வெள்ளிங்கிரியின் ஒவ்வொரு மலைக்கும் வித்தியாசமான பெயர்கள் உண்டு. முதல்மலையின் பெயர் வெள்ளிவிநாயகர் மலை. இப்படி ஒரு பெயர் நிச்சயம் அண்மைக்காலத்தில்தான் சூட்டப்பட்டிருக்க வேண்டும். உண்மையான பெயர் வேறாக இருக்கலாம். அதே போல மஞ்ச மலை, பூவூர் மலை, நந்தி மலை, பொள்ளாச்சிமலை, கிரிமலை, வழுக்கைபாறை மலை என்று ஏழுமலைக்கும் பெயர்கள் உண்டு. இதில் எனக்கு பிடித்தது பொள்ளாச்சி மலைதான்.
பொள்ளாச்சிமலை! வெள்ளிங்கிரி பயணத்தில் நாம் கடக்கும் ஐந்தாவது மலை. இருப்பதிலேயே யாரும் ஏறிவிடக்கூடிய ஈஸி மலை. வெறும் மண்பாதையில் வீரநடை போட்டபடி செம ஜாலியான பயணம் போகலாம். அதிக சிரமம் இருக்காது. மலைப்பாதையின் இரண்டு பக்கமும் ஆங்காங்கே சின்னதும் பெரிசுமாக சில பாறைகளும், நிறைய மூலிகை செடிகளும் மண்டிக்கிடக்கும். செடிகள் புதர்போல இருப்பதால் அதிகாலை வேளையில் பயணம் போகிறவர்கள் ஹாயாக ஆய் போக ஏற்ற இடம். ஆனால் இருட்டில் ஒதுங்கும் போது பார்த்து ஒதுங்கணும்.. உங்களுக்கு முன்னால் வேறுயாராவது நான்கு திசையிலும் போயிருக்கலாம்.. பிறகு ஆண்டி சுனையில்தான் கால் கழுவ வேண்டியதாகிவிடும்.
இதே மலையில் பல பாறைகள் இருந்தாலும், மெகா சைஸ் பாறாங்கல் ஒன்று உருட்டி வைத்த உருளைக்கிழங்கு போல் காட்சியளிக்கும். இதை பீமன் களி உருண்டை என்பார்கள். இதன் உச்சியில் ஏறி நின்று பார்த்தால் பொள்ளாச்சி நகரம் முழுதும் தெரியுமாம்! நானும் பல முறை ஏறிப் பார்த்திக்கிறேன். மலை உச்சியிலிருந்து பார்த்தால் எல்லாமே ஒன்னுதான்.. கோயம்புத்தூரென்ன பொள்ளாச்சியென்ன.. ஆனாலும் உடன் வரும் பெரிசுகள் அதோ.... அங்க மஞ்சளா ஒன்னு தெரிதுபாரு அதான் பொள்ளாச்சி.. இதோ இங்க சிகப்பா தெரியுது பாரு அதான் ஆனை மலை மாசானி அம்மனங்கோயில், அதோ அதான் பாரதியார் யுனிவர்சிட்டு என்று உதார் விடுவதுண்டு. அப்படி பொள்ளாச்சி தெரிவதாலேயே அந்த மலைக்கு பொள்ளாச்சி மலை என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்த மலையின் பாறைகள் உன்னதமானவை. இரவு வேளைகளில் படுத்து உறங்க மிக அற்புதமாக இருக்கும். ஆனால் இருட்டில் பாறை எது , புதர் எது, என கண்டறிந்து அதில் மிகச்சரியாக ஏறுவதும் உட்காருவதும் மிகமிக கடினம். எங்காவது தப்பி எடக்கு மடக்காக விழுந்தால் பாறைகளுக்கு கீழே இருக்கும் படுபயங்கரமான இருட்டு குகைகளுக்குள் விழுந்து விட நேரலாம். இந்த குகைகளுக்குள் பகலில் செல்வதே ஆபத்தானது. அதனால் போதிய நண்பர்கள் பாதுகாப்போடு , கையில் பெட்ரமாக்ஸ் லைட் வைத்திருப்பவர்கள் போகலாம். அவ்வளவு தில் இல்லாதவர்கள் எங்கும் நிற்காமல் அடுத்த மலையைப் பார்த்து நகருவது நல்லது.
பாறைகளின் மேல் ஏறி படுத்துக்கொண்டு வானத்தை பார்த்தால் எப்படி இருக்கும் தெரியுமா! மிக பிரமாண்டமான வானம்.. நமக்கு மிக அருகில் மிக மிக அருகில்.. தலைக்கு மேல் முழுக்க முழுக்க நட்சத்திரங்கள் , சில தடவைகள் நண்பர்களோடு பேசியபடி வானத்தைப் பார்த்தபடியே இரவு முழுவதையும் பொள்ளாச்சி மலையிலேயே கழித்திருக்கிறோம். கீழே வாங்கிய அன்னதான பார்சலை பிரித்து நட்சத்திர சோறு தின்பதிலும் மகிழ்ச்சி இருக்கத்தான் செய்தது.
