27 November 2010
மந்திரப்புன்னகை
சில படங்களை பிட்டு பிட்டாக பார்த்தால் அட! போட தூண்டும். “ச்சே என்ன மாதிரி சீன்ப்பா என்னமா யோசிச்சிருக்கான்பா!” என்று சொல்ல வைக்கும். ஆனால் ஒட்டு மொத்தமாக படத்தை பார்க்கும் போது ரீலருந்த பாணா காத்தாடி போல எதை நோக்கியும் நோக்காமலும் கண்டமேனிக்கு படம் காற்றில் பறக்கும். அந்த வகை படங்களில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களின் படங்கள் பல உண்டு. அதில் இன்னொன்று கரு.பழனியப்பன் நடித்து இயக்கி வெளிவந்திருக்கும் மந்திர புன்னகை.
ஏற்கனவே நாம் பார்த்துக் கடாசிய ஆளவந்தான்,குடைக்குள்மழை,குணா,காதலில் விழுந்தேன் வகையறா சைக்கோ பாணி கதைக்களம். எப்போதும் உர்ர்ரென உர்ராங்குட்டான் போல முகத்தை வைத்துக்கொண்டு திரிகிற ஹீரோ, கலகல ஹீரோயின், கொஞ்சம் காமெடி நிறைய தத்துவம் என ஒரு கதை தயார் செய்து அதில் பல நாள் தாடியோடு தானே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார் கரு.பழனியப்பன்.
முதலில் ஒன்றை சொல்லிவிடவேண்டும். கரு.பழனியப்பன் மிகச்சிறந்த இயக்குனர். அவருடைய பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தினை அண்மையில் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் பார்த்த போது அட இவ்ளோ நல்ல படத்தை எப்படி மிஸ் பண்ணினோம் என நினைக்க வைத்தவர். அவருடைய முந்தைய படமான பார்த்திபன் கனவும் இதே மாதிரியான அடடே போடவைத்த படம்தான். குடும்ப உறவுகளின் நுணுக்கமான சிக்கல்களையும் உளவியல் பிரச்சனைகளையும் மிக மென்மையாகவும் யதார்த்தமாகவும் சுவையாகவும் பந்திபோட்டு பரிமாறுவதில் கில்லாடி. ஏனோ இப்படத்தில் உலகபட காய்ச்சலோ என்னவோ சுத்தமாக கொஞ்சம் கூட உணர்ச்சியே இல்லாமல் உணர்வுபூர்வமான ஒரு சைக்கோவின் கதையை சொல்ல முனைந்திருக்கிறார்.
ஹீரோவின் பாத்திரத்தை விஸ்தரிப்பதிலேயே படத்தின் முதல்பாதி முழுக்க கடந்துவிடுகிறது. அதை டிங்கரிங் செய்ய சந்தானாத்தின் காமெடி அஸ்திரத்தை பயன்படுத்தினாலும் அது முழுமையாக எடுபடவில்லை. சந்தானம் படம் முழுக்க காமெடி என்கிற பெயரில் ஆபாச ஜோக்குகளை அள்ளி குவிக்கிறார். குறிப்பிட்ட ஆடியன்ஸிடமிருந்து கைத்தட்டுகளும் விசில் சத்தமும் பறந்தாலும் ஒட்டுமொத்தமாக அருவருப்பை உணரமுடியாமலில்லை. உலகப்படங்களில் நாம் காணும் டீடெயிலிங் காட்சிப்பூர்வமானவது. அவை காட்சிகளால் நிரம்பி வழியும். கரு.பழனியப்பனும் காட்சிகளால் நிறைய சொல்ல முனைகிறார். ஏனோ படம் முழுக்க ரொம்பி வழியும் வசனங்கள் அதை முழுவதுமாக முழுங்கி விடுகின்றன.
