24 April 2010
இமயமும் சிகரமும் ரெட்டச்சுழி
‘’டேய் நான் ஸ்டைலுக்கே புள்ளையார் சுழி போட்டவன்டா’’ – இது பாலசந்தர்
‘’என் இனிய தமிழ்மக்களே’’ – இது பாரதிராஜா
அறுபது வயசுக்கு மேலான வயதுடைய ஹீரோக்கள் பஞ்ச் டயலாக் பேசுவதும் அதற்கு ரசிகர்கள் விசில் அடிப்பதும் தமிழ்நாட்டிற்கு புதிதில்லை. ஆனால் 30 வயதுடையவர்களாக நடிப்பார்கள். இந்த படத்திலும் இரண்டு ஸ்டார்கள் திரையில் பஞ்சடிக்க தியேட்டரே அதகளமாகிறது. இருவரும் 60 வயது தாத்தாக்கள். தாத்தாக்களாகவே! (நோ கிராபிக்ஸ்)
ஒரு காங்கிரஸ் பெரியவரின் எகத்தாளம் , ஒரு கம்யூனிஸ்ட் பெரியவரின் வரட்டுத்தனமான கொள்கைகள் மற்றும் பிடிவாதம், அதனால் 40 வருடமாய் டூ விட்டுக்கொண்டு திரியும் இரண்டு குடும்பம். அந்த வீட்டின் குழந்தைகளுக்கும் கூட காழ்ப்புணர்ச்சி. கடுப்புடன் திரிகின்றன. ( பூவே உனக்காக கதை போல் இருந்தால் மன்னிக்கவும் இது ரெட்டச்சுழி படத்தின் கதை ) . நீங்கள் எதிர்பார்பத்தது போலவே இரண்டு குடும்பத்திலிருந்தும் தலா ஒரு பெண்ணும் தலா ஒரு பையனும் காதலிக்கின்றனர். (நீங்கள் எதிர்பார்ப்பது போலவே இரண்டு பெரிசுங்களும் முட்டிக்குது). காதலால் கசிந்துருகி வாடும் காதலர்களை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே குழந்தைகள் ஒன்று சேர்க்கின்றனர். கதைய சொல்லிட்டேனோ! எல்லோருக்கும் தெரிந்த கதையை சொல்லி ஸ்பாய்லர்ஸ் போடுவதில் தவறில்லை.
படத்தின் திரைக்கதையும் வசனமும்தான் படத்தின் மிகப்பெரிய பிளஸ். குழந்தைகள் படம் முழுக்க நிறைந்திருக்கின்றனர். கொஞ்சம் கூட சளைக்காமல் அனைவரையும் கேலி கிண்டல்களால் காலியாக்குகின்றனர். குழந்தைகளின் விளையாட்டையும் சேட்டைகளையும் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருப்பது உங்களுக்கு சலிப்பை தருமானால் இது உங்களுக்கான படம் கிடையாது. பாரதிராஜாவுக்கும் பாலசந்தருக்குமான ஏட்டிக்கு போட்டிகள் மிக மிக குறைந்த அளவே படத்தை நிரப்புகிறது. அதை இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம். படத்தில் அஞ்சலியும் புதுமுக நடிகருக்குமான காதல் காட்சிகள் அவர்களுடைய தமாசான பிளாஸ்பேக்கையும் குறைத்திருக்கலாம்.
இமயமும் சிகரமும் இணைந்து நடித்திருந்தாலும் சிகரத்தை விட இமயம் அந்தர் செய்கிறது. ஸ்கிரீன் பிரசன்ஸில் அள்ளுகிறார் பாரதிராஜா. முதல்மரியாதை சிவாஜியின் உடல்மொழியை நினைவூட்டினாலும் அருமையாக நடித்திருக்கிறார். பாலசந்தருக்கு கௌரவம் ரஜினிகாந்தை காமெடியாக்கும் வேடம். அவருடைய மீசையும் எகத்தாளமும் , 2011 நாமதாண்டா என்கிற ஸ்டைலும் நன்றாக இருக்கிறது. மற்றபடி அஞ்சலி கற்றது தமிழ்,அங்காடித்தெரு படங்களில் நடித்தது போலவே நடிக்கிறார். நோ கவர்ச்சி. அதற்கே சல்யூட் வைக்கலாம்.
குழந்தைகள் எல்லாமே பார்க்க பார்க்க ரசித்துக்கொண்டேயிருக்கலாம். அத்தனையும் முத்துக்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு வித பாத்திரப்படைப்பு , இயக்குனர் தாமிரா பிடியுங்கள் பூச்செண்டை. அதிலும் குஷ்பு என்கிற பெயரோடு வரும் குழந்தையின் உடல்மொழியும் அதற்கேற்ப குஷ்பூ வாயமூடு வசனங்களும் தியேட்டர் அதிருகிறது. தோழர் என்கிற வார்த்தையை வைத்து படம் நெடுக செய்யும் காமெடி கலாட்டா கம்யூனிஸ்டுகளுக்கும் சிரிப்பை மூட்டலாம். (கம்யூனிஸ்டுகள் கேலிகிண்டல்களுக்கு பெயர் போனவர்கள் , அவர்களை வைத்தும் அருமையாக காமெடி செய்ய முடியும் என நான் நிரம்ப நம்புபவன், இந்த படத்தில் அந்த பூர்ஷ்வாத்தனம் சாத்தியமாகியிருக்கிறது, பாவம் காம்ரேட்ஸ் , ஆட்சியில் இல்லாவிட்டாலும் குறையாத காங்கிரஸ்த்தனமான எகத்தாளத்தையும் நன்றாக காமெடித்திருக்கிறார்)
மற்றபடி தாத்தா நீ செத்து போயிரு , அவங்க நல்லபடியா வாழட்டும் மாதிரியான குழந்தைகளின் வசனங்களுக்காக (நிறைய வசனங்கள் அப்படித்தான் ) படத்துக்கு ஏ சர்ட்பிகேட் கொடுத்திருக்கலாம். படத்தின் இசை கார்த்திக் ராஜாவாம். லோக்கல் இன்ஸ்ட்ரூமென்ட்களில் செம குத்து குத்தியிருக்கிறார். பாடல்கள் சுமார்தான். பிண்ணனி நல்ல வேகம். சில இடங்களில் இளையராஜா! . செழியனின் கேமரா கவிதையாக படம் பிடித்திருக்கிறது.
தவிர்க்க்கூடிய எத்தனையோ படங்களுக்கு நடுவில் ,ஆஹா ஓஹோ இல்லையென்றாலும் இரண்டரை மணிநேரம் குடும்பத்தோடு மகிழ்ச்சியாய் பொழுதுபோக்க ஒரு ஃபீல்குட் படம்.