26 March 2010
டப்பா
சிந்துபாத் லைலாவைத் தேடி பல ஆண்டுகளாக பேய்த்தனமாக சுற்றிக்கொண்டிருக்கிறான். சரோஜா தேவி காலத்திலிருந்து லைலாவைத் தேடினாலும் அவனுக்கு இதுவரை லைலா மட்டும் அகப்படவேயில்லை. லைலாவே ஃபீல்டை விட்டு போய்விட்டார். அதைப்போலவே தோழர்கள் இருவருக்கும், நல்ல உணவு இதுவரை தட்டுப்படவில்லை. அனுதினமும் மதியம் வந்துவிட்டால் தோழர்களின் வேட்டை துவங்கிவிடும். ஏழுமலை,ஏழுகடல் தாண்டி டீக்கடை வைத்திருக்கும் சேட்டன் கடையில் நல்ல குழாப்புட்டு , கடலையுன் யாராவது சேச்சியிடம் கிடைக்கிறதென்று யாராவது ஆகாவழி எழுத்தாளர் எழுதினால் கூட அதையும் முயன்று பார்த்துவிடுவது தோழர்கள் பாணி. அதை தின்று பேதி வந்தால் அதையும் அந்த எழுத்தாளருக்கே வாசகர் கடிதம் எழுதும் அந்த இரண்டு தோழர்களில் அடியேனும் ஒருவன்.
இது நான் பங்கு பெறும் , எழுதும் கதை என்றாலும் நாயகன் தோழர்தான். திநகரின் வீதிகளுக்குள் புகுந்து சுற்றிக்கொண்டிருந்த மொக்கையான சுபதினம். காய் கனி கல் எதுகிடைத்தாலும் தின்னுகிற அகோரப் பசி. பசி எடுத்துவிட்டாலே மண்டைக்குள் குயில் கூவ ஆரம்பித்துவிடுமே.
அன்னாடம் காய்ச்சிகளுக்கு கையில் வைத்திருக்கும் பணத்தை பொறுத்து உண்ணுமிடம் , இடம் மாறும். சம்பளம் வாங்கி மூன்று நாள் முழுதாக முடியாத நாளில் கேட்கவும் வேண்டுமா? தோழருக்கு யோசனை தோன்றியது ‘’வொய் நாட் பஞ்சாபி தாபா?’’
‘’நோ பிராப்ளம் பாஸ் வீ வில் கோ , பட் வேர் பாஸ்! ’’ ( ஆங்கிலம் உதவி – சூப்பர் இங்கிலிஷ் கோச்சிங் சென்டர், தண்டையார் பேட்டை– ஆங்கிலம் பேச எழுத அவங்க கிட்ட போங்க , பிரபலங்கள் பரிந்துரைக்கும் ஆங்கில கோச்சிங் சென்டர் )
பஞ்சாபி தாபா என்றதும்..... வண்டி ச்சும்மா... விர்ர்ர்ர்ரூம்..... என்று சீறிப் பாய்ந்தது. என்று எழுதவேண்டும் என்கிற ஆசை என்னைப்போலவே படிக்கும் உங்களுக்கும் இருக்கலாம். ஏனோ அப்படியெல்லாம் தோழருடைய வண்டி போகாது. அப்படிப் போவதாக இருந்தால் முதலில் என்னுடைய நட்பை துண்டித்து விட்டு நல்ல நாட்டுக்கட்டைகளுடன் சுற்றிக்கொண்டிருப்பார்.
கடகுடமடகுட என்று பொறுமையாக எஸ்.ஐ.ஈ.டியின் இளஞ்சிட்டுகளை ஒரப்பார்வை பார்த்தபடி ( அதில் ஒரு பெண் அடியேனை உற்று உத்து பார்த்த கதை பிறிதொரு சந்தர்ப்பத்தில்) மெதுவாக கடந்து , தேனாம்பேட்டை புதுப்பாலத்திற்கு (உபயம் , நன்றி , வாழ்க – தளபதி ஸ்டாலின் , திமுக இளைஞரணி சைதாப்பேட்டை கிளை) கீழேயிருந்த புகழ் பெற்ற பஞ்சாபி டாப்பாவை அடைந்தோம்.
அது மிகப்பெரிய உணவு விடுதி. பெரும் பணக்காரர்கள் வந்து போகும் இடமாக இருக்க வேண்டும். நிறைய குடிசைகள் இருந்தன.
குடிசைகள் சிகப்பு நிற வண்ணப்பூச்சுடன் , பூச்சி கூண்டுகள் போல் இருந்தன. அதனுள்ளே சில வெளிநாட்டுக்காரர்கள் கையில் முள் கரண்டியில் கோழியை சொருகி கடித்துக்கொண்டிருந்தனர். பாஸ் இப்படியே ஓடிப்போயிரலாம் ரொம்ப துட்டு செலவாகும் போலருக்கு என்றேன். அட வாங்க பாஸ் நான் பாத்துக்கறேன். என்று தன் பாக்கட்டை தட்டி உள்ளே நுழைந்தவருக்கு, ரிசப்ஷன் எது பில் போடும் இடம் எது என்பதே முதலில் விளங்கவில்லை.
