Pages

02 May 2010

சுறா - இந்த அநியாயத்த தட்டிக்கேட்க யாருமே இல்லையா?









சில பேரு எடுத்து சொன்னா திருந்திருவாங்க!. சிலருக்கு பட்டாதான் புரியும். சில பேர் இருக்காங்க எருமைத்தோல் மாதிரி செறுப்பால அடிச்சு காரித்துப்பினாலும் திருந்தவே மாட்டாங்க! – யாருக்கு இந்த பஞ்ச் டயலாக்! விடை கடைசியில்


கதர்ர்றா!


முதலில் கதற கதற ஒரு கதை சொல்கிறேன்.
ஒரு ஊரில் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் ஏழைகள் இருந்தனர். அவர்கள் குடிசையில் இருந்தனர். ஏழைகளில் ஒரு ஏழைப்பங்களான் இருந்தான். மக்களுக்கு கக்கூஸ் வந்தாலும் அவன் துணை வேண்டும். அதே ஊரின் ஊரில் பணக்காரன் இருந்தான். அவனுக்கு ஹோட்டல் கட்ட இடம் கிடைக்காமல் குடிசைகளை அகற்ற வேண்டியிருந்தது. குடிசைக்கு தீ வைத்தான். நடுவில் காதலியோடு நாலு பாட்டு , அம்மாவோடு சென்டிமென்ட். மக்கள் கதறல் சோகம். ஏ.பங்களான் கோபப்பட்டான். வஞ்சகமாக பணக்காரனை ஏமாற்றி பணம் சம்பாதித்து ஏழைகளுக்கு கொடுத்தான். பின் மகிழ்ச்சியாக காதலியோடு டூயட் பாடினான். சுபம்.


பார்ர்றா!


தமிழ்சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் இந்த முற்போக்கு சிந்தனை நிரம்பிய கதை சுறா படத்தில் காணக்கிடைக்கிறது. விஜய்யின் மேன்மையான ஹீரோயிச நடிப்பும் அவர் பேசும் பஞ்ச் வசனங்களும் இதுவரை தமிழ்கூறும் சினிமா உலகம் கண்டிராதது. இது விஜயின் ஐம்பதாவது படமாம். 49 படங்களில் நடித்ததை விட இதில் பல மடங்கு கடுமையாக நடித்திருக்கிறார். பார்ப்பவர்கள் வாயில் விரலை வைத்துக்கொண்டு பார்க்கிறார்கள். விஜய் பஞ்ச் டயலாக் பேசுகிறார் . பேசுகிறார்.. பேசிக்கொண்டே இருக்கிறார்.. விட்டால் ஸ்கரீனிலிருந்து இறங்கி வந்து மடியில் அமர்ந்து பேசுவார் போலிருக்கு! பேசி முடித்ததும் கையை பின்புறம் கட்டிக்கொண்டு சுலோ மோஷனில் நடக்க.. நமக்கு இனிமா கொடுக்காமலேயே இனிமையான லூஸ் மோசன்!. டாக்டர் விஜயல்லவா! இந்த பையனுக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பார்ர்ரேன்.


வுட்ட்ட்றா!


படத்தில் இனிமையான காதல் காட்சிகள் உண்டு. தமன்னா தற்கொலைக்கு முயல்வதும் , அதை காமெடி என்ற பெயரில் விஜயும் வடிவேலுவும் தடுப்பதும்.. நமக்கே தற்கொலை செய்து செத்து செத்து விளையாட வேண்டும் என்கிற ஆவலை தூண்டுகிறது. அதிலும் கண் தெரியாதவர்களை ரோட் கிராஸ் பண்ண வைக்கும் விஜயைப் பார்த்து அப்படியே காதலில் விழுந்து இடுப்பில் நிக்காத பேண்டோடு தமன்னா ஆடுகிற ஆட்டம் உங்க வீட்டு ஆட்டமல்ல எங்க வீட்டு ஆட்டமல்ல,.. உலக ஆட்டம். படம் பார்க்கும் நமக்கே நாம ஒரு வேளை பைத்தியகார கூமுட்டையோ என்று தோன்று கிறது. அதே மாதிரி கூட ஆடும் பெண்கள் கறுப்பு ஜட்டியோடு ஆடுகின்றனர். லோ பட்ஜட் படம் போலிருக்கிறது. நடன சீகாமணிகளின் நடனம் மானாட மயிலாட ஜோடி நம்பர் ஒன்னு ராஜாயாரு ராணி ஆறுக்கு இணையாக இருக்கிறது. ஆனால் இதை பார்க்க காசு நிறைய செலவாகும்! காசுறா காசு!


