Pages

28 October 2011

தீபாவளி திரைப்படங்கள் - ஒரு பார்வை



விஜய.டி.ராஜேந்தர் + கேப்டன் விஜயகாந்த் இருவருமாக கூட்டணி போட்டு ஒரு படம் நடித்தால் அந்தப்படம் தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகமே போற்றிக்காக்கும் பொக்கிஷமாக இருக்குமில்லையா?. அதே சந்தோசத்தை பேரானந்தத்தை விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் நமக்கு தருகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

தங்கச்சி சென்டிமென்ட்டையும் பாகிஸ்தான் தீவிரவாதிகளையும் இணைத்து படமெடுக்க முன்வந்த இயக்குனர் ராஜாவுக்கு முதலில் பெரிய பூங்கொத்துடன் கூடிய பாராட்டுகள். தீபாவளி ரேஸில் அவர்படம்தான் பஸ்ட்டாம்!

என்னது விஜய்படத்துல பாகிஸ்தான் தீவிரவாதியா ‘ஙே’ என முழிக்க வேண்டாம். யெஸ் பாகிஸ்தான் டெரரிஸ்ட்ஸ்தான். அவர்களைதான் விஜய் பறந்து பறந்து பின்னாங்காலால் சுவற்றை மிதித்து சுழன்று உதைத்து பந்தாடுகிறார். திருப்பாச்சி படத்தில் தங்கச்சிக்காக எப்படி சென்னை ரவுடிகளை அழித்தொழிக்கிறாரோ அதேபோல இதில் தங்கச்சிக்காக தீவிரவாதிகளை அழிக்கிறார்.

யெஸ் தங்கச்சிக்காகத்தான்.. தோளிலும் மாரிலும் தூக்கி வளர்த்த அதே அன்பு தங்கச்சிக்காகதான்! ஆனால் என்ன ஒன்னு.. டீயார் போல தாடி கிடையாது.. நோ அழுவாச்சி!

தங்கச்சியை கொன்ற தீவிரவாதிகளை இளையதளபதி விஜயாக இருப்பதால், அவருடைய லெவலுக்கு குறைந்த பட்ஜெட்டில் சென்னையில் வைத்துதான் அடித்து உதைத்து கொன்று பழிதீர்க்க வேண்டியதாயிருக்கிறது.

இதுவே எங்க தல கேப்டனாக இருந்திருந்தால் பாகிஸ்தானுக்கே போயி ஒண்டிக்கட்டையாக ஒட்டுமொத்த தீவிரவாத சமூகத்தையுமே உதைத்ததழித்திருப்பார். சொல்லப்போனால் உலக மேப்பில் பாகிஸ்தான் என்கிற நாடே இல்லாமல் போயிருக்கும். அன்பார்சுனேட்லி அது நடக்கல! ஆங்! (வீ மிஸ் யூ கேப்டன் சார்)

கிளைமாக்ஸில் சிக்ஸ்பேக் மாதிரி எதையோ காட்டி நம்மையும் தீவிரவாதிகளையும் பழிவாங்குகிறார். விஜயின் அந்த மல்ட்டிப்பிள் சிக்ஸ்பேக்ஸை பார்த்து தியேட்டரில் குழந்தைகளே பயப்படும்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் எம்மாத்திரம். இருண்ட ஆப்பிரிக்காவை நோக்கி அலறி ஓடுகிறார்கள்.

தங்கச்சிக்காக டேன்ஸ் ஆடி பாட்டுப்பாடி அழுதுசிரித்து நடித்திருந்தாலும் டீராஜேந்தர் அளவுக்கு அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்த முடியாமல் திணறுகிறார், குறைந்தபட்சம் லத்திகா புகழ் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனைகூட தாண்டமுடியவில்லை விஜயால்!. பார்க்கவே பாவமாக இருக்கிறது. அட பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமாவது வீராவேசமாக பேசுகிறாரா என்றால் அதுவும் இல்லை என்ன இருந்தாலும் கேப்டன் கேப்டன்தான்! டீஆர் டீஆர்தான். எத்தனை வேலாயுதம் வந்தாலும் மங்காத்தா வந்தாலும் அவர்களை விஞ்ச அவர்களால் மட்டுமே இயலும்.

