தீபாவளிக்காக கோவை சென்றிருந்தேன். கோவை முழுக்கவே எங்கு திரும்பினாலும் இரண்டு குழந்தைகளின் படம் போட்ட பிளக்ஸ் பேனர்களும் போஸ்டர்களும் தென்பட்டன. கண்ணீர் அஞ்சலி.. பிஞ்சுகளே.. கண்ணீர் சிந்துகிறோம், உங்களுக்காக வாடும்... என்பது மாதிரியான அஞ்சலி வாசகங்களும் காணக்கிடைத்தன. இந்துமக்கள் கட்சி தொடங்கி ஆட்டோ ஒட்டுனர் சங்கம், கவுண்டர் சங்கம்,நாம்தமிழர் என அனைவருமே போட்டிப்போட்டுக்கொண்டு போஸ்டர் ஓட்டியிருந்தனர். அய்ய்யோ நாம போஸ்டர் ஒட்டாட்டி நல்லாருக்காதோ என்று நினைத்து அவசர கதியில் சில போஸ்டர்களையும் காண முடிந்தது.
அண்மையில் ஒரு கால்டாக்ஸி டிரைவரால் கடத்தி கொடூரமாக கொல்லப்பட்ட இரண்டு குழந்தைகள் குறித்த செய்தி நாம் அறிந்ததே. கோவை முழுக்கவே இந்த இரட்டைக்கொலை பலரையும் உலுக்கி எடுத்துருக்கிறது. சென்னையில் இது மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி நிகழுவதால் இங்குள்ளவர்களுக்கு அது பெரிய பாதிப்பை உருவாக்குவதில்லை. சென்னை மக்களின் இருதயம் இரும்பால் செய்யப்பட்டது. ஆனால் கோவை மாதிரியான மிடில்கிளாஸ் மக்களின் அமைதி நகரத்தில் இந்தக்கொலை பெரிய தாக்கத்தை நிச்சயமாக ஏற்படுத்தியிருக்கிறது. கோவை மக்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள் என்பது சிலரிடம் பேசியபோதே உணர முடிந்தது.உண்மையில் தமிழகத்தில் இதுமாதிரியான கொலைகள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறதென்பதை ஜுவி,நக்கீரன் படிப்பவர்கள் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்தக்கொலைக்கு அதீத விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது வியப்பளித்தது.
காண்பவரெல்லாம் நலம் விசாரிப்பதைப்போல் அந்த குழந்தைகள் மேட்டர் தெரியுமா? பாவம்! உச்! ச்சே இப்படி பண்ணிட்டாங்களே பாவிப்பசங்க! அவனுங்களையெல்லாம் நிக்க வச்சு சுடனும்.. நடுரோட்டுல கல்லால அடிச்சு கொல்லணும்.. இவனுங்களையெல்லாம் இன்னுமா உயிரோட விட்டுவச்சிருக்காங்க.. ! மிகச்சாதரணமாக பேருந்துகளிலும் சாலையிலும் காதில் வந்துவிழுகிற வார்த்தைகள் உக்கிரமாய் இருந்தன. இதற்கு முன் கோவை குண்டுவெடிப்பு சமயத்தில் இப்படிப்பட்ட பதற்றத்தை கண்டிருக்கிறேன். எங்கு பார்த்தாலும் துலுக்கனுங்கள தூக்குல போடணும்.. அவனுங்கள வீடு பூந்து வெட்டணும்.. குத்தணும் என வெறிகொண்டு வன்முறையாய் அலைந்தவர்களை கண்டிருக்கிறேன்.
கொலையாளிகள் இருவரும் பிடிபட்டதாக போலீஸ் அறிவித்திருந்தது. விசாரணைக்கு அழைத்து செல்கையில் தப்பியோட முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார் கொலையாளிகளில் ஒருவர். கைகள் விலங்கிடப்பட்ட நிலையில் அருகிலிருந்த காவலரின் துப்பாக்கியை எடுத்து இருவரை சுட்டும் இருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது. இன்னும் அவர்மீதான குற்றங்கூட நிரூபிக்கப்படவில்லை.
நீதி கிடைத்துவிட்டதாக கோவை நண்பர் ஒருவர் காலையிலேயே போனில் அழைத்து மகிழ்ச்சியோடு பேசினார். இன்னும் சிலரிடம் பேசியபோதும் மகிழ்ச்சியாய் உணர்வதாகவும் , இப்போதுதான் திருப்தி என்றும் கூறினர். அந்தக்குழந்தைகளின் ஆன்மா இப்போதுதான் சாந்தியடைந்திருக்கும்.. அக்குழந்தைகளின் பெற்றொருக்கு இப்போதுதான் நிம்மதியாய் இருக்கும்.. என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார் நண்பர். ஆஹா கொலையாளி அழிந்தான்.. திருப்திதான். ஆனால் ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகுமா? ஒரு தவறுக்கு தண்டனையாக இன்னொரு தவறு சரியாகுமா? என அடுக்கடுக்காக கேள்விகள். கொலை திருப்தி தருமா?
நிச்சயமாக காவல்துறையின் இந்த என்கவுன்ட்டர் 'கொலை' தமிழகத்தில் பெரும்பாலோனோருக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது. தினமலரின் இணையதளத்தில் வெளியாகியுள்ள இச்செய்திக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களை படித்தாலே இது புரியும். ஒரு சோறு பதம். 500க்கும் மேல் பின்னூட்டங்கள். மக்களுக்குத்தான் எவ்வளவு மகிழ்ச்சி. கோவையில் பல இடங்களில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பத்திரிகை ஒன்றோ மனிதமிருகம் சுட்டுக்கொலை என செய்தி வெளியிடுகிறது.
