முதலில் சில சம்பவங்கள்...
அக்டோபர் 7 : மூணாறு நகர்ப் பகுதியிலும் எஸ்டேட் பகுதியிலும் நுழைந்த காட்டு யானை ஒன்று தாக்கியதில் ஜான்சன் என்பவர் கொல்லப்பட்டார். இதே யானை தாக்கி ஏற்கெனவே 7 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அக்டோபர் 3 : வால்பாறை அருகே தேயிலைத் தோட்டப் பகுதியில் 21 காட்டு யானைகள் புகுந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஊருக்குள் நடமாட அஞ்சினர்.
ஆகஸ்ட் 10 : கோவை வாழையாறு பகுதி காப்புக் காட்டில் வனக்காவலரான நடேசன், பணியிலிருந்தபோது, காட்டு யானைகள் மிதித்துப் பலியானார்.
ஜூலை 29 : திண்டுக்கல் மாவட்டம் தேக்கம் தோட்டம் பகுதியில் 10 யானைகள் இரவில் நுழைந்து அங்குள்ள விவசாயி ஒருவரின் வீட்டை முற்றுகையிட்டன. ஓடுகளை உடைத்தும் வெளியில் நின்றிருந்த கட்டில், மொபெட் ஆகியவற்றையும் தூக்கி வீசின. விடியும் வரை கலாட்டா செய்த அவை விடிகாலையில்தான் கிளம்பின.
ஜூலை 7 : நீலகிரி மாவட்டத்தில் பந்தலூரை அடுத்துள்ள கிராமங்களில் காட்டு யானைகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தின. அவற்றுக்குப் பயந்து கொண்டு மக்கள் தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கினர்.
ஜூலை 3 : ஈரோடு மாவட்டம், புஞ்சைப் புளியம்பட்டி அருகே உள்ள சில கிராமங்களில் புகுந்த யானைகள் சுமார் 15 நாட்கள் அங்கேயே ‘கேம்ப்’ போட்டு தோட்டங்களில் புகுந்து வாழை, தென்னை, மாக்காச் சோளம் போன்றவற்றைத் தின்று சேதம் விளைவித்தன.
-முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காட்டு யானைகள் மலையோர கிராமங்களுக்குள் நுழைவது சமீபகாலங்களில் அதிகரித்துள்ளது என்ன காரணம்? யார் மீது தவறு? அதைத் புரிந்து கொள்வதற்கு முன் யானைகளைப் பற்றிய சில அடிப்படையான தகவல்களைத் தெரிந்துகொள்வது உதவும் .
சாப்பாடு 300கிலோ
மேற்குத்தொடர்ச்சி மலை, இது யானைகளின் சொர்க்கம். எங்கு பார்த்தாலும் அடர்ந்த காடுகள். இங்கே 6700க்கும் மேற்ப்பட்ட யானைகள் வசிப்பதாக 2005ஆம் ஆண்டு வனத்துறையின் ஆய்வுகள் சொல்கின்றன. அதிலும் நீலகிரி மாவட்டம், ஈரோடு, அந்தியூர், ஆனைமலை, மேட்டுப்பாளையம், முதுமலை, ஆனைகட்டி, சிறுவாணி உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் மிக மிக அதிகம். யானைகள் மற்ற எந்த விலங்குகளை போலவும் இல்லாமல் எப்போதும் அலைந்து கொண்டே இருப்பவை. சரியான ‘காடோடி’கள். அதற்குக் காரணம் அவற்றின் உணவுப் பழக்கம்.
ஒருநாளுக்கு 100 முதல் 300 கிலோ வரை தாவரங்களை உண்ணுகின்றன இந்த யானைகள். அதோடு 100 முதல் 150 லிட்டர் அளவில் தண்ணீர் குடிக்கின்றன. வறட்சிக் காலங்களில் உணவு தேடி பல நூறு கிலோ மீட்டர்கள் பயணிக்கும். ஒரே ஒரு யானைக்கே இவ்வளவு உணவும் நீரும் தேவையென்றால் குடும்பமாகவே (5லிருந்து 15யானைகள்) வாழக்கூடிய இந்த உயிரினத்திற்கு எவ்வளவு உணவும் தண்ணீரும் தேவைப்படும்! அதனால் காட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை முகாமிட்டு அங்கிருக்கிற தாவரங்களை மொத்தமாக உண்டு காலிசெய்த பின்தான் அங்கிருந்து நகரும்.அடுத்து? அடுத்த காடு... அங்கே மொத்தமாக சாப்பிடுவதும்... மீண்டும் அடுத்த காடு... இப்படி ஒரு சுற்று முடித்து, பழைய காட்டிற்கு வந்தால் அங்கே தேவையான தாவரங்கள் மீண்டும் வளர்ந்துவிடும்! இயற்கையாக நடைபெறும் சுழற்சி இது.