அஜித் பில்லா பார்ட் 2 நடிக்கிறார் என்பதை அறிகிறோம். இதுகூட திருப்பாச்சி பார்ட்2 தான். படம் முழுக்க பாட்டாளி வர்க்க மக்களை காப்பாற்றியதுமில்லாமல் உலக வரலாற்றில் முதல் முறையாக இளையதளபதி விஜய் தயாரிப்பாளரையும் ஒரளவு காப்பாற்றியிருக்கிறார். வெற்றியில் சந்தானத்தின் வாய், ஹன்சிகாவின் தொப்புளுக்கும் நிறையவே பங்கிருக்கிறது.

மற்றபடி படத்தில் எனக்கு மிகவும் பிடித்தவசனம் ‘’நான் ஆளுங்கட்சியும் இல்ல எதிர்கட்சியும் இல்ல ஒரே கட்சிதான் அது என் தங்கட்சி!’’ (இந்த வசனத்தை டீயார் சொல்லியிருந்தால் தியேட்டரே விசில் சப்தத்தில் சின்னாபின்னமாகியிருக்கும்!).

படத்தில் விஜயின் காஸ்ட்யூமும் நடிப்பும் அந்தக்காலத்து ராமராஜனை நினைவூட்டியது என்று சொன்னால் அது மிகையல்ல! 2007க்கு பிறகு வெற்றியையே ருசித்திடாத விஜய்க்கு இஞ்சி பச்சடி தொட்டு நக்கடி என கிடைத்திருக்கும் டுமாங்கோலி ஹிட் வேலாயுதம்.


*******

இன்பிட்வீன் ஏழாம் அறிவு என்னும் மகாகாவியத்தையும் காண நேர்ந்தது. படத்தின் இயக்குனர் மாபெரும் புத்திசாலியாகத்தான் இருக்க வேண்டும். ஏற்கனவே விஜயகாந்தும் அர்ஜூனும் சேர்ந்து பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை அழித்துவிட்டதால் சைனாவிலிருந்து வில்லன்களை இறக்குமதி செய்திருக்கிறார். அதோடு தசாவதாரம் படத்திலிருந்து கிருமிகளையும் சில காட்சிகளையும் காப்பிபேஸ்ட் செய்திருக்கிறார். (தசாவதாரம் கிருமியே இங்கிலீஸ்லருந்து சுட்டது)

படத்தின் வில்லன் ‘டோங் லீ’ செகன்ட்ஷோ டெர்மினேட்டர்2 பார்த்திருப்பான் போல!

படம் முழுக்க சின்ன கண்ணால் முழித்து முழித்து பார்த்தபடி ஆடாமல் அசையாமல் முகத்தில் எந்த ரியாக்சனுமே இல்லாமல் நேர்கோட்டில் ஒரே அச்சில் ஹாரிஜான்டிலாகவும் இல்லாமல் வெர்ட்டிகலாகவும் இல்லாமல் 90டிகிரியில் நடக்கிறார். ஹிப்னாடிசம் பண்ணும் போது மட்டும் மண்டையை முப்பது டிகிரி கோணலாக திருப்புகிறார். டேய் போங்கிரி! நீ ரோபோ இல்ல மனுஷன்டா என யாரோ கமென்ட் அடிக்க.. தியேட்டரே சிரித்து மகிழ்கிறது.

படத்தின் முதல் அரைமணிநேரம் ஏதோ டாகுமென்ட்ரி போல ஓடுகிறது. படம் போடுவதற்கு முன்னால் அரசாங்கமே போடுகிற மொக்கை டாகுமென்ட்ரிகளுக்கு இணையான காட்சிகள் அது. அதை ரொம்ப சீரியஸாக படமெடுத்திருப்பதால் அதை சீரியஸாக பார்த்து தொலையுங்கள்.

ஆரிசு செயராசு என்னும் இசையமைப்பாளர் இந்தப்படத்துக்கு இசையமைத்துள்ளார். டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் என்னும் பாப்பா பாடலையே சீனா மொழியில் இசையமைத்துப் பாடினால் முட்டாள் மரமண்டை தமிழர்களுக்கு தெரியாது ஆகா ஓகோ என கைத்தட்டிவிடுவார்கள் என நினைத்துவிட்டார் போல!

