Pages

01 February 2010

தமிழ்(ப்?)படம் விமர்சனம்





மூன்றே நாளில் முப்பத்தி மூனே முக்காலே அரைக்கால் ஹிட்ஸ்களை வாரி வழங்கிய சன்பிக்சர்ஸ் ஏவிஎம் ராடன் டிவி கலைஞர் ஷகிலா சாருநிவேதிதா ஜெயமோகன் அதிஷா வினோத் என் பக்கத்துவீட்டு ஆயா அனைவருக்கும் நன்றி.


(மேலே இருக்கும் வரிகள் அணைந்து அணைந்து டிஸ்பிளே ஆகுமளவுக்கு நம்முடைய விமர்சனம் ஹை பட்ஜெட் இல்லை அதனால் நீங்களே கண்ணை மூடி மூடி பார்த்து மகிழவும்)


தமிழ் இணைய வரலாற்றில் முதல்முறையாக ஐஎஸ்ஓ ஐஎஸ்ஐ பிசிஓ ஏபிசிடி ஐஜேகே தரச்சான்று முத்திரை அனைத்தும் பெற்ற நியாயமான உண்மையான விமர்சனம் இது என்று பங்களாதேஷ் அரசின் சான்றிதழ் பெற்றது.


முன்குறிப்பு ; தமிழ்த்திரைப்படம் ஓடும் மெலோடி தியேட்டரின் மூன்றாம் வகுப்பு பத்து ரூபாய் டிக்கட்டில் முதல் வரிசையில் அமர்ந்து கொண்டு கையில் லேப்டாப் சகிதம் இந்த விமர்சனத்தை அடித்துக்கொண்டிருக்கிறேன். அதனால் இணையத்தில் வெளியாகும் முதல் விமர்சனமும் இதுவே. ஏர்பெல் கனெக்சன் படுமட்டமாக இருப்பதால் இது நான்கைந்து நாட்கள் கழித்தும் வெளியாகலாம்.


பல நூறு வெற்றிப்படங்களை தயாரித்த தயாநிதி அழகிரி அசத்தல் நாயகன் கலியுக கர்ணன் பெரிய தளபதி வைஸ் கேப்டன் மிர்ச்சி சிவா நடிக்கும் படமென்பதாலும் படத்துக்கு ஆறுகோடி தமிழர்கள் பத்து கோடி தமிழ் பிளாக்கர்கள் பதினைந்து கோடி டுவிட்டர்கள் இதுதவிர சில கோடி கீளினர்கள் பல லட்சம் டிரைவர்கள் என பல ஆயிரம் கோடி தமிழ் மக்களின் பயங்கரமான காட்டுத்தனமான முரட்டுத்தனமான எதிர்பார்ப்புக்கு பின் இந்த படம் வெளியாகியுள்ளது. என் எதிர்பார்ப்புகள் முக்கியமல்ல, நமக்கு விமர்சனம்தான் முக்கியம். அதனால் படம் எக்கேடு கெட்டுப்போனாலும் நாசமாக போனாலும் நல்லபடியாக சிறந்த விமர்சனம் செய்ய அருள்புரிய எல்லாம் வல்ல ஜிகிடானந்த பிரகஸ்பதி சுவாமிகளை வேண்டுகிறேன்.


இவ்வளவு எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள இந்த படம் அதை பூர்த்தி செய்துள்ளதா? அதை இப்போதே சொல்லிவிட்டால் , அதிஷா அசத்தல் , கண்ணைமூடிக்கொண்டு ஏதாவது ஒரு வரியை காப்பி பேஸ்ட் செய்து அதிஷா டச் அல்லது அதிஷா நச் பிச் உச் அச் என தும்மிவிட்டு இதுவரை படித்த விமர்சனத்திலேயே இதுதான் சூப்பர் என்று உட்டாலக்கடியாய் பின்னூட்டமிட்டுவிட்டு ஓடிவிடுவீர்கள் என்று எனக்குத்தெரியும். படம் பார்க்கலாமா வேண்டாமா என்பதை பதிவின் ஏதாவது ஒரு வரிக்கு நடுவில் எழுதியிருப்பேன் , பதிவை நாலைந்து முறை படித்துவிட்டு நீங்களே தேடி கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்.. போலவே அது இல்லாமலுமிருக்கலாம்.