காடுவிட்டு காடு தாவும் இந்த யானைகள் தங்களுக்கென்று ஒரு தனிப் பாதையை உருவாக்கிக்கொண்டு அதில் மட்டுமே பயணிக்கும் குணம் கொண்டவை. இதை யானைகளின் வழித்தடம் (ELEPHANT CORRIDORS) என்று அழைக்கிறார்கள். ஆறாயிரம் யானைகள் தமிழ்நாட்டில் இருந்தாலும் அவை பயன்படுத்துகிற வழித்தடங்கள் 19தான்! அதில் நான்கு பாதைகள் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும் செல்கின்றன.
இத்தனை ஆண்டுகளும் இப்படித்தான் யானைகள் வாழ்ந்து வருகின்றன. ஆனால் இப்போது நிலைமை தலைகீழ்!
தங்களுடைய பாதையிலிருந்து விலகி, அவை காடுகளுக்கு அருகாமையிலுள்ள கிராமங்களுக்குச் செல்கின்றன. வீடுகளைத் தாக்குகின்றன. வாழைத்தோட்டங்கள், கரும்புத்தோட்டங்களில் புகுந்து தின்று தீர்க்கின்றன. இதுகுறித்து மேற்கு தொடர்ச்சி மலையில் யானைகள் உலவும் பகுதிகளில் சில முக்கியமான பகுதிகளில் ஆய்வு செய்தோம். யானைகள் ஊருக்குள் நுழைவதற்கான காரணங்கள் ஒவ்வொரு பகுதியிலும் வேறுபடுகின்றன. சில காரணங்கள் நமக்கு அதிர்ச்சியூட்டுகின்றன.
வால்பாறை
வால்பாறை பகுதி நான்கு பக்கமும் மலைக்காடுகள் சூழ்ந்த பகுதி. ஒருபக்கம் ஆனைமலை புலிகள் சரணாலய காடுகள். இன்னொரு பக்கம் இரவிக்குளம் தேசிய பூங்கா. வால்பாறையின் மேலே பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம், வளச்சல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என நான்கு பக்கமும் காடுகள் சூழ நடுவில் அமைந்திருக்கிறது. இந்த நான்கு காடுகளும் யானைகளின் முக்கிய வாழ்விடங்களாகவும் அவற்றிற்கு தேவையான உணவினை வழங்குபவையாகவும் உள்ளன.
காட்டுயானைகள் இந்தக் காடுகளில் இருந்து மற்ற காட்டிற்குள் செல்வதாக இருந்தால் வால்பாறையின் பிரதான தேயிலைத் தோட்டங்களை கடந்தே செல்ல வேண்டியதாயிருக்கிறது. இதை மனதில் வைத்து 1920களில் வால்பாறை பகுதியில் தேயிலை தோட்டங்களை உருவாக்கும் போதே பிரிட்டிஷ் அரசு ’துண்டுச் சோலைகள்’ எனப்படும் வனப்பகுதிகளை வால்பாறையில் அமைத்தது. துண்டுச் சோலைகள் என்பது தேயிலை தோட்டங்களுக்கு நடுவே பெரிய அளவிலான வனப்பகுதிகளை வனவிலங்குகளுக்காக விட்டுவைப்பது. இதன் மூலம் யானைகள் மட்டுமல்லாது இன்னபிற விலங்குகளும் தன் பாதையிலிருந்து விலகாமல் இந்தத் துண்டுச் சோலைகளின் வழியாக ஒரு காட்டிலிருந்து மற்றொரு காட்டிற்கு இடையூறின்றிப் பயணிக்கும.
