29 April 2010
சபாபதி - 1941
தமிழில் வெளியான முதல் முழுநீள நகைச்சுவைத் திரைப்படம் சபாபதியாகத்தான் இருக்க வேண்டும். அதற்குமுன் வெளியான திரைப்படங்களை இதுவரை எனக்கு பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. அப்படி எந்தப்படமும் டிவிடியாக விற்பதாகவும் தெரியவில்லை. மேல் விபரங்களும் கிடைக்கவில்லை. நண்பர்கள் உதவலாம்.
1941ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் நாள் இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது (நன்றி wiki). படத்தின் நாயகன் 'முட்டைக்கண்' டி.ஆர்.ராமச்சந்திரன் , 15 வயது பையனைப்போல் இருக்கிறார் ( வயது 12-13 இருக்கலாம்). படத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனாக நடித்துள்ளார். இவர் அன்பே வா படத்தில் சரோஜாதேவிக்கு தந்தையாக நடித்திருப்பார். இவர் இந்த படம் வெளியான காலத்தில் மிகபெரிய நடிகராம். அப்போதெல்லாம் அதிகம் அறியப்படாத எம்.ஜி.ஆர் , டிஆர் ராமசந்திரனுக்காக தன் பெயரை எம்.ஜி.ராமச்சந்தர் என்றே அழைக்கவும் டைட்டிலில் போடவும் சொல்வராம்!
படத்தின் நாயகி ‘லக்ஸ் ஸோப்’ பத்மா (அந்தகாலத்து லக்ஸ் விளம்பரமாடல் போல!). அவருக்கும் 12 அல்லது 13 வயதுதான் இருக்க வேண்டும். தமிழ்சினிமாவின் மிகமிக இளம் நாயகி. பாலர் பள்ளியிலிருந்து பிடித்துவந்திருப்பார் போலிருக்கு! இவர் 1940களின் துவக்கத்தில் வெளியான பல படங்களில் நடித்தவராம்.
படத்தின் பெரும்பகுதியை நாயகனும் அவனோடு இருக்கும் துணை நாயகனுமே பகிர்ந்து கொள்கின்றனர். அண்மையில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் 35 வயது விஜய் பிளஸ்டூ படிப்பதாய் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதற்கே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இந்த திரைப்படத்தின் நாயகன் ஆறாம் வகுப்பு படிக்கிறான். நம்புங்கள் சத்தியமாக ஆறாம் வகுப்பு. அவரோடு படிக்கும் சக மாணவனுக்கோ திருமணமாகி மூன்று குழந்தைகள். அவர்கள் இருவரைத்தவிர மற்றவரெல்லாம் நிஜமான ஆறாம்வகுப்பு மாணவர்களைப் போல சின்னதாக உள்ளனர்.
வாத்தியார் இல்லாத நேரத்தில் அவரை கார்ட்டூன் போல வரைந்து வைத்து கலாய்க்கும் இதுவரை தமிழில் வெளியான பல ஆயிரக்கணக்கான படங்களுக்கு இந்த படம் அரிச்சுவடி. முதல் காட்சியே அதுதான். வாத்தியாருக்கு மீசை வரைதல் , புத்தகத்தின் பக்கங்களை கிழித்து வைத்து விளையாடுவது மாதிரியே நிறைய சேட்டைகள் பிளஸ் குறும்புத்தனங்களுடன் ஹீரோ ஓப்பனிங். ஓப்பனிங் சாங் கூட உண்டு. (எந்த கலர் தமிழன்களுக்கு எந்த மெசேஜூம் இல்லை )
படத்தின் இரண்டாவது நாயகன் இன்னொரு சபாபதியாக வரும் காளி.என்.ரத்தினம். படுபயங்கர சேட்டை படம் முழுக்க. அதிலும் பெயர் குழப்பம் கூடுதல் சேட்டை. அவருடைய முகம் ஒவ்வொரு காட்சியிலும் அஷ்டகோணலாக மாறும் போதும் ஏதாவது சில்வண்டித்தனமான வேலைகள் செய்யப்போகிறார் என்பது புரிந்து விடுகிறது. அதற்கு பின் வரும் காட்சிகளில் வெடிச்சிரிப்பு உத்திரவாதம். அவருக்கு ஜோடியாக வரும் பெண்ணும் (டி.பி.ராஜகாந்தம்) , இருவருக்குமிடையேயான காதலும் கனக்கச்சிதமான காமெடி கலக்கல். பிற்காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணன்-மதுரம் ஜோடிக்கு இணையாக பேசப்பட்ட ஜோடியாக காளிரத்னம்-ராஜகாந்தம் ஜோடி இருந்துள்ளது.
நாயகன் சபாபதிக்கு (டி.ஆர்.ராமச்சந்திரன்) பள்ளியில் படிக்கும் போதே திருமணம். பின் பாஸானால்தான் சோபனம்!(முதலிரவு) என கன்டிஷன் போட்டுவிடுகிறார் தந்தை. பெண்ணை அவரது தாயார் வீட்டில் விட்டுவிட்டு சோபனம் பண்ணாத சோகத்தில் அலையும் நாயகன். அவன் தீபாவளிக்கு மாமியார் வீட்டிற்கு செல்ல அங்கே நடக்கும் கூத்துகள்.. அவன் கடைசியில் பாஸாகி அப்பாவின் ஆசையை தீர்த்தானா? அல்லது பாஸாகமலேயே சோபனம் பண்ணி மகிழ்ச்சியாக வாழ்ந்தானா என்பதை சின்னத்திரையில் காசு கொடுத்து டிவிடி வாங்கி காண்க!
