14 June 2011
வியாசர்பாடி கபாலி!
அண்மையில் வியாசர்பாடியில் ஒரு பேட்டிக்காக சில கால்பந்தாட்ட வீரர்களை சந்திக்க வேண்டியிருந்தது. அதற்காக அதிகாலை 5 மணிக்கே சென்றுவிட்டிருந்தேன். வரவேண்டியவர்கள் வர தாமதமானதால் டீக்கடை வாசல் ஒன்றில் காத்திருந்தேன். உள்ளே போய் ஒரு டீயை வாங்கிவிட்டு அங்கிருந்து நகர பின்னால் நின்றுகொண்டிருந்த ஆஜானுபாகுவான ஒரு உருவத்தின் மீது மோதிவிட்டேன். அதில் அவர் சரிய.. என் டீயெல்லாம் கொட்டிவிட்டது. நல்ல வேளை அவர் சட்டையில் படவில்லை. ஆனால் சரிந்தவர் விழுந்தேவிட்டார்.
சினிமாக்களில் பார்த்திருக்கிறேன். வியாசர்பாடியென்பது ரவுடிகளின் ஊர். அங்கே வாழ்கிறவர்கள் எல்லோருமே ரவுடிகள். அவர்கள் எப்போதும் கையில் பொருளோடு (பொருளின் பொருளென்னவென்றால் ஆயுதம்) அலைந்துகொண்டிருக்கிறவர்கள். அந்த ஆளும் அதைப்போலவே இருந்தான். சிகப்பு நிறகண்களில் கோபம் கொப்பளிக்க என்னைப் பார்த்தான். நான் அவனை பார்த்தேன்! அவனும் நோக்கினான் நானும் நோக்கினேன்!
எனக்கு பயத்தில் கைகளில் லேசான நடுக்கம், நான் பத்திரிகைகளில் படித்தவரை பல கொலைகளும் அதிகாலையில்தான் நடக்கின்றன. அவனுடைய பார்வையும் அதை உறுதி செய்வதாகவே இருந்தது. இரவெல்லாம் குடித்திருப்பான் போல நாற்றம் குடலை பிரட்டியது. இன்னமும் அவன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். இந்த முறை உற்று பார்த்துக்கொண்டிருந்தான். கருவிழி குதித்துவிடும் போல இருந்தது. நான் அங்கிருந்து நகர்ந்து பக்கத்திலிருந்து பெட்டிக்கடையில் சிகரட் வாங்குகிற பாணியில் அவனை தவிர்த்துவிட்டு எஸ்ஸாக முடிவெடுத்தேன். ஆனால் அவனோ என்னை பின்தொடர்ந்து வந்து பார்த்துக்கொண்டேயிருந்தான். சும்மாவே வேர்க்கிற சென்னையில் இந்த நிலையிலும் ஒருவனுக்கு வேர்க்காவிட்டால் அவன் மனிதனே கிடையாதில்லையா..
சட்டையெல்லாம் நனைகிற அளவுக்கு வேர்த்துக்கொட்டியிருந்தது. அவனும் அதற்கேற்ப என்னை நெருங்கி வந்து நின்றான். ஆனால் பேசவில்லை. பார்த்துக்கொண்டேயிருந்தான். கண்களில் போதையும் கோபமும் ஆக்ரோஷமும்.. மவனே இன்னைக்கு செத்தடா.. செத்துப்போனா யாரு நம்ம வீட்டுக்கு போன் போட்டு சொல்லுவா.. இன்சூரன்ஸ் கிடைக்குமா.. கத்தில நெஞ்சுல குத்தினா உடனே சாவமா? பேசமா போலீஸ்க்கு போன் பண்ணிரலாமா? நிறைய கேள்விகளை நினைத்தாலும், அந்த ஆளை திரும்பி பார்க்கவும் பயமாகத்தான் இருந்தது.
துஷ்டனை கண்டால் தூரவிலகு என பாட்டி சொல்லிக்கொடுத்ததெல்லாம் நினைவுக்கு வந்து தொலைத்தது. ஒடிவிடலாம் என உத்தேசித்தேன். வேறு வழியில்லை நமக்கு தெரிந்த கராத்தே குங்பூ வித்தைகளை பயன்படுத்தி , கோபுடோ கிருஷ்ணமூர்த்தி சன்டிவியில் சொல்லிக்கொடுத்த தற்காப்பு கலைகளை பயன்படுத்தி அவனிடமிருந்து எப்படி தப்பிக்கலாம் என சிந்தித்தேன். ரொம்ப காமெடியா இருக்கு பாஸ் என அசரீரியாக ஒரு குரல் மனதிற்குள் ஒலித்தது.
அவன் இப்போது என் முதுகிற்கு மிக அருகில் நின்றுகொண்டிருந்தான். நெஞ்சம் படபடவென அடித்துக்கொண்டிருந்தது. லேசான உதறல். அடிவயிற்றில் புளிச்ச கரைசல்! அவன் என் தோளை பிடித்தான். ‘’எச்சூஸ்மீ பாஸ்’’ என்றான்.
