கையில் நூறு ரூபாயை எடுத்துக்கொண்டு கைநிறைய புத்தகங்கள் வாங்க புத்தக கண்காட்சிக்கு கிளம்பினேன். கண்காட்சி வாசலிலே எப்போதும் காணுகிற பெரிய பெரிய பிளக்ஸ் பேனர்கள் இம்முறை இல்லை. அந்த பேனர்களும் ஒளிவிளக்குகளும்தான் மக்களுக்கு இங்கே இப்படி ஒரு திருவிழா நடக்கிறது.. குழந்தை குட்டிகளோடு வந்து சேருங்க என அறிவிக்க உதவுபவை.
ஆனால் இம்முறை அது மிஸ்ஸிங். சென்ற ஆண்டில் நகர் முழுக்க ஆங்காங்கே விளம்பர தட்டிகள் வைத்து அறிவித்தது போல இந்தாண்டில் ஏன் செய்யவில்லை?. டிவியிலும் ரேடியோவிலும் விளம்பரங்கள் வருகிறதென்றே நினைக்கிறேன்.
உள்ளே நுழைய எப்போதும் போல பார்க்கிங் வசதிகள் மரத்தடிகளின் இருளான பகுதிகளில் அமைத்திருந்தனர். அங்கே இரண்டு ஹாலஜன் விளக்குகள் வைத்தால் ஆர்காட்டார் என்ன கோபித்து கொள்ளவா போகிறார். பத்திரிகையாளன் என்பதால் தெனாவெட்டாக டோக்கன் போடாமல் வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே நுழைந்தேன்.
டிக்கட் கவுண்டர்களில் கூட்டமில்லை. எனக்கு இலவச பாஸ் இருப்பதால் டிக்கட் எடுக்காமல் உள்ளே நுழைந்தேன். முதுகில் சோத்துமூட்டையை மாட்டிக்கொண்டு அதற்கு மேல் குளிர்கோட் அணிந்திருந்தேன். உள்ளே நுழையும் போதே காவலர்கள் என்னை நிறுத்தி பொறுப்புடன் முதுகில் என்ன.. என்று சோதித்தனர். சார் நான் பிரஸ் என்று சொல்லியும் தொடர்ந்து சோதித்தனர். உங்க நன்மைக்குத்தானே சார்.. என்று புன்னகைத்தார் ஒரு காவலர். உண்மைதான் என நினைத்தபடி உள்ளே நுழைய.. ஒன்றாம் எண் கடையில் முக்தா சீனிவாசன் அமர்ந்திருந்தார். ரொம்ப வயசாகிருச்சு பெரியவருக்கு! அவருடைய சில புத்தகங்களை புரட்டிப்பார்த்து விட்டு நகர்ந்தேன். வெறுங்கையோடு அவரது கடையை விட்டு வெளியேற என்னைப்பார்த்து புன்னகைத்தார். நானும் மறுபுன்னகைத்தேன்.
இரண்டாம் எண் கடைதான் இந்த ஆண்டின் சூப்பர் ஸ்டார். தினத்தந்தியின் வரலாற்று சுவடுகள் புத்தகம் விற்கிற தினத்தந்தியின் கடை. நான் கடையில் நுழையும் போதே மணி ஆறு.. அப்போதே அன்றைய தினம் விற்பனைக்காக எடுத்து வந்த 300 காப்பிகளும் விற்று தீர்ந்துவிட்டது என கூறினர். இந்த புத்தக கண்காட்சியில் நிச்சயமாக பத்தாயிரம் பிரதிகள் விற்பனையாகும் என்றார் கடைக்காரர். அனைவரும் கட்டாயம் வாங்கிப்படிக்க வேண்டிய பொக்கிஷம். அட்டைப்போட்ட குண்டு புத்தகம். விலை 300. நான் வாங்கவில்லை.
மூன்றாம் எண் , நான்காம் எண் கடைகளில் எந்த சுவாரஸ்யமும் இல்லை என்பதால் அதையெல்லாம் ஸ்கிப் செய்து.. நேரடியாக நடுவில் இருந்த உயிர்மை ஸ்டாலுக்கு ஆவலோடு சென்றேன். சாருவும் மனுஷ்யபுத்திரனும் இருந்தனர். அருகில் கையை கட்டிக்கொண்டு நர்சிம் கவிஞரைப்போலவே போஸ் கொடுத்தபடி நின்று கொண்டிருந்தார். எழுத்தாளர் நிலாரசிகனும் நின்றுகொண்டிருந்தார். சாரு , பெங்களூரில் எழுத்தாளர்களை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பது குறித்து விளக்கினார். பத்திரிகைகள் எழுத்தாளர்கள் கண்டுகொள்வதில்லை என்றார். உயிர்மையில் சுஜாதாபுத்தகங்கள் சக்கை போடு போடுவதாக கவுண்டரில் இருந்தவர் கூறினார்.
