25 February 2010
வாழ்த்துக்கள்
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பிறந்தநாளில் , யாருமில்லா தனி அறையில் வாழ்த்த ஆளின்றி , கனத்த மனத்தோடு தனிமையில் இருந்திருக்கிறேன். நண்பர்கள் அதிகமில்லாமல் சென்னையின் இருண்ட மேன்சன்களில் வாழ்க்கையின் முக்கிய தருணங்களை வாழ்த்துக்களே இல்லாமல் கடந்திருக்கிறேன்.எத்தனையோ தீபாவலிகளும் பொங்கலும் பிறந்தநாளும் வெறுமையாய் கழிந்திருக்கிறது. அப்போதெல்லாம் நம்மை வாழ்த்த யாருமே இல்லையே என்று ஏங்கியிருக்கிறேன். அது போன்ற சமயங்களில் யாரவது போனில் அழைத்துப்பேசும் போது வாழ்த்து சொல்லத்தான் அழைக்கின்றனர் என்று போனை எடுத்தால் வேறு ஏதாவது செய்தியாக இருக்கும். மனவருத்ததோடு அதையும் கடந்து சென்றிருக்கிறேன்.
இதோ ஆண்டுகள் இரண்டு கடந்துவிட்டது. என்னை சுற்றியிருந்த சூழல் மொத்தமாய் மாறியிருக்கிறது. இப்போது எல்லாமே தலைகீழ். ஒற்றை அழைப்புக்காகவும் வாழ்த்துக்காகவும் ஏங்கியவனின் வாழ்க்கை புரட்டிப்போட்டது போலிருக்கிறது. பிப்ரவரி 18 2010 எனது திருமணம். 500க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் , தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் , டுவிட்டரில் , வலைப்பதிவுகளிலில் , பின்னூட்டங்களில், நேரிலும் பலர் என வாழ்த்துக்களாலும் அளவில்லா அன்பாலும் பலரும் திக்குமுக்காட செய்தனர். இதில் பலரும் முகம் அறியாத நண்பர்கள். ஒரு கட்டத்தில் என்னால் போனில் அழைத்து வாழ்த்துபவர்களிடம் என்ன பேசுவதென்றே தெரியாமல் அனைவருக்கும் சொல்லிவைத்தாற்போல நன்றிங்க , ரொம்ப நன்றிங்க என்பதைத்தவிர வேறெதையும் சொல்ல முடியவில்லை.வேறெதையும் சொல்லவும் முடியவில்லை. என்னால் அனைவரையும் நேரில் அழைக்க முடியாவிட்டாலும் அழைக்காமலே பல நண்பர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியது மகிழ்ச்சியளித்தது.
அதை இணையத்தை தவிர வேறெதுவும் சாத்தியமாக்கவில்லை. அப்படி இருந்த என்னை இப்படி ஆக்கிய இணையத்துக்கும் கூகிளுக்கும் முதல் நன்றி. நேரில் வந்து வாழ்த்திய திருப்பூர் கோவை சென்னை ஈரோடு வலைப்பதிவர்களுக்கு நன்றிகள். திருமண நாள் படங்களை அன்றைக்கே வலைப்பதிவில் ஏற்றி திருமணத்திற்கு வரமுடியாது போனவர்களுக்கு உதவிய பதிவர் கோவை ஷர்புதீனுக்கு நன்றி. (படங்கள் இங்கே )
மற்றபடி மின்னஞ்சல் , குறுஞ்செய்தி , டுவிட்டர் ,பேஸ்புக் , சாட் என எல்லா இடங்களிலும் என்னை மனதார வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.
நிஜமாகவே என்ன சொல்வதென்று தெரியவில்லை. நன்றிங்க ரொம்ப நன்றிங்க
சென்னையிலும் பிற ஊர்களிலும் பல நண்பர்கள் திருமணத்திற்கு வருவதாக 100% வாக்களித்துவிட்டு வராமல் ஏமாற்றியிருந்தாலும் அவர்களுடைய சூழ்நிலையை உணர்கிறேன். பரவாயில்லை. ஊரில் உட்கார்ந்து கொண்டே வாழ்த்திய அந்த நண்பர்களுக்கும் நன்றிகள் பல...
********