தீபாவளி என்றாலே பட்டாசு , இனிப்பு , புத்தாடைதான் ஸ்பெசல். அத்துடன் அன்றைக்கு ரிலீஸாகிய படத்தை அன்றைக்கே பார்த்து மகிழ்வது. மதுரையில் வருடம்தோறும் ரஜினியோ கமலோ விஜயோ அஜித்தோ அவர்களுடைய படங்கள் ரிலீஸாகவில்லையென்றால் அந்த தீபாவளியை கறுப்பு தீபாவளியாக அறிவித்து போஸ்டர்கள் ஒட்டுவது வழக்கம். நல்ல வேளையாக அந்த மொத்த ரசிகர் கூட்டத்துக்கும் இந்த தீபாவளி பிளாக் ஆகிவிட்டது. வேட்டைக்காரன் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ( ஜாலியான போஸ்ட்டுக்கு உத்திரவாதம் ! ) .
சூர்யா நமீதா ஜெயம்ரவி என மூன்றே பேரின் திரைப்படம்தான் வெளியாகியிருக்கிறது. ஆதவன் திரைப்படம் குறித்து தனியாக அலசி காயப்போட்டு கபடி ஆடலாம். மற்ற இரண்டு படத்திற்கு ஒரு விமர்சனமே ஓவர். தீபாவளிக்கு சிலர் பட்டாசு வெடித்து கையே சுட்டுக்கொள்வார்கள். நான் படம் பார்த்து சூ வை... ம்ம்.. என் சோகக்கதை என்னோடு போகட்டும்! ஓவர் டூ தி இரண்டு மூவிஸ்.
டாஸ்மாக்கில் சரக்கடிப்பவர்கள் பக்கத்துவீட்டு பரம சிவம் குறித்து பேச ஆரம்பித்தால் அப்படியே நூல் பிடித்து வளர்ந்து விருட்சமாகி அது பாகிஸ்தான் முதல் ஓபாமா பிரபஞ்சம் பிளாக் ஹோல் வரைக்கும் நீளும். திராவிடம் பார்ப்பனீயம் புவனேஸ்வரி என சரவெடியாய் இருக்கும் அவர்களது பேச்சு. ஆனால் எதையும் உருப்படியாக பேச மாட்டார்கள். போதை தெளிந்தால் பழைய குருடி கதவை திறடி கதைதான். அந்த கதை பின்னொரு சமயம் சொல்கிறேன்.
பேராண்மை ஒன்றரை ( கிட்டத்தட்ட இரண்டு ) வருடங்களாக ஜெயம் ரவியின் நொங்கை பிதுக்கி காடு மலையெல்லாம் அலைந்து திரிந்து எடுக்கப்பட்ட படம். இட ஓதுக்கீடு , சாதிப்பிரச்சனை, சர்வதேச அரசியல் , பெண்ணீயம், காடுகள் அழிப்பு , சுற்றுசூழல் பாதுகாப்பு , வனத்துறையில் நடக்கும் பிரச்சனைகள் , இந்தியாவின் வளர்ச்சி , தேசியம் , மலைவாழ் மக்களின் வாழ்வுரிமை என இன்னும் இத்யாதி இத்யாதிகளை ஊறுகாய் போல போகிற போக்கில் தொட்டுச்செல்கிறது. ஈ திரைப்படத்தில் மருத்துவம் மற்றும் மருந்துக்கம்பெனிகள் , தொற்று நோய்கள் சார்ந்த சர்வதேச பிரச்சனையை செவிட்டில் அறைந்தாற் போல சொல்லியிருப்பார். எல்லா காமன் மேன்கள் மற்றும் காமன் வுமன்களுக்கும் புரியும்படி இருக்கும். ஆனால் இதிலோ எல்லா கருமாந்திர பிரச்சனைகளையும் கையிலெடுத்துக்கொண்டு எதையும் புரியும் படி சொல்ல முயன்று தோற்றிருக்கிறார் ஜனநாதன்.
படத்தின் முதல் பகுதி முழுக்க நான்கு பெண்கள் கூத்தடிக்கிறார்கள். ஜெயம் ரவியை அவமானப்படுத்துகிறார்கள். ஆனால் அதற்கான காரணம் தெளிவாக இல்லை. ( படத்தின் முதல் பகுதியின் பெரும்பாலான வசனங்கள் சென்சார் செய்யப்பட்டதால் புரியாமல் போயிருக்க வாய்ப்புண்டு ). அதனால் சுவாரஸ்யம் இல்லை. வடிவேலுவின் ஹாஸ்யமும் எடுபடவில்லை. இப்படி பல இல்லைகளுடன் முதல் பாதி மொக்கையாக கழிந்தது. படத்தின் ஆரம்பம் இன்டர்வெல்லில்தான் துவங்குகிறது. அதற்கு பின் படம் படு ஸ்பீட். அருமையான ஆக்சன் , நல்ல சேஸிங். ( சில இடங்கள் அகிராவின் செவன் சாமுராய் திரைப்படத்தை ஞாயபகப்படுத்தியது ) . ஹாலிவுட் நடிகர்கூட நடித்திருக்கிறார்கள்.
முதல் பாதியை வெற்றிகரமாய் கடந்து விட்டால் இரண்டாம் பாதியில் படம் மின்னல் போல பட்டையை கிளப்புகிறது. படத்தின் வசனங்கள் பல இடங்களில் செம ஷார்ப். வசனங்களில் சென்ஸார் விளையாடிருக்கிறார்கள். அதையும் மீறி பல இடங்களில் ஜனநாதன் என்றொரு புரட்சிக்காரனின் குரல் ஆங்காங்கே ஒலிக்காமல் இல்லை. ஜெயம் ரவி , வித்யாசம். நன்றாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் குரலிலும் உழைப்பு தெரிகிறது. அந்த ஐந்து பெண்கள்? எத்திராஜ் காலேஜில் பிடித்தது போல செம இளமை. துறுதுறுப்பு. இயக்குனர் அவர்களுடைய உடையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி ஒகே!. நிறைய பட்ஜெட்டில் பெரிய நட்சத்திரங்களை வைத்து இதே படத்தை எடுத்திருந்தால் இது மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கும். பல இடங்களில் கிராபிக்ஸும் ஆக்சனும் பட்ஜெட்டில் பல் இளிக்கிறது.
காடு மலை