30 April 2011
விலைமதிப்பில்லாத புன்னகை
அவசரமாக பைக்கில் போய்க்கொண்டிருக்கும் போதுதான், திடீரென செல்போனில் அந்த அழைப்பு வரும். வண்டியை ஒரங்கட்டி நிறுத்தி போனை எடுத்தால்.. இனிமை மாதிரியான குரலில் எச்சூஸ்மீ சார் நாங்க ப்ளாப்ளா பாங்கல்ருந்து பேசறோம், ஒரு அருமையான இன்வெஸ்ட்மென்ட் ப்ளான் இருக்கு அதை பத்தி ஃபைவ் மினிட்ஸ் பேசட்டுமா என ஆரம்பிப்பார். நமக்கு வருகிற வெறியில் கைக்கெட்டும் தூரத்தில் டிராபிக்கை ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கும் கான்ஸ்டபிளை தூக்கி போட்டு நாலு சாத்து சாத்தவேண்டும் போல இருக்கும். இது கடந்த பத்தாண்டுகளாக பல்கி பெருகி வளர்ந்து கிளைகள் பரப்பி சிறிய நகரங்களில் கூட ஒரு நாளைக்கு இதுமாதிரி பத்து போனாவது வரவில்லையென்றால்தான் ஆச்சர்யம்தான்.
முன்னெல்லாம் வெறும் கிரெடிட் கார்ட் அல்லது பர்சனல் லோன் கார் லோன் இன்சூரன்ஸ் மாதிரியான விஷயங்களுக்கு மட்டுமே போன் போட்டு மார்க்கெட்டிங் செய்தவர்கள், இப்போதெல்லாம் ‘சார் சென்னைக்கு பக்கத்துல செங்கல்பட்டு தாண்டி நாப்பது கிலோமீட்டர்ல சூப்பரான நிலம் இருக்கு, ரேட் ரொம்பக்கம்மி’ என கூவி கூவி விற்கின்றனர். நாங்க ப்ளாப்ளா டிரஸ்ட்லருந்து பேசறோம் குழந்தைகள் படிப்புக்கு உதவுங்க சார் என்று டொனேஷன் கேட்கின்றனர். ஏதாவது ஒரு மேட்ரிமோனியிலிருந்து அழைத்து உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என கேட்கிற அழைப்புகளும் உண்டு. இவர்களுக்காகவாவது இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
இந்த பெண்கள் மேல் எனக்கு ஆறேழு ஆண்டுகளுக்கு முன் கடும் கோபம் இருந்தது. மார்க்கெட்டிங்கில் பணியாற்றியவன் என்பதால் ஒரு விற்பனையாளன் தன் வாடிக்கையாளரை போனில் அழைத்து பேசும் போது என்னவெல்லாம் செய்ய வேண்டும், அதன் படிநிலையென்ன என்பதையே ஒரு நாள் முழுக்க ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டு கற்றுகொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த பெண்களுக்கு அந்த அடிப்படை எதுவுமே தெரியாமல் சுடுகாட்டில் இருந்தாலும் போன் போட்டு நம்நிலை அறியாது கடகடவென பேசி டெலிமார்க்கெட் பண்ணுவது நாராசமானது.
ஒரு நாள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பியது போன். எடுத்து பேசினேன். நிஜமாகவே அழகான குரலொன்று பேசியது. சிட்டி பேங்கிலிருந்து பேசுவதாகவும் உங்களுக்கு கிரடிட் கார்டு வேண்டுமா என்றும் கேட்டது. தூக்கம் போச்சே என்கிற கோபமிருந்தாலும் போனை எடுத்ததும் பதட்டமான குரலில் நல்ல வேளை போன் பண்ணீங்க.. இல்லாட்டி செத்தே போயிருப்பேன்.. இப்பதான் கடன் தொல்லை தாங்க முடியாம சாகலாம்னு தூக்குல தொங்க போனேன்.. என்று நான் பேச, அந்த பெண் கிக்கீகிக்கீ யென சிரிக்கத்தொடங்கிவிட்டாள்! அவளுக்கு நான் நக்கலடிப்பது எப்படி புரிந்தது என்பது இன்றும் தெரியாத ஒன்று. அந்த சிரிப்பு வசீகரித்தது. அந்த பெண் போனை வைத்துவிட்டாள். இருந்தாலும் அந்த சிரிப்பு புதுமையாக இருந்தது. மார்க்கெட்டிங்கில் இது போல நக்கலடிக்கும் ஜோக்கடிக்கும் வாடிக்கையாளரிடம் அதிகமாக சிரிக்க மாட்டேன்! அது டீலிங்கை கெடுத்துவிடும் , பேமண்ட்டில் விளையாடும் என்பார் முன்னாள் மேனேஜர்.
தொடர்ந்து இது போல வருகிற கால்களுக்கு விதவிதமாக பதில் சொல்லத்தொடங்கினேன். ‘’என்னது சிட்டிபேங்க்லருந்தா கூப்பிடறீங்க.. நான்தான்ம்மா சிட்டிபேங்க் ரிஜனல் மேனேஜர்’’ என்பேன். ‘’ஆமா வினோத்தான் பேசறேன்.. ஆனா நான் செத்துப்போயி நாலு வருஷமாச்சு.. இப்போ ஆவியா சுத்திகிட்டு இருக்கேன், என்ன வேணும் சொல்லுங்க’’ என்பேன். அப்போது தனிமையில் சிறிய அறையில் வசித்த என்னுடைய மொக்கை ஜோக்குகளுக்கும் சிரித்து மகிழ ஆளிருக்கே என நினைப்பேன். சில பெண்கள் நண்பர்களை போல பழகவும் தொடங்கினர். அவர்களோடு நிறைய உரையாடுவேன். அவர்களுடைய அலுவலகத்திற்கே சென்று சந்திப்பேன். அந்த சமயத்தில்தான் இந்த பெண்கள் படும்பாடு புரியத்தொடங்கியது.