படத்தின் தொடக்கமே விலைமாதோடு விழித்தெழும் நாயகனோடு துவங்குகிறது. சாம்பலான சிகரெட் துண்டுகளும் பாதி குடித்த மதுகோப்பையும் அருகில் எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகமுமாக காட்சி துவங்க அடடா! கவிதை மாதிரி எடுத்துருகான்டா காட்சியனு நிமிர்ந்து உட்கார்ந்தால் நாயகன் பேச ஆரம்பிக்கிறார். பேசுகிறார். பேசுகிறார். படத்தின் கடைசி வரை நாயகன் பேசிக்கொண்டேயிருக்கிறார். சரிப்பா அவர்தான் மனநோயாளி நிறைய பேசுகிறார் தப்பில்லே! என்று நினைத்தால் படத்தின் நாயகி மீனாட்சி பேசுகிறார். சந்தானம் பேசுகிறார். தம்பி ராமையா.. பேசுகிறார்.. படத்தில் யாராவது ஒருவர் எதற்காவது வியாக்கியானம் பேச இன்னொருவர் அதற்கு கவ்ன்டர் கொடுப்பது தொடர்கிறது. அதிலும் கிளைமாக்ஸில் நாயகி காதலுக்கு கொடுக்கும் விளக்கம் விக்ரமன் ஏற்கனவே பல திரைப்படங்களின் கிளைமாக்ஸில் பேசி சலித்தவை. (காதல்ன்றது காம்ப்ளான் கிடையாது அப்படியே சாப்பிட.. ப்ளா ப்ளா டைப் வசனங்கள்)
படத்தின் ஒரே பிளஸ்.. ஆங்காங்கே தென்படும் சின்ன சின்ன சிறுகதைகள். மனைவி இப்போ எந்த வீட்டில் இருக்கிறாள் என்று தேடும் குடிகாரனின் கதை.. நாயகனின் ஃபிளாஷ்பேக்கில் வரும் அம்மாவின் தாலி... என ஆங்காங்கே கரு.பழனியப்பனின் உணர்வூப்பூர்வமான நல்ல முகம் பளிச்சிடுகிறது. அதிலும் அந்த ஃபிளாஷ் பேக் காட்சிகள் உருவாக்கப்பட்ட விதமும் அந்த கதையும் குறும்பட இயக்குனர்களுக்கு அரிச்சுவடி. வெறும் காட்சிகளால் மட்டுமே அது நகர்வது இன்னும் கூட அழகு.
படத்தின் நாயகி மீனாட்சிக்கு நல்ல தொப்புள், பெரிய மார்புகள் அருமையான இடை!. கிளைமாக்ஸில் நிறைய வசனம் பேசுகிறார். வாயாலேயே பீர்பாட்டில் திறப்பது புரட்சி! அவரை விடவும் விலைமாதாக வருகிற அந்த புதுமுக நாயகியின் நடிப்பு அதி அற்புதம். சில காட்சிகளே வந்தாலும் அசத்துகிறார். கருபழனியப்பன் இயக்குவதை மட்டுமே முழுமூச்சாக செய்யலாம். படம் முழுக்கவே அவருடைய முகத்தில் மட்டும் சுத்தமாக உணர்ச்சியே இல்லாமல் நடைபிணமாக நடித்திருக்கிறார். தமிழ்சினிமா உலகில் ஒரே ஒரு வாய்ப்புக்கிடைக்காத என்று ஏங்குகிற எண்ணிலடங்கா திறமைசாலி நடிகர்கள் இருக்க ஏனோ இவருக்கும் நடிப்பு ஆசை. இனியும் நடித்தால் தமிழ்சினிமா நிறைய இலக்கியம் படிக்கிற உலகசினிமா அறிவுள்ள திறமைசாலி இயக்குனரை இழந்துவிடுகிற அபாயமுண்டு.
மற்றபடி படத்தின் பாடல்களும், பாடல்காட்சிகளுக்கான யுக்திகளும், சமூகத்தின் மீது கோபத்துடன் சொல்லப்படுகிற கூர்மையான வசன விமர்சனங்களும் படத்தின் பிளஸ். மற்ற அனைத்துமே படத்தின் மைனஸ்தான்.
இயக்குனருக்கு இலக்கிய படமெடுக்க ஆசையிருந்திருக்கலாம். மிஷ்கின்,சேரன்,வசந்தபாலன் முதலான இயக்குனர்களுக்கு வந்திருக்கிற இலக்கிய காய்ச்சல் இவரையும் தொற்றியிருக்கக் கூடும். அதன் பாதிப்பு கரு.பழனியப்பனின் சுயத்தினை பாதித்துதிருக்கலாம். விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.