இந்த ஆண்டு படங்கள் இல்லாததால் இது சென்ற ஆண்டு எடுத்த படம். |
மாண்புமிகு எழுத்தாளரான சாருநிவேதிதாவை உயிர்மை அரங்கில் சந்திக்கலாம். தன்னுடைய வாசகர்களின் எல்லா கேள்விகளுக்கும் இன்முகத்தோடு டான் டான் என்று பதிலளிப்பதோடு அவருடைய புத்தகங்கள் மட்டுமல்லாது எந்த புத்தகத்தை நீட்டினாலும் ஆட்டோகிராப்பும் போட்டுத்தருகிறார். இப்படி ஒரு உயர்ந்த உள்ளம் எந்த தமிழ் எழுத்தாளருக்கும் கிடையாது. சரசம் சல்லாபம் சாமியார் புத்தகம் பத்தாயிரம் காப்பியாவது விற்குமா என்கிற ஏக்கத்துடன் அமர்ந்திருப்பதையும் காணமுடியும். அவருக்கு மிக அருகிலேயே எப்போதும் உயிர்மை அதிபர் மனுஷ்யபுத்திரனும் அமர்ந்திருப்பார். அவரிடம் எந்த கேள்விகேட்டாலும் எடக்கு மடக்காக பதில் சொல்லி சிரிக்க வைத்துவிடுகிறார். பழக இனிமையான மனிதர் அனைவரும் நிச்சயம் சந்திக்க வேண்டியவரும் கூட. எனக்கு ஏனோ உயிர்மை அரங்கில் சுஜாதா உலவுவதைப்போன்ற பிரமை.. (அவருடைய ஆவியாகவும் இருக்கலாம்)
ஆவி என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. ஆவியுலகோடு அதிக தொடர்பில் இருக்கும் விக்கிரவாண்டி ரவிசந்திரன் நினைவுக்கு வந்துவிடுகிறார். அவருடைய கடை கிழக்குப்பதிப்பகத்திற்கு அடுத்த கடை. அவரை அந்தக்கடையில் சந்திக்க முடியும். சில நிமிடங்கள் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அளவளாவினேன்.. பேய்கள் குறித்து நிறைய பேசினார். பயமாக இருந்தது விலகிவிட்டேன். உங்களுக்கு பேய்களைப்பற்றி தெரிந்து கொள்ளுகிற ஆவலிருந்தால் கட்டாயம் இவரை சந்திக்கலாம்.
இலக்கிய அஞ்சாநெஞ்சன் ஜெமோ தன்னுடைய படைபரிவாரங்களோடு கம்பீரமாக ஆங்காங்கே சுற்றிக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. அவர் முன்னால் நடக்க கை கட்டிகொண்டு அவர் பின்னே நடந்து செல்லுகிற அவருடைய வாசகர்களை பார்க்கும்போது ஏதோ படத்தில் வடிவேலு முன்னால் நடந்து வர பின்னால் லாலா லாலலி லாலா என்று பாடியபடி அவருடைய நண்பர்கள் வருவார்கள். காலில் தீப்பொறியெல்லாம் பறக்கும். ஜெமோ கால்களை உன்னிப்பாக கவனித்தேன் தீப்பொறி இல்லை.
புத்தக திருவிழாவில் ஞானியின் ஞானபானு பதிப்பகத்தில் விற்கப்படும் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான புத்தகங்களை காட்டிலும் அங்கே அனுதினமும் நடைபெறுகிற வாக்கெடுப்பு சென்னை பிரசித்தம். பல்லாண்டுகளாக உபயோக்கிற அதே உடையாத மூன்று பானைகளோடு இந்த ஆண்டும் ஞானி களமிறங்கியுள்ளார். நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் வித்தியாசமான முறையில் தேர்தல் நடந்தது. அடுத்த தேர்தலில் அதிமுக என்னாகும் என்கிற கேள்விக்கு மூன்று பதில்கள் போடவேண்டும்.
1.பிரதான எதிர்கட்சியாக இருக்கும்
2.ஆட்சியை பிடிக்கும்
3.அழிந்துவிடும் (மெல்லத்தேயும்.. பிளா பிளா ஏதோ ஒன்று)
மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துக்கொண்டிருந்தனர். இதில் இரண்டாம் எண்ணுக்கான பானை நான் பார்த்தபோதே நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. எப்போதும் பெயரும் முழு முகவரியுடன்தான் வாக்களிக்க வேண்டும் என்று ஞானி குறிப்பிடுவார். இம்முறையோ பேரும் ஊரும் போதுமென்றார். இன்னொரு ஏ4ல் நான்கு பக்க அளவுடைய மகா பெரிய கருத்துக்கணிப்பினைக் கொடுத்து அதை முழுமையாக பூர்த்தி செய்து கொடுக்கும் அனைவருக்கும் , தன்னுடைய அடுத்த அதிரடி புத்தகம் இலவசமாக அனுப்பவுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஓசி புத்தகங்களில் ஆர்வமுள்ள என்னைப்போன்ற உள்ளம் படைத்த வாசகர்கள் உடனடியாக ஞானியின் கடைக்கு விரைந்தோடவும். இச்சலுகை விண்ணப்பங்கள் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே.
உலகம்தான் அம்மையப்பன், அம்மையப்பன்தான் உலகம் என்பதுபோல புத்தக சந்தைதான் பாராகவன் , பாராகவன்தான் புத்தக சந்தை என்றும் சொல்லலாம். எழுத்தாளர் பா.ராகவனை எப்போதும் கிழக்குப்பதிப்பகத்தின் பின்புறமிருக்கிற குட்டிச்சந்தில் தினமும் சந்திக்கமுடியும். எந்த நேரத்திலும் தன் வாசகர்களை சந்திக்கும் ஆவல் மேலோங்க அங்கேயே வெறுந்தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருப்பார். (இங்கே மீண்டும் ஒரு முறை சொல்லிவிடுகிறேன்.. பாரா என்றால் எளிமை , எளிமை என்றால் பாரா.. )
அவரை சந்திக்க செல்கிறவர்கள் பவ்யமாகவோ பவ்யமில்லாமலோ அவருக்கு மிக அருகில் வலதோ இடதோ ஏதோ ஒரு பக்கத்தில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டால் போதும், இந்த ஆண்டு புத்தக சந்தையில் என்ன புத்தகங்கள் நன்றாக விற்கிறது, யாருடைய புத்தகங்கள் வாங்கலாம்.. குறைந்த விலையில் கிடைக்கும் தரமான புத்தகங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். அவரோடு ஒரு மணிநேரம் உரையாடினால் புத்தக சந்தையை சுற்றாமலேயே மொத்த தகவலும் விரல் நுனியில் கிடைத்துவிடும். இப்படி மற்றவருடைய புத்தகங்கள் குறித்தும் எழுதுவது குறித்தும் விஷயஞானங்களை பகிர்ந்து கொள்ளுகிற எழுத்தாளர்களை சமகால தமிழ்ச்சூழலில் பார்க்கவே முடியாது. அதற்கு மிகச்சரியான உதாரணம்.. எப்படி எழுதுவது என்று இரண்டு மணிநேரம் நம் வலைபதிவர் ஜாக்கி சேகருக்கே பாடம் நடத்தியது. (பழனிக்கே பஞ்சாமிர்தமா!)
இன்னும் பல எழுத்தாளர்கள் பற்றியும் பற்றாமலும் நாளை எழுதினாலும் எழுதுவேன்..
(படங்கள் உதவி - இட்லிவடை)