27 February 2010
சுஜாதா
அவரை எனக்கு அப்போதெல்லாம் பரிச்சயமில்லை. எனக்கு வயது 13 அல்லது 14 இருக்கலாம். கோவை ராஜவீதியில் நாயகன் துப்பாக்கியோடு வில்லனை துரத்தும் ராஜேஷ்குமார் கதைகள் மட்டும்தான் எனக்குத் தெரிந்த எழுத்து. அதற்கு முன்பு வரை சிறுவர் மலரில் வெளியாகும் சிண்டு நண்டு கதைகள் மட்டும்தான். வாரமலரிலும் பழைய குமுதத்திலும் சிறுகதை என்கிற வார்த்தைகளை கவனத்திருக்கிறேன். சிறுவர் மலர் கதைகளை விட அவை எனக்கு எந்த சுவாரஸ்யத்தையும் தரவில்லை. அதனால் சினிமா துணுக்குகளோடும் குறுக்கெழுத்து போட்டியுடனுமாக சிறுகதைகளை கடந்திருக்கிறேன். சமயங்களில் சுபாவும் ராஜேஷ்குமாரையும் சிறுவர் மலர் பொறுப்பாசிரியர் தவிர உலகில் வேறு யாரும் நல்ல கதை எழுதுவதில்லை போலிருக்கிறது என்று நினைத்திருக்கிறேன். மாமா நிறைய படிப்பவர் அடிக்கடி சுஜாதா என்பார் புதுமைப்பித்தன் என்பார் லாசரா மௌனி என்றெல்லாம் பிதற்றுவார். அவர்களெல்லாம் சினிமா தொடர்பானவர்கள் என்கிற ஆவலோடு அவரிடம் விசாரிப்பேன் , அவர் இலக்கியம் அது இது என எனக்கு கொஞ்சமும் புரியாத மொழியில் கடுப்படிப்பார். இவரே இப்படினா அவங்கல்லாம் அய்யயோ என்று பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுவேன்.
சுஜாதா என்றால் ரஜினி,கமல்,பிரபுவுக்கெல்லாம் அம்மாவாக நடிப்பவர் என்பதே என்னுடைய அறிவு தெளிவெல்லாம். விக்ரம் திரைப்படத்திலிருந்து ஏதோ ஒரு காட்சி தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் போது ச்சே என்னமா ரசிச்சு வசனம் எழுதிருக்காருங்க இந்த சுஜாதா என்று மாமா பேசும்போது ஓஹோ அந்த அம்மா படத்துல வசனம் கூட எழுதுவாங்க போலருக்கு என்று நினைத்திருக்கிறேன். டிவியில் என் இனிய இயந்திரா எனக்கு பிடித்தமான தொடர். ஆல் டயம் பேவரைட் என்றும் சொல்லலாம் , வேறு எந்த தொடரும் என்னை அவ்வளவாக வசீகரிக்கவில்லை. ஆனால அது ஒரு மோசமான மேக்கிங் , லோ பட்ஜட் முயற்சி என்றெல்லாம் இப்போது பலர் விமர்சித்தாலும் நான்காம் வகுப்பு படிக்கும் போது அதுதான் நான் கண் கண்ட அவதார்!
பின்னாளில் அது சுஜாதா எழுதிய கதை என்று மாமா சொன்ன போது ஆச்சர்யமாக இருந்தது. அட ரஜினிக்கு அம்மாவ நடிக்கறவங்க எவ்ளோ நல்ல கதை எழுதிருக்காங்க! . தொடர்ச்சியாக சுஜாதா குறித்து மாமாவிடம் கேட்கும் போதெல்லாம் அவருடைய பிரியா,கரையெல்லாம் செண்பகப்பூ,காயத்ரி என்று சினிமா தொடர்பான அவரது கதைகளை சுட்டிக்காட்டிப் பேசுவார். ஏனோ எங்கள் ஊர் நூலகத்தில் சுஜாதா புத்தகங்கள் ஏதுமில்லை. எல்லாமே சிறுவர் கதைகள்தான். மாமாவிடம் கேட்டால் தம்பி இன்னும் நீ வளரணும் அதுக்கப்பறம்தான் சுஜாதாலாம் படிக்கணும் போ என்று விரட்டுவார். அதற்கான காரணம் எனக்கு அப்போதெல்லாம் விளங்கவில்லை. இப்போதும். பின் சில ஆண்டுகள் சுஜாதாவுக்கும் எனக்குமான தொடர்புகள் ஏதுமின்றி இருந்தேன்.