இன்றோ இந்த துண்டுச் சோலைகள் அழிந்து அல்லது அழிக்கப்பட்டு துண்டு துண்டாக அங்கொன்றும் இங்கொன்றுமாக எஞ்சி நிற்கின்றன. என்னதான் மனிதர்கள் வனத்தினை அழித்திருந்தாலும் யானைகள் இப்போதும் அந்தத் துண்டாகிப் போன சோலைகளை பயன்படுத்தியே நகர்கின்றன. அதுவும் மக்கள் நடமாட்டமில்லாத இரவு நேரங்களில் மட்டுமே. எப்போதாவது பகலில் எஸ்டேட்கள் வழியாக போகும்போதுதான் பிரச்சினையே. இதை காணுகிற மக்கள் கோபம் கொண்டு வெடிவைப்பதும், தாரை தப்பட்டைகள் கொண்டு ஒலி எழுப்பி விரட்டுவதும் தொடர்கிறது. மக்களின் இந்த விநோதப் போக்கினால் எரிச்சலடையும் யானைகள்தான் வன்முறையில் இறங்குகின்றன.
“இங்கே. காட்டு யானைகளைவிட பழக்கப்படுத்தப்பட்ட வளர்ப்பு யானைகள்தான் அதிகம் வளர்க்க முடியாமலும் முதுமையிலும் அவற்றை காட்டில் விட்டுவிடுவதான் பிரச்சினை., வீட்டு உணவை உண்டு வளர்ந்த இவை எஸ்டேட்டுகளுக்குள் புகுந்து அருகாமை வீடுகளையும், சத்துணவு கூடங்களையும் தாக்குகின்றன. தாக்குதல் நடத்துகிற யானைகளில் பலதும் வீட்டின் சமையலறையை குறி வைப்பதை உணரலாம், இதற்கு ஒரே வழி இந்த வளர்ப்பு யானைகளை முகாம்களில் வைத்து பரமாரிப்பதே’’ என்கிறார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக வால்பாறையின் தனியார் எஸ்டேட் ஒன்றில் பணிபுரியும் டேவிட்.
மேட்டுப்பாளையம்
வாழைத் தோப்புகளும் தென்னந்தோப்புகளும் அடர்ந்து கிடக்கின்றன மேட்டுப்பாளையத்தில். இங்கு சிறுமுகை தொடங்கி சத்தியமங்கலம் வரை யானைகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகள். இந்தக் காடுகளுக்கு நடுவேதான் பல நூறு கிராமங்கள் உள்ளன. இங்கே விவசாயமும் நடைபெற்று வருகின்றன. இதுபோக இந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்த பெருவாரியான மரங்கள் வெட்டப்பட்டு இன்று வெறும் ஃபயர் வுட் எனப்படும் விறகுக்கான முட்செடிவகை மரங்களே நிறைந்துள்ளன. இந்த மரங்களை அடுப்பெரிக்க மனிதர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். வெகு தொலைவிலிருந்து பயணித்து வரும் யானைகள் பசியாற இவை ஒரு சதவீதம் கூட உதவாது. பசியோடும் தாகத்தோடும் வருகிற காட்டு யானைகள் காட்டில் உணவு கிடைக்காததால் அருகில் உள்ள வாழைத்தோப்புகளைக் குறிவைக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் கட்டப்பட்ட ஒரு பள்ளிக்கு இயற்கை விரும்பிகளிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அந்தப் பள்ளி யானைகளின் வழித்தடத்தினில் இருப்பதால் பிரச்சினை உண்டாகும் எனப் போராடியும் அப்பள்ளி கட்டப்பட்டது. ஆனால் இன்று, யானைகளின் வழித்தடத்தில் பள்ளி இருப்பதால் அவை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயணித்து அடுத்த காட்டை அடைய வேண்டியதாயிருப்பதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர்
இதுதவிர மேட்டுப்பாளையத்திலிருந்து சத்தி செல்லும் சாலை முழுக்க வனப்பகுதிக்கு மிக அருகிலேயே ரியல் எஸ்டேட் தொழிலும் கொடிக்கட்டி பறப்பதை காண முடிந்தது.