‘’சாரி பாஸ்.. தெர்யாமே மோதிட்டேன்.. தப்பா நென்ச்சிகலியே’’ என்றான். பயமும் பதட்டமும் மனது முழுக்க இருந்தாலும் முகத்தை சிரித்த மாதிரி வைத்துக்கொண்டு ‘’அதுக்கென்ன பாஸ் பரவால்ல பாஸ்.. பிரச்சனையில்ல பாஸ்’’ என்றேன். ஆனால் அந்த மனிதரோ முரட்டுத்தனமாக மூஞ்சை வைத்துக்கொண்டு ‘’பாஸ் இல்ல பாஸ்.. உங்கள பார்த்தா பட்ச்சவர் மாரி இருக்கு.. போதை கொஞ்சூம் ஜாஸ்தி’’ என்று விடாமல் மன்னிப்புக்கேட்டுக்கொண்டேயிருந்தார். மன்னிக்காவிட்டாலும் அடிவாங்குவேனோ என்கிற அச்சம் இப்போது!
‘’சரிங்க பாஸ்.. மன்னிச்சிட்டேன். ஓக்கேவா’’ என்று கைகளை நீட்டினேன்.
அவரு என் கையை பிடித்து அழுத்திப்பிடித்து... ‘’பாஸ் லவ்ப்பெயிலியர் பாஸ்.. அதான் ஓவராயிச்சி.. வரீங்களா ஒரு கட்டிங் சாப்டுவோம்’’ என்றவர் என் கையை பிடித்து இழுக்கவும் தொடங்கினார். அவருடைய முரட்டுத்தனமான அன்பை என்ன சொல்லி தவிர்ப்பதென்பதே புரியவில்லை.
‘’அய்ய்யோ அதெல்லாம் வேண்டாம் சார், நான் இன்னும் டிபன் கூட சாப்பிடல.. காலைல அஞ்சுமணிக்கு யாராச்சும் தண்ணி அடிப்பாங்களா, வெரி பேட்’’ என்றேன்.
அருகிலிருந்து சந்தில் நான்குபேர் அதில் ஒருவர் பெண் ஒரு ஃபுல் பாட்டிலை நடுவில் வைத்து ரவுண்டு கட்டி அடித்துக்கொண்டிருந்தனர். பக்கத்தில் கஞ்சா வாசனையும் கமகமத்தத்து. பக் என்றிருந்தது. ‘’பாஸ் இன்னா பாஸ், உங்கள இட்ச்சி அசிங்கப்பட்த்திட்டேன்..ப்ளீஸ் வாங்க’’’ என்றார். நல்ல வேளையாக டீக்கடைக்குள்தான் அமர்ந்தோம். எதுவும் சொல்லாமல் அமைதியாய் சூடான டீயை உறிஞ்சி குடித்துக்கொண்டிருந்தேன்.
அவரோ தன் சோகமான உருக்கமான காதல் கதையை சொல்ல தொடங்கிவிட்டார். ஐந்தரை மணிக்கு காதல்கதையா.. டேய் ஏன்டா எங்கிருந்துடா வரீங்க என நினைத்தாலும் அவனுடைய கதையை கேட்காவிட்டால் அடிவிழ நேரிடும் என்கிற பயம். ‘’ச்சொல்லுங்க பாஸ்’’ என்றேன் எரிச்சலோடு!
‘’சார் ஜமுனானு ஒரு பொண்ணு’’
‘’பையனுக்குலாம் அப்படி பேர் வைக்கமாட்டாங்க மேல சொல்லுங்க’’
‘’இல்ல சார், ஜமுனானு ஒரு அழகான பொண்ணு’’
‘’சார் ஜமுனா அழகா இல்லையானு நாங்கதான் முடிவுபண்ணனும்.. ஹாஹாஹா’’
என்று கலாய்த்துவிட்டதாக நினைத்து சிரித்தேன். அவரோ சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு
‘’சார், இன்னாசார்..இப்படிலாம் பேசறீங்க.. நான் ஜமுனானு ஒரு பொண்ண இன்னாமாரி லவ்பண்ணேன் தெரியுமா’’ என்று சொல்லும் போதே கண்கள் கலங்கியிருந்தன..
நானோ ‘’தெரியாதே’’ என்று கிகிகிகி என சிரித்தேன்.
ஆனால் இம்முறை அவர் முறைத்தார். அவருடைய முகம் பற்றி எரிவதைப்போல இருந்தது. இந்த முறை தப்பிக்க முடியாது என்பது மட்டும் புரிந்தது. அவருடைய கண்கள் சிகப்பாகி கருஞ்சிவப்பாகி.. பல்லையெல்லாம் கடித்துக்கொண்டு... தோழர் உனக்கு இன்னைக்கு நேரம் சரியில்லையென நானே எனக்கே சொல்லிக்கொண்டேன்! ஆனா கடைசிவரைக்கும் பேட்டிக்கு வர சொன்னவய்ங்க மட்டும் வரவேயில்ல.. தீவிரவாதிகள் உருவாவதில்லை.. உருவாக்கப்படுகிறார்கள் என்று ஏதோ படத்தின் கிளைமாக்ஸில் போடுவாங்க இல்லையா.. அதுமாதிரி...
பின்குறிப்பு – இதற்கு பிறகு நடந்ததை சொன்னால் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். அதனால் இந்தக்கட்டுரை இத்துடன் முடிவடைகிறது நன்றி வணக்கம்.