சென்னையிலிருந்து திண்டுக்கல்லுக்கு பஸ் கிடைக்காமல் கோயம்பேடில் அல்லாடிக் கொண்டிருந்தேன். என்னை நெருங்கிய இளைஞர் ஒருவர் இன்னா சார் ரூமா! என்றார். இல்லைங்க என்று இளித்து வைத்தேன். மேற்படி மேட்டர் ஏதாவதுங்களா என்று மண்டையை சொரிந்தார். எனக்குத்தான் இது போன்ற காரியங்களில் புத்தி கந்தகமாய் எரியுமே , டக் என விசயத்தை உள்வாங்கிக்கொண்டு மேலும் தொடர்ந்தேன். மேற்படினா எங்கே? எவ்ளோ?. அவனுக்கு என் மேல் லேசாக நம்பிக்கை வந்திருக்க வேண்டும். இப்போது என்னைப்பார்த்து புன்னகைத்தான். ஆட்கள் பற்றிச்சொன்னான். வெரைட்டி. விலை சொன்னான். இடம் சொன்னான். இதையெல்லாம் சொல்லும் போதே திண்டுக்கல் பேருந்து இரண்டாம் பிளாட்பாரத்தில் யூ டர்ன் அடித்துக்கொண்டிருந்தது. சார் அடுத்த வாட்டி சென்னை வரும்போது உங்க கிட்ட பேசறேன் என அந்த இளைஞனின் எண்ணை வாங்கி குறித்துக்கொண்டேன். பின்னால் எப்போதாவது யாருக்காவது கேட்டால் கொடுக்கலாம் என்கிற சமூக சேவை மனப்பான்மைதான் கூடவே பிறந்ததாச்சே! ஆனால் நிலையத்தில் அத்தனை பேர் இருக்க என்னை மட்டும் குறிவைத்து எப்படி கேட்டான்?
பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். குளிர்சாதனப் பேருந்து அது. உள்ளே ஏறிப்பார்த்தால் ஏற்கனவே வண்டி ஃபுல். நானும் லேசாக குவாட்டர். அதனால் மங்கிய ஒளியில் கண்களை துடைத்துக்கொண்டேன்.. பார்த்தேன். கடைசி இருக்கையில் ஒரு இடம் மட்டும் இருந்தது. தபதபவென விரைந்து சென்று முதலில் என்னுடைய பெரிய அழுக்குப் பிடித்த தோல் பையை அதன் மேல் வைத்துவிட்டு கொஞ்சம் மூச்சும் லேசாக சுற்றி அமர்ந்திருந்த யுவதிகளையும் நோட்டம் விட்டுக்கொண்டேன். அனைவரும் அழகாக இருந்தனர். ஆனால் துணையுடன் இருக்கமாக அமர்ந்திருந்தனர். கொடைக்கானல் , தேனிலவு இத்யாதிகளாக இருக்கக்கூடும். மீண்டும் ஒரு பெருமூச்சு இப்போது கொஞ்சம் சூடாக வெளியானது.
டிரைவருக்கு அருகிலிருந்து என்னைப்பார்த்துக் கொண்டிருந்த கண்டக்டர் விறுவிறுவென ஓடிவந்து சார் இது ஏசி பஸ் என்றார். ஏன்ங்க உங்களுக்கு அதுல ஏதாவது டவுட் இருக்கா என்றேன். இல்லைங்க இதுல டிக்கட் 375 ரூவா என்றார். அதுக்கென்னங்க கூட வேணா உங்களுக்கும் அஞ்சு ரூவா சேர்த்து தரேன், ஏன் இதை எங்கிட்ட மட்டும் ஸ்பெசலா ஓடி வந்து சொல்றீங்க என்றேன். கண்டக்டர் ஏதும் பேசாமல் முறைத்தபடி அங்கிருந்து விலகினார். எனக்கு புரியவில்லை.
