அண்மையில் லத்தீன் அமெரிக்க தமிழ் எழுத்தாளர் (குடிகாரர்தான்!) டெல்லியில் குடித்த வோட்காவைப்பற்றி சிலாகித்து பேசிக்கொண்டிருந்தார். அப்படியே தேன் மாதிரி.. இளநீர் மாதிரி.. தண்ணிகலக்காம குடிச்சேன்.. அப்படியே சொர்ர்ர்ர்னு இறங்குச்சுப்பா, சும்மா கிருகிருனு ஏறிச்சுப்பா என்று சொன்னதுமே, அதைக்கேட்டுக்கொண்டிருந்த மற்ற நண்பர்களுக்கும் நட்டுகிச்சு! சென்னையின் எல்லா டாஸ்மாக்குகளிலும் வோட்காவைத் தேடினர்.. ம்ஹூம் நல்ல வோட்கா கிடைக்கவேயில்லை! ஆம் , எங்குமே நல்ல சரக்கு கிடைக்கவில்லை.. என்ன நடக்கிறது டாஸ்மாக்குகளில் ?
குடி குடியை கெடுக்கும்.. எந்த குடி யார் குடியை கெடுக்கும் என்பது குடிமகன்களுக்கே(மகள்களுக்கும்) தெரியும். குடும்பமான குடியிருந்தால் குடிப்பதற்கோ வழியில்லை! குடிப்பதற்கு மனமிருந்தால் பத்துமணிக்குமேல் கடையில்லை! அய்யகோ ஆயிரமாண்டு குடிகண்ட தமிழினமே பார் உன் பரிதாப நிலையை!
மைனாரிட்டி திமுகவின் ஆட்சியிலே வீதிகள் தோறும் டாஸ்மாக்குகள் பல்கி பெருகினாலும் , அங்கே கிடைக்கிற சரக்குகளில் தரமில்லை. ரெகுலர் கஸ்டமர்களுக்கு அக்கவுண்ட் வைத்துக்கொள்ளும் வசதியில்லை. குவாட்டர் அடித்தாலும் போதையில்லை. குவாட்டருக்கு மேலடிக்க உழைக்கும் தோழர்களிடமோ காசில்லை. அந்தோ பரிதாபம்! கண்களில் பீர் கசிகிறது
ஆஃபாயிலில் பெப்பர் இல்லை. ஏசிபாரில் தம்மடிக்க வசதியில்லை! வாட்டர் பாக்கட்டில் நல்ல வாட்டரில்லை.. சோடாவில் கேஸில்லை! அய்யோ..அம்மா... வயிறு பற்றி எரிகிறது.. மது குடிப்பதே கவலையை மறக்கத்தான்! இன்றோ ஆங்கே மதுகுடித்தால் கவலை! பத்து மணிக்குள் கடை மூடிவிடுவானே என்று போட்டது போட்டபடி கிடக்க ஓட வேண்டிய நிலைமை! செம்மொழி மாநாட்டுக்காக பல கோடி செலவழித்ததில் சில கோடிகளை போட்டு அரசே ஒரு மது தயாரிப்பு தொழிற்சாலையை திறந்து வைத்தால், வேலைவாய்ப்பும்,தரமான சரக்கும் கிடைக்குமே!
சிந்தித்துப்பாருங்கள் தோழர்களே! டாஸ்மாக்குகள் வருவதற்கு முன் எப்படியெல்லாம் குடித்து மகிழ்ந்தோம்! போதை தலைக்கேறி உருண்டு புரண்டோம்! சால்னா கடையில் மிளகாய் பஜ்ஜியோடு சரக்கடித்தோம்! குடல் வேகாமல் இருக்க குடல்கறி (போட்டி) தின்றோமே! சாக்கடைதோறும் வாந்தி எடுத்தோம்! சாலைதோறும் ‘பார்’ , காலையில் எழுந்தால் ஹேங்ஓவரில் தலையை பிடித்தபடி அலைந்தோமே! ஆறு மணிக்கே கதவு தட்டி கட்டிங் அடித்தோமே! இன்றோ அய்யகோ , எல்லாமே தலைகீழ்.
