Pages

13 October 2010

இப்படியும் ஒரு வாரிசு

மீனாட்சி விஜயகுமார். வயது 47. தமிழ்நாடு தீயணைப்புத்துறையின் துடிப்பான வீராங்கனை. தென்கொரியாவில் நடைபெற்ற உலக தீயணைப்பு வீரர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்று திரும்பியிருக்கிறார்.

1988லிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்தாலும் இந்தியர்கள் யாருமே இதுவரை பதக்கம் பெற்றதில்லை. இந்தியாவிலிருந்து பதக்கம் பெறுகிற முதல் வீராங்கனை நம்மூர் மீனாட்சிதான்..

தீயணைப்புத்துறையில் பணியாற்றுவதென்பது சாகசமும் சேவையும் இணைந்த சவாலான வேலை. இந்தியாவில் முதன்முதலாக தீயணைப்புத்துறையில் இணைந்த பெண் அதிகாரி தமிழ்நாட்டை சேர்ந்த மீனாட்சி விஜயகுமார் என்கிற செய்தியே யாருக்கும் அதிகமாய் தெரிந்திருக்காது.

டெல்லியில் உள்ள கல்லூரியில் ஆசிரியர் வேலை. மாதாமாதம் நல்ல சம்பளம். அழகான குழந்தை. அருமையான கணவர். வேறென்ன வேண்டும்! ஆனால் மீனாட்சிக்கு ஒரு தேடல் இருந்தது. கிரண் பேடியைப்போல , அன்னை தெரசாவைப்போல மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்கிற தீராத ஆர்வம் இருந்தது. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது! அது கட்டுரையின் கடைசி வரியில்...

காக்கி உடை அணிந்து கொண்டு நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்யவேண்டும் என்பது படிக்கும் காலத்திலிருந்தே பசுமரத்தாணிபோல பதிந்து போன லட்சியம். அவருடைய தேடல் எப்போதும் அதை நோக்கியே இருந்தது.

2000ஆம் ஆண்டு வரைக்கும் இந்தியதீயணைப்புத்துறையில் பெண்களே கிடையாது. அந்த ஆண்டில்தான் இந்தியாவின் முதல் தீயணைப்பு வீராங்கனையாக மீனாட்சி தேர்ந்தெடுக்கப்பட்டார். ''ஆண்கள் மட்டுமே சவால்கள் நிறைந்த வேலைகளை செய்யமுடியும் பெண்களால் முடியாது என்கிற எண்ணத்தை மாற்ற நினைத்தேன் , மாற்றியும் காட்டினேன்'' என்று பெருமிதத்தோடு அந்த நாட்கள் குறித்து நினைவு கூர்கிறார். கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாட்டை சுனாமி தாக்கியபோது முதல் ஆளாக களத்தில் இறங்கி மீட்புப்பணிகளில் ஈடுபட்டாராம். தீயணைப்புத்துறையில் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு வயது 38!

தீயணைப்புத்துறையில் பணியாற்றுவது அவ்வளவு எளிதானதல்ல. 24 மணிநேரமும், 365 நாளும் பணியாற்ற வேண்டும். எப்போது அழைத்தாலும் உடனடியாக கிளம்பிப்போய் மக்களை காப்பாற்ற வேண்டும். உடல் உழைப்பு மிக மிக அதிகம். அதிக பயிற்சி தேவை. இதற்கெல்லாம் மேல் உயிருக்கு உத்திரவாதமே கிடையாது. விபத்துகளிலிருந்து மக்களை மீட்க களமிறங்கி தங்களுடைய இன்னுயிரை நீத்த எத்தனையோ தீயணைப்புத்துறை வீரர்களைப்பற்றி கேள்விப்பட்டிருப்போம். அப்படிப்பட்ட ஆபத்தான ஒரு பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள மீனாட்சியால் எப்படி முடிந்தது?

 13 வயதிலேயே இவருடைய தந்தை காலமாகிவிட , இவருடைய தாயார்தான் இவரையும் தங்கையையும் மிகுந்த சிரமங்களுக்கிடையே படிக்க வைத்துள்ளார். தினம் தினம் ஏதாவது பிரச்சனைகளுடனேயே வாழ்ந்து பழக்கப்பட்டதால் , அதனை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு , எப்படி அதை எதிர்கொள்வது என்கிற அந்த உத்வேகம்தான் தன்னை இப்போதும் துடிப்புடன் செயல்பட வைப்பதாகவும் கூறுகிறார்.

 ''நம்மால் முடியும், முடியாது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும், அதை நம்முடைய வயதோ , உடலோ தீர்மானிக்கக்கூடாது, எல்லாவற்றையும் நம்முடைய மனம்தான் முடிவு செய்ய வேண்டும். பெண்கள் உடல் அளவில் வலிமை குறைந்தவர்கள் என்று அறிவியல் கூறினாலும் மனதளவில் ஆண்களைவிடவும் வலிமையானவர்கள் , ஆண்களால் முடியாதவற்றையும் பெண்களால் சாதிக்க முடியும். பெண்கள் அதை உணர வேண்டும் '' என்று நம்பிக்கையூட்டுகிறார்.

