31 October 2011
டிக்கெட்
குடித்துவிட்டு மிட்நைட்டில் வண்டியோட்டுவது சுந்தரேசனுக்கு மிகவும் பிடிக்கும். காதில் இயர்ஃபோனில் இளையராஜா. ''வருது வருது இளங்காற்று..'' எனப்பாடிக்கொண்டே போதையில் பறக்க தொடங்கிவிடுவான்.
அன்றைக்கும் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு அப்படித்தான் ஹாயாக கிளம்பினான். லேசான சாரல் வேறு சிலிர்ப்பூட்டியதோடு கிளுகிளுப்பை அதிகப்படுத்தியது. ‘‘இந்த நேரத்துல செமத்தியான ஒரு டிக்கெட் கிடைச்சா எவ்ளோ நல்லா இருக்கும்...’’ என பெருமூச்சை உதிர்த்தபடி பைக்கை நகரின் பிரதான சாலையில் ஓட்டிய படி வந்தான்.
சாலையின் ஓரம் தூரத்தில் இரண்டு பேர் நிற்பது நிழலாகத் தெரிந்தது. போலீஸா இருக்குமோ? ட்ரங்க் அன்ட் ட்ரைவ்... இரவெல்லாம் உக்கார வச்சிருவானுங்களே... பதறி வண்டியை ஓரமாக நிறுத்தி வாயில் ஒரு பாக்கெட் குட்காவை அள்ளிக்கொட்டி குதப்பினான். பிறகு வண்டியை ஸ்டார்ட் செய்து அருகில் செல்லச் செல்ல அது போலீஸ் அல்ல... பெண்கள் என்று தெரிந்தது. ஆஹா அடிச்சதுடா ஜாக்பாட்...
அது ஒரு பேருந்து நிறுத்தம். அங்கேதான் அந்த இரண்டு பெண்களும் நின்றுகொண்டிருந்தனர். அவர்களுக்கு கொஞ்சம் தள்ளி வண்டியை நிறுத்திவிட்டு ஒரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டு நோட்டம் விட்டான். ஒருத்தி வயதானவள். முந்தானையை தலைக்கு முக்காடு போல போட்டிருந்தாள். இன்னொருத்தி இளம்பெண். சுடிதார் அணிந்திருந்தாள்.
இவன் அவர்களுக்கு அருகில் போய் நிற்க அவர்களும் இவனையே பார்ப்பதாக உணர்ந்தான்.
‘நிச்சயமா அந்தமாதிரிதான் இருக்கணும்... ஐட்டம்வேற செம கட்டையா இருக்கே’ பாக்கெட்டை தடவிப்பார்த்தான். 500 ரூபாய்தான் இருந்தது. ‘ரேட்டு ஜாஸ்தி கேட்டா என்ன பண்றது..?’ ஏடிஎம் எதிரில் இருந்தது. பிரச்னையில்லை. இடம்? அவர்கள் பார்த்துக் கொள்வார்களாய் இருக்கும்.
அந்த வயதான பெண் சாலையை பார்ப்பதும் இவனை பார்ப்பதுமாக இருந்தாள். அந்த இளம்பெண் நல்ல அழகு. தொழிலுக்கு புதுசு போல. அவளை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது. சிகரெட் காலியானது. அவர்களுக்கு கொஞ்சம் அருகில் போய் கையை உயர்த்தி சோம்பல் முறிப்பதுபோல ஆஆஆ வென பாடினான். அந்த வயதான பெண் அவன் அருகில் வந்தாள்.
‘‘தம்பி... தப்பா நினைக்காதீங்க... உங்க செல்போன் கிடைக்குமா? இவ மகனுக்கு ஃபிட்ஸ் வந்துருச்சுனு ஆம்புலன்ஸுக்கு போன்பண்ணிருந்தோம். இன்னும் வரல. எங்க போன்ல பேலன்ஸ் இல்ல. அதான் ஒரு போன் பண்ணிக்கலாம்னு? தப்பா நினைச்சிக்காதீங்க’’ என்றாள்.
சுந்தரேசனுக்கு வியர்த்துக்கொட்டியது. பதட்டமாக போனை எடுத்து நீட்டினான். போதையெல்லாம் ஒரு நொடியில் காலியாகியிருந்தது. அந்த இளம்பெண் அழுது அழுது கண்கள் வீங்க நின்றிருந்தாள். அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வயதான அம்மா போன் செய்துகொண்டிருக்கும்போதே ஆம்புலன்ஸ் வந்து நின்றது. தன் செல்போனை வாங்கிக்கொண்டு அவசரமாக வீட்டிற்கு கிளம்பினான்.
வீட்டு வாசலில் சேலைத் தலைப்பில் முக்காடு போட்டுக் கொண்டு சுந்தரேசனின் மனைவியும், கன்னத்தில் கைவைத்தபடி ஐந்து வயது குட்டிப்பாப்பாவும் காத்திருந்தனர்.
(நன்றி தினகரன் , வசந்தமில் வெளியான ஒரு பக்க கதை)