Pages

04 May 2011

வானம்




தெலுங்கில் வெளியான வேதம் படத்தை பார்த்துவிட்டு சில இரவுகளை தூக்கமின்றி கழித்திருக்கிறேன். அற்புதமான திரைப்படம் அது. உங்களுக்குள் பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணிவிடக்கூடிய அருமையான திரைக்கதை! சிரிப்பு,துக்கம்,கோபம்,ஆர்வம் என படம் முழுக்க வெவ்வேறு உணர்வுகளை நம்மையும் அறியாமல் ஏற்படுத்தும்.

வெவ்வேறு தளங்களில் இயங்கும் ஐந்து கதைகள். ஒரு குறிப்பிட்ட சம்பவம்(கிளைமாக்ஸில்) ஐந்துகதைகளுக்குமான முடிவாக இருக்கும். இதைப்போல அந்தக்காலத்திலேயே முருகன் அருள்,பெருமாள் மகிமை,தேவியின் திருவிளையாடல் மாதிரியான படங்கள் வெளியாகியிருக்கின்றன.

ஷகிலா நடித்த பெரும்பாலான பிட்டுப்படங்களும் இப்படித்தான். உதாரணத்திற்கு நவகன்னிகள் என்னும் படத்தில் ஒன்பது இளம் கன்னிகளின் தனித்தனிக்கதைகள் இறுதியில் ஷகிலாவின் திருவிளையாடலோடு முடிவதாக அமைக்கப்பட்டிருக்கும்.

ஆன்மிகமல்லாத பிட்டுகள் இல்லாத இதுமாதிரி படங்களில் இதுவே நான் பார்க்கும் முதல் படம். மலையாளத்தில் வெளியான கேரள கஃபே திரைப்படமும் கிட்டத்தட்ட இதே போல்தான் என்றாலும் அந்த படத்தில் எல்லா கதைகளும் தனித்து இயங்கும். வேதம் படத்தில் ஐந்து கதைகளும் தனித்தனியாக இயங்கினாலும் இறுதியில் ஆறுகள் அடையும் கடல் போல கிளைமாக்ஸ். இந்தப் படத்தின் ஒவ்வொரு கதையும் தனித்தனியாக பிரித்தோமானால் அற்புதமான சிறுகதைகள். உயிரை உலுக்கும் சக்திமிக்க வசனங்கள் என பட்டையை கிளப்பும்.

ஒரு படத்தில் ஆயிரம் பேரை அடிக்கிற ஹீரோ அடுத்தபடத்தில் அதைவிட அதிகமாக பத்தாயிரம் பேரையாவது அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் மசாலா மணம் மாறாத தெலுகு திரைப்பட உலகிலிருந்து இப்படியொரு அற்புதமான படமா என பிரமித்து போனதுண்டு! நடிக்கவே தெரியாத மஞ்சு மனோஜ், பரபர அல்லு அர்ஜூன் என இருவர் கூட்டணியில் இத்திரைப்படம் தெலுங்கில் சக்கைபோடு போட்டது.

இவ்வளவு நல்ல படம் தமிழில் வெளியாகிறது என்பதை தெரிந்து கொண்ட போது மிகவும் மகிழ்ந்தேன். தமிழில் சிம்பு நடிக்கப்போகிறார் என்பதை அறிந்ததுமே அந்த மகிழ்ச்சி புஸ்ஸாகி புஸ்வானமாகியது. எப்பேர்ப்பட்ட நல்ல படத்தினையும் தன் அபார திறமையால் மொக்கையாக்குகிற திறமை சிம்புவிற்கு மட்டுமே வாய்த்துள்ளது. அதிலும் இப்படத்தில் அவர் சிம்பு கிடையாது.. யங் சூப்பர் ஸ்டார் எஸ்டிஆர். டைட்டிலிலேயே அலப்பறை பண்ணுகிறவர் படத்திலும் பண்ணாமாலா இருக்கப்போகிறார்!




வானம் படம் முழுக்க சிம்புவின் அட்டகாசம்தான். முகம் மட்டும் அளவுக்கதிகமாக உப்பலாகி.. உதடுகள் வீங்கி பார்க்கவே பரிதாபமாக இருக்கிறார். முகத்திலிருந்த மென்மையான குழந்தைத்தனம் சுத்தமாக மிஸ்ஸிங். அதுவுமில்லாமல் , தன் இயல்பிலேயே துடிப்பான துருதுரு இளைஞரான அல்லு அர்ஜூனுக்கு (தெலுங்கு பதிப்பில் நாயகன்) கட்டைக்குரல் , அல்ட்ரா மாடர்ன் பாடி லாங்குவேஜ் சிம்பு நிச்சயம் மாற்று கிடையாது. அதிலும் சிம்பு அழும் காட்சிகளில் குழந்தைகள் கூட சிரிக்கத்தொடங்கிவிடுகின்றன. அழும்போது பயபுள்ள அப்படியே அவிங்கப்பா சாடை!

