Pages

12 May 2010

நமது தோல்வியை நாளை சரித்திரம் சொல்லும்!





இந்திய கிரிக்கெட் அணிக்கு தீவு நாடுகள் என்றாலே ராசியில்லை போலிருக்கு. போன முறை இங்கிலாந்தில் வாங்கியதே இன்னும் தீரவில்லை அதற்குள் மேற்கிந்திய தீவுகளிலும் அதையே வாங்கிக்கொண்டு அவசரமாக திரும்பியிருக்கிறார்கள். இலங்கையுடனான கடைசி சூப்பர் 8 மேட்சில்.. சொல்லித்தீராது அவர்கள் வாங்கிக்கட்டிக்கொண்டது... என்னவென்று அதிகம் யோசிக்கவேண்டாம் அதே! அதே! நொறுங்கிய செம்ம அடி வாங்கின சொம்புதான்!.


காரணங்களே இல்லாமல் வருவது வெற்றி. காரணங்கள் மட்டுமல்லாமல் பக்கத்துவீட்டுக்காரன் மனைவியின் பழிபாவங்களும் இலவச இணைப்பாக கிடைப்பது தோல்வி. இந்த முறை மரண அடி தோனியின் சிஷ்ய்ய கோடி கேடிகளுக்கு! தோனியும் இன்னபிற இந்திய கிரிக்கெட் பெரிசுகளும் எத்தனை சாக்குபோக்கு சொன்னாலும் இந்த முறை செல்லாது செல்லாதுதான். தோப்புகரணம் போட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாத கடும்தோல்வி. மூன்று வருடங்களுக்கு முன்னாலே தலையில் கிரீடத்தோடு நான்தான்டா சிங்கம் டி20 தங்கம் என்று ஆடிக்கொண்டிருந்ததெல்லாம் பழங்கதை. எந்த நேரத்தில் உலகமகா பிரபலமான ஐபிஎல் தொடங்கியதோ அன்றைக்கே பிடித்துவிட்டது இந்தியா அணிக்கு சனி. (ஏழரை சனியாகவும் இருக்கலாம்.. ). இது இந்திய கிரிக்கெட் போர்டும் நம் வீரர்களும் இந்திய அணியின் டி20 எதிர்காலம் குறித்து ரூம் போட்டு யோசிக்க வேண்டிய தருணம் இது. (குறைந்த பட்சம் ஹால் போட்டாவது கூட்டாக யோசிக்கலாம்)


ஐபிஎல்லில் சூரப்புலிகளாய் விளையாடிய 11 பேர் கொண்ட அணிதானே உலக கோப்பையில் ஆடியது. இரண்டு மாத கடுமையான போட்டிகளை எதிர்கொண்டு மனதளவில் உலக கோப்பைக்கு தயாராகித்தானே மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றது. தயாரிப்பெல்லாம் மல்லையாவின் பார்ட்டிகளிலும் மந்திராபேடியுடனான பேட்டிகளுடனும் சரியாகத்தானே போய்க்கொண்டிருந்தது. எங்கே நடந்தது தவறு?


அரைவெந்த ஆசிஸ் நெக்ராவும் , கம்பீரும் இன்ன பிற வீரர்களும் ஆடியதைப் பார்த்தால் கபில்தேவையும் வெங்கடபதி ராஜூவையும் மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்ளலாம் போலிருந்தது. உலக கோப்பைக்கு முன்னால் இன்சுரியாம். அவசர சிகிச்சை பிரிவிலிருந்து ஓடிவந்து விளையாடுவதைப்போல விளையாடுகிறார் காம்பீர். ரவிசாஸ்திரி கம்பீர் ரன் எடுக்க ஓடுவதைப் பார்த்து ஒரே வார்த்தையில் சொன்னார் “PATHETIC”. டுவிட்டரில் ஒரு நண்பரோ கம்பீரின் அழகு நடை சங்கர்தயாள்சர்மாவை நினைவூட்டுகிறதாம். ஒருவேளை ராமரில்லாத சீதையைப்போல சேவாக்கில்லாத கம்பீர் பிரிவில் வாடியிருக்கலாம். சேவாக்கை அணியிலிருந்து விரட்டிய அந்த தீய சக்தி கம்பீரையும் விரட்டியிருக்கலாம். அரைவெந்த ஆபாயிலைப் போலாடினார்.


