22 May 2010
கனகவேல் காக்க - விமர்சனம்
அந்தக் கதையில் முதலில் மலைக்கள்ளனாக எம்.ஜி.ஆர் நடித்தார் , பின் சிவாஜி, பின் ரஜினி, கமல்,விஜயகாந்த், அஜித்,விஜய்,விக்ரம் என லேட்டஸ்ட்டு நண்டு சிண்டுகள் வரை நடித்து தீர்த்துவிட்டனர். பிரஷாந்த் கூட ஜாம்பவான் என்றொரு படத்தில் இதே கதையில் நடித்ததாக நினைவு. பாகவதர் கூட இந்த கதையில் நடித்திருக்க வாய்ப்புண்டு. படம் பெயர் நினைவில்லை. ஷங்கர் இந்த கதையை வைத்தே பலகாலம் தமிழ்சினிமாவின் இன்றியமையாத இயக்குனர் ஆகிவிட்டார். தமிழ்சினிமாவில் வெளியாகும் பத்து திரைப்படங்களில் ஒன்றில் இடம் பெறும் அளவுக்கு அந்த கதையும் இன்றிமையாத ஒன்றாகிவிட்டது. தமிழில் பிரபலமாக துடிக்கும் எல்லா நடிகரும் அந்த கதையில் ஒருமுறையாவது நடித்து பார்த்துவிடுகிறார்கள். எத்தனை முறை அரைத்தாலும் விடாமல் ஹிட்டடிக்கும் அந்த மகா பிரபல்ய கதையில் நடித்து புகழ்பெற்றோர் பட்டியலில் கரணும் கனகவேல் காக்கவுடன் இணைந்துள்ளார்.
அப்படி என்ன பரமரகசியக் கதை என்று நீங்கள் அதிகம் யோசிக்க வேண்டாம். நானே சொல்லிவிடுகிறேன். ஒரு ஊரில் நிறைய கெட்டவர்கள் இருந்தார்கள். அவர்களை வரிசைப்படுத்தி ஸ்கெட்ச் போட்டு பிளான் பண்ணி யாரோ கொல்லுகிறார்கள். அவர் யாரென்று தெரியாமல் விழிபிதுங்கிய போலிஸ் பெரிய வட்டமான மேஜையில் அமர்ந்து அவன் யாரா இருக்கும் என்று மண்டையை பிய்த்து கொள்ளுவார்கள். அது யாரென்றால் அவர்தான் ஹீரோ. அவர் கொல்லுவதற்கு நடுவில் அவர் பின்னால் ஹீரோயின் சுற்றுவார். பாடுவார். ஆடுவார். வெளிநாட்டுக்கு சென்று உருண்டு பிரண்டு கசமுசாவாக டூயட் பாடுவார்கள். ஒரு கட்டத்தில் இந்த கொலைக்கு காரணம் ஹீரோதான் என்று நாயகிக்கு தெரிந்துவிடும். ஹீரோயின் கடுப்பாக ஹீரோ அவரை தனியாக யாருமில்லாத பின்லேடன் குகைக்கு அழைத்துச்சென்று நெஞ்சைப்பிழியும் ஒரு பிளாஷ்பேக்கை சொல்லுவார். அதில் நாயகர் தன் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருப்பார். வில்லன்கள் குடும்பத்தை நாசமாக்க ஹீரோ பொங்கி எழுந்து சத்திரியனாய் இருப்பதை விட சாணக்கியனாய் மாறிவிடுவார். இதை கேட்டு நாயகியோ மனம் நெகிழ்ந்து போய் குத்துப்பாட்டுக்கு நடனமான கிளைமாக்ஸில் வில்லனை கொல்லுவார் ஹீரோ! சுபம்!
கனகவேல் காக்க படத்தின் கதைக்கரு மேலே சொன்னதுதான். இருந்தாலும், திரைக்கதையிலும் வசனத்திலும் காட்சி அமைப்புகளிலும் வேறுபடுத்தி காட்ட முயற்சித்திருக்கிறார் படத்தின் இயக்குனர் கவின்பாலா!. இதே கதையோடு இதற்கு முன் வெளியான ஜென்டில்மேன், இந்தியன், ரமணா உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு காரணம் திரைக்கதையும் காட்சி அமைப்புகளுமே! அந்த இரண்டும் சொதப்பியதால் தோல்வியடைந்த சிட்டிசன் மற்றும் சாமுராய் போன்ற படங்களும் உதாரணத்திற்கு உண்டு.