குடிசைகள், சேரிகள் மற்றும் கடலோர பகுதிகள் தீயணைப்புத்துறைக்கு 24மணிநேரமும் வேலை காத்திருக்கும் வட சென்னை பகுதியில் நான்கு ஆண்டுகள் தீயணைப்புத்துறை அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். 200க்கும் மேற்பட்ட பேரிடர்களில் பங்கு கொண்டு மக்களை காத்துள்ளார். இதுவரை அவருக்கு கால்களில் மூன்று முறை விபத்து நேர்ந்து சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கார்ப்ப்பை அகற்றுதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து தீயணைப்புத்துறையில் இயங்கி வருகிறார். இத்தனை சிரமங்களுக்கு நடுவிலும் விடாமுயற்சியும் போராட்டகுணமும்தான் தன்னை இயங்க வைப்பதாக தெரிவிக்கிறார்.

இப்படி நான்கு திசையிலும் பம்பரமாக , ஒருபக்கம் விளையாட்டு இன்னொரு பக்கமோ தீயணைப்பு பணிகள் என்று சுழலும் இவருடைய குடும்பத்தினர் இவரை எப்படி பார்க்கின்றனர்?

 ''கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் எங்கள் வீட்டில் தீபாவளி கிடையாது, பொங்கல் கிடையாது, பண்டிகளைகள் எதுவுமே கிடையாது, மகன் பிறந்தநாளில் கூட அவனோடு இருக்க முடியாது.. ஆனால் அதையெல்லாம் பொறுத்துக்கொள்ளும் அன்பான கணவரும், என்னுடைய வேலையை புரிந்துகொண்டு அன்புகாட்டும் மகனுக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும். ஆணோ பெண்ணோ வீட்டில் முழு ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் யாராலும் சாதிக்கவே முடியாது. குடும்பத்தை கஷ்டப்படுத்தி நாம் சாதித்து என்ன ஆக போகுது சொல்லுங்க! வீட்டில் சமைத்துக்கொண்டிருப்பேன்... அலுவலகத்திலிருந்து அழைப்பு வரும் போட்டது போட்டபடி அப்படியே கிளம்பிவிடுவேன்.. என் கணவர் முகம் சுளிக்காமல் மீதி உணவை சமைப்பார், மகனை பார்த்துக்கொள்வார்'' என்று பெருமையாய் பேசினார். மீனாட்சியின் கணவர் விஜயகுமார் தற்போது விமான நிறுவனம் ஒன்றில் மனிதவளமேம்பாட்டு துறையில் பணியாற்றி வருகிறார்.

தென்கொரியா போட்டிகளுக்கு முன்பு விபத்தில் கால்களில் அடிபட! தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட முடியாத நிலை.. அதையும் எதிர்கொண்டு தன்னம்பிக்கையோடு வலியை பொறுத்துக்கொண்டு பயிற்சியை தொடர்ந்துள்ளார். தென்கொரியாவில் இவரோடு போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கெல்லாம் வயது 30க்கும் கீழே!

அதைப்பற்றி கூறும்போது '' அங்கே போட்டிக்கு வந்திருந்தவர்கள் அனைவருமே இளம் வீரர்கள் , ஆனால் அதைக்கண்டு நான் மலைத்துவிடவில்லை, பதற்றப்படவில்லை. சவால்கள் நம்முன் வரும்போது அதை கண்டு பயப்படாமல் எதிர்கொள்ள வேண்டும்.. சவால்கள் சமாளிப்பதற்கு அல்ல , அவை நாம் சாதிப்பதற்கான வாய்ப்பு!

அந்தப்போட்டியிலும் எப்போதும் போலவே விளையாடினேன்.. வெற்றிபெற்றேன். சிறுவயதிலிருந்தே எந்த சவாலாக இருந்தாலும் அது வெற்றியோ தோல்வியோ அதை எதிர்கொண்டு போராடிபார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் மட்டும் குறையவே இல்லை! ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெறுகிறோமா என்பதைவிட கலந்துகொண்டு முழுமையாக ஓடவேண்டும் என்பதே முக்கியம்.. அதிலும் பெண்கள் நிச்சயம் எதையும் முடியாதென்று விலகிவிடக்கூடாது.. எந்த சவாலாக இருந்தாலும் ஒரு கைபார்த்துவிடவேண்டும்'' என்று புன்னகைக்கிறார் , எளிமைக்கும் நேர்மைக்கும் பேர் போன அரசியல் தலைவர் கக்கனின் பேத்தி மீனாட்சி விஜயகுமார். நாட்டுக்காக அர்ப்பணிப்போடு உழைக்கிற இப்படிப்பட்ட வாரிசுகளும் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றனர்!

-அதிஷா

நன்றி - புதியதலைமுறை