23 November 2010
நகரம் - விமர்சனம்
கத்தி எடுத்தவன் கத்தியாலதான் சாவான்! இந்த பழமொழிய கண்டுபிடிச்சவன் மட்டும் இப்போ உயிரோட இருந்திருந்தா ரொம்ப ஃபீல் பண்ணுவார். ஒன்னா ரெண்டா? எத்தினி படம்.. எண்ணவே முடியாத அளவுக்கு எச்சகச்ச படங்கள் வெளியாகியுள்ளன. அதில் இன்னொன்று நகரம்-மறுபக்கம். சுந்தர் சி பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனாரவதாரம் எடுத்துள்ளார். அவருடைய நடிகராவதாரம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வேலைக்கு ஆகவில்லை என்பது எல்.கே.ஜி குழந்தைகளுக்கு கூட தெரியும். சி சென்டர் நாயகனாகவே வலம் வந்தவர் தன்னுடைய மார்க்கெட்டை பரவலாக்க மற்றும் தக்கவைக்க நகரத்துடன் வந்துள்ளார். ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே கிட்டத்தட்ட கருதலாம்.
வாழணும்ங்கற ஆசைதான் நம்மை உயிரோட வச்சிருக்கு! சுமால் பாக்டீரியால தொடங்கி மிகப்பெரிய டைனோசர் வரைக்கும் எல்லா உயிரினத்துக்கும் தன்னோட வாரிசுதான் லட்சியம். அதே மாதிரி ஒரு லட்சியத்தோட நம்ம ஹீரோ. எந்த நேரத்துலயும் யாராவது கொன்னுருவாங்களோன்ற பயத்தோட வாழற ஒரு ரவுடி , குடும்பம் குட்டினு செட்டில் ஆக ஆசைப்படறான்! இதுதான் படத்தோட ஒன்லைன். இந்த ஒரு வரியை வைத்துக்கொண்டு நட்பு,காதல்,துரோகம்லாம் கொஞ்சம் சேர்த்து புதுமாதிரி முடிச்சுகளால் திரைக்கதை தோரணம் கட்டியிருக்கிறார் சுந்தர்.சி. இனிப்புக்கு வடிவேலு, காரத்துக்கு போஸ்வெங்கட் போதைக்கு அனுயா என கலக்கலான காக்டெயில் மசாலாவாக வந்திருக்கிறது நகரம். படம் முழுக்க தலைநகரம் படத்தின் சாயல் தெரிந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலம். சூப்பர் மசாலாவுக்கு தேவையான எல்லாமே இருந்தும் படம் பார்க்கும் போது சலிப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை.
படத்தின் முதல் பாதி முழுக்க வடிவேலுவே ஆக்கிரமித்திருக்கிறார். சில காமெடிகள் சிரிக்க வைத்தாலும், அவர் தினுசு தினுசாக அடிவாங்குவது பல இடங்களில் எரிச்சலூட்டுகிறாது. சுந்தர்சி காம்பினேஷனில் கிரி,வின்னர்,தலைநகரம் படங்களின் அளவுக்கு காமெடி எடுபடவில்லை என்று உறுதியாக சொல்லலாம். சமயங்களில் போர் அடிப்பதை தவிர்க்க முடியவில்லை.
படத்தின் இடைவேளை வரைக்கும் வடிவேலுவை வைத்தே கதையை நகர்த்தியுள்ளனர். ஆனால் இடைவேளைக்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்னால் படம் வேகம் பிடிக்கிறது.. மெதுமெதுவாக முதல் கியர் இரண்டாம் கியர் என மாற்றி மாற்றி.. இடைவேளையின் போது படம் டாப்கியரில் பறக்கிறது. இரண்டாவது பாதி கொஞ்சமே நீளம்தான் என்றாலும் படத்தின் வேகத்திற்கு கச்சிதமாகவே இருக்கிறது.
படத்தின் நாயகன் சுந்தர்சிதான் என்றாலும்.. அவரைவிடவும் அவருடைய நண்பராக வரும் ‘மெட்டிஒலி’ போஸ் வெங்கட் அருமையாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் மொத்தமாக ஸ்கோர் செய்வது அவருடைய நடிப்புதான். கதையின் பிரதான பாத்திரமாக போனதால் முகபாவனைகளிலும் உடல்மொழியிலும் நிறைய ஸ்கோர் செய்திருக்கிறார். வாய்ப்புகள் கிடைத்தால் பெரிய நடிகராகும் வாய்ப்புண்டு. ‘அனுயா’ = அழகு, புடவையில் பளிச் என இருக்கிறார். அதற்கு மேலும் சொல்லணுமா.. வெள்ளித்திரையில் பெரிசாக காண்க!
அந்தகாலத்து புதியவார்ப்புகள் வில்லன் (ஸ்ரீனிவாசன்?) வில்லனாக நடித்திருக்கிறார். படம் முழுக்க செம்பட்டையான நீளமுடி ஸ்டன்ட் நடிகர்கள் கண்ணை உருட்டிகிட்டு அலைந்து கொண்டேயிருக்கின்றனர். ஆனால் அதிக சண்டைகள் இல்லை. ஆனால் படம் முழுக்க பத்து நிமிடத்திற்கு ஒருமுறை யாராவது ஒருவர் சர்வசாதரணமாக செத்துப்போய்க்கொண்டே இருக்கின்றனர். காமெடி காட்சியிலும் கூட இந்த சாவுகள் தொடர்கின்றன.
படத்தின் இசை தமன். பிண்ணனியில் பின்னியிருந்தாலும்.. பாடல்கள் ஒன்றும் ரசிக்கும்படியில்லை. சுந்தர்சி எதையாவது நினைத்து பார்க்கும் போதெல்லாம் படத்தின் நிறம் அழுக்குப்பச்சைக்கு மாறுவதும் மீண்டும் சகஜநிலைக்கு திரும்புவதுமாக ஏதோ ஆங்கிலப்படத்தில் பார்த்த நினைவு.. அதை இதிலும் பயன்படுத்தியுள்ளனர். மற்றபடி தலைநகரம் படத்தின் சாயல் இல்லாமல், இன்னும் கொஞ்சம் சுருக்கி கிரிஸ்பாக கொடுத்திருந்தால் ரசிக்க முடிந்திருக்கலாம். ஏனோ படத்தின் நீ....ளம்.. கொட்டாவி விடவைக்கிறது.