சிறுவாணி
சிறுவாணி ஆற்றையொட்டியுள்ள மலைக்கிராமங்கள் பலவும் இந்த யானைத் தாக்குதல்களுக்கு தொடர்ந்து ஆளாகிவருகின்றன. இங்கே யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து மோட்டார்களையும் மின்இணைப்புகளையும் உடைத்து நொறுக்கிவிடுகின்றன. என்ன காரணம் என உள்ளூர் வாசிகளிடம் விசாரித்தால், அண்மைக்கால ஆக்கிரமிப்புகளே காரணம் என்கின்றனர். மேலும் கல்லூரிகள், ஆசிரமங்கள், கோவில்கள், சுற்றுலாப் பயணிகள் என யானைகள் தங்கள் பாதைகளை தொடர்ந்து மாற்றிக் கொள்வதற்கான காரணங்கள் நீளுகின்றன. அதுவும் அண்மைக்காலங்களில் அங்கே உருவாகி வரும் புதிய கட்டிடங்களும் அதற்காக போடப்படும் மின்வேலிகளும் யானைகளின் திசையை மாற்றிவிடுவதால், அவை வயலுக்குள் புகுந்துவிட காரணமாக உள்ளன என்கின்றனர் இந்தப் பகுதி மக்கள்.
மேட்டுப்பாளையம் பகுதியைப்போலவே இங்கேயும் ரியல் எஸ்டேட் தொழில் கொடிக்கட்டி பறக்கிறது. காட்டுப்பகுதிக்கு மிக அருகில் வீட்டுமனைகள் விற்பனை கன ஜோராக நடக்கிறது.
நீலகிரி மாவட்ட கிராமங்கள்
நீலகிரி மாவட்டத்தில் பவானிசாகர், மசினகுடி, சீகூர், சிங்காரா, கோத்தகிரி, கூடலூர், முதுமலை, கோரக்குந்தா, மோயார் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகம். அதிலும் மசினகுடியை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுயானைகளை எங்கும் காணலாம். அப்பகுதியைச் சுற்றிலும் அடர்ந்த காட்டுப் பகுதியும் புல்வெளிகளும் நிறைந்து காணப்படுகின்றன. இந்தக் காட்டுப் பகுதிகளில் ஆயிரக்கணக்கில் பசுக்களும், ஆடுகளும், எருமைகளும் எந்நேரமும் மேய்ந்து கொண்டே இருக்கின்றன. இது வனப்பகுதியிலிருக்கிற புற்களின் அளவினை குறைத்து விடுவதால் அந்தக் காட்டில் வாழும் மான்கள், காட்டெருமைகளோடு புற்களுக்காக யானைகளும் போட்டி போட வேண்டியதாய் இருப்பதாக வனத்துறையினர் கவலைப்படுகின்றனர். அதிக உணவுத் தேவை கொண்ட யானைகள் இதை சமாளிக்க விவசாய பகுதிக்குள் புகுந்துவிடுகின்றன என்கின்றனர்.
தோலாம்பாளையம் மற்றும் ஆனைகட்டி
தோலாம்பாளையம் முழுக்க நிறைய வாழைத்தோப்புகளும் கரும்புத்தோட்டங்களையும் பார்க்க முடிந்தது. தோட்டத்தினை சுற்றி மின்சார வேலி அமைத்துள்ளனர். இதனால், மின்வேலிகளில் சிக்கி யானைகளும் வேறு விலங்குகளும் இறந்து போவதும் உண்டு. இங்கே யானைகள் வர காரணமாக சொல்லப்படுவது யானைக்கு வாழையும், கரும்பும் மிகப்பிடிக்கும். தன் பாதையில் அவை இலவசமாக கிடைத்தால் அது உண்ணத்தான் செய்யும். இது தனியார் தோட்டம் இதை உண்ணக்கூடாது என்று யானைக்கு தெரியுமா எனச் சிரிக்கிறார் ஆனைகட்டி அருகே தோட்டம் வைத்திருக்கும் ராமர்.
இப்படி ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு காரணங்கள். இவை தவிர மேலும் சில காரணங்களும் உண்டு! காடுகளில் இயற்கையாய் உண்டாகாமல் மனிதர்களின் தவறான நடவடிக்கைகளால் உண்டாகும் காட்டுத்தீ. காட்டில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் விட்டு செல்லுகிற நெருப்பு மிச்சங்களும், தீக்குச்சிகளும், அணைக்காமல் வீசப்படுகிற சிகரெட் துண்டுகளும் பல ஹெக்டேர் அளவு காட்டினை அழித்து யானைகள் மட்டுமல்லாது சிறிய உயிர்களின் வாழ்விடங்களை நாசம் செய்தும் விடுகின்றன.