அட்ட்ட்றா!


சுத்தி சுத்தி சண்டை போட்டாலும் உருட்டு கட்டையால் பொடணியில் அடித்தால் எப்பேர்பட்ட சூப்பர் மேனும் மயங்கிவிடுவான் என்பது உலக நியதி. விஜய் மண்டையில் அடித்து படுக்க வைத்து அவருக்கு ஆப்படிக்கின்றனர். இடைவேளை. மகதீரா வில்லன் மண்டைக்கு ரெண்டு சைடில் வெள்ளை சாயம் அடித்து வயதானவராக வந்தாலும் இளமையாக அழகாக இருக்கிறார். பாவம் அவர் என்ன செய்வாரு விஜய் பஞ்ச் பேச அவர் ஈ போகுமளவுக்கு பப்பரப்பாவென திறந்து கொண்டு நிற்கிறார் வாயை. விஜய் போனபின் ஏய்.. ஓய்.. என கதறுகிறார்.. வடிவேலு படம் முழுக்க வந்தாலும் வெண்ணிற ஆடையார் ஒரே காட்சியில் மொத்தமாக அள்ளுகிறார். மற்றபடி வடிவேலுவுக்கு வயசாகிருச்சு! இசை மணிசொர்மா.. பாட்டெல்லாம் படுமட்டம். ஓப்பனிங் நல்லாதான் இருக்கு பினிசிங்தான் ம்ஹூம். படத்தின் இயக்குனர் எஸ்.பி. ராஜ் குமார் விஜய ஏமாத்தினாரா இல்ல இவரு அவர ஏமாத்தினாரானு தெரில..


பஞ்சர்ரா!


எப்படி நடித்தாலும் படம் ஹிட்டாகிடும் என்கிற ஆணவமும் அகம்பாவமும் அதிகமா இருந்தா எப்பேர்பட்ட சூப்பர் ஸ்டார் படமும் படுத்துரும் என்பது குசேலபடிப்பினை. இதுவும் அதே கேட்டகிரியில் அடங்கும். மக்களை மாக்கான்களாக்கி அழகு பார்த்திருக்கிறார்கள் சன்பிக்சர்ஸ் மற்றும் சங்கிலிமுருகன் கூட்டணியினர்.. ஒருபக்கம் யதார்த்த வெறிபிடித்த கூட்டமொன்று ரத்தம் வழிய வழிய படமெடுத்து உயிரை வாங்குது.. இன்னொரு பக்கம் இப்படி மசாலா படமெடுக்கிறேனு கி.மு காலத்து கதையெல்லாம் எடுத்து பஞ்ச் பேசி ரத்தம் கக்க வைக்குது.. இந்த அநியாயத்த தட்டிக்கேக்க யாருமே இல்லையா!


சாம் ஆண்டர்சனின் யாருக்கு யாரோ, விஜய டீயாரின் வீராசாமி உங்களுக்கு பிடிக்குமா.. இந்த படமும் உங்களுக்கு மிகமிக பிடிக்கும்.. முழுமையான காமெடி கலாட்டா!. எனக்கு பிடித்திருந்தது... ரசித்து சிரித்தேன்.


சுர்ர்ர்றா!


முதலில் சொன்ன பஞ்ச் என்னோப்போல படம் பார்த்தவர்களுக்கும் , விஜய்க்கும் சன்பிக்சர்ஸ்க்கும் சமர்ப்பணம்!



சுறா - சம்பவாமி யுகே யுகே!