டாக்ஸி டாக்ஸி பாட்டையே ஓரிங்கா ஓரிங்கா என பாடுகிறார்கள்.. ஆரிசு செயராசு அவர்களே.. எங்க நினைவாற்றல் மேலதான் உங்களுக்கு எவ்ளோ நம்பிக்கை.

போதிதர்மருக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கிறேன் பேர்வழி என பேதிக்கு மருந்துக்கொடுக்கும் பேதிதர்மராக அவரை சிவராஜ் சித்தமருத்துவர் ரேஞ்சுக்கு சித்தரித்திருப்பது காமெடி கும்மி! அவருக்கு எக்ஸ்மேன் திரைப்படத்தில் வருகிற மேக்னீட்டோ,புரொபஸர் எக்ஸ்,வோல்வரீன்,டாக்டர் ஜீன்க்ரே என கிட்டத்தட்ட எல்லாவித முயூட்டன்ட்களுக்கும் இருக்கிற சூப்பர் பவர்களும் இருக்கிறது! நல்ல வேளை அவருக்கு பேண்ட்மாட்டி அதற்குமேல் ஜட்டிமாட்டி குட்டி சூப்பர்மேன் ஆக்காமல் விட்டதற்காக முருகதாஸுக்கு பூங்கொத்து!

பாவம் போதி தருமர் உயிரோட இல்லை.. இந்தப்படத்தை பார்த்திருந்தால் தன்கையிலிருக்கும் நீண்ட கட்டையால முருகதாஸ் மண்டைலயே நாலு சாத்து சாத்தியிருப்பார்.

படம் முழுக்க தமிழர்கள் பெருமையை பேசுகிற சுருதிகமலுக்கு கொஞ்சமாச்சும் தமிழ் கத்துகுடுத்திருக்கலாம். பயபுள்ள பாவம் ரொம்ப்ப்ப்வே டமிலர்கள்க்கு பெர்மை சேர்க்க போர்ராட்து.த்து... .முடியல!

படத்தோட கதைக்கும் பெரிசா சிரமப்படாம அசாசின் க்ரீடுன்ற வீடியோகேம் கதையவே சுட்டு கொஞ்சம் டிங்கரிங் செய்து திரைக்கதை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. உலக சினிமாக்களை காப்பியடித்தால் கண்டுபிடித்துவிடும் இணைய விமர்சகர்களுக்கு சரியான சவுக்கடி. வீடியோகேம் விளையாடுகிறவர்கள் எண்ணிக்கை சொற்பம்தான். வீடியோகேமிலிருந்து கதையை உருவி சரியாக பயன்படுத்திய இயக்குனரின் ராஜதந்திரத்துக்கும் பாராட்டுகள்!

‘’காசுக்கு புடிச்ச கேடு இந்த தண்ட கருமாந்திரத்தையெல்லாம் பாத்து தொலைக்க வேண்டியிருக்கிறது’’ என எனக்குள்ளும் தூங்கிக்கொண்டிருந்த பீதி தருமரை தட்டி எழுப்பிய பெருமைக்காக முருகதாஸுக்கு ஒரு சல்யூட்!


********

இன்னும் ரா-ஒன் பார்க்கவில்லை. ஆனால் ரஜினி வருகிற காட்சிமட்டும் யூடியுபில் கிடைக்கிறது. ரஜினியை பார்க்க கோமாளி போல மொக்கையாக இருக்கிறார். கேவலமான ஹேர்ஸ்டைல், மொக்கையான மேக்கப் என ஷாருக்கான் ரஜினியை ரொம்பவே அசிங்கப்படுத்தியிருக்கிறார். வாழ்த்துகள் ஷாருக்!

நோட் திஸ் பாய்ன்ட் ரஜினியின் கொலைவெறி படை – நீங்கள் எந்திரனையே இன்னொரு முறை பார்ப்பது கிட்னிக்கு நல்லது.

நானொன்னும் பொய் சொல்லீங் நீங்களே பாத்துக்கோங்க!