06 May 2010
வெட்டுப்புலி
ஒரு தீப்பெட்டி . அதன் அட்டையின் மேல் படம் . கட்டுமஸ்து இளைஞன் ஒருவன் கையில் வெட்டரிவாளோடு சிறுத்தையை எதிர்கொள்ளுகிறான். அது யாராக இருக்கும்? ஏன் சிறுத்தைய வெட்டணும்? ஏன் புலியோ சிங்கமோ இல்ல? ஒரு வேளை அது உண்மை சம்பவமோ? கேள்விகள் நம்மை எப்போதும புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்பவை. இந்தக்கேள்வியும் நம்மை காலச்சக்கரத்தில் ஏற்றிவைத்துக்கொண்டு காலத்தை திருகுகிறது. அது சின்னாரெட்டியென்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நிஜமாகவே சிறுத்தையை வெட்டிய வீரன் என்றும் வாய்வழி வரலாறு சொல்லப்படுகிறது.
சின்னாரெட்டியின் கதைத்தேடலில் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன் இதே சென்னை.. காடுகளடர்ந்த சென்னை நகரம். இங்கே அரசியலும் சினிமாவும் இணைந்திராத , வெள்ளைக்காரன் காலத்து சென்னை.. சென்னைக்குடிநீருக்காக சிலபல கிராமங்களை காலி செய்து அவர்களை கொண்டே ஏரிகள் உருவாக்கிக்கொண்டிருந்த காலம்... ஜாதீயமும் , நிலபிரபுத்துவமும் ஒவ்வொருவருடைய மனதிலும் கொடிக்கட்டிப் பறந்த சென்னை. கூவத்தில் குளியல் போட முடிகிற சென்னை. காபி என்கிற வஸ்துவை முதன்முதலாக 'மாம்பலத்துல ஐயமாருங்க இப்பலாம் அததான் குடிக்கிறாங்களாம்.. நானும் குடிச்சேன் தித்திப்பா இருந்துச்சு' என்று பேசும் ஆச்சர்ய மனிதர்களின் காலம். சினிமா தியேட்டரை முதன்முதலாக பார்த்து என்ன ஒரே இரைச்சலா இருக்கு... உப்புசமா இருக்கு என்று வியக்கும் மனிதர்கள். சென்னையிலிருப்பவர் இன்று நின்று கொண்டிருக்குமிடம் எப்போதோ யாராவது விவசாயம் செய்து கொண்டிருந்த இடமாக இருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு ஸ்டுடியோவில் கிராமத்து மைனர் சினிமாகனவுகளோடு நின்று கொண்டிருக்கலாம்.
அரசியலில் சினிமாவின் தாக்கம் உருவாகத்தொடங்கிய காலகட்டத்திலிருந்து அழகிரி அரசியல்வரைக்குமான ஒரு நூற்றாண்டின் அரசியல் மாற்றங்களை அடிகோடிட்டு காட்டுகிறது வெட்டுபுலி. இங்கே பார்ப்பனீயத்திற்கெதிரான அரசியலின் வளர்ச்சியும் , திராவிட இயக்கங்களின் வளர்ச்சியும் அதையொட்டி நிகழ்ந்த சினிமா அரசியலும் என நூறாண்டு கால வரலாற்றிலின் சில தருணங்களை அருகிலிருந்து தரிசிக்கும் ஆர்வம் யாருக்குத்தான் இருக்காது!.
தமிழ்மகனின் வெட்டுப்புலி நாவல் நமக்கு அந்த அனுபவத்தை ஓரளவுக்கேனும் திருப்தியாய் தருகிறது. ஆக்சன் படங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் குதிரை வேக சேஸிங்கில் துவங்குகிறது லட்சுமண ரெட்டியின் கதை. நூல் பிடித்தது போல காதல், காமம், காமெடி என மசாலாவாக பயணிக்கும் நாவலில் திடீரென எம்.ஜி.ஆர், அறிமுக நாயகனாக வருகிறார். பெரியார் ஒரு அத்தியாயம் முழுதையும் ஆக்கிரமித்துக்கொள்கிறார். யாரோ ராம்ச்சந்தர்ன்னு ஒரு பையன் நல்லா நடிக்கிறான்பா அவன ஹீரோவா போடலாமா என்று ஒரு அறிமுக புரொடியுசர் பேசுகிறார். அந்தந்த காலத்தின் அரசியல் கதையில் நிகழும் சம்பவங்களினூடகவும் வசனங்களின் மூலமாகவும் நமக்கு சொல்லப்படுகிறது. சுதந்திரத்துக்கு முந்தைய மக்களின் அரசியலும் , அதற்கு பிறகான அரசியல் நிலைப்பாடும் மாற்றங்களும், இங்கே திராவிட இயக்கங்கள் வித்திட்ட சமூகப்புரட்சியின் பிண்ணனியும் கதையின் வேராக ஆழமாக ஊடுருவிச் செல்கிறது. அரசியல் மற்றும் சினிமாவுக்குமான தமிழக உறவை அரசியல் வரலாறோடு சினிமாவின் வரலாறையும் சொல்ல முனைகிறார் நூலின் ஆசிரியர். ஆனால் இரண்டுமே மேலோட்டமாக ஆங்காங்கே அறிமுகங்களாக அடங்கிவிடுவது.
