Pages

28 December 2009

2009 - வினோத் to அதிஷா - வழி - எழுத்து!





வினோத் என்கிற அடையாளத்தை முழுமையாக இழந்து முழுக்க அதிஷாவாகவே மாறிவிட்டிருக்கிறேன். ஆண்டின் துவக்கத்தில் குமுதம் வெளியிட்ட டாப் டென் வலைப்பூக்கள் பட்டியலில் ஏழாமிடம் கொடுத்திருந்தனர். அட நமக்கும் எழுத வருகிறதோ என்று நினைக்க வைத்த நொடி அதுதான். என்னுள் இருந்த அதிஷாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்த நிகழ்வும் அதுதான். எனக்குள் இருந்த எழுத்துக்காரனின் அறிமுகத்தோடு துவங்கியது 2009.

சுஜாதாவைப் போல் எழுத முடியவில்லையே என்று இந்த ஆண்டில் கவலைப்பட்டிருக்கிறேன். தேவையில்லை , நான் என்னைப்போல் எழுதினாலே போதும் என்று உணர்ந்த ஆண்டு. எனக்கான எழுத்து நடையை நான் தேடத்துவங்கிய ஆண்டு. என் வாழ்நாளில் இந்த ஆண்டில்தான் அதிகம் வாசித்திருக்கிறேன்.  கிட்டத்தட்ட 40 பெரியசைஸ் புத்தகங்கள். 25 சின்ன புத்தகங்கள். 40க்கும் மேல் குட்டி புத்தகங்கள். எண்ணிக்கையில்லா சிறுகதைகள். கொஞ்சம் இலக்கியம். மற்றபடி எப்போதும் போல நிறைய சினிமா.. மினிமம் 500.

2010ல் நிறைய புத்தகம், குறைந்த சினிமா பார்ப்பது என முடிவெடுத்திருக்கிறேன். ஊர் சுற்றுவது எனக்கு மிகவும் பிடிக்கும். மிகச்சில இடங்களையே சுற்ற முடிந்திருக்கிறது. அடுத்த ஆண்டில் நிறைய சுற்ற வேண்டும். ஒரு கடுமையான காதல் தோல்வியை சந்தித்தேன். அதிலிருந்து விடுபட ஏதேதோ செய்தாலும் எழுத்து பெருமளவில் உதவியது. நண்பர் கிருஷ்ணனின் மரணமும் , ஈழத்தமிழர் படுகொலைகளும் , முத்துகுமாரின் மரணமும் பெரிதும் பாதித்தது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் புகைப்பிடிப்பதை விட்டுவிட தீர்மானித்திருந்தேன். பின் அந்த தீர்மானத்தை விட்டு விட்டேன்.அது இந்த ஆண்டும் தொடரும் என்றே நம்புகிறேன். தினமும் புகைக்கும் சிகரட்கள் போல நண்பர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்திருக்கிறது. அதில் யார் நண்பர் யார் எதிரி என்று தெரியாத அளவுக்கு வளர்ந்திருக்கிறது. முகத்திற்கு முன்னால் சிரித்து பேசிவிட்டு முதுகில் குத்துகிற நண்பர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. நண்பர்கள் என்று சொல்லிக்கொண்ட பலரும் கண் முன்னே என்னை அவமானப்படுத்தியிருந்தனர். என்னை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காத அந்த நண்பர்கள் சகவாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நல்லது கெட்டது தெரியாமல் எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகும் என்னுடைய குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இந்த ஆண்டு கற்றுக்கொடுத்துள்ளது. வரும் ஆண்டில் அந்த அநண்பர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் விலகியிருக்க எல்லாம் வல்ல இலச்சி மலை ஆத்தா எனக்கு அருள் புரியட்டும்.

