சூப்பர் தாத்தா 99
-அதிஷா
வயது அதிகமானால் உடல் பலம் குறையும் என்கிறது மருத்துவம். ஃபவ்ஜா சிங்குக்கோ அது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. 89 வயதில் மாரத்தான் பந்தயங்களில் கலந்து கொள்ளத் துவங்கியவர் , தன் வயது ஏற ஏற பல சாதனைகளை வரிசையாய் முறியடித்துக்கொண்டே வருகிறார். விளையாட்டு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அது எவ்வளவு கடினமானதாகவே இருக்கட்டும். முயற்சி மட்டுமே போதும் , சாத்தியமில்லாதது எதுவுமே இல்லை. உதாரணம் , இந்த ‘98’ வயது துறுதுறு இளைஞர்.
மாரத்தானில் ஓடுவதற்கு கடுமையான பயிற்சிகள் வேண்டும். தினமும் பத்திலிருந்து பதினைந்து மைல்கள் எங்கேயும் நிற்காமல் ஓட வேண்டும். அதோடு சில மைல்கள் நடைப்பயிற்சி. நிறைய உடற்பயிற்சி. இதெல்லாம் இருந்தால் மட்டுமே மரத்தான் ஓட்டப்பந்தய தூரமான 42.195 கிலோ மீட்டர் தொலைவை சூப்பர் ஸ்பீடில் கடந்து சாதிக்க முடியும். மேலே சொன்ன பயிற்சியில் பாதியாவது இருந்தால்தான் அந்த போட்டிகளில் கலந்து கொள்ளவாவது முடியும். மாரத்தானுக்குகாக பயிற்சி பெறுவது அத்தனை எளிதல்ல.
ஃபவ்ஜா சிங் காலை நான்கு மணிக்கே எழுந்து விடுவார். தன் பேரனை துணைக்கு வைத்துக்கொண்டு ஓடத்துவங்குவார். அவர் வசிக்கும் பகுதியின் இளைஞர்களும் அவரோடு இணைந்து கொள்வர். அவரோடு ஓடும் அனைவருக்கும் மூச்சு வாங்கும். கால்கள் வலிக்கும். அவர்களுக்கெல்லாம் வயது 40க்கும் கீழே!
தாத்தா மட்டும் தனியாக ஓடுவார். அவர் ஓடுவதை பார்க்கும் இளைஞர்களுக்கே மலைப்பாக இருக்கும். ஒரு நாளைக்கு 10மைல் . ஒரு வாரத்திற்குள் 100 மைல் இலக்கு. அதை எப்படியும் நெருங்கி விடுவார். தற்போதைய நிலையில் உலகில் அதிக வயதில் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்பவர் என்னும் பெருமையையும் பெற்றுள்ளார்.
‘’இவர் எப்படி ஓடுகிறார் என்றே தெரியவில்லை. பொதுவாக மாரத்தான் பந்தயங்களில் பயிற்சி மற்றும் உடல்நலமில்லாத யாரும் கலந்து கொள்ள கூடாது , அதிலும் குறிப்பாக வயதானவர்கள்.. அவர்களுக்கு எப்போதுமே கட்டாயம் நோ தான். போதுமான அளவு பயிற்சி மற்றும் சரியான உடல்நிலை இருந்தால் மட்டுமே அதில் கலந்து கொள்ளலாம் , 16 வயதாகவே இருந்தாலும் கடுமையான பயிற்சி அவசியம், ஃபவ்ஜா சிங்கை பொறுத்தவரை இவருடைய உணவு பழக்க வழக்கங்களும் விடாத பயிற்சியும், தன்னம்பிக்கையும் இவரை ஓடவைக்கிறது என்றே நினைக்கிறேன்’’ என்கிறார் ஸ்டீவன் காரல். இவர் உலகின் தலைசிறந்த விளையாட்டுத்துறை மருத்துவர்.