இந்திய அணியின் பலவீனம் போன உலக கோப்பையிலேயே அம்பலமானது அனைவருக்கும் தெரியும். நாலு பவுன்சர்களைப் போட்டால் போதும் , கல்லால் அடிபட்ட நாயைப்போல வீல்வீல் என கத்திக்கொண்டு பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடிவிடுவார்கள். இது சிங்கப்பூர் கிரிக்கெட் அணிக்கு கூட தெரிந்திருந்தது. ஏனோ புடலங்காய் இந்திய அணி வீரர்களுக்கோ இறக்குமதி பயிற்றுனருக்கோ தெரியவில்லை!.


ஒரு வருடமாக கடுமையான பல ஆணிகளை புடுங்கிங்கொண்டிருந்த இந்திய அணியினர் இந்த உலக கோப்பையிலும் அதையே ரிப்பீட்டினர். பங்களாதேஷுடனும் , இலங்கை அணியுடனும் ஓயாமல் ஒருநாள் கிரிக்கெட் மட்டுமே ஆடிக்கொண்டிருந்திருக்கலாம். அல்லது ஐபிஎல்லில் ஏலமாக கிடைத்த தொகையை எண்ணிக்கொண்டிருந்திருக்கலாம். உலக கோப்பைக்கு போய் சொம்பு வாங்கி வரவேண்டுமா!


இந்திய அணியின் பந்துவீச்சு அதைவிட மட்டம். இந்த லட்சணத்தில் வெறும் மூன்று பவுலர்களோடு களமிறங்கும் சதுரங்க விளையாட்டெல்லாம் தோனிக்கு எதற்கு. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இடத்திலும் நாங்கள் ஸ்பின்னில் கிங்கு அதனால் அதைவைத்தே ஊதுவோம் சங்கு என்று பேசுவதெல்லாம் சுத்த ஹம்பக் அல்லாமல் வேறில்லை. உமேஷ் யாதவ் 140கி.மீ வேகத்தில் பந்து வீசக்கூடியவர், வினய்குமார் ஓரளவு பேட்டு பந்து இரண்டு பண்ணுபவர், இருவரையும் விட்டுவிட்டு ஜடேஜாவைப்போட்டு தொங்கிக்கொண்டிருந்ததெல்லாம் சுத்த ராமாயணத்தனம்.


யுசுப் பதான் ஐபிஎல் தவிர்த்து வேறு எந்த மாதிரியான போட்டிகளிலும் (ஒருநாள் போட்டிகளிலும்) நன்றாக விளையாட மாட்டேன் என்று தம்பி மேல் ஆணையிட்டிருக்கிறார் போல! சொதப்பல் மன்னர். ஐபிஎல் ஆறுதல் ரெய்னாவும் ரோகித் சர்மாவும் மட்டுமே.. என்ன செய்ய ஒரு விரலை வைத்துக்கொண்டு விரல் சூப்பலாம் அல்லது கேரம்போர்ட் ஆடலாம். வெஸ்ட் இன்டீஸ் அணியுடனான போட்டிகளில் இந்திய அணியின் பீல்டிங் முழுமையாக வெட்டவெளிச்சமானது. ஐபிஎல் தரத்திலேயே விளையாடிக்கொண்டிருந்தால் எப்படி பாஸு , ஐபிஎல்லில் கார்பன் கமால் கேட்ச் பிடிக்க டேவிட் ஹஸ்ஸியும் , டர்க் நான்ஸும் இன்னபிற பீட்டர்களும் இருந்தனர்.. இது இந்திய அணியல்லவா!