இன்டர்வியூவிற்காக திருச்சி செல்ல வேண்டி இருந்தது. ரயிலில். கோவையிலிருந்து திருச்சிக்கு ரயிலில் செல்வது மகா கொடுமையாக இருக்கும். சின்னசின்ன ஸ்டேஷன்களிலும் நின்று நின்று ஆமை வேகத்தில் செல்லும். அந்த நேரத்தில் அமெரிக்கா போய் திரும்பிவிடலாம். என்னோட பயணித்த சக பயணி ஏதோ ஒரு புத்தகத்தை படித்த படி வந்தார். நடுவே மூடிவைத்துவிட்டு ஜன்னலோரம் பராக்கு பார்க்க ஆரம்பித்தார். அந்த புத்தகம் ‘ஆ’ அதை அவரிடமிருந்து ஏன் இரவல் வாங்கினேன் என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை அந்த தலைப்பு ஈர்த்திருக்க வேண்டும். ஏனோ வாங்கிவிட்டேன். புரட்டத்துவங்கினேன். திருச்சி வரும் போது முக்கால் வாசி புத்தகத்தை வாசித்து முடித்திருந்தேன். பயணம் இன்னும் கொஞ்சம் நீண்டால் தேவலை என்பது போலிருந்தது. ஆனாலும் புத்தகம் பிடுங்கப்பட்டது. என் வாழ்வில் முதல்முறை ஒரு தமிழ்புத்தகத்தை திருச்சியில் இறங்கியதும் வாங்கினேன். அது ‘ஆ’ . அந்த புத்தகத்தை விட அதை எழுதியவர் என் மூளைக்குள் ஏதோ வசியம் வைத்துவிட்டதை உணர்ந்தேன். புத்தகத்தை முழுமையாக படித்து முடிக்கும் வரை அதை எழுதியவர் யார் என்பது தெரியாமலேயே படித்திருக்கிறேன். புத்தகத்தின் பின் அட்டையிலிருந்த சுஜாதாவின் புகைப்படத்தை பார்த்தபின்தான் அது நடிகை சுஜாதா அல்ல என்பதை அறிந்தேன். அப்போது எனக்கு வயது 18.
தொடர்ச்சியாக சுஜாதா புத்தகங்கள் கண்ணில் படும்போதெல்லாம் வாங்கி படிக்க ஆரம்பித்தேன். சுஜாதாவின் பெயரை எங்கு காணினும் வாசிக்கத் துவங்கினேன். மண்டைக்குள் அத்தனை காலம் அமர்ந்திருந்த ராஜேஷ்குமார் காணாமல் போய் , சிறந்த கதைகள் எழுதுபவர் ஒரே ஆள்தான் அவர் சுஜாதா. உலகிலேயே அவர் மட்டும்தான் கதைகள் எழுதுகிறார். தொடர்ந்து விகடனில் வெளியாகும் அவருடைய கட்டுரைகள் படிக்கும் போது ச்சே இந்தாளு ஜீனியஸ்ப்பா , எல்லா விசயமும் தெரிஞ்சு வச்சிருக்காரே என்று நினைப்பேன். அவரைப்போலாக வேண்டும் என்கிற உந்துதல் எப்போதும் இருந்திருக்கிறது. ஆனால் அது நிச்சயம் சாத்தியமில்லை என்பதை நல்ல வேளையாக ஆரம்பத்திலேயே உணர்ந்துவிட்டேன். என்னை போன்றவனை அடுத்தடுத்து மேலும் பல தமிழ் புத்தகங்களைத் தேடிப் படிக்க வைத்தது அந்த மனிதரால் மட்டுமே சாத்தியமாயிற்று. என்னை மட்டுமல்ல பல ஆயிரம் தமிழ்
வாசகர்களின் வாசிப்புக்கு பின்னால் அவருடைய பங்கு மிகமிக அதிகம்.
அவருடைய வசீகரிக்கும் எழுத்து , வாசகர்களை மட்டுமல்ல பல எழுத்தாளர்களையும் உருவாக்கியுள்ளது. நல்ல வேளையாக அவர் எழுதுகிற காலத்தில் நான் எழுதவில்லை.