இவருடைய ஒல்லியான கால்களையும் , மெலிந்த தேகத்தையும் பார்த்தால் யாருமே நம்ப மாட்டார்கள். இவரும் மற்றுமொரு தாத்தாவே என்று நினைக்கவைக்கும் உருவம். ஆனால் அவை வெறும் எலும்புகள் மட்டுமே அடங்கிய கால்கள் அல்ல அது, மன உறுதியாலும் தன்னம்பிக்கையாலும் நிரப்ப்ப் பட்டது. தரையில் கால் பட்டவுடன் ஓடத்துவங்கி விடுகிறது. அதுதான் ஐரோப்பிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் 12 உலக சாதனைகளை படைக்க உதவியது. அவருடைய வயதுக்கான அத்தனை உலக சாதனைகளையும் முறியடித்துவிட்டார்.
தன் 89 வயதிலிருந்து இன்றுவரை எண்ணிலடங்காத மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றிருக்கிறார். 2004 ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒலிம்பிக் சுடரை இங்கிலாந்து சார்பாக ஏந்தி சென்றார். 2005 ஜனவரியில் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் அவரை அழைத்து லாகூர் மாரத்தான் போட்டிகளை துவங்கி வைக்கச் சொல்லி கௌரவப்படுத்தினார். அதே ஆண்டில் நியுயார்க்கில் நடைபெற்ற உலக மாரத்தான் போட்டிகளை துவக்கி வைத்தார். 2006ல் ஃபவ்ஜா சிங்கிற்கு இங்கிலாந்து ராணி ‘’LIVING LEGEND” என்கிற விருது வழங்கினார். இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் போட்டிகளை இங்கிலாந்தில் துவக்கி வைத்தபோது கௌரவிக்கப்பட்டார். இப்படி அடுக்கடுக்காக அவருடைய சாதனைப்பட்டியல் நீள்கிறது.
சாதனைப்பட்டியலோடு அவருடைய ரசிகர்கள் எண்ணிக்கையும் கணிசமான எண்ணிக்கையை தொட்டிருக்கிறது. 2005ல் உலகின் பெரிய விளையாட்டு உபகரண நிறுவனமான அடிடாஸ் சில கோடி ரூபாய்களில் இவரோடு விளம்பர ஒப்பந்தம் செய்தது. உலகின் நம்பர் ஒன் விளையாட்டு வீரர்களான லைலா அலி (குத்துசண்டைவீரர் முகம்மது அலியின் மகள்) , டேவிட் பெக்காம்,சச்சின் தெண்டுல்கர் மாதிரியானவர்களை மட்டுமே தன்னுடைய விளம்பரங்களுக்கு பயன்படுத்துகிற நிறுவனம். இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காமுடன் ஃபவ்ஜா சிங் அடிடாஸின் விளம்பரங்களில் இடம்பிடித்தார்.
டேவிட் பெக்காம் குறித்தும் அடிடாஸ் விளம்பரம் குறித்தும் அவரிடம் கேட்டபோது ‘’ என் பேரன்தான் சொன்னான் , அந்த பையன் ரொம்ப புகழ்பெற்ற ஆளாமே! ஃபுட்பால் கூட நல்லா விளையாடுவாராமே ,அங்க போனதுக்கப்பறம்தான் தெரிஞ்சது. எனக்குதான் எதுவும் புரியல , பெரிய மைதானத்துக்கு அழைச்சிட்டு போனாங்க , அங்க என்னை ஓடசொல்லி நிறைய போட்டோ எடுத்தாங்க , அப்புறம் இதோ இந்த ஷூ இரண்டு குடுத்தாங்க’’ என்று ஒரு குழந்தையைப் போல் தன் பேண்டை உயர்த்தி காலணிகளை காட்டுகிறார். இதன் தொடர்ச்சியாக அடிடாஸ் நிறுவனம் அவருடைய பெயரிலேயே ஒரு ஷூ வகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்று உலகெங்கிலும் உள்ள அத்லெடிக் வீரர்களுக்கு உற்சாகம் தரும் இவருடைய வாழ்க்கை விவசாயத்தில்தான் துவங்கியது. பஞ்சாப் ஜலந்தருக்கு அருகில் உள்ள சிறிய கிராமம் பியாஸ் பிந்த். பிறந்து வளர்ந்ததெல்லாமே அங்குதான். முழுநேர கரும்பு விவசாயி. பஞ்சாபியைத் தவிர வேறெந்த மொழியும் தெரியாது. பஞ்சாபைத்தவிர வேறெந்த ஊருக்கும் சென்றதில்லை. ஆறு மகன்கள் , மனைவி, பதி மூன்று பேரன்கள் மற்றும் பேத்திகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தவருக்கு பேரதிர்ச்சியாக அவருடைய மூத்தமகன் எதிர்பாராத விபத்தில் மரணமடைந்தார். அதைத்தொடர்ந்து மனைவியும். அவருடைய வாழ்க்கையை புரட்டிப்போட்ட நாட்கள் அவை. இளைய மகன் லண்டனில் வசிக்க பஞ்சாபில் தனிமையில் ஃபவ்ஜா சிங் கடுமையான மன உளைச்சலோடு தனது இறுதி காலத்தில் இருந்தார். சீக்கிரம் இறந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவர் , ஏனோ திடீரென்று ஒரு மாற்றத்திற்காக தன் மகன் வசிக்கும் இங்கிலாந்துக்கு பயணமானார்.