மனிதர்களைபோலவே விலங்குகளுக்கும் உப்பு அவசியமான ஒன்றாக இருக்கிறது. யானைகளும் உப்புச்சுவைக்கு விதிவிலக்கல்ல.. காட்டில் இயற்கையிலேயே உப்பு மண்ணிலிருந்து கிடைத்து வந்தாலும், பருவநிலை மாற்றங்களால் அது குறைந்து போகிறது.. உப்புக்காகவும் யானைகள் மனிதர்கள் வாழும் பகுதிகளை நோக்கி நகர்வது தவிர்க்க முடியாததாய் உள்ளது. அதற்கு நல்ல உதாரணம் வால்பாறை பகுதிகளில் வீடுகளை தாக்கும் யானைகள் முதலில் உண்பது உப்பைதான்!
இதுதவிர யானைகள் குறித்த போதிய அறிவின்றி, அவற்றை துன்புறுத்தி துரத்துவதும் தொடர்கிறது. கற்களால் அடிப்பது. தீப்பந்தங்களை வீசுவது, யானையின் மீதே வெடிகளை வீசுவது எனப் பல டார்ச்சர்கள்.. குட்டிகளோடு வரும் யானைகளை விரட்டுகிறேன் பேர்வழியென அவற்றை கோபப்படுத்துகின்றனர். இதனால், தன் குட்டிகளைப் பாதுகாக்க வேறுவழியின்றி அவை வன்முறையில் ஈடுபடுகின்றன.
“பெரிய நிறுவனங்கள் காடுகளில் தங்கள் கல்லூரிகளைக் கட்டுவது, சிலர் ஆசிரமங்களை நிர்மாணிப்பது, ரிசார்ட்கள் அமைப்பது, வீடுகள் கட்டுவது, விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள அரியவகை மரங்களை வெட்டுவது முதலான நடவடிக்கைகளை தவிர்த்தாலே யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தவிர்க்க முடியும்” என்கிறார் வனக் காவலர் ஒருவர்.
மசினகுடியிலேயே பிறந்து தினமும் காட்டு யானைகளை பார்த்து வளர்ந்த கணேஷின் கருத்து முக்கியமானதாக இருக்கிறது “எந்தக் காட்டு யானையும் நம் வீட்டிற்கோ நம் நிலத்திற்கோ வருவதில்லை. நாம்தான் யானைகளின் காட்டில், அதனுடைய இருப்பிடத்தில் வசிக்கிறோம், விவசாயம் செய்து சம்பாதிக்கிறோம், சுற்றுலா போகிறோம், வனப்பகுதியை அழிக்கிறோம். இதனை மனிதர்கள் உணரவேண்டும்! காட்டுயானைகளுக்கு எந்த தொந்தரவும் தராமல் வாழ்ந்தாலே போதும்.. இந்த பிரச்சினையே இருக்காது.’’ என்கிறார்.
இதனிடையே, யானைகள் ஊருக்குள் நுழைவதைக் கண்காணிக்கவும் தடுக்கவும் தொழில்நுட்பத்தையும் வனத்துறையினர் பயன்படுத்தத் தீர்மானித்துள்ளனர். இதன் முதல்கட்டமாக, பெரியநாயக்கன் பாளையம் வனப்பகுதியிலிருந்து ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை கண்காணிக்க அவற்றிற்கு ரேடியோ காலர் கருவி பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தீர்வு என்ன?
முகம்மது அலி – யானைகள் குறித்த ஆராய்ச்சியாளர்
“ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வனவிலங்குகள் மட்டுமே வாழத் தேவையான உணவும் நீரும் கிடைக்கும். ஆனால், இன்றோ வனப்பகுதிகளின் அளவு பெருமளவில் குறைந்து, விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இது உணவு மற்றும் நீருக்கான தட்டுப்பாட்டினை உருவாக்கியுள்ளது. இதனை தடுக்க இனிமேல் வனப்பகுதிகளில் புதிய கட்டிடங்கள் அமைவதையும் குடியிருப்புகள் உண்டாவதையும் தடுக்க வேண்டும். ரிசர்வ் காடுகளில் உள்ள மக்களையும் பெரிய நிறுவனங்களையும் வேறு இடங்களில் குடியமர்த்தி, அந்த பகுதிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியோடு மீண்டும் காடுகளாக மாற்றலாம். இது வனவிலங்குகளுக்கான வாழ்விடத்தின் பரப்பினை அதிகரிக்கும். இது யானைகளும் மற்ற காட்டுவிலங்குகளும் மக்கள் வாழும் பகுதிகளுக்கு வருவதை பெருமளவில் தடுக்கும் என்பது நிச்சயம்”
லதானந்த் – விருதுபெற்ற வனத்துறை அலுவலர்.