கெட்ட நண்பர்கள் எண்ணிக்கை கூடியது போல நல்ல நண்பர்கள் எண்ணிக்கை கூடியதாகத் தெரியவில்லை. ஒற்றை இலக்கங்களில் எண்ணிவிடலாம். லக்கி வீழும் போதும் எழும் போதும் என்னோடு எப்போதும் இருந்த என் நிழல். என் நிழலைப்பற்றி நானே பேசுவது சரியாக இருக்காது. மணிகண்டன்,ஜ்யோவ்ராம் சுந்தர்,பைத்தியக்காரன் சிவராமன் என பலரும் எப்போதும் என் வளர்ச்சியில் மகிழ்ந்தது மனநிறைவை அளித்தது. அவர்களுடைய நெருக்கம் என்னை இன்னும் மேம்படுத்தும்.

பதினைந்து வருடமாக தந்தை இல்லாமல் வாழ்ந்த எனக்கு இந்த ஆண்டு தந்தையைப் போல் ஒருவர் கிடைத்திருக்கிறார். பத்தி பத்தியாக என் எழுத்தை மட்டுமல்ல, என் வாழ்க்கையையும் உயர்த்துகிற அந்த மனிதர் இந்த ஆண்டில் எனக்கு கிடைத்த பொக்கிஷம். என் விளையாட்டுத்தனத்தையும் போக்கிரித்தனத்தையும் குறைத்து என்னை முழுமையாக மாற்றிக்கொண்டிருக்கிறார். அவரது பெயரை சொல்லும் அளவுக்கு இந்த ஆண்டில் எனக்கு தகுதி இருப்பதாய் தெரியவில்லை.

எட்டு வருட கடுமையான மார்க்கெட்டிங் வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கிறது. இப்போது நான் பத்திரிக்கையாளன். இன்னும் ஓரிரு மாதங்களில் எழுத்தாளன் ஆகிவிடுவேன். அடுத்தவருட இறுதிக்குள் சில புத்தகங்களை நிச்சயம் எழுதிவிட தீர்மானித்திருக்கிறேன். நல்ல பத்திரிக்கையாளன் என்று பேர் எடுக்க வேண்டும். அதற்காக நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. சிகரட் பழக்கத்திற்கு ஒப்பான பதிவுப்பழக்கத்தையும் குறைத்துக்கொள்ள தீர்மானித்திருக்கிறேன். எழுதத் தெரியும் ஆனால் எங்கே எழுதுவது என்று திக்குத் தெரியாமல் அலைந்தவனுக்கு விளையாடி மகிழ அருமையான இடமாக இருந்தது பதிவுலகம. எந்த வாய்ப்புகளுக்காக ஏங்கினேனோ அத்தகைய வாய்ப்புகள் இப்போது கிடைத்திருக்கின்றன. அதை எனக்குப் பெற்றுத்தந்தது பதிவுலகம்தான். என்னைப்போல் பதிவுலகில் பலருக்கும் அந்த வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.

அதிரடியான முடிவுகளால் சில மாதங்களில் என் வாழ்க்கை சூழலே மாறிப்போயிருக்கிறது. நிறைய சம்பாத்தியம் , சுகமான வேலை எல்லாவற்றையும் துறந்து எழுத்தை நம்பி என் கேரியரை மாற்றிக்கொண்டிருக்கிறேன். இதனால் என் அம்மாவுக்கு நிறைய வருத்தங்கள் இருந்தாலும், அந்த முடிவு நல்ல முடிவாகவே இருக்கும் என்று நம்புகிறேன்.


இந்த ஆண்டில் எனக்குள் இருந்த எழுத்துக்காரன் வெளிப்பட்டு என்னை மாற்றியது போல அடுத்த ஆண்டு எனக்குள்ளிருந்து எவன் வெளிப்பட்டு என்ன செய்யப்போகிறானோ? என்கிற அச்சமிருந்தாலும் எப்போதும் போல எது நடந்தாலும் நிச்சயம் நல்லதே நடக்கும் என்கிற நம்பிக்கையோடு 2009ற்கு விடையளிக்கிறேன்!

புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கு!