2002ல் சென்னை வந்திருந்த புதிதில் டிநகரில் இருக்கும் 149 மாம்பலம் ஹைரோடில் தங்கியிருந்தேன். பாழடைந்த பங்களாவின் அவுட் ஹவுஸ் அது. அதன் ஜன்னலிலிருந்து பார்த்தால் அடுத்த வீடு தெரியும். அது ஏதோ மென்பொருள் நிறுவனமாம். தனிமையில் அந்த நிறுவனத்தையும் அதன் கணினிகளையும் ஜன்னலினூடே பார்த்துக்கொண்டேயிருப்பேன். பின்னாளில்தான் தெரிந்தது , அது சுஜாதாவின் பில்டிங் என்று. அவர் அடிக்கடி வந்து போவார் என்பதும் தெரிந்தது. வாட்ச்மேனுக்கு சுஜாதா அத்தனை பரிச்சயமில்லை. ஆனால் நான் வாட்ச்மேனுக்கு பரிச்சயம் , ஓனர் எப்பண்ணா வருவாரு என்பதை தினமும் கேட்க தவற மாட்டேன். அவரும் 10 மணிக்கு வந்தாரு வினோ , நீ இல்ல என்பார். ஒரு நாள் ஆபீஸுக்கு லீவு போட்டுவிட்டு வாட்ச் மேனோடு அவருக்கு பக்கத்திலேயே அமர்ந்து விட்டேன். ஒவ்வொரு கார் வரும்போதும் இதுல வருவாரோ இதுல வருவாரோ என்கிற ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பேன். அன்றைக்கு அவர் வரவில்லை. அவரை பார்க்கும் முயற்சியை அத்தோடு கைவிட்டுவிட்டேன்.
ஒரு சுபமுகூர்த்த நாளில் பக்கத்துவீட்டு வாசலில் ஒல்லியாய் ஒரு பெரியவர். நீல நிற சட்டையோடு உயரமாய் நின்று கொண்டிருந்தார். அருகில் சென்றேன். கண்டேன். சுஜாதா. ஷாக். உச்சி மண்டையில் சுர்ர்ர். கைகளிலிருந்த முடியெல்லாம் குத்திக்கிச்சு. காருக்காக காத்திருந்தார். நான் அருகில் சென்றேன். புன்னகைத்தேன். அவரும்.
சார் என் பேரு வினோத் இதோ பக்கத்துல இருக்கேன் , ‘மீண்டும் புன்னகை’ , உங்க புக்கெல்லாம் படிச்சிருக்கேன் , ரொம்ப நல்லா எழுதறீங்க , உங்க கதைனா எனக்கு உயிரு , ‘தலையை ஆட்டிய படி புன்னகை’ அவருடைய கார் வந்தது , நீல நிறக்கார் என்ன மாடல் என்ன கம்பெனி என்பதையெல்லாம் பார்க்கவில்லை , ஆனால் அவர் அந்த காரில் சென்றார். தலைசுற்றுவதை போலிருந்தது. அவசரமாக வீதி முக்கு பொட்டிக்கடைக்கு ஓடினேன். கடைகார நண்பனிடம் சொன்னேன். அவனுக்கு சுஜாதாவை தெரியாது. என் மகிழ்ச்சியும் தெரியாது. யார் அவரு என்றான். பாய்ஸ் ஷங்கர் என்றெல்லாம் விளக்கினேன். ஓ அவுரா என்றான் முகத்தில் எந்த ரியாக்சனும் இல்லாமல். கோபமாய் வந்தது. ஒரு கோல்ட் பில்டரை வேகவேகமாக இழுத்தபடி அதே வீதியில் இளநீர் விற்கும் இன்னொரு நண்பனிடமும் சொன்னேன் அவனிடமும் அதே!
அன்றைக்கு இரவெல்லாம் தூக்கமில்லை. சுஜாதா என்னைப்பார்த்து புன்னகைத்த அந்த நொடி , வாவ்.. என்று இருந்தது. பின் அடிக்கடி அவர் காரில் பக்கத்து வீட்டிற்குள் செல்லும்போது புன்னகைப்பேன் . அவர் என்னைப்பார்த்து புன்னகைத்தாரா தெரியாது. புன்னகைத்தேன்.
ஒருவேளை இப்போது அவர் நம்மோடு இருந்திருந்தால் நிச்சயம் அவரோடு உரையாடுகிற வாய்ப்பு கிடைத்திருக்கும். அவரோடு அமர்ந்து பேசுகிற வாய்ப்பு கிடைத்திருக்கும். பத்திரிக்கையாளனாய் ஒரு பேட்டியாவது எடுத்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.
வீ மிஸ் யூ சுஜாதா..