வீராசாமி திரைப்படத்திற்கு பின் தமிழ்திரையுலகில் நல்ல திரைப்படங்களுக்கான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் நான் பொதுவாக தமிழ்ப்படங்களை பார்ப்பதில்லை. எப்போதாவது யாராவது ஓசியில் ஐநாக்ஸில் படம் காட்டினால் மட்டும் பார்ப்பேன். சமீபத்தில் அப்படித்தான் தளபதி நடிகரின் வேட்டைக்காரன் படத்திற்கு அவரது ரசிகர் ஓசி டிக்கட் பிளஸ் பாப்கார்ன் பிளஸ் இரவு சரக்கு பிளஸ் ஆட்டோ துட்டு ஐம்பது ரூபாய் கொடுத்து காட்டினார். இனிமேல் இது போன்ற ஆட்களிடம் சேரக்கூடாது என முடிவெடுத்துவிட்டேன். இதுபோன்ற தமிழ்ப்படங்களை பார்த்து விசிலடிச்சான் குஞ்சுகள் பாராட்டலாம். மேலோட்டமாக ஒரு பிரதியை அணுகுபவர்கள் மட்டுமே இந்த கண்றாவியையெல்லாம் ரசிக்க முடியும்.


அந்த மட்டமான தளபதி படம் பார்த்து பாதி படத்திற்கு மேல் பாத்ரூமிலேயே சரண்டைய வேண்டியிருந்தது.கடுமையான பேதி. அதனால் லத்தீன் அமெரிக்க இயக்குனர் பிஞ்சோசெருப்போ மற்றும் துடப்பக்கட்டோ விளக்கமாரோ போன்ற அறிவு ஜீவி இயக்குனர்களின் படங்களை மட்டுமே பார்த்து வருகிறேன். அதிலும் துடப்பக்கட்டோவின் படங்களின் நாம் காணும் பிரதிகள் பார்ப்பவனின் கண்களில் பல பிம்பங்களை உருவாக்கி அதிலிருந்து புறப்படும் சூட்சும வெளிச்சம்.. ச்ச்சே ச்சே உங்களுக்கு அதெல்லாம் புரியாது. அது புரிந்தால் என் விமர்சனத்தின் நான்காவது பாரா வரைக்கும் வந்திருக்க மாட்டீர்கள்.
தமிழ்ப்படத்தில் கதையே இல்லை. ஆனாலும் விமர்சனத்தில் முழுக்கதை திரைக்கதை வசனம் என நான்கு பக்கம் எழுதவேண்டும் என்பது இணைய வழக்கம். என்ன செய்வது விமர்சனம் எழுதும் போது இடைவேளை வரைதான் படம் ஓடியிருக்கிறது. அதனால் அது வரைக்குமான கதையை மட்டும் போட்டுவிடுகிறேன்.


ஒரு ஊரில் ஒரு ஆளு. அவருக்கு இரட்டை குழந்தை பிறக்கிறது. அதில் ஒன்றை ஒரு பாட்டி தூக்கிக்கொண்டு ஓடி விடுகிறது. அந்த பாட்டி அந்த பேரனை வளர்க்க ரோட்டுல வடை சுட்டு வித்துக்கிட்டு இருந்துச்சு.. அப்போ ஒரு ரவுடி காக்கா கும்பல் அந்த வடைய தூக்கிட்டு ஒடிருச்சு.. அப்போ கோபம் வந்த பேரன் காதலியோட டுயட் பாடினான். அப்புறம் வில்லன்கள் பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளானு படம் முடிகிறது. கதை தெரிஞ்சிருச்சா. இனி நீங்கள் தியேட்டரில் போய் படம் பார்த்தால் என்ன பார்க்காட்டி என்ன?


அதனால் கதையில்லாத திரைப்படம் எடுத்த இயக்குனர் கழிவறையில் அமர்ந்து கொண்டாவது கதையை யோசித்திருக்கலாம். மகா திராபையான திரைக்கதை. இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். ஏற்கனவே பல ஆயிரம் முறை அரைத்த மாவையே மீண்டும் அரைத்திருக்கிறார். துவைத்த அதே துணியை துவைத்திருக்கிறார்கள். இதற்கு அரசி சீரியல் பார்க்கலாம். மிக அருமையான சீரியல். சிறந்த சீரியல். (ராடன் வெப்சைட் காரங்க எப்படியாவது இதை படிச்சிருங்கப்பா! )


ஹீரோ சிவாவிற்கு நடிக்கவே தெரியவில்லை. குரலும் சரியில்லை. நடக்கவே தெரியவில்லை. அவருக்கு ரெண்டு கால் இருப்பதே வீண். பாடி லேங்குவேஜ் ரொம்ப வீக். ஜட்டி லேங்குவேஜாவது நன்றாக பண்ணியிருக்கலாம். சிவா நீங்கள் பேசாம முன்னால் மேய்த்துக்கொண்டிருந்த அதே மாட்டையை மேய்க்கலாம். அல்லது ஆட்டை மேய்க்கலாம். நடிப்பெல்லாம் சரியாக வராது. மர்லன் பிராண்டோ,அல்பசீனோ,நிகலொஸ் கேஜ் , தேங்கா பஜ், வெங்காயபோன்டோ போன்ற நடிகர்களின் பாதிப்பு இருக்கிறது. இது தமிழ்சினிமாவிற்கு நல்லதல்ல. இவர் இன்னொரு படம் நடித்தால் இப்படிப்பட்ட நடிகர்களிடமிருந்து ஆண்டவனால் கூட தமிழ்சினிமாவை காப்பாற்ற முடியாது.


ஹீரோயின் ஒல்லியாக இருக்கிறார். இன்னும் சதைபோட்டால் நன்றாக இருக்கும். வில்லன் முறைக்கிறார். அடிவாங்குகிறார். இன்னும் பெட்டராக பண்ணியிருக்கலாம்.
கேமரா.. என்ன எழவு படமெடுக்கிறாங்க. ஒரு காட்சியில் ஹீரோ பேசுகிறார் அவரது மூஞ்சிக்கு நேராக கேமராவை வைக்கின்றனர். அங்கேயா வைப்பது இயக்குனருக்கு கொஞ்சமாவது மூளை வேண்டாமா எப்படிப்பட்ட காட்சியில் நானாக இருந்திருந்தால் கொஞ்சம் கீழே இறக்கி வைட் ஆங்கிளில் காலுக்கு கீழேயோ அல்லது காலை விரித்து நடுவில் குத்தி வைத்திருப்பேன்.


இசையமைப்பாளருக்கு நல்ல எதிர்காலமிருக்கிறது. பிண்ணனி இசையில் மிரட்டியிருக்கிறார். அதிலும் ஹீரோ குச்சிஐஸ் சாப்பிடும் போது அதிரடியாக ஒரு இசை வருகிறதே , மயிர்க்கால்கள் கூச்செரிகின்றன. அவ்வ்வ்வ் என்ன பழையராஜா , பி.ஆர்.பர்மான் அவங்க ஒரு மண்ணாங்கட்டி , தமிழ்சினிமாவிற்கு கிடைத்துவிட்டது ஒரு சிங்கக்குட்டி (அதிஷா டச்!)


மற்றபடி தியேட்டரில் விற்றுக்கொண்டிருந்த பாப்கார்னில் காரமில்லை. இன்னும் கொஞ்சம் உப்பு போட்டிருக்கலாம். பாத்ரூமில் தண்ணி வரவில்லை. படத்தில் மறைந்திருக்கும் குறியீடுகள் பலதையும் பாத்ரூமில் தேடினேன். நிறைய குறி யீடுகள் பாத்ரூம் சுவரில் வரைந்து வைத்திருந்தனர். படத்தில் இது தவிர பல குறியீடுகளை காண முடிகிறது. ஏபிசிடி அஆஇஈ சிலுவை 786 பட்டை நாமம் என பல குறியீடுகள் வருகின்றன. இது பனுவலியலின் அராஜகத்திற்கு எதிரான பதிவுகள். அப்படினா என்ன என்று கேட்க கூடாது எனக்கும் தெரியாது. படத்தில் மிக நுணுக்கமாக பல நுண்ணரசியல்கள் இருக்கிறது. அதை குறித்து தனியாக தமிழ்ப்படம் என்னும் பார்ப்பனீய திராவிட கம்யூனிச பாஸிஸ மாவோயிச மண்ணாங்கட்டியிச மலம் என்றொரு பதிவிட எண்ணியுள்ளேன். மறக்காமல் வந்து அதையும் படிக்கவும்.


இறுதியாக விமர்சனம முடிவில் பஞ்ச் வைக்க வேண்டுமே..


தமிழ்ப்படம் – பப்படம் அல்லது வப்படம்.. ப்படம்..படம்.டம்.டும் 


ஆங்கிலத்திலும் பஞ்ச் வைப்பது லேட்டஸ்ட் டிரெண்ட் , நல்ல வேளை எனக்கு ஆங்கிலம் தெரியாது.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து தமிழ்மணம் தமிழிஷ் இங்கிலீஷ் மலையாளிஷ் தெலுங்குமணம்லு இந்தியிஷ் பிரஞ்சுமணம் போன்ற திரட்டிகளில் மைனஸ் வாக்குகள் போட்டு பிரபலமாக்கவும் என்று கையை காலாக நினைத்து கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன்.


*******


படத்தப்பத்தி ஒன்னுமே சொல்லலையே.. .. எந்த படத்தபத்தி விமர்சனம் எழுதிட்டுருந்தேன்..!