சார் பில் என்று சப்பை மூக்கு ஹிந்தி கார பையனிடம் விசாரித்தார். அவனை அந்த ஹோட்டலில் சார் என்று அழைத்த முதல் குடிமகன் நானாகத்தான் இருக்கவேண்டும். புன்னகைத்தான். திஸ் பிளேஸ் என்றான். அவனுக்கு எங்கள் அளவிற்கு ஆங்கிலம் தெரியாது போலிருக்கிறது. அவனிடமும் சூப்பர் இங்கிலிஸ் ஸ்பீக்கிங் கோர்ஸ் விளம்பரம் போட்டுவிட்டு , தோழர் ஆர்டரை தொடங்கினார் , டூ பப்பே என்றார். என்னது என்றேன். பாஸ் பப்பே பாஸ் பப்பே என்றார் தோழர். நான் பெப்பே என்று விழித்தேன்.
பொதுவாக சோற்றை பார்த்தாலே ரஞ்சிதாவைக் கண்ட நித்தியைப்போல மனம் குதூகலமடைந்து ஸ்தூலம் நட்டுக்கும். ஆனால் அங்கே அடிக்க வைக்கப்பட்டிருந்த உணவுகளை பார்த்தால் திருட்டு வீடியோவில் சிக்கிக்கொண்ட தேவநாதன் போல திருதிருவென விழிக்க வேண்டியிருந்தது. மஞ்சள் நிறத்தில் மண்புழு போல குவித்து வைக்கப்பட்ட நூடுல்ஸ் , ரத்தக் கலரில் ஏதோ சிவப்பு நிற கூட்டு , அருகிலேயே சப்பாத்தி, அதற்கு பக்கத்தில் மஞ்சள் நிற குழம்பு , கொட்டி வைக்கப்பட்ட ஜிலேபிகள் என பார்க்கவே கந்திரகோலமாய் பணக்கார ஹோட்டல் போல இருந்தது. சோற்றைத் தேடினேன்! இல்லை. குழம்பு இல்லை. என்னைப் போன்ற மனிதர்கள் உண்ணுகிற எந்த சமாச்சாரமும் கண்ணில் தென்படவில்லை. என்ன பாஸ் இது.. யோவ் இதென்ன சரவணபவனா திஸ் இஸ் பஞ்சாபி டபா! என்ன கருமம் புடிச்ச டப்பாவோ என்று நொந்தபடி கையில் சிக்கியதிலெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி வைத்துக்கொண்டேன். கொஞ்ச நேரத்தில் என்னுடைய மொக்கையான தட்டு பிச்சகாரன் பாத்திரம் போல் ஆகி இருந்தது. சாப்பிட்டு கொண்டிருந்த பலருடைய தட்டும் அதே கோலத்தில். நூடுல்ஸை வாயில் தள்ளினேன் லேசாக குமட்டியது. அடக்கிக்கொண்டு தின்ன ஆரம்பித்தேன். எதிரில் ஒரு போர்டு இருந்தது. அதில் உணவை வீணாக்காதீர்கள். உணவை வீணாக்கினால் அதற்கான காரணம் கேட்கும் உரிமை மேனேஜ்மென்ட்டுக்கு உண்டு என ஆங்கிலத்தில் எழுதிருந்தது.
அந்த போர்டை பார்த்துவிட்டு என் தட்டைப்பார்த்தேன் மேனேஜ்மென்ட் கேள்வி எழுப்பும் அளவிற்கு உணவுகள் இல்லை. இதே நேரத்தில் தோழர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது முக்கியம். பார்க்கும் உணவிலெல்லாம் பாய்ந்து கொண்டிருந்தார். எதை எடுத்தாலும் ஒரு கிலோவுக்கு குறையாமல் அள்ளி தட்டில் ரொப்பிக் கொண்டிருந்தார். அவருடைய தட்டு குறைந்தது நான்கு கிலோ இருக்கும். தோழர் எதிரிலிருந்த போர்டை பார்க்கவில்லை போலிருக்கிறது.
உண்ண ஆரம்பித்தோம். அவர் மானை வேட்டையாடும் புலிபோல எல்லா ஐட்டங்களையும் மேய்ந்து கொண்டிருந்தார். நான் புல் மேயும் மான் போல பிச்சு பிச்சு..