தமிழகத்தின் கடைசி நூறு வருட வரலாற்றில் தவிர்க்க இயலாதவை திராவிட கட்சிகள். அந்த இயக்கங்களாலும் அவற்றால் விளைந்த மாற்றங்களாலும் குடும்பத்தை இழந்து அழிந்து போனவர்கள் , வளர்ந்தவர்கள், அதன் வளர்ச்சியோடு தள்ளிநின்று வேடிக்கை பார்த்தவர்கள் என மூன்று வகையினரையும் பல்வேறு பாத்திரங்களின் வழியே சொல்ல முனைகிறார் நூலின் ஆசிரியர். அதில் ஒரளவு வெற்றியும் பெறுகிறார். திராவிட சித்தாந்தங்களை வாசல் வரைக்கும் வைத்து கொள்ளுபவர், அதை பற்றி எப்போதாவது மனைவியோடு பேசுபவர், படுக்கையறை வரைக்கும் திராவிடம் பேசி நாத்திகம் பேசி நாசமாகினவர் என மூன்று கிளை கதைகள் உண்டு. இங்கே பார்ப்பனீய எதிர்ப்பு இன்றளவும் தீராமல் புகைந்து கொண்டிருக்கிற அல்லது மேடைகளில் பற்றி எரிகிற ஒன்று. அதன் ஆணிவேரையும் காலப்போக்கில் பார்ப்பன எதிர்ப்பின் தமிழக அரசியல் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்து நீர்த்துப்போனது, பெரியாரின் திராவிட அரசியலுக்கும், அண்ணாவின் அரசியலுக்குமான வித்தியாசங்கள், ஏன் ஜஸ்டிஸ் கட்சி திகவானது, ஏன் அது திமுகவாய் பிரிந்தது, மாதிரியான அரசியல் சதுரங்க விளையாட்டுக்களை இங்கே வாய்வழியாக சொல்லப்படும் கதைகளை தொகுத்தும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து எடுத்து நாவல் முழுக்க சம்பவங்களாக்கியிருக்கிறார் தமிழ்மகன். நம்பகத்தன்மை குறித்து கவலைப்படுகிறவர்கள் கவலைப்படுவார்கள். வரலாற்றின் நம்பகத்தன்மை அதைப்படிப்பவர்களின் மனதிலே இருப்பதாய் எண்ணுகிறேன்.
நாவல் முழுக்க வரலாற்றில் நமக்குத்தெரிந்த சுவாரஸ்யமான பக்கங்கள் கதையினூடாக தொகுக்கப்பட்டுள்ளதால் , வேர்க்கதை தொய்வடையும் போதெல்லாம் சம்பவங்கள் வேகம் கூட்டுகின்றன.
வரலாற்று உண்மைகள் அவரவர்க்கு ஏற்றாற் போல விவரிக்கப்படுகின்றன. இங்கு டிவியின் வருகைக்குப் பின் வரலாறு கூட முன்தீர்மானத்துடன் சொல்லப்பட்டன. அதற்கு முன் பத்திரிக்கைகள் யார் கையில் இருக்கிறதோ அவர்களுடைய பார்வையில் வரலாறு திரிந்தது. அப்படி திரிந்ததும் புனைந்ததுமான தமிழகத்தின் சமகால வரலாற்றை திராவிடத்திற்கும் பார்ப்பனீயத்திற்கும் ஊடாக நடுநிலையோடு சொல்ல முயன்றிருக்கிறார் நூலின் ஆசிரியர்.
இந்நாவலில் காலம் ஒவ்வொரு பத்தாண்டும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப வேகமெடுக்கிறது. அதைப்போலவே முப்பதுகள் பொறுமையாகவும் 90கள் அதீத வேகத்திலும் பயணிக்கிறது. சென்னையை ஓரளவுக்கேணும் அறிமுகமிருந்தால் கதையோடு நாமும் ஜாலி சவாரி செய்ய முடியும் என்றே நினைக்கிறேன். இல்லாவிட்டால் கையில் மேப்போடு உட்கார்ந்து கொண்டும் படிக்கலாம், புது அனுபவமாக இருக்கக்கூடும்.
சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை படித்துவிட்டு பல நாட்கள் நினைத்திருக்கிறேன். அந்த கதை நிகழும் ஊரைப்போய் ஒரு முறையாவது பார்க்க வேண்டுமென்று! அந்த மனிதர்களை சந்திக்க வேண்டுமென்று! அவர்களுடைய குரலில் அந்த மொழியை உணரவேண்டுமென்று! ஏனோ அதற்கான சந்தர்ப்பங்கள் இதுவரை வாய்க்கவில்லை. அதே மாதிரியான உணர்வை வெட்டுப்புலி நாவலும் எனக்குத் தருகிறது. ஜெகனாதபுரம் , ரங்காவரம் , பூண்டி, ஆந்திரா செல்லும் சாலை , தொடர்ந்து சென்னையில் சில பகுதிகள் என எனக்கு மிக அருகிலேயே இருக்கிறது. பார்க்க வேண்டும்.
புத்தகத்தின் பல இடங்களில் எழுத்துப்பிழை. தாறுமாறாக!. மற்றபடி இது தீவிர இலக்கிய நூலாவென்று நிர்ணயிக்க முடியவில்லை. வரலாற்றின் சுவாரஸ்யத்திற்கு மேல் அது குறித்த தேடலை உண்டாக்குகிறது. நிச்சயம் என்னைப் போன்ற ஜனரஞ்சக நாவல் வாசிப்பாளனுக்கு முழுமையான திருப்தி அளிக்கிறது. அரசியல் பிடித்தவர்களுக்கும் சினிமா பிடித்தவர்களுக்கும் சென்னை பிடித்தவர்களுக்கும் பிடிக்கும்!
புத்தகம்: வெட்டுப்புலி
ஆசிரியர்: தமிழ்மகன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்.
விலை: ரூபாய் 220/-
ஆன்லைனில் வாங்க - http://uyirmmai.com/Publications/bookDetails.aspx?bid=262