படம் முழுக்க சில பாடல்களை பாடுகிறார். ஓடுகிறார். ஏனோதானோவென நடித்திருக்கிறார்! விண்ணைத்தாண்டிவருவாயாவே பரவாவல்ல பாஸ்! (சென்னை முழுக்க சிம்பு தனக்குத்தானே எஸ்டிஆர் யங் சூப்பர் ஸ்டார் என போஸ்டர் அடித்து அலும்பு வேறு செய்திருக்கிறார்! அவருக்கு போட்டியாக பரத்தும் தன் சொந்தகாசில் போஸ்டர் அடித்திருப்பது வரலாற்றில் ஆவணப்படுத்தபடவேண்டிய செய்தி)

அனுஷ்கா ஒருவாரம்தான் கால்ஷீட் கொடுத்திருப்பார் போல! தெலுங்குபடத்தின் காட்சிகளையே டப் செய்து உபயோகித்துள்ளனர். கொஞ்சமும் தமிழுக்கு ஒட்டவேயில்லை. தமிழுக்கேற்றபடி கொஞ்சம் மாற்றியிருக்கலாம். அதிலும் அந்த விபச்சார விடுதி பாடலுக்கான பாடல்வரிகள் சகிக்கவில்லை ரகம்.

சின்னதளபதி என்று தன்னை அடைமொழியிட்டு அழைத்துக்கொள்ளுகிற பரத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பாவம் அவர் கேரக்டரை வேண்டுமென்றே திட்டமிட்டு டம்மி பண்ணிருக்கிறார்கள். அவரும் அதற்கேற்ப முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் ஜடம் போல நடித்திருப்பது பெருமைக்கு பெருமை சேர்க்கிறது. இவர்கள் மூவரும் படம் முழுக்க
நம்மை பாடாய் படுத்த படத்தில் பிரகாஷ் ராஜும் சரண்யாவும் ஆறுதல் அளிக்கின்றனர்.

இசை யுவன்ஷங்கர் ராஜாவாம்.. எவன்டி உன்னை பெத்தான் மற்றும் ஒப்பனிங் பாடல் (என்ன எழவு பாடறாய்ங்கன்னே புரியல்ல) இரண்டுமே இரைச்சல். காது வலி. அந்த பாடல்களை காட்சிப்படுத்திய விதம் கண்வலி. படத்தில் டைட்டில் போடும் போது ஒரு பாடல் ஒலிக்கிறது. டைட்டில் முடிந்த மறுவிநாடி இன்னொரு பாடல் தொடங்குகிறது. தமிழ்சினிமாவின் கடைக்கோடி தொழிலாளிகூட இப்படி ஒரு தவறை செய்யமாட்டான்! சிம்புவின் யோசனையாக இருக்கலாம்!

இப்படம் பேசுகிற அரசியலை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும். அதிலும் இஸ்லாமியர்களை இவ்வளவு இணக்கமாகம் மனிதநேயத்துடனும் அண்மைக்கால தமிழ்சினிமா காட்டியதில்லை. அதற்காக இயக்குனருக்கு பாராட்டு. தீவிரவாதிகள் என்கிறவர்கள் கைகளில் துப்பாக்கி ஏந்திய படி சுற்றிக்கொண்டிருப்பதில்லை, அது நமக்குள்ளே இருப்பது.. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது. அரசாக இருந்தாலும் அப்பாவி மக்களின் மீது ஆதிக்கம் செலுத்தினால் அதுவும் தீவிரவாத அரசுதான் என்று ஆணித்தரமாக ஒரு செய்தியை சொல்லுகிறது இப்படம்.

இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, அரவாணிகள், கொத்தடிமைகள்,விபச்சாரிகள்,சேரி பையன்கள் என இப்படத்தின் இயக்குனர் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு கதாபாத்திரமுமே மிக முக்கியமானவை. சில வசனங்கள் மிக மிக வலிமையானவை. விளிம்பு நிலை மக்களின் பிரச்சனைகளை நேரடியாக பேசக்கூடியவை.

அவ்வளவு அருமையான கவித்துவமான வேதம் ஏன் வானமாக மாறியபோது பிடிக்காமல் போனது என்பதை யோசிக்கிறேன். சிம்புவின் ஹீரோயிசம், தப்புந்தவறுமான நடிகர் தேர்வு! கொஞ்சமும் எடுபடாத இசை. ஒற்றை ஹீரோவுக்காக திரைக்கதையில் செய்த மாற்றங்கள். இதற்கெல்லாம் மேல் தெலுங்கில் படமெடுத்த இயக்குனருக்கு தமிழ் தெரியாதென நினைக்கிறேன்! மற்றபடி வானம் பார்த்து கடுப்பாவதை விட வேதம் பார்த்து சிலிர்க்கலாம்.