21 July 2010
தமிழ்வாய்ப்பாடு
நெல்,மா,பிளவு,குன்றி,மஞ்சாடி,பணவெடை,கழஞ்சு,பலம்... இப்படியே நீள்கிறது அந்த பட்டியல். இவையெல்லாம் மளிகைக்கடை சாமான்கள் அல்ல , இது தமிழில் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அளவீட்டு முறைகளின் பெயர்கள். இவையெல்லாம் இப்போது வழக்கில் இல்லை. எல்லாமே கிலோதான்! யாருக்கும் இவற்றின் பொருளோ அளவோ கூட தெரியாது.
ஈரோட்டில் ஒரு தொழிற்சாலையில் நான்காயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றுகிறார் ராஜேந்திரன். நாற்பதாயிரம் செலவழித்து சின்னதாய் ஒரு புத்தகத்தை இரண்டரை ரூபாய் விலையில் 15000 பிரதிகள் வெளியிட்டுள்ளார். அது தமிழ் எண் சுவடி! அல்லது தமிழ் வாய்ப்பாடு!.
தமிழின் மீது தீராத பற்றும் ஆர்வமும் கொண்டவர். அதுதான் அவரை அப்படி ஒரு புத்தகத்தை தன் சொந்த வருவாயிலிருந்து வெளியிட உந்துதலாய் இருந்திருக்கிறது. ‘’தமிழ் எண் கணித முறை , பிரத்யேகமானது, சிறப்பானது , உலகிற்கே முன்னுதாரணமாய் திகழ்வது , அதைப்பற்றி நம் மக்களிடையே சரியான விழிப்புணர்வில்லை , பள்ளியிலிருந்தே இதுபற்றி நம் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்’’ என்கிறார்.
36பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் , தமிழ் எண்கள் , அதற்கான குறியீடுகள் , தமிழ் எண்களால் உருவாக்கப்பட்ட வாய்ப்பாடு, தான அடிப்படைகள், அளவீட்டு முறைகள், காசு அளவு, எடையளவு , நாள் அளவு என சின்னச்சின்னதாக நிறைய தகவல்கள் தொகுத்திருக்கிறார் ராஜேந்திரன். இதற்காக பல நூலகங்களுக்கும் சென்று பல நூல்களை ஆராய்ந்து மிகமிக எளிமையாக குழந்தைகளும் அறிந்துகொள்ளும்படி இந்த நூலை உருவாக்கியுள்ளார். குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டாலும் இதிலுள்ள பல தகவல்கள் நமக்கே புதியதாக இருக்கின்றன.
இந்த எண்களையும் குறியீடுகளையும் அளவுகளையும் நாம் தற்போது பயன்படுத்த இயலாதென்றாலும் , தொன்மையான தமிழ்க்கணித முறைகள் பற்றி அறிந்து கொள்ளவும் இது குறித்து வருங்கால சந்ததிகள் தெரிந்து கொள்ளவும் இந்த புத்தகம் பெரிதும் உதவும். பல ஆண்டுகளாக பூஜ்யத்தை கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள் என்று பேசிக்கொண்டிருந்தாலும் , உண்மையில் தமிழ் எண் வரிசையில் பூஜ்யமே கிடையாதாம். 10, 100,1000 முதலான பூஜ்யம் வரும் எண்களுக்கு தனிக்குறியீடாம்.
‘’என்னுடைய வருமானத்திற்கு மீறி இதற்காக செலவழித்திருந்தாலும் , இந்த புத்தகத்திற்கும் சரி தமிழ்எண்கள் குறித்த ஆர்வத்திற்கும் சரி, போதிய மரியாதையோ , வரவேற்போ கிடைக்காததுதான் என்னை பெரிதும் பாதித்துள்ளது.. பல நேரங்களில் கேலிப்பேச்சும் கிண்டலையுமே இந்த முயற்சிக்காக பரிசாக பெற்றுள்ளேன். இருந்தாலும் தொடர்ச்சியாக சிறிய பள்ளிகளுக்கு இந்த புத்தகத்தை வழங்கி வருகிறேன் , தமிழ்க்கணித முறைகள் பற்றியும் குறியீடுகள் பற்றியும் அரசு நம்முடைய பள்ளிப்பாடத்திட்டத்தில் சேர்த்தால் செம்மொழித் தமிழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் , இதற்காக குரல்கொடுக்க தமிழ் ஆர்வலர்கள் முன்வரவேண்டும்’’ என்று கோரிக்கை விடுக்கிறார் ராஜேந்திரன்.
உண்மையில் இந்த அளவீட்டு முறைகளையும் எண்களையும் வீண் வீம்புக்காகவோ அல்லது இன்ஸ்டன்ட் புகழுக்காகவோ வேண்டுமானால் நம்மால் பயன்படுத்த இயலுமே தவிர , இதனை பயன்பாட்டிற்கு எந்த வகையிலும் பயன்படுத்த இயலாது. இருப்பினும் நமக்கே நமக்கான அளவீட்டு முறைகள் என்று ஒன்று இருந்ததையும் , தமிழின் தொன்மையான எண் வடிவங்கள் இருந்ததும் , நாம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று. நம் குழந்தைகளும் அறிந்திருக்க வேண்டும். அவ்வகையில் இதுமாதிரியான முயற்சிகளை நாமும் ஊக்குவிப்பது நம் வரலாற்றையும் தமிழையும் காக்க சிறிய அளவிலாவது உதவும்.