சொந்த ஊரில் இருந்தாலாவது நண்பர்களோடு உரையாடலாம் , ஆங்கிலம் பேசும் முதியவர்களோடு பூங்காக்களில் மாலைப்பொழுதுகள் ,வெறும் மௌனத்தோடு அமைதியாகக் கழிந்தன. பெரும்பாலும் டிவி அல்லது பூங்கா. மனைவி மற்றும் மகனை இழந்த சோகம் தொடர்ந்து மனதை உருக்கிக்கொண்டிருக்க அதிலிருந்து மீள ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு கட்டினார். சிறுவயதிலிருந்தே அவருக்கு ஓடுவது மிகப்பிடித்திருந்தது. தினமும் ஜாகிங்கை தொடங்கினார். டிவியில் ஒருமுறை மாரத்தான் போட்டி ஒன்று ஒளிப்பரப்பாக அதை பார்த்துக்கொண்டிருந்தவருக்கு நாமும் ஏன் ஓடக்கூடாது என்ற பொறி தட்டியது. ஓடத்துவங்கினார். 89 வயதில் இதெல்லாம் எதுக்குப்பா என்று அனைவரும் தடை சொல்ல தன் அந்த தடைகளை தன் சாதனைகளால் தகர்த்துக் காட்டினார்.
ஆனால் மாரத்தானில் ஓட நிறைய பயிற்சிகள் வேண்டும். அதுவும் இவருடைய வயதுக்கு பாதுகாப்பான பயிற்சிகள் அவசியம். கரணம் தப்பினால் மரணம். அவருடைய வயது அப்படி!. பயிற்சி? பூங்காவில் ஓய்வுக்கு வருவார் ஹர்மந்தர்சிங். 1980 ஒலிம்பிக்கில் இங்கிலாந்துக்காக தடகள போட்டிகளில் கலந்து கொண்டவர். பல மாரத்தான் வீரர்களுக்கு பயிற்சியளித்து வருபவர். ஃபவ்ஜா சிங்கின் திறமையை பார்த்து வியந்துபோனார். தாத்தாவுக்கு பயிற்சிகள் ஆரம்பமானது.
தன் 89வது வயதில் லண்டனில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மாரத்தான் போட்டிகளில் களமிறங்கினார் ஃபவ்ஜா. ஆறு மணிநேரம் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருந்தார். (சாதாரணமாக இளம் வீரர்கள் உலக அரங்கில் இரண்டரை மணிநேரத்தில் மாரத்தான் தூரத்தை கடக்கின்றனர்). அந்த நிகழ்ச்சி குறித்து பேசும் போது ‘’நான் ஓடிக்கொண்டேயிருந்தேன், எனக்கு எதுவும் வித்தியாசமாகத்தெரியவில்லை, மற்றவர்களோடு மகிழ்ச்சியாக ஓடிக்கொண்டேயிருந்தேன், ஓடும் போது கடவுளோடு பேசுவதை போன்று இருந்தது, கடவுளிடம் பேசுவது யாருக்குத்தான் பிடிக்காது , எனக்கு இன்னும் ஓடவேண்டும் போலிருந்தது’’ என்று மகிழ்ச்சியோடு விவரிக்கிறார்.