படத்தில் தமிழாசிரியாக கே.சாரங்கபாணி. அந்த காலகட்டத்தில் தமிழாசிரியர்கள் நடத்தப்பட்ட விதமும், அவர்கள் எப்படி ஒரு கோமாளியாக சித்தரிக்கப்பட்டனர் என்பதும் கதையோட்டத்திலிருந்து தெரிகிறது. ஆங்கிலம் படிப்பதும் பேசுவதுமே உயர்சிந்தனை என்கிற சமூக மாற்றம் தமிழகத்தில் வேரூன்றிய காலகட்டமாக இருக்க வேண்டும்.
படத்தில் எழுபது வருடத்திற்கு முந்தை நகரத்து பணக்காரர்களின் வாழ்க்கைமுறை பதிவாகியிருக்கிறது. படத்தின் நாயகன் சபாபதியை சபாபதி முதலியார் என்கிறார் அவருடைய ஆசிரியர். 12 வயது சபாபதி முதலியாரை மரியாதையோடு அப்பா என்றழைக்கிறார் , அவனோ வீட்டு வேலைக்காரனான சபாபதியை டேய் இங்க வாடா.. என்று அதட்டுவதும் அவனை அடிப்பதுமாக.. பணக்காரர்களின் வெட்டிபந்தா, ஓவர் சீன் என பல காட்சிகளும் வயிறை புண்ணாக்குகிறது. மாப்பிள்ளை பார்க்க வந்தவர்கள் முன் வெட்டிப்பந்தா பண்ண அந்த அமெரிக்கனோ இந்தியானோ என்சைக்கிளோபீடியாவை எடுத்துவா என்று அதட்டும் காமெடி விவேக்கை நினைவூட்டியது.
அந்த காலத்தில் பிராமணர்களுக்கென தனியாக ஹோட்டல்கள் இருந்திருக்கும் போலிருக்கிறது. அதைவைத்து காமெடி செய்திருப்பார்கள். நமக்கு தகவல். இப்படி படம் முழுக்க 1941ஆம் ஆண்டு குறித்த சின்ன சின்ன தகவல்கள் கசிகின்றன.
அந்த காலத்தில் தேர்தலில் போட்டியிடுபவருக்கு யார் வேண்டுமானாலும் ஓட்டுப்போடமுடியாது. பட்டம் படித்தவர்களும் பணக்காரர்களும்தான். தேர்தலில் போட்டியிடும் சபாபதியின் தந்தையார் அவனுடைய வாத்தியாரிடம் ஓட்டு போட சொல்லி பணம் கொடுக்கிறார். அவரோ ஓட்டுக்கு பணமா என்று முதலில் மறுத்தாலும் , பையனோட டியூசன் பீசா நினைச்சுக்கோங்க என்றதும் மனைவியின் அதட்டலுக்கு பயந்து வாங்கிக்கொள்கிறார். இது தரும் தேர்தல் தகவலை நீங்களாக புரிந்து கொள்ள வேண்டும். மனைவியின் அதட்டலுக்கு பயப்படுவது 1941லிருந்தே இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
படத்தின் கதை தமிழ்நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார். அந்தக்காலத்திலேயே முதலிரவை மையப்படுத்தி கதையை நகர்த்தியிருக்கிறார். இது அவருடைய மேடை நாடகத்தின் திரைவடிவமாகும்.
இசை யாரென்று தெரியவில்லை, குத்துப்பாட்டு கிடையாது, ஆனால் நாதஸ்வரம்,கர்நாடக இசை முதலான தத்தரீனாவுக்கு கியாரண்டி! நகைச்சுவை படங்களுக்கே உரிய டொய்யாங் டொய்யாங் படம் முழுக்க! சரஸ்வதி வாத்ய கோஷ்டிக்கு ஒரு ஷோட்டு! படத்தில் பல பாடல்கள் எண்ணிக்கை நினைவில்லை. காமெடி பாடல்களும் உண்டு.. கூர்ந்து கேட்டால் தமிழறிவு பெருகும்.. சுத்ததமிழில் காமெடி பண்ணலாம்!
படத்தின் சில காட்சிகளில் அந்தக்கால சென்னை வருகிறது. அதிக கட்டிடங்கள் இல்லாத ஓரளவு சுத்தமான சென்னை. இப்படி பிளாக் அண்ட் ஒயிட்டில் பார்த்தால்தான் உண்டு.
ஏவிஎம் தயாரித்த இப்படத்தை இயக்கியவர்கள் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் மற்றும் ஏ.டி.கிருஷ்ணசாமி. படத்தை இயக்கியதும் திரைக்கதை எழுதியதும் முழுக்க முழுக்க ஏ.டி.கிருஷ்ணசாமிதான் என்றும் சொல்லப்படுகிறது. (இவர் அறிவாளி,மனம் ஒரு குரங்கு, வித்யாபதி உள்ளிட்ட படங்களை இயக்கியவர்)
படத்தின் பல இடங்களில் உலகப்போர் குறித்த வசனங்கள் இடம் பெறுகிறது. ஆனால் போரின் ஆரம்பகட்டம் என்பதால் அதன் தாக்கம் தமிழ்நாட்டை அடைந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப்படத்தின் மொத்த பட்ஜட் 40000! ஹீரோவின் சம்பளம் மாதத்திற்கு ரூ.35! ஏவிஎம் நிறுவனத்தின் வளர்ச்சியில் இந்தப்படம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
அந்தகாலத்து நகைச்சுவைக் காட்சிகளுக்கு சில இடங்களில் சிரிக்க முடியவில்லை என்றாலும் , பல காட்சிகள் நமக்கு ரொம்ப ரொம்பப் புதுசு. இன்றைய படங்களின் புதிய மொந்தையில் வரும் பழைய கள் படம் முழுக்க! அதற்காகவே இந்தப்படத்தை பார்க்கலாம்.