“1992லிருந்து இந்தியா முழுக்க இருக்கிற காட்டுயானைகளின் பாதுகாப்புக்காக ‘பிராஜக்ட் எலிபென்ட்’ என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் யானைகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகின்றன. காட்டுத்தீயை அணைப்பதற்காக தொடர்ந்து கண்காணிப்பு, அதுகுறித்த தகவல் தருபவர்களுக்கு பரிசு என புதிய முறைகளை கையாண்டு அதனை தடுத்து வருகிறோம். காட்டுக்குள் குடிநீர் ஆதாரங்களை பெருக்குதல், மூட்டை மூட்டையாக உப்பு கொட்டி வைத்தல், யானைகளின் வழித்தடங்கள் குறித்த விழிப்புணர்வை மலைக்கிராம விவசாயிகளிடம் ஏற்படுத்துதல், முக்கியமாக வேட்டையாடுபவர்களையும் வனத்தினை பாழாக்குகிறவர்களையும் தடுத்தல் என தொடர்ந்து வனத்துறை செயல்பட்டுவருகிறது. இவைதவிர காட்டுயானைகளை பிடித்து அதன் கழுத்தில் டிரான்ஸ்மிட்டர்களை இணைத்து காட்டுக்குள் விடுவதன் மூலமாக செயற்கைக்கோள் உதவியுடன் அதன் வழித்தடங்களையும் கண்டறிகிறோம். இது நல்ல பலனையும் அளித்தே வருகிறது.”
ஆனந்த் – நேச்சர் கன்சர்வேஷன் பவுன்டேஷன் – யானைகள் ஆராய்ச்சியாளர்
“வால்பாறைப்பகுதியில் 220 சதுர கி.மீட்டர் அளவுக்கு தேயிலை தோட்டங்கள்தான். பிரிட்டிஷ் காலத்தில் இங்கே 30 சதவிகிதம் துண்டுசோலைகள் இருந்தன. இன்று அது வெகுவாக குறைந்துள்ளது. வனத்துறையும் எஸ்டேட் உரிமையாளர்களும் இணைந்து வால்பாறைக்கு நடுவே பாய்கிற நடுவார் சோலயார் ஆற்றின் இரண்டு பக்கமும் பத்து அல்லது இருபது மீட்டர் அளவுக்கு காடுகளை உருவாக்கினால் கூட போதுமானது. அதற்காக, வனத்துறையும் எஸ்டேட் உரிமையாளர்களும் இணைந்து செயல்பட வேண்டியதாயிருக்கும். தற்போது எங்களுடைய அமைப்பின் மூலமாக யானைகள் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம். அதோடு எஸ்எம்எஸ் மூலமாகவும் யானைகள் இருக்கிற பகுதிகளை மக்களிடம் சொல்வதன் மூலம் உயிரிழப்புகளை தவிர்த்தும் வருகிறோம்”
காளிதாஸ் – ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு
“விவசாயிகளுடைய அறியாமையே பல நேரங்களில் யானைகளுக்கும் மனிதர்களுக்குமான பிரச்சினைகளில் முடிகின்றன. அதனால், யானைகள் குறித்த மூட நம்பிக்கைகளைத் தகர்த்து அறிவியல் பூர்வமாக அவர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதுதவிர வாழை, கரும்பு தவிர்த்து மாற்றுப் பயிர்களை பயிரிடவும் அவர்களுக்கு கற்றுத் தரவேண்டும். யானைகள் விவசாயநிலத்தினும் புகுந்துவிட்டால் அவற்றை சமாளிக்கவும் அவர்களை தயார்செய்ய வேண்டும்”
ஆதார உயிரினம் யானை (KEY STONE SPECIES)
யானையை வனவிலங்குகள் ஆராய்ச்சியாளர்கள் ஆதார உயிரினம் என்று அழைக்கின்றனர். தான் வாழுகிற இடத்தினை எந்த ஒரு விலங்கு மாற்றியமைக்கிறதோ அதை அப்படி அழைப்பது வழக்கம். அதாவது அவை மரங்களை உடைத்துப்போட்டும், புதர்களை மிதித்து அழித்தும், பிடுங்கியும் குறிப்பிட்ட சில வனப்பகுதிகளை புல்வெளிகளாக மாற்றுகின்றன. இதனால், பல உயிரினங்களுக்கு உணவோடு வாழ ஏற்ற இடம் உருவாகிறது. இறந்த யானையை அழிந்துவரும் பறவையினமான பிணந்தின்னிக் கழுகுகள், நரி, கழுதைப்புலி, செந்தாய், பூச்சிகள், நுண்ணியிரிகள் உண்கின்றன. இது பல்லுயிர் பெருக்கத்திற்கு வழிவகுக்கிறது. யானையின் சாணத்தில் ஜீரணிக்கப்படாத உணவு துணுக்குள், விதைகள் அணில், வௌவால், வண்டு, பூச்சிகள் என பல விலங்குகளுக்கும் உணவாகிறது. வறட்சிகாலத்தில் யானைகள் நதிக்கரையோரம் தோண்டுகிற ஊற்றுக்குழிகள் மற்ற விலங்குகளின் தாகத்தை தணிக்கிறது.