குற்றம் நிரூபிக்கப்படாமலேயே ஒருவனை போலீஸ் என்கவுன்ட்டர் என்ற பெயரில் கொலை செய்திருக்கிறது. அவன் மனிதமிருகமாம்! பத்திரிகை செய்தி ஒன்று சான்று கொடுக்கிறது. அவன் அந்தக்குழந்தைகளை கொல்லாதவனாக இருந்தால்? யாரோ ஒரு அப்பாவியாக இருந்தால்?
குழந்தைகளை கொன்றது மிகப்பெரிய தவறுதான். மாபாதகம்தான். மோகன்ராஜ் செய்திருப்பது படுபாதகசெயல்தான். அவனுக்கு இரட்டை ஆயுள் தண்டணை கூட கொடுக்கலாம். ஆனால் அதை செய்தவர் யார் என்பதை கண்டறியவும், கண்டறிந்து தீர்ப்பு வழங்கவும் நீதிமன்றம் இருக்கையில் , எந்த விசாரணையுமின்றி இப்படி சுட்டுக்கொல்வது காட்டுமிராண்டித்தனமின்றி வேறேது. தமிழ்சினிமாவின் கிளைமாக்ஸ் பழிவாங்கல்களை ரசித்து கைதட்டி கொண்டாடும் அதே மனநிலையோடு வாழும் நமக்கு இது மகிழ்ச்சியை அளிக்கலாம். இதனை கைதட்டி வரவேற்கலாம். ஆனால் நாளைக்கே நீங்களும் நானுங்கூட தனிப்பட்ட விவகாரங்களுக்காக விசாரணையின்றி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்படலாம். என்கவுன்ட்டருக்கு மக்கள் ஆதரவளிப்பது எவ்வளவு ஆபத்தை அவர்களுக்கே விளைவிக்கும் என்பதை இங்கே யாரும் உணர்வதில்லை.
சமூக குற்றங்களுக்கு மரணதண்டனைகள் எப்போதும் தீர்வாகாது. அதற்கான வேரை கண்டறிந்து அதை களைவதே சிறந்தது. உண்மையில் மோகன்ராஜிற்கு தேவை நல்ல மனநல மருத்துவர். அவனை இந்த குற்றத்திற்கு தூண்டியது எது என்பதை கண்டறிந்து இன்னொரு முறை இப்படி ஒரு வக்கிரம் நடக்காமலிருக்க வேரிலேயே பிரச்சனைகளை தீர்க்க முனையவேண்டும். ஆனால் மக்களுடைய மனதில் ஒரு இன்ஸ்டன்ட் மகிழ்ச்சியை அளிப்பதன் மூலம் எதை மறைக்க முயல்கிறது தமிழக அரசு. இங்கே ஒவ்வொரு நாளும் இதுமாதிரியான ஆட்கடத்தல்களும் கொலைகளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதில் மாட்டிக்கொண்ட ஒருவனை கொன்றாகிவிட்டது. மற்றவர்கள்?
மோகன்ராஜ் அந்தக்குழந்தைகளை கடத்தி கொன்றது அக்கிரமம், வன்முறை என்றால், அவனை உயிரோடு பிடித்து என்கவுன்ட்டரில் கொன்றது மட்டும் என்ன சூரசம்ஹாரமா? இப்படி குற்றவாளிகள் அனைவரையும் பிடித்து விசாரிக்காமல் கொல்வதென்றால் நீதிமன்றம் எதற்கு? வக்கீல்களுக்கு ஷேவிங் செய்துவிடுவதற்கா?
சமூக குற்றங்கள் அனைத்திற்குமே என்கவுன்ட்டர்கள்தான் தீர்வென்றால் இங்கே யாருமே உயிரோடிருக்க முடியாது. மாட்டிக்கொண்ட ஒரு மோகன்ராஜினை என்கவுன்ட்டரில் தீர்த்துக்கட்டியாகிவிட்டது. இன்னும் விஐபிகளாகவும் மந்திரிகளாகவும் ஏன் காவல்துறையிலேயே பணியாற்றுகிற மோகன்ராஜினைவிடவும் மோசமான குற்றவாளிகளை சுதந்திரமாகத்தானே உலவ விட்டிருக்கிறோம். அவர்களை என்ன செய்துவிட்டோம்.
உதாரணத்திற்கு ஒரு குறிப்பிட்ட கட்சி ஊழல் செய்தது என்று தெரிந்தும் அடுத்தடுத்த தேர்தலில் காசு வாங்கிக்கொண்டு அவர்களுக்கே ஓட்டுப்போடுகிற மக்களின் கைகளை வெட்டி விட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?
இங்கே சமூக குற்றங்களுக்கான காரணிகள் ஆராயப்படவேண்டும். பணமும் பலமும் இருப்பவன் இங்கே எக்குற்றம் செய்தாலும் தப்பித்துவிட முடியும் என்கிற நிலையை மக்கள்தான் மாற்ற முனையவேண்டும். ஆனால் இங்கே இப்படி ஒரு இன்ஸ்டன்ட் கொலையை ஆதரித்து கொண்டாடும் மனநிலையில் அல்லவா நாம் இருக்கிறோம்! எங்கே போகிறோம் நாம்?