கரணம் தப்பினால் மரணம் என்கிற முடிவோடு மேலே சொன்ன கதையையும் கரணையும் நம்பி களமிருங்கியிக்கிறார் இயக்குனர். தனக்கு கிடைத்த சுமாரான பிரபல ஹீரோ, மிகக்குறைந்த பட்ஜெட் , படமாக்குவதில் சிக்கல்கள் என பலதையும் சுமந்தபடி கிட்டத்தட்ட முக்கால் கிணறு தாண்டிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
படத்தின் நாயகனாக கரண். கருப்பசாமி குத்தகைதாரருக்குப் பின் நீண்ட நெடிய இடைவேளைக்கு பிறகு க்யூட்டாக இருக்கிறார். கோர்ட்டில் டவாலியாக அமைதியாக நிற்பதும், வில்லன்களிடம் பொங்கி எழுவதும் என மசாலா நாயகராக மணக்கிறார். (நல்ல வேளை படத்தில் பஞ்ச் டயலாக்குகள் ஏதுமில்லை , வீர வசனங்கள் உண்டு!). அதிலும் கிளைமாக்ஸில் கோர்ட்டில் பேசும் காட்சியில் வெளுத்து வாங்குகிறார். ஒரே ஷாட்டில் அவ்வளவு நீளமான வசனத்தை சமீபத்தில் யாரும் பேசியதாக நினைவில்லை. இன்னும் தமிழ்சினிமாவில் கரணை யாருமே சரியாக பயன்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். ஹீரோயினுக்கு அதிகம் வேலையில்லை. அவரைப்பற்றி சொல்லவும் எதுவுமில்லை. தவறான தேர்வு.
படத்தின் நாயகன் கரண் என்றாலும் படம் முழுக்க கோட்டா சீனிவாசராவின் களேபரம்தான். எம்.ஆர்.ராதா, சத்யராஜுக்குப் பிறகு காமெடியும் வில்லத்தனமும் இணைந்த கலவையான நடிப்பை இவரிடம் மட்டுமே ரசிக்க முடிகிறது. வசனங்களின் துணையோடு தன் உடல்மொழியால் முழுமையாக ஒவ்வொரு காட்சியையும் முழுங்கிவிடுகிறார். இன்னொரு வில்லன் சம்பத்தை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.
படத்தின் வசனம் எழுத்தாளர் பா.ராகவன். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை முடிந்தவரை சிறப்பாகவே செய்திருக்கிறார். கோர்ட் வசனங்களும் , கோட்டா ஸ்ரீனிவாசின் வசனங்களும் பாராவை அடையாளம் காட்டுகின்றன. யாருமே நினைக்காத இடத்தில நான் இருப்பேன்டா மாதிரியான பேரரசு பாணி சுத்தமான ஐஎஸ்ஓ 9001 பெற்ற வீர வசனங்கள் மசாலா ரசிகர்களை கவரும்.
படத்தின் மிகப்பெரிய மைனஸ் இசை . விஜய் ஆன்டணி! ஏதோ பூர்வ ஜென்ம கடனுக்காக இசையமைத்திருப்பார் போல! பாடல்கள் பிண்ணனி என எல்லாவற்றிலும் ஒட்டுமொத்த சொதப்பல். மசாலாப் படங்களுக்கே உரித்தான மிகமுக்கியமான அந்த ஜோர் அல்லது துள்ளல் பிண்ணனி இசையில் மிஸ்ஸிங். அதே போல திரைக்கதையிலும் , மேக்கிங்கிலும் கூட இன்னும் சிரத்தை எடுத்திருக்கலாம். படம் நெடுக முதல் பட இயக்குனரின் தயாரிப்பு சுதந்திர சிக்கல்களை உணர முடிகிறது. படத்தின் குறைச்சலான பட்ஜெட்டும் மேக்கிங் குறைபாடுகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
மற்றபடி இயக்குனர் இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் இன்னொரு ரமணாவாக உருவாகியிருக்க வேண்டிய திரைப்படம் , ஏனோ மனதில் பதிய மறுக்கிறது. அதற்கு ஹீரோவின் பாத்திரப்படைப்பும் காரணமாக இருக்கலாம். படத்தின் மிக முக்கிய அம்சமான கொலைகளுக்கு இன்னும் கூட புத்திசாலித்தனமான முடிச்சுகளையும் டுவிஸ்டுகளையும் சேர்த்திருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும். ஏகே 74 துப்பாக்கி டுமீல் டமால் முடிச்சுகள் மூலம் ஹீரோவை போலீஸ் கண்டுபிடிப்பதெல்லாம்.. ஒரு முழுமையான ஹிட் படத்திற்கு தேவையான எல்லா அம்சங்களும் இருந்தும் ஏதோ குறைவது போன்ற உணர்வு.
ஒரு சில குறைகளால் படத்தின் சிலபல காட்சிகள் சலிப்பூட்டுகிறது. கொட்டாவியும் விட வைக்கிறது. மசாலா படங்களில் இதுமாதிரியான வேளைகளில் பாடல்கள் சலிப்பை குறைக்க உதவும். ஏனோ இப்படத்தில் பாடல்களுக்கு தியேட்டரில் குழந்தைகள் கூட வெளியேறுகின்றனர். வில்லனின் காமெடி தவிர்த்து இன்னும் கொஞ்சம் காமெடி கூட்டியிருக்கலாம். படத்தில் சண்டைக்காட்சிகளும் எடுபடவில்லை. படம் பார்க்கும் போது உண்டாகும் சோர்வை குறைத்திருக்கும். நிஜமாகவே படம் பார்க்கும் போது சோர்வாக இருக்கிறது.
மற்றபடி மசாலாவை தூக்கலாக போட்டு இன்னும் கொஞ்சம் கிண்டியிருந்தால் கிழங்கெடுத்திருக்கலாம்.
கனகவேல் காக்க - புதுமையான கதைகளத்துக்காக ஒரு முறை பார்க்கலாம்.
*********
தமிழ் ஓவியம் இணையதளத்துக்காக எழுதியது (சில மாற்றங்களோடு)