போலீஸ் யானை!
முதுமலை யானைகள் முகாமில் ஒவ்வொரு யானைக்கும் ஒவ்வொரு பாகன்கள். பாகன்களை மாவுத்து என்றே அழைக்கின்றனர். லாரி டிரைவருக்கு ஒரு க்ளீனர் போல ஒவ்வொரு மாவுத்துக்கும் ஒவ்வொரு காவடி! யானையை குளிப்பாட்டுவதில் தொடங்கி அதற்கு சாப்பாடு தயார் செய்வது வரை எல்லாமே காவடிகளின் வேலை. யானையை கட்டுப்படுத்துவது அதற்கு உணவூட்டுவது அதை கவனமாக பார்த்துக்கொள்வது மாவுத்தின் வேலை.
ஒரு காலத்தில் பெரிய மரங்களை தூக்கிச்செல்லவும் சுமைகளை ஏற்றிச் செல்லவும் இந்த யானைகள் பயன்படுத்தப்பட்டாலும் அண்மைக்காலங்களில் இவை கும்கியாக மட்டுமே பயன்படுகின்றனர். அதாவது, கிராமங்களில் நுழைந்துவிட்ட யானைகளைக் திரும்பவும் விரட்டி காட்டுக்குள் அனுப்பி வைக்கும் டியூட்டி. நம்மூரு போலீஸ் மாதிரி. இந்ததப் போலீஸ் யானைகளுக்குத்தான் கும்கி என்று பெயர். முதுமலை சரணாலயத்தில் இருக்கிற இந்த போலீஸ் யானைகளுக்கு டியூட்டி காடுகளுக்குள்தான். வேட்டைத் தடுப்பு காவலர்களோடு காட்டுக்குள் ரோந்து சுற்றும். எல்லைதாண்டும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தும். டியூட்டி நேரம் போக மற்ற நேரங்களில் ஓய்வு மட்டும்தான்.
மாவுத்துகள் ‘குக்கா புக்கா’ என்று ஏதோ ஒரு விநோத மொழியில் யானைகளோடு எப்போதும் பேசிக் கொண்டேயிருக்கின்றனர். அந்த மொழி குறித்து ஆர்வத்துடன் கேட்டோம்.
“இதுங்களா, உருது, மலையாளம், தமிழ்னு குறிப்பிட்டு இதானு சொல்லமுடியாத அளவுக்கு நிறைய பாஷைகள் கலந்த பாஷைங்க இது. பரம்பரையா இதை கத்துக்குறோம். காவடிங்களுக்கு கத்துக் குடுக்கறோம்’’ என்கின்றனர். யானை தன் பாகன் சொல்வதை மட்டுமே கேட்டு நடக்கின்றன. மற்றவர்களுக்கு பெப்பேதான்!
“இங்கே இருக்கிற ஒவ்வொரு யானையும் எங்களுக்கு நண்பர்களைப்போல. அதனால் இவங்கள யானைனு சொல்லவே மாட்டோம்... பேர் சொல்லிதான் அழைப்போம். உலகில் யானைகளை விடவும் மனிதர்களுக்கு நெருக்கமான அன்பை பகிர்ந்துகொள்கிற விலங்கு எதுவுமே கிடையாது!’’ என அடித்துச்சொல்கிறார் வன அலுவலர் மூர்த்தி!
(நன்றி புதியதலைமுறை)