அதன்பிறகு அவர் கலந்து கொண்ட போட்டிகள் வெறும் ஓடுவதோடும் , பயண தூரத்தை கடப்பதோடு மட்டுமே என்றில்லாமல் சாதனைகளை நோக்கியதாய் இருந்தது. லண்டனில் நடந்த அடுத்த ஐந்து மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டார். ஐந்தாவது முறை ஆறு மணிநேரம் என்பது ஐந்தாக குறைந்தது, அது அவர் வயது கொண்டவர்கள் பிரிவில் உலக சாதனை. உலகின் பார்வையும் அவர் பக்கம் திரும்பியது. அதன் பின் எல்லாமே ஜெயம்தான்.
பயிற்சியாளர் ஹர்மந்தர் சிங்குக்கு ஃபவ்ஜா சிங்குடைய உடல் இன்றும் கூட மர்மமனாதுதான். ‘’அவர் எவ்வளவு குறைவாக சாப்பிடுகிறார் என்று தெரியுமா? ஆனால் அவருக்காக நாங்கள் எந்த உணவையும் பரிந்துரைப்பதில்லை , அவருடைய தின பயிற்சிகளுக்கேற்றாற் போல அவருடைய உடல் பழகிவிட்டது , அதை புதிய உணவுகள் கொடுத்து பாதிப்படைய செய்ய விரும்பவில்லை, நாம் எதையாவது கொடுத்தாலும் அவர் உண்ணமாட்டார்’’ என்று கூறி வியக்கிறார்.
சராசரி இந்திய குடிமகனின் வயதைக்காட்டிலும் இரண்டு மடங்கு கூடுதலான வயதிலும் எப்படி இவரால் ஓட முடிகிறது ? ‘நான் அசைவ உணவு எடுத்துக்கொள்வதில்லை, குடிப்பழக்கமோ புகைப்பழக்கமோ எப்போதும் கிடையாது, காலையில் ஒரு கப் டீயுடன் கொஞ்சம் ரொட்டி, மதியம் ஒரு சப்பாத்தி, கொஞ்சம் காய்கறிகள் , இரவு சப்பாத்தியுடன் இஞ்சிகூட்டு , அவ்ளோதான் என் டயட்!’’ என்று சிரிக்கிறார்.
மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலமும் , விளம்பரங்களிலிருந்து கிடைக்கும் வருவாயையும் முழுவதுமாக பிளிஸ் என்னும் தொண்டு நிறுவனம் மூலமாக ஏழை நாடுகளில் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் மருத்துவத்திற்காக செலவிடுகிறார். இது தவிர பல தொண்டு நிறுவனங்களுக்கும் தன்னுடைய வருவாயை பகிர்ந்தளிக்கிறார். ‘’ இறைவனோடு பேசுவதற்கு தரப்படும் கூலியை அவனிடமே திருப்பி தருவதுதானே சிறந்தது ’’ என்கிறார்.
1976ஆம் ஆண்டு 98 வயதில் கிரீக் நாட்டைச்சேர்ந்த டிமிட்ரான் யோர்டானிஸ் மாரத்தான் போட்டியில் 7 மணிநேரத்தில் ஓடியதே இதுவரை சாதனையாக உள்ளது. இந்த ஆண்டு அந்த சாதனையை தன் 99வயதில் ஃபவ்ஜா முறியடிப்பேன் என்று கூறியுள்ளார். அதற்காக கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டும் வருகிறார்.
விளையாட்டில் சாதிக்க நினைப்பவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பொட்டிலடித்தது போல் ‘’ விளையாட்டில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றிபெற , நிறைய பயிற்சி தன்னம்பிக்கை , இதற்கெல்லாம் மேல் எது செய்தாலும் அதில் மற்றவருக்கு உதவும் நல்ல மனம் இருந்தால்... அது போதும், வெற்றி நிச்சயம்’’ என்கிறார் இந்த சூப்பர் தாத்தா.
தாத்தாவின் ஃபேஸ்புக் பக்கம் - http://www.facebook.com/home.php?#!/pages/Fauja-Singh/225889357609
நன்றி - புதியதலைமுறை.