எவ்வளவு குடித்தாலும் போதை ஏறுவதில்லை என்கிற குற்றச்சாட்டை இன்றும் நேற்றும் முச்சூடும் கேட்டபடி இருக்கிறோம்! காரணம் என்ன , ஆல்கஹாலின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. மைனாரிட்டி திமுக அரசின் சதியால் திட்டமிட்டு குறைக்கப்பட்டுள்ளது. நம்மை கூடுதலாக குடிக்க வைத்து , விற்பனையை அதிகரிக்கும் சதித்திட்டம் தோழர்களே!
டாஸ்மாக் பீரை குடிப்பதற்கு பதிலாக இரண்டு வாட்டர் பாக்கெட்டை வாங்கி குடிக்கலாம். அதிலே கூட ஓரளவு போதை கிடைக்கிறது! பாண்டிச்சேரியில் போய்ப்பாருங்கள் பீரென்றால் என்னவென்று அப்போதுதான் தெரியும்.. பீராம் பீரு!
பாரிலே வாந்தி எடுத்தால் அதிலேயே உருண்டு புரளுகிற பரிதாப நிலையை அல்லவா இந்த அரசு நமக்கு கொடுத்திருக்கிறது. எந்த டாஸ்மாக்கிலாவது எம்.ஆர்.பிவிலையில் சரக்கு கிடைக்கிறதா! அட நியாயவிலையில் சைடிஷ்தான் கிடைக்கிறதா? குடிப்பவர்கள் புகைத்து மகிழ சரியான விலையில் சிகரட்டும்தான் கிடைக்கிறதா? குடிப்பவர்கள் வசதியாக அமர நல்ல இருக்கைகள்தான் இருக்கிறதா? சொன்னால் சொன்ன நேரத்துக்கு குவாட்டர்தான் கிடைக்கிறதா?
சக குடிகாரர்களுக்கிடையே நிலவி வந்த நட்பு இன்று இருக்கிறதா? நாமுண்டு நம் குடியுண்டு என்றல்லவா வாழப் பழகியிருக்கிறோம். குடித்ததும் எல்லாவற்றையும் குளோஷிக்கொண்டு வீட்டை நோக்கி நடைபோட தொடங்கியிருக்கிறோம்.. ஒரு சண்டை உண்டா? வம்புண்டா? எத்தனை ஆண்டுகள் எத்தனை ஒயின்ஷாப் சண்டைகள், வம்புகள், நட்புகள்! அந்த காலமெல்லாம் போச்சே.. இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் இந்த கொடுகோன்மை நிலை நீடிக்கும்.
நான் கேட்கிறேன் ஏனய்யா ஆட்சியாளர்களே.. நீங்களெல்லாம் குடிக்கவே மாட்டீர்களா? உங்களுக்கெல்லாம் குடலே இல்லையா? உங்களுக்கெல்லாம் போதையே ஏறாதா? குடிகாரர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக்கொட்டாதீர்கள்.. குடல் வெந்துதான் சாவீர்கள்..
இந்த நிலை மாற , மைனாரிட்டி திமுகவின் சர்வாதிகார ஆட்சி ஒழிய , குடிகாரர்களின் உரிமைக்காக போராடுவோம் , மீண்டும் போதை தலைக்கேற குடித்து மகிழ புயலென திரண்டு வாருங்கள் தோழர்களே..
(இப்படிலாம் பதிவு போடுவதால் நீங்கள் என்னையும் உலக மகா குடிகாரன் என்று எண்ணக்கூடும் , குடிகாரர்களுக்காக குரல் கொடுக்க குடிகாரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை தோழர்களே!)
மற்றபடி இந்த பதிவை எழுத உத்வேகமாக இருந்த போஸ்டர்! மெயிலில் அனுப்பிய சக குடிகார நண்பருக்கு நன்றி! படத்தை சொடுக்கி பெரிதாய் பார்க்கலாம்! அதிலிருக்கும் கோரிக்கைகளை தயைகூர்ந்து படிக்கவும்.. அத்தனையும் பொக்கிஷங்கள்!கூட்டத்தில் கலந்து கொள்வது அவரவர் பாடு!
போஸ்டர்! |