இதற்குள்ளாகவே நேரம் ஏழரையாகிவிட்டபடியால் நேரடியாக அங்கிருந்து கிழக்கிற்கு நகர்ந்தேன். ஜெயமோகனின் உலோகமும், பாராவின் காஷ்மீரும் சக்கை போடு போடுவதாக தெரிய வந்தது. எங்கு காணினும் நண்பரடா.. எத்தனை சிறிய உலகமடா..என்னும் என்னுடைய பாட்டுக்கிணங்க.. நிறைய நண்பர்களை சந்திக்க முடிந்தது. உண்மையில் புத்தக காட்சியில் இத்தனை நண்பர்களை சந்திப்பது மிகப்பெரிய வன்கொடுமை. ஒரு கடையையும் உருப்படியாக பார்க்க முடிவதில்லை. அவர்களோடு பேசவும் அரட்டை அடிக்கவுமே முழுமையாக நேரம் செலவாகிறது. இனியாவது நண்பர்கள் கண்ணிலே படாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
இதற்கு நடுவில் அய்ய்யோ நான் ஏதும் புக்கு வாங்கலையே என்று பதறி எதையாவது வாங்கியே ஆகவேண்டும் அதுவும் கைநிறைய வாங்கவேண்டும் என்கிற வேட்கையோடு அங்கிருந்து ஒரு சுற்று கிளம்பினேன்.
எல்லா புத்தகங்களும் 50ரூபாய்க்கு மேலேயே விலைவைத்து விற்கப்படுகின்றன. ஆனாலும் விடாமுயற்சியோடும் தன்னம்பிக்கையோடும் தேடியதில் பூம்புகார் பதிப்பகம் சிக்கியது. நான் தேடிக்கொண்டிருந்த சில நல்ல நூல்கள் மிகக்குறைந்த விலையில் கிடைத்தன. பழையனூர் நீலி கதை ஐந்து ரூபாய்க்கு கிடைத்தது. புஷ்பா தங்கதுரையின் சிறைக்கதைகள் பதினைந்து ரூபாய்க்கு கிடைத்தது. மதன காமராஜன் கதைகள் 35ரூபாய்க்கு கிடைத்தது. மொத்தமாக அள்ளிப்போட்டுக்கொண்டு பில் போட்டால் இன்னும் பணம் மிச்சமிருந்தது. எதையாவது வாங்கவேண்டுமே என்று தேடி தேடி களைத்து இறுதியில் கண்காட்சியின் வலது கடைக்கோடியில் அமைந்திருந்த ஜூஸ் கடையில் ஆப்பிள் ஜூஸ் குடித்தேன். நல்ல ஜூஸ் அனைவரும் கட்டாயம் குடிக்க வேண்டியவைகளின் பட்டியலில் இடம்பெற வேண்டிய ஒன்று.
தரையில் கட்டைகளை போட்டு அரங்கம் அமைத்திருந்தனர். அதன் மீது நடப்பது ஏதோ விண்வெளியில் நடப்பதை போன்ற உணர்வை கொடுத்தது. எம்பி எம்பி குதித்து குதித்து நடக்க வேண்டியிருப்பதால் குதிங்கால் வலி அதிகமாக இருந்தது. பல இடங்களில் கட்டைகளின் மேல் அமைக்கப்பட்டிருந்த விரிப்புகள் மடங்கியும் குவிந்தும் கிடந்தன. கடைகளை பார்த்துக்கொண்டே நடக்கிறவர்கள் அதில் சிக்கி கீழே விழும் வாய்ப்புண்டு. தண்ணீரைத்தேடி நாய் பேயாக அலைந்தாலும் கிடைக்கவில்லை. புத்தகம் விற்பவர்கள் ஒரு பாட்டில் தண்ணீர் வைத்தால் நல்லது.. தாகசாந்திக்காகவாவது உங்கள் கடைப்பக்கம் வாசகர்கள் வர நேரிடலாம்.
மற்றபடி வெளியே கருத்தரங்கில் யார் யாரோ பேசிக்கொண்டிருந்தனர். அதையும் பலர் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். கண்காட்சி அமைப்பாளர்கள் புத்தக கண்காட்சி நடைபெறும் நாட்களில் அதுகுறித்த சிறப்பு செய்தித்தாள் ஒன்றை வெளியிடலாம். அதில் கண்காட்சியில் முக்கியமான புத்தகங்கள் குறித்த அறிமுகம், முந்தைய தினம் பேசிய பேச்சாளர்களின் பேச்சுகள், எழுத்தாளர்களின் சிறப்பு கட்டுரைகள் என நிறைய வெளியிட்டு அதை டிக்கட்டுடன் இலவசமாக கொடுக்க முன்வரலாம். இதன் மூலம் நிறைய விளம்பர வருவாயும் கிடைக்கும். பொங்கல் வரை தினமும் செல்ல திட்டமிட்டுள்ளேன். ஆண்டவன் அருள் புரியட்டும். புரிந்தால் அதைப்பற்றி தினமும் எழுதுவேன்.