தோழரால் ஒரு கட்டத்துக்கு மேல் முடியவில்லை. தட்டில் பாதி உணவு அப்படியே இருந்தது. என் தட்டு காலி. பாஸ் முடியல என்றார். ஹலோ மரியாதையா தின்னுருங்க இல்லாட்டி திட்டுவாங்களாம் என்றேன். யார் சொன்னா?
அதோ அங்க பாருங்க. போர்டை பார்த்தார். பாஸ் அது சும்மா பேருக்கு எழுதிருப்பாங்க என்றார். யோ அங்க பாருயா அவன நம்ம தட்டையே பாத்துட்டுருக்கான் என்று அந்த ஹோட்டல் தொழிலாளி ஒருவனை சுட்டிக்காட்டினேன். அர்னால்ட் போல பெரிய சைஸ் கைகளுடன் வீங்கி வெடிப்பது போன்ற ஆஜானு பாகுவான உருவம் , ரெண்டு புல் மீஸ் சாப்பிடுவான் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். தோழருக்கு அதுக்கே லேசாக வயிற்றை கலக்கியிருக்க வேண்டும். இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் லேசான பயம் அவருடைய கண்களில் தெரிந்தது. யெஸ் ஐ சீ இன் ஹிஸ் ஐஸ். பார்த்தேன் அந்த பயத்த நான் பார்த்தேன்.
கஷ்டப்பட்டு அந்த தட்டை காலி செய்யும் முயற்சியிலிருந்தார் தோழர். ஆனாலும் தட்டு காலியான பாடில்லை. ஜிலேபிகள் வேறு ஐந்தாறு எடுத்து வந்திந்தார். பாஸ் நீங்க இரண்டு சாப்பிடுங்களேன் என்றார். தோழர் வாமிட் வரமாதிரி இருக்கு என்னால முடியாது என்ன மன்னிச்சிருங்க என்றேன். வேறு வழியே இல்லை இதுக்கு மேல் முடியாது என நினைத்தவர் ஒரு சப்பாத்தியை மீதமிருந்த உணவுகளின் மேல் மூடியது போல் வைத்தார். தூரத்தில் நின்று கொண்டிருந்த காட்டெருமை நண்பர் அதை பார்த்துவிட்டார்.
தோழர் நித்தியானந்தர் போல திருதிருவென விழித்தபடி புன்னகைத்தபடியே அந்த சப்பாத்தியை பிய்த்து வாயில் போட்டார். அந்த காட்டெருமை திரும்பிக்கொண்டது. பாஸ் வாங்க போயிரலாம் என்றார். ஹலோ மரியாதையா எல்லாத்தையும் சாப்பிடுங்க இல்லாட்டி அவங்க திட்டுவாங்க..
முடியாது பாஸ்..
அந்த காட்டெருமை தோழரை உற்றுப்பார்ப்பதை கவனித்தவர் என்ன நினைத்தாரோ மெதுவாக எழுந்து அங்கிருந்து கொஞ்ச கொஞ்சமாக நடக்க ஆரம்பித்தார். ஹலோ எங்க போறீங்க பாஸ் நில்லுங்க நில்லுங்க என்று நானும் பின்னாலேயே செல்ல , அந்த காட்டெருமை எங்களை நோக்கி வருவதைப்போல் இருந்தது. இப்போது எனக்கும் குலைநடுங்கவது போல் இருந்தது.
தோழர் அவசர அவசரமாக தன்னுடைய வண்டி சாவியை பாக்கெட்டிலிருந்து எடுத்து பைக்கை ஸ்டார்ட் செய்து , பாஸ் ஏறி உக்காருங்க என்றார். நான் அமர்ந்தேன். இந்த முறை நிஜமாகவே முதல்முறையாக அவருடைய பைக் விர்ர்ர்ரூம் என்று கிளம்பியது, திரும்பி பார்த்தேன். அந்த காட்டெருமை எங்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தது தெரிந்தது. ஆஹா அடிப்பாய்ங்க போலருக்கே பாஸ் என்றேன்.. வண்டி ஒரு பெட்டிக்கடையில் நின்றது.
எப்போதும் போல் அதே சிகரட்டும் தீப்பெட்டியும். அந்த ஹோட்டலிலிருந்து வெகு தூரம் வந்திருந்தோம். பாஸ் கையே கழுவலையா என்றேன். பெரிய ஹோட்டல்ல டிஷ்யூதான் பாஸ் என்றார். ஓஹோ என்று மண்டையை ஆட்டிவைத்தேன்.
‘’ஆமா உங்க பேக் எங்கே’’ என்றேன். தோழருக்கு அப்போதுதான் நினைவு வந்தது அதை ஹோட்டலில் வைத்தது. வேறென்ன செய்ய காட்டெருமையை மீண்டும் சந்திக்க இருவருமாக கிளம்பினோம்.. விர்ர்ர்ரூம்.
**
Short Story by Athisha