அதுசரி அதென்ன பீமன் களியுருண்டை? இருக்கே அதுக்கும் ஒரு கதை இருக்கே! அதாவது மகாபாரத புராணத்திலே நாட்டை இழந்து ஆரண்யத்திலே அலைந்து கொண்டிருந்த பாண்டவர்களாகப்பட்டவர்களும் பாஞ்சாலியும், வெள்ளிங்கிரிக்கு அருகிலே இருக்கிற தாராபுரத்திலே சிலகாலம் வாழ்ந்தனராம், அவ்வேளையிலே வெள்ளிங்கிரி மலைக்கும் பயணம் போனதாய் கூறுகின்றனர் சான்றோர்கள். இந்த பொள்ளாச்சி மலையில் பீமன் களியுருண்டை மட்டுமல்ல, பீமன் ராசிக்கல், அர்ஜுன தவக்குகை என இன்னும் பல உள்ளது.
அட மகாபாரத புராணம் மட்டுமில்ல, ராமாயணமும் வெள்ளிங்கிரியில் உண்டு. லட்சுமணனை காக்க சஞ்சீவி மலையை கையில் சுமந்தபடி இலங்கையை நோக்கி சென்றார் அனுமன். அவர் கையிலிருந்து தவறிவிழுந்த சிறிய கல்தான் இவ்வளவு பெரிய வெள்ளிங்கிரி மலை என்றும் சொல்கின்றனர். இங்கே பேச்சிக்காடு என்கிற பகுதி ஒன்றும் உள்ளது. இதை சீதைவனமென்றும் கூறுகின்றனர். அது தவிர அனுமன் நதி, ராமர்நதி என்று சில சுனைகளுக்கு பெயர்கள் உண்டு.
பொள்ளாச்சி மலையில் முன்னெல்லாம் ஒரே ஒரு கடைதான் இருக்கும். அங்கே கமர்கட்டு,தேன்மிட்டாய்,கொடல்,சிகரட்டு,பீடி,மாங்காய் துண்டு,சின்ன மாங்காய் என நிறைய விற்கப்படும். சின்ன மாங்காய்ங்கள் விலை ஒன்னு அம்பது காசு! பெரிய மாங்காய் (கோமாங்கா) ஒரு பீஸ் ஒரு ரூவா. எல்லாமே வித் உப்பு மிளகாய் தூளோடுதான் தரப்படும். (வாயில் எச்சில் ஊருதா!). அந்தக்கடையில் கிடைக்கும் மாங்காய் மலையிலேயே பறிக்கப்பட்டதென்று சொல்லுவார் கடைக்காரர்.. அதில் பாதி உண்மை மீதி பொய்! அதாவது சின்ன மாங்காய் காட்டிலேயே பறிக்கப்பட்டதாக இருக்கும். பெரிய கோமாங்காய்கள் மூட்டை மூட்டையாய் முதுகில் சுமந்தபடி மலையில் ஏற்றுகிறவர்களை பார்த்திருக்கிறேன். நாங்க அரை மலை ஏறுவதற்குள்ளாக மலையேறி மூட்டையை டெலிவரி செய்துவிட்டு இறங்கும் அசகாய சூரர்கள்.
அவர்களுடைய கைகளில் எப்போதும் முறுக்கேறி முரட்டுத்தனமாகவே இருக்கும். கால்களில் நரம்புகள் புடைத்து இருப்பதை அங்கும்.. ஜிம்களில் ஒட்டப்பட்டிருக்கும் போட்டோக்களிலுமே பார்த்திருக்கிறேன்.
இப்போதெல்லாம் அங்கே நிறைய கடைகள் பெருகிவிட்டன. பெப்சி கோக் முதற்கொண்டு லேஸ்,பிரிங்கோ கிரிங்கோ என எல்லாமே கிடைக்கிறது. விரைவில் மலை உச்சியிலேயே பீஸா பர்கர் கூட கிடைக்க நேரிடலாம்! கேஎப்சி அங்கேயும் ஒரு பிராஞ்ச் திறக்கலாம். டாஸ்மாக் பார் அமைக்கப்பட்டு குளிர்ந்த பீர் கூட கிடைக்கலாம். ஆனாலும் அந்த மாங்கா பீஸ்,தேன்மிட்டாய்,கமர்கட்டுக்கு ஈடாகாது.
படம் உதவி -http://skkme.blogspot.com/