியில்லா மந்திரி என்ன காமெடியா இருக்கு.. கௌபாய் கதைகள் பின்னுதே! ஸ்பைடரின் சாகஸங்கள் தூள்கிளப்புதே... இதையெல்லாம் சின்ன வயசுல படிக்க குடுத்துவைக்கலயே என்கிற ஏக்கம் எழும்.

தமிழில் அநேக காமிக்ஸ் புத்தகங்கள் வந்திருந்தாலும் எனக்கு ஆங்கில காமிக்ஸ்கள்தான் பள்ளிக்காலங்களில் பரிச்சயமாயிருந்தது. காரணம் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது வேலை பார்த்த புத்தக கடையில் ஆங்கில காமிக் புத்தகங்கள் மட்டும்தானிருந்தன. காசு கொடுத்து காமிக்ஸ் மட்டுமல்ல எதையுமே வாங்கிப்படிக்கிற பரம்பரையல்ல எங்களுடையது. வேலை செய்த கடையில் காணக்கிடைத்த டின்டின்னும் மார்வலும் டார்க் ஹார்ஸும் டிசி காமிக்ஸும்தான் ஒரே கதி!

தமிழ்மீடியம் என்பதால் என்னுடைய அபாரமான ஆங்கில அறிவை வைத்துக்கொண்டு அதையெல்லாம் என்னதான் முக்கிமுக்கிப்படித்தாலும் கொஞ்சமே கொஞ்சம்தான் புரிந்துகொள்ள இயலும். ஸ்பைடர் மேன்,பேட்மேன்,சூப்பர்மேன்,பேன்டம்,மாண்ட்ரேக் மாதிரியான காமிக்ஸ்கள் படித்தாலும் டின்டின் மீது எப்போதுமே அளவில்லாத அன்பிருந்தது. காரணம் ஆங்கிலமே தெரியவில்லையென்றாலும் படங்களைக்கொண்டே நம்மால் ஒரு கதையை உருவாக்கிக்கொள்ள முடியும். அந்தக்கதை எப்போதுமே ஆக்சன் காட்சிகள் நிறைந்த சோகம் நிறைந்த காமெடி படங்களாகவே இருக்கும்.

வெறும் படங்களைப்பார்த்தே சிரித்து மகிழலாம். அதிலும் அந்தப்படங்களை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டேயிருக்கலாம்! மிகமிக நேர்த்தியாக ஆக்சன் காட்சிகளை சித்தரித்து வரையப்பட்ட படங்கள் அவை.

டின்டின் என் கனவு நாயகன். ஒரு குட்டிநாயை வைத்துக்கொண்டு எப்பேர்ப்பட்ட உட்டாலக்கடி பலசாலி வில்லன்களையும் மதிநுட்பத்தால் பந்தாடுவார்! அவரோடு கப்பல்கேப்டன் குடிகார ஹடாக்கும் சேர்ந்துகொண்டால் காமெடி,அதிரடி,சரவெடிதான்! நடுவில் போலீஸ் டிடெக்டிவ்களாக வருகிற தாம்சன் அன்ட் தாம்சனின் ஜாலியான குறும்புகளும் நினைவிலிருந்து என்றுமே அகலாதவை. சுஜாதாவின் ஜீனோகூட ஸ்நோயி என்னும் டின்டின்ன்னின் குட்டிநாயின் பாதிப்பில் உருவானதாக இருக்கலாம்! படுசுட்டி! அதிலும் போகிறபோக்கில் வரலாற்றினையும் அரசியலையும் வெகுவாக கிண்டலடித்திருப்பார் டின்டின் கதாபாத்திரத்தினை உருவாக்கிய ஹெர்ஜ்.

டின்டின் காமிக்ஸ் கார்ட்டூன் நெட்வொர்க்கில் பத்தாண்டுகளுக்கு முன்பு டிவிசீரியலாக வெளியானபோதும் அண்மையில் அதன் திருட்டுடிவிடி மொத்த தொகுப்பு பர்மா பஜாரில் வெறும் பதினைந்து ரூபாய்க்குக் கிடைத்தபோதும் விடாமல் பார்த்திருப்பேன். டிவிசீரியல் தரம் ரொம்ப சுமார்தான்.. காமிக்ஸில் கிடைத்த விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் ரொம்ப குறைவு! இருந்தும் சிடி தேய பல நூறுமுறை பார்த்திருப்பேன். டின்டின் கதைகளை அடிபட்டையாக கொண்டு சில படங்கள் அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் வெளியாகியிருந்தாலும் திருட்டுடிவிடி இன்னும் ரிலீசாகவில்லை.

பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும அது திரைப்படமாக வருகிறதென்பதும் அதை ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்குகிறார்.. அதுவும் பர்ஃபார்மென்ஸ் காப்ச்சர் 3டி தொழில்நுட்பம் என்பதும் எப்படிப்பட்ட ஆவலை என்னுள் ஏற்படுத்தியிருக்கும் என்பதை வார்த்தைகளால் எழுதிவிடமுடியாது. பைலட் தியேட்டரில் பல மாதங்களாக இப்படத்தின் தமிழ் டப்பிங் டிரைலர் வரும்போதெல்லாம் நவம்பருக்காக காத்திருந்தேன்.

அன்பார்சுனேட்லி ஏனோ படம் தமிழில் வெளியாகவில்லை. சென்னையிலும் மிகச்சில உயர்ரக பீட்டர்குடிகளுக்கான மெகாமால் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகியிருந்தது. அங்கெல்லாம் டிக்கட் விலை நூறுரூபாய்க்கும் மேல் (பைலட் தியேட்டரில் முப்பதேரூபாய்தான்). நமக்கு கட்டுப்படியாகாதே! படம் வெளியாகி ஒருவாரமாக ஏக்கத்தோடு ச்சே இந்த வறுமைதான் எத்தனை கொடியது என சோகத்தில் இருந்த எனக்கு தோழர்தான் ஆபத்பாண்டவனாக ஏமாந்த ரட்சகனாக பெரிய அமவ்ன்ட்டை ஸ்பான்சர் செய்தார். சத்யம் தியேட்டரில் டிக்கட் விலை நூற்றி இருபது,பார்க்கிங் பத்து, 3டி கண்ணாடிக்கு 20 என இரண்டுபேருக்கும் சேர்த்து மொத்தமாக 300 ரூபாய் மொய் வைக்க வேண்டியிருந்தது! இதில் சத்யம் தியேட்டரில் குடிக்க தண்ணீர் கூட இருபது ரூபாய் கொடுத்துதான் வாங்கித்தொலைய வேண்டிய துர்பாக்ய நிலை. இதையெல்லாம் தட்டிக்கேட்க ஒரு வேலாயுதம் வரமாட்டானா?

எதிர்பாப்பை மட்டுமே பார்சல் பண்ணிக்கொண்டு போன என்னை எள்ளளவும் ஏமாற்றவில்லை ஸ்பீல்பெர்க். நான் காமிக்ஸில் படம் பார்த்து உருவகித்து கொண்ட அச்சு அசல் அதே பாத்திரங்கள் உயிருடன்.. 3டியில்! பார்க்கவே சிலிர்ப்பாக உணர்ந்தேன். ஏற்கனவே படித்த டிவியில் பார்த்த அதே சீக்ரட் ஆஃப்தி யுனிகார்ன் கதைதான் என்றாலும் கொஞ்சமும் பரபரப்பும் விறுவிறுப்பும் குறையாத அருமையான திரைக்கதை, பிரமிப்பூட்டும் கிராபிக்ஸ்! காமிக்ஸுக்கு கொஞ்சமும் குறையாத அதே நகைச்சுவை. அதிலும் கேப்டன் ஹடாக் வருகிற காட்சிகள் அத்தனையும் பட்டையை கிளப்புகிறது. வெறும் குழந்தைகளுக்கான படமாக மட்டுமேயில்லாமல் அனைவருக்குமான படத்தை கொடுத்திருக்கிறார் ஸ்பீல்பெர்க். இதற்கு மேல் படத்தைப்பற்றி என்ன சொல்ல தியேட்டரில் பார்க்கும் வசதியிருக்கிற சீமான்களும் சீமாட்டிகளும் உடனடியாக தியேட்டரிலும் என்னைப்போன்ற பரம ஏழைகள் பத்து நாட்கள் பொறுத்திருந்து திருட்டுடிவிடியிலும் கட்டாயம் பார்க்கலாம்!