2007ல் உலக கோப்பை போட்டிகளில் வடை வாங்கின இந்திய அணியிலிருந்த பழங்காலத்து சொம்புகளை களை எடுத்து , இளம் வீரர்களால் அணிக்கு புது ரத்தம் பாய்ச்சி புறப்பட்டதோர் புதிய அணி! தோனியின் தலைமையிலே (ம்ம் மூச்சு முட்டுது). அந்த அணியிலிருந்து வீரர்களுக்கு வெற்றிபெற வேண்டும் என்கிற வெறி இருநத்தோ இல்லையோ? அணியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்கிற முனைப்பாவது இருந்தது. இந்த முறை மே.இ.தீவுகளுக்கு சென்ற இந்திய அணியினரின் முகத்தை பார்த்தீர்களா? எருமை சாணியை மூஞ்சியில் அப்பினது போல! கொஞ்சம் கூட வெற்றிபெற வேண்டும் என்கிற வெறியோ , ஆர்வமோ, முனைப்போ இன்னபிறவோ இல்லாமல் நானும் போறேன் கச்சேரிக்கு என்று தோளில் துண்டைப்போட்டுக்கொண்டு , வாயில் வழியும் வெற்றிலை எச்சிலை துடைத்தபடி கிளம்பிவிட்டது போலிருந்தது. ‘ஒருவேளை சச்சினிருந்திருந்தால்’ என்று வாய் திறக்க எத்தனிக்கும் முன் ஒரே ஒரு கருத்து அவர் இதுவரை நிறைய உலக கோப்பை ஆடிவிட்டார்.


தோனி சொல்கிறார் ‘’ "At the end of the day we are on the losing side, nothing much can be done about it because this is the best 15 [players] you can get in India when it comes to T20. At the end of the day if you are outplayed there is nothing much you can do about it."


மேலுள்ள தோனியின் கருத்தைப்பற்றி நான் ஏதும் சொல்வதற்கில்லை. அது உங்களுக்கானது.


பார்படோஸின் மேலேழும்பும் அதிரடி பவுன்சர்களை சமாளிக்க முடியாமல் இந்திய அணி திணறியதை தோனியும் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் சொல்லும் சாக்கு , இந்தியாவில் பவுன்சாகும் பிட்ச் இல்லையாம். அதுவுமில்லாமல் டி20 போட்டிகளில் பவுன்சராக இருந்தாலும் அடித்தாட வேண்டியிருக்கிறதாம். இந்தியாவில் பவுன்சாகும் பிட்ச்களை தயாரிக்க பலகோடிகள் செலவாகும் போலிருக்கிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு நாங்கள் ஸ்பின்னுன்னா பொழந்துருவோம் பாஸ்ட்டுன்னா கஷ்டம்தான் பஜனையையே பாடிக்கொண்டிருக்க போகிறார்களோ தெரியவில்லை.


ஒட்டுமொத்த இந்திய அணியும் சோர்வாக இருக்கிறது. மேட்ச் முடிந்தால் பார்ட்டி, பார்ட்டி முடிந்தால் மேட்ச் என மாறி மாறி காயடிக்கப்பட்டவர்களாக ஆகியிருக்கின்றனர். நடுவில் பயிற்சியும் ஓய்வும் அவசியம் என்பதை உணரவேண்டும்.


இன்னும் ஒன்பது மாதங்கள்தான் இருக்கிறது தோனிக்கும் அவருடைய படையினருக்கும். உள்ளூரில் நடக்க இருக்கும் உலக கோப்பையிலும் இதே சொம்பு இதே பஜனையே பாடினால்.. ஒன்றும் செய்ய முடியாது.

அதற்குள் பலவீனங்களை உணர்ந்து கொள்ள வேண்டும். அதிலிருந்து மீள வேண்டும். ஒய்வெடுக்க வேண்டும். புதிய திறமைகளை கண்டெடுக்க வேண்டும். இதற்கெல்லாம் மேல் மிட்சல் ஜான்சனைப்போல தாய்நாட்டு அணிக்காக ஐபிஎல் மாதிரியான கேளிக்கை போட்டிகளை புறக்கணிக்க வேண்டும். இல்லாவிட்டால் நமக்கு தோல்வி பழக்கமான வியாதி ஆகிவிடும் வாய்ப்பிருக்கு!


மற்றபடி சதுரங்கத்தில் டாபலோவை விரட்டி விரட்டி ஓடவிட்டு சாம்பியன் பட்டம் வென்ற எங்கள் விஸ்வநாதன் ஆனந்துக்கும் அஸ்லான்ஷா போட்டிகளில் அசத்தலாய் ஆடிவரும் இந்திய ஹாக்கி அணிக்கும் பெண்கள் டி20 உலக கோப்பையில் திறமையோடு ஆடிவரும் இந்திய அணிக்கும் வாழ்த்துக்கள். தோனிக்கு வருத்தங்கள்.