ஒருவழியாக இடம் பிடித்து அமர்ந்தேன். வெரிகுட் ஏசி பஸ். போர்த்திக்கொள்ள போர்வை கொடுத்தார்கள். ஆனால் கொடுக்கும் போதே காலைல மடிச்சு குடுத்துருங்க என்று சைடில் பிட்டு வேறு. அதுவும் என்னிடம் மட்டும் ஸ்பெசல் உபதேசம். ங்கொய்யால என்று திட்டவேண்டும் போல் இருந்தது என்ன செய்ய!, ஆவென கொட்டாவி விட்டு கண்ணை மூடி திறந்தால் திண்டுக்கல். வண்டி செம ஸ்பீட் போலருக்கு நமக்கு போதைல சரியா தெரியலையோனு நினைச்சிக்கிட்டேன். விடியற்காலையில் நரிமுகத்தில் விழித்தால் அதிர்ஷ்டம் என்று சொல்லுவார்கள். நான் முழித்தது ஐ.பெரியசாமி முகத்தில்தான். திண்டுக்கல்லில் இறங்கினால் எந்தப்பக்கம் திரும்பினாலும் வாழும் வள்ளலாரே , திருவள்ளுவரே, பண்பில் பெரியாரே , டான்ஸ் மாஸ்டரே, பரோட்டோ மாஸ்டரே , உருட்டுக்கட்டை உலகநாதரே என்று அடிக்கு நான்கு பிளக்ஸ் பேனர்கள். எல்லாவற்றிலும் கலைஞர் மற்றும் ஐபி.சாமி கூட்டணி பப்பரப்பா என சிரித்துக்கொண்டு இருந்தனர். எல்லா பேனரிலும் அழகிரி ஸ்டாலின் மிஸ்ஸிங். ஒரு வேளை இவரும் கலைஞருக்கு மகனா இருப்பாரோ என்று கடுமையான டவுட். அதுக்குத்தான் இருக்காரே திமுக உடன்பிறப்பு!
கூப்பிடு அந்தாளை என அழைத்தேன்.
நம் திமுக தோழருக்கு போன் போட்டு ஐ.பெரியசாமி கலைஞருக்கு என்ன முறை வேணும் என்றேன். யோவ் அந்தாளு கட்சிக்காரரு அவ்ளோதான் வேற ஏதும் ரத்த சொந்தமெல்லாம் கிடையாது, ஆனா திண்டுக்கல் ஏரியா மொத்தமும் அவரு கன்ட்ரோல்தான், திமுகவோட உட்கட்சி அமைப்புகள பார்த்தீங்கன்னா என்று துவங்கினார். பயந்து போய் போனை கட் பண்ணிவிட்டேன். நான் சந்தேகம் கேட்கும் போது நன்றாக தூங்கிக் கொண்டிருந்திருப்பார் போல பாவம் , காலை நான்கு மணிக்கு யார்தான் தூங்க மாட்டார்கள். தட்டி எழுப்பி கேட்டாலும் தலைவன் புகழை சரியாக பரப்புகிற தோழரல்லவா!
பஸ் நிலையத்திற்கு அருகில் ஆட்டோக்கள் நின்று கொண்டிருந்தது. ஒரு கிங்ஸை பற்றவைத்துக்கொண்டு , ஒரு ஆட்டோ அருகில் சென்றேன் , பத்திரிக்கை படித்துக்கொண்டிருந்தார் ( நேரம் காலை 5 ) இங்க கோமத் லாட்ஜ் என்றேன். அது இங்கருந்து இரண்டு கிலோமீட்டர் இருக்கும் இந்த ரோட்ல ஸ்ட்ரைட்டா நடந்து போய் வலது பக்கம் திரும்புனீங்கன்னா வெள்ளை பெயின்ட் அடிச்சிருக்கும் , பக்கத்துல கோல்டன் பார்னு போட்டிருக்கும் பாருங்க என்று மீண்டும் பேப்பருக்குள் குதித்தார். சார் நான் ஆட்டோல போகறதுக்கு கேட்டேன் என்றேன். அசடு வழிய சிரித்தபடி வழி கேக்கறீங்களோனு நினைச்சேன் சார் என்று மண்டையை சொரிந்து கொண்டு முப்பத்தைந்து என்றார் , இருப்பத்தைந்து பேசி முடித்து ஏறினேன். மீண்டும் எனக்கு புரியவில்லை ஏன் அந்தாளு எனக்கு வழி சொன்னான் என்பது.
அடுத்த காட்சி கோமத் லாட்ஜில். சார் ரூம்! அரைத்தூக்கத்திலிருந்த லாட்ஜ் காரரை எழுப்பினேன். கஷ்டப்பட்டு முழித்துப் பார்த்தார். சார் ரூம் மீண்டும் கத்தினேன். சார் சாதா ரூம் 200 ரூவா, டிவி இருக்காது , சுடு தண்ணி வராது, பரவால்லயா புக் பண்ணிக்கவா? ஏன்ங்க டீலக்ஸ் ரூமெல்லாம் கிடையாதா என்றேன். இருக்குங்க அதுனா ஒரு நாளைக்கு 500 ரூவா ஆகும். பரவால்ல அதையே குடுங்க என்றேன். எதையுமே எழுதாமல் 600 ரூவா அட்வான்ஸ் குடுங்க என்றார். ஏன்ங்க அட்ரஸ் போன் நம்பர்லாம் வேண்டாமா? ம்ம் இருங்க என்று ஒரு லெட்ஜரை நீட்டினார். ஒரு வழியாக ரூம் கிடைத்து விட்டதே என்று மகிழ்ச்சியாக இருந்தது. விதி விடாது விரட்டியது. இப்போது ரூம் பாய் வடிவில். ரூம் பாய்க்கு என்னை விட இருபது வயது கூட இருக்க வேண்டும். கையில் ரிமோட்டுடன் நடந்து வந்தார், நானோ என்னுடைய பொட்டி படுக்கைகளையும் சுமந்து கொண்டு விருக் விருக் என்று நடக்க , அவர் ஏதோ கஸ்டமர் போல முன்னால் நடந்தபடி இருந்தார். ரூமை காட்டிவிட்டு ஏதாவது வேணும்னா ரிஷப்சனுக்கு கூப்பிடுங்க என்று வாசலில் சொல்லியபடி நகர ஆரம்பித்தார். சார் சார் எனக்கு டீ.. என்று நான் பேச ஆரம்பிப்பதற்குள் அந்த ஆள் இரண்டு மாடிகள் கடந்து ரிசப்ஷனை அடைந்து விட்டார். ரிமோட்டை போட்டால் டிவி ஓட வில்லை. ஹீட்டரைப் போட்டால் தண்ணீர் ஐஸ் போல வருகிறது. ரிசப்ஷனில் கூப்பிட்டுச் சொன்னேன். நிலையில் மாற்றமில்லை. ஏன் இந்த லாட்ஜ் காரன் நம்மள மதிக்கவே மாட்டேங்கிறானுங்க என்று நினைத்துக்கொண்டேன்..
திண்டுக்கல்லின் புகழ்வாய்ந்த தலப்பாக்கட்டியில் பிரியாணி சாப்பிடச் சென்றேன். அங்கேயும் இதே கதை. ஒரு சிக்கன் பிரியாணி குடுங்க. சாரி சார் மட்டன்தான் இருக்கு அதுவும் விலை 90 ரூவா. எனக்கு பயங்கர கடுப்பாகி விட்டது. யோவ் நான் விலையா கேட்டேன் என எரிந்து வைத்தேன். சேதாரம் அதிகமாக இருந்த பிரியாணி கிடைத்தது.. இப்போதும் புரியவில்லை ஏன் அந்தாளு விலைய சொன்னான்? மீண்டும் குவஸ்டீன் மார்க் எண்.235.
இப்படியாக சென்ற இடமெல்லாம் ‘சிறப்பான’ வரவேற்புகள் கிடைத்த்தால் என்னுடைய கிழிந்த லுங்கியையும் அழுக்கு சட்டையையும் கழட்டி காக்காவிற்கு போட்டுவிட்டு ,ஜாக்கி ஜட்டி வெளியே தெரியும் டாமி ஹில்ஃபிகர் ஜூன்ஸையும் பீட்டர் இங்கிலாந்து சட்டையையும் மாட்டிக்கொண்டு திண்டுக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு பூக்குழி இறங்கி விழாவை சிறப்பித்தேன்!