நமக்கு வருகிற இந்த மார்க்கெட்டிங் அழைப்புகள் ஏதோ மிகப்பெரிய கால்சென்டரிலிருந்தோ மெத்தப்படித்த பெண்களிடமிருந்தோ வருபவையல்ல. பத்துக்குபத்து அறை, இரண்டு லேன்ட்லைன் போன், இரண்டு பெண்கள், மூன்று மார்க்கெடிங் பையன்கள் இவ்வளவுதான் இந்த மார்க்கெடிங் அலுவலகங்களின் அளவு. அதிலும் இந்த பெண்களெல்லாம் பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பு படித்தவர்கள் அல்லது பட்டப்படிப்பு படித்து சரியான வேலைகிடைக்காதவர்கள் வரை இருக்க கூடும். சம்பளமாக பெரிய தொகை கிடையாது அதிமாக கொடுத்தால் ஐந்தாயிரம்தான்! ஐந்தாயிரமே மிகமிக அதிகம். அதற்கு மேல் வாடிக்கையாளரை பிடிப்பதை பொறுத்து வேறுபடும்.
இவர்களெல்லாருக்குமே தினமும் நூறிலிருந்து நூற்றம்பது அழைப்புகளுக்கு மேல் டார்கெட் இருக்கும். அதற்காக எண்களை பெற பெரிய போராட்டமே நடத்துவதை பார்த்திருக்கிறேன். சில சமயங்களில் ரேண்டமாக வெவ்வேறு எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசுவதையும் பார்த்திருக்கிறேன். எல்லா வாடிக்கையாளருமே ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆபாச வார்த்தைகளால் அர்ச்சிப்பவர்கள் ஒரு பக்கமென்றால் இன்னொரு புறமோ ஆபாசமாக பேசுகிறவர்களும் உண்டு. இன்னும் சிலர் ஒரு நாள் வரீயா இன்சூரன்ஸ் போடறேன் என்றெல்லாம் கேட்பார்களாம்! அதை சொல்லும்போதே கதறி அழுகிற நண்பர்கள் எனக்கிருந்தனர். இதில் வாடிக்கையாளர் பெண்களாக இருந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசமாக இருக்குமாம். தகாத வார்த்தைகளை நாசூக்காக பேசியே கொல்வபவர்கள் உண்டு.
வெளியே போனில் அழைத்து பேசும்போதுதான் இந்த நிலையென்றால் டார்கெட் பிரஷர் அதிகமாகும்போது அறைக்குள் அழைத்து திட்டி தீர்க்கிற டீம் லீடர்களின் அத்துமீறலும் அரங்கேறுமாம். சிலர் சரிம்மா இன்சூரன்ஸ் போட்டுக்கறேன்.. லோன் வாங்கிக்கறேன் என்று கூறுவதோடு எல்லாமே ஓக்கே ஆகி லோனுக்கான விண்ணப்பங்களில் கையெழுத்து போடப்போகும்போது இந்த பெண்களை நேரில் வரச்சொல்லி தவறாக நடந்துகொள்ள முயல்வதும் உண்டு.
இவர்களுக்கு மார்க்கெட்டிங் நுணுக்கங்கள் கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. அதற்குபதிலாக போன்ல கூப்பிட்டு பேசும்போது நல்லா இனிக்க இனிக்க பேசுங்க.. உங்களுக்கு கல்யாணமாகிடுச்சானு கேளுங்க , உங்க வாய்ஸ் நல்லாருக்குனு சொல்லுங்க என்பது மாதிரியான மோசமான பாடங்களே உண்டு! இந்த பெண்களில் தொன்னூறு சதவீதம் பேர் வறுமையான சூழலில் பிறந்து வளர்ந்து ஓரளவு சொல்லிக்கொள்ளும்படியான இதுமாதிரியான வேலைக்கு வருகிறவர்கள். எதையும் சகித்துக்கொள்ளுபவர்களாகவும் , இதையெல்லாம் எதிர்கொண்டு வாழ பழகிக்கொண்டவர்களாகவும் இருப்பதை பார்த்திருக்கிறேன். அது அதிர்ச்சியாக இருந்தாலும்.. ஆச்சர்யம்தான்.
இப்படியெல்லாம் பிரச்சனைகளை சந்திக்கிற இப்பெண்கள் எப்போதாவது சிலர் மொக்கை ஜோக்குகளை பகிர்ந்துகொண்டாலும் ஒரு நன்றியோடு கனிவாக போனை கட் செய்துவிடுவதாலும் புன்னகைப்பதில் ஆச்சர்யம் இல்லை. புன்னகை விலைமதிப்பற்றதல்லவா? இதோ இப்போதும் எனக்கு தினமும் பத்து முதல் பதினைந்துக்கும் மேல் இதுமாதிரியான அழைப்புகள் வருகின்றன. அசௌகர்யமான நேரங்களில் வரும்போது ஒரு நன்றிம்மா இப்போதைக்கு வேணாம்மா என கட் செய்துவிடுவேன். அல்லது ஏதாவது ஒரு மொக்கை ஜோக்கை உதிர்த்து அப்பெண்ணின் சிரிய சிரிப்பொலியோடு போனை கட்செய்வதுமுண்டு. அவர்களும் நம்மைப்போல மனிதர்கள்தானே!