Pages

21 January 2010

இன்பம்,மகிழ்ச்சி,சந்தோசம்,களிப்பு,பூரிப்பு இத்யாதிகள்!



(படத்தை சொடுக்கி பெரிதாக்கியும் பார்க்கலாம்)

திண்டுக்கல் அருகில் இருக்கும் பெயர் மறந்து போன ஒரு சின்ன கிராமத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டம். வார்த்தைகளில் எழுத முடியாத நிறைவான நிகழ்வு. அதனால் இந்த படமும் இரண்டு வரிகளும்தான்.


***


அமீரிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் நண்பர் மோகன் , என்னுடைய சிறுகதை ஒன்றை  குறும்படமாக்கியுள்ளார். கலைஞர் தொ.காவில் ஒளிபரப்பாக இருக்கும் குறும்படப்போட்டியில் அது திரையிடப்படவுள்ளது. எனக்கு போட்டுக்காண்பித்தார். என் கதையை விட அருமையாக எடுத்திருந்தார். அடுத்த மாதம் சிடி தருவதாக கூறியுள்ளார். கதை - அதிஷா என டைட்டிலில் வந்த போது மெய்ஜில்லிர்ப்பு. அடுத்த சுற்றுக்கும் இன்னொரு கதை கேட்டிருக்கிறார். எழுதிக்கொண்டிருக்கிறேன்.

***


இப்போதெல்லாம் பெயர் மறதி அதிகமாகிவிட்டது. பல நண்பர்களையும் நேரில் சந்தித்தாலும் அவர்களுடைய பெயர் சட்டென நினைவுக்கு வர மறுக்கிறது. காரணம் என்னவாக இருக்கும் என யோசிக்கிறேன். எதைக்குறித்து யோசிக்கிறேன் என்பதும் சமயங்களில் மறந்து போகிறது. சில நாட்களுக்கு முன் என் பெயரே மறந்து போய் கால்மணிநேர கடுமையான சிந்தனைக்கு பின் நினைவுக்கு வந்தது. நமக்கு நன்கு அறிமுகமாக நண்பராக இருந்தாலும் சமயங்களில் நேரில் சந்திக்கும் போது யார் இவரு ஏன் நம்மள பாத்து சிரிக்கிறாரு என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறேன். இது என்ன மாதிரி வியாதி என்று தெரியவில்லை. மருத்துவர் ருத்ரனிடம் ஒரு அப்பாய்ன்ட்மென்ட் வாங்கிவிட உத்தேசமாக இருக்கிறேன். ஆனாலும் ஆகாத நண்பர்களை(?) சந்திக்கும் போது இது போன்ற மறதிகள் மகிழ்ச்சியையே அளிக்கின்றன.

***

அடுத்த மாதம் எனக்கு நடக்கபோகிற ஒரு நிகழ்வு மகிழ்ச்சியானதா  இல்லை வருத்தம் தரக்கூடிய துன்பியல் சம்பவமா  என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் நடக்க இருக்கிறது. முறையான அறிவிப்புகளை விரைவில் வெளியிட வேண்டும். எது நடந்தாலும் கோவையிலேயே நடக்கக் கடவது என்ற என்னுடைய பாட்டி சாபம் பலிக்கப்போகிறது. எது நடந்தாலும் நண்பர்கள் அனைவரும் நிச்சயம் வருவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

***

கி்ழக்கு மொட்டைமாடியில் எப்படியாவது நாலு பேரை இந்த ஆண்டில் எழுத்தாளாரக்குவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் பெரியவர் ஒருவர் சென்ற வாரம் பயிற்சி முகாம் ஒன்றை நடத்தினார். நிறைய அறி்வுரைகள் ஐடியாக்கள் கூறினார். வந்திருந்த பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நானும். நல்ல முயற்சி. அடிக்கடி இது போன்ற பயிற்சிப்பட்டறைகள் நடத்தினால் என்னைப்போன்ற சிறுவர்களுக்கு உபயோகமாக இருக்கும். உடல்நலக்குறைவோடு அத்தனைபேரிடமும் பேசிய அந்த பெரியவரை நினைத்து சந்தோசப்படுவதா வருத்தப்படுவதா பெருமைப்படுவதா தெரியவில்லை.

***

பூனைக்குட்டிக்கவிதை




புரியவில்லை என் வீட்டு பூனைக்கு

அம்மா எத்தனை முறை கொன்றழித்துவிட்டாள்

போன முறை ஏழு

அதற்கு முன் எட்டு

இந்த முறை ஆறு

ஒன்றொன்றாய் கொல்ல சோம்பேறித்தனம்

சின்னகிண்ணத்தில் ஒரு துளி விஷம்

அம்மா அடித்துவிடுவாள் அரைசதம்

பூனையும்

புரியவில்லை என் வீட்டு பூனைக்கு

இன்னமும் இரவுகளில் புணர்ச்சி வெறியில்

பிதற்றிக்கொண்டு திரிகிறது இரவெல்லாம்

புரட்சி செய்யத்தெரியாத புரட்டுப் பூனை





****