Pages

19 January 2010

ஆயிரத்தில் இருவர்!






சில படங்கள் உங்களை வியப்பில் ஆழ்த்தும். சில உங்களை தூங்கச்செய்யும். சிலவற்றை உங்களால் ஜீரணிக்க முடியாது. குப்பைகள் எப்போதும் குப்பைகள்தான். ஆனால் மிகச்சில படங்களே குப்பை என்று ஒதுக்கி விட இயலாமலும் ஆஹா என்று சிலாகிக்க முடியாமலும் , படம் முடிந்த பின்னும் அதுகுறித்த நினைவுகளால் வாட்டும் அல்லது அசைபோடச்செய்யும். ஆயிரத்தில் ஒருவன் கடைசி கேட்டகிரி. நான் கடவுள் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும். பலரை கடுப்படித்தாலும் கடுமையான முயற்சி. தன் அத்தனை பலத்தையும் கொண்டு மோதி இருக்கிறார் செல்வராகவன் என்னும் ஒற்றை மனிதர்.


படத்தின் கதை கொஞ்சம் பொன்னியின் செல்வன் கொஞ்சம் இன்டியானா ஜோன்ஸ் , நிறைய லாரா கிராப்ட் , மம்மி, பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் மற்றும் நம் காதுல பூ என பயணிக்கிறது. அது விஷயமல்ல. மேட்டரே திரைக்கதைதான். முதல் பாதி அட்வெஞ்சர். இரண்டாம் பாதி போர். இரண்டையும் ஒரு இடத்தில் முடிச்சு போட வேண்டிய கட்டாயம். அதற்கு மாய மந்திர தந்திர யட்சினி பட்சினிகளை உபயோகித்துள்ளார். செல்வராகவன் சறுக்கியது அங்கேதான். பேரரசு படங்களில் வருவதைப்போல முதல் பாதி காமெடி இரண்டாம் பாதி ஆக்சன் என்கிற அதே பாணிதான். ஆனால் இது கொஞ்சம் வித்தியாசம். இரண்டு பாதிகளும் தனித்தனி அத்தியாயங்களாக மிகச்சிறந்த அனுபவங்களைத் தருகிறது. டபுள் ட்ரீட். சேர்த்து பார்க்கும் போதுதான் உச்சி மண்டையில் சுர்ர்ர்ர்.


கார்த்தி பாத்திரப்படைப்பு அற்புதம். படம் முழுக்க அடிவாங்குகிறார். ரொமான்ஸிலும் சீரியஸ் காட்சிகளிலும் நிறைவாய் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆர் ரசிகராக கைகளில் எம்.ஜி.ஆர் பச்சை குத்திக்கொண்டு ஆரம்ப காட்சிகளில் செய்யும் அலப்பறை அசத்தல் ரகம். ஆன்ட்ரியா இன்னொரு சோனியா அகர்வால் போல் இருக்கிறார். படம் முழுக்க கண்களில் சோகம் அப்பிக்கொண்டு திரிகிறார். அழகம் பெருமாளுக்கு புதுப்பேட்டை தலைவர்,கற்றது தமிழ் வாத்தியார் மாதிரியான பாத்திரங்கள் ஓகே! மிலிட்டரி ஆபீஸர்லாம் கொஞ்சம் டூமச். ரீமாசென் நிறைய காட்டினாலும் நன்றாக நடித்திருக்கிறார். சந்திரமுகி ஜோதிகா லெவலில் இல்லையென்றாலும் பல இடங்களில் உடல்மொழியில் கவர்கிறார்.


பார்த்திபன்!. இந்த பாத்திரத்தில் அவரைத்தவிர வேறு யாரும் சிறப்பாய் பொருந்த மாட்டார்கள். முரட்டுத்தனமான பாத்திரத்தை ஊதித்தள்ளியிருக்கிறார். இசை பல இடங்களில் இரைச்சலாக. உன் மேல ஆசதான்.. தனுஷ் என்றொரு பாடகர் பாடியுள்ளாராம். நல்ல எதிர்காலம் உண்டு. வசீகரிக்கும் குரல். இசையும் துள்ளல். கலை இயக்குனர் கைகளுக்கு முத்தமிடலாம். அட்சர சுத்தமான செட் அமைப்புகள். கிராபிக்ஸும் அங்கனமே!. கடற்கரை காட்சி தவிர. தொழில்நுட்பத்தில் ஹாலிவுட்டை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். அதிலும் அந்த மெகா உருண்டை சண்டைக்காட்சி மூனு D எபெக்ட்.


படத்தில் பல இடங்களில் லாஜிக் மீறல்கள் என்று வரலாற்று ஆய்வாளர்களும் புத்திஜீவிகளும் கூக்குரல் எழுப்பி வருகின்றனர். எனக்கு அதெல்லாம் எதுவும் தெரியவில்லை. தெரியாது. பிரதான பாத்திரங்களுக்கு பைத்தியம் பிடிப்பது, அதற்கான காரணம் சரியாக சொல்லப்படவில்லை. அதற்கு பின் கிழவரிடம் நிர்வாணமாக நிற்பது , அவர் கையை தூக்கி விளக்கு பிடித்து பார்ப்பது,மேலும் சிலபல மந்திரக்காட்சிகள் என காரணம் தெரியாமல் வருகின்றனவற்றை தவிர மற்றவை ஓகேதான். படத்தை மிக நுணுக்கமாக பார்த்து நொட்டை சொல்வதில் விருப்பமில்லை. வேட்டைக்காரனிலும் அசலிலும் இத்யாதிகளிலும் அப்படி பார்த்து சொல்லலாம் , தமிழ் கூறும் சினிமா உலகம் தப்பிப்பிழைக்கும். நல்ல முயற்சிகளில் நொட்டை சொல்வது மேட்டிமைத்தனத்தை முன்னிருத்தலாமே தவிர அஞ்சு பைசாவுக்கு பிரயோசனப்படாது!







திரைக்கதை முதல் பாதியில் மின்னல் வேகத்தில் பயணிக்கிறது. இரண்டாம் பாதி மனதை தைக்கிறது. புரண்டவன் கண்ணுக்கு உருண்டதெல்லாம் ஷகிலா என்பதைப்போல , எதைப்பார்த்தாலும் நம் மக்கள் ஈழப்பார்வையை முன்வைக்கத் துவங்கியுள்ளனர். எப்போதும் சிலருக்கு ஈழமக்களின் வேதனை மனதை தைத்திருப்பது புரிகிறது. ஆனால் ஒரு இனம் மற்றொரு இனத்தால் அழிக்கப்படுகிறது, ,,,, ,,,, ,,,.. படத்தின் கரு அதுதான். அண்மையில் வெளியான அவதாரும் அவ்வகையே! ஈழத்தில் மட்டுமல்ல ஆப்பிரிக்க கண்டத்தில் பல நாடுகளிலும் நிகழ்ந்து வரும் கொடுமை. இது இன்று நேற்றல்ல ஆதி காலத்திலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்கிற ஒன்று. மனிதர்களிடம் மட்டுமல்ல மிருகங்களிடமும் அங்கனமே. இந்த படத்திற்கும் ஈழத்திற்கும்,     காக்காய் உட்கார பனம்பழம் விழுந்தது போல சில காட்சிகள் நெருக்கமாய் தெரிந்திருக்கலாம். மற்றபடி யாதொரு தொடர்பும் இருப்பதாய் யாமறியேன் பராபரமே!. இடைவேளையில் முகம் தெரியாத நண்பர் செக்ண்ட் ஆப் பாருங்க பிரபாகரன் கதைய எடுத்துருக்காங்க என்றார். எனக்கு பிரபாகரனும் தெரியவில்லை ஈழமும் தெரியவில்லை. ஒடுக்கப்படும் இனத்தின் அழுகுரலைத்தவிர.


தாய் ஒருத்தி மார்பை பிதுக்கி ரத்தம் வழிவதை காட்டும் காட்சி கண்களை கரைக்கும் கவிதை. ;நெல்லாடிய நிலமெங்கே பாடலும். இயக்குனரின் உழைப்புக்கும் வித்தியாசமான கதைக்களத்தினை கையாண்ட விதத்திற்குமே பாராட்டலாம். மீண்டும் மீண்டும் மொக்கையான பார்முலாக்களில் சிக்காமல் தொடர்ந்து இது போல அடித்த ஆட வாழ்த்துக்கள். ஸ்பீல்பெர்க்கின் ஜீராசிக் பார்க்,இன்டியானா ஜோன்ஸ் போன்ற படங்கள் ஹாலிவுட்டிற்கு மிகப்புதிதான யுக்திகளுக்கான வரவேற்பை உறுதி செய்தவை. டிரெண்ட் செட்டர் என்றும் கூறலாம். இதுவும் அவ்வகையே! இதற்கு முன் ஹேராம் இது போன்ற முயற்சி. நிச்சயம் ஹேராமைப் போலவே அதிக உழைப்பு இந்த படத்திலும் இருக்கிறது.


திரைக்கதையை எளிமையாக்கியிருந்தால் அனைவருக்குமே பிடித்திருக்கும். படம் ஓடுமா என்பது கேள்விக்குறிதான். நிச்சயம் வரவேற்கத்தக்க முயற்சி. எனக்கு பிடித்திருக்கிறது. இன்னொரு முறை பார்க்க வேண்டும், ரீமா சென்னிற்காகவும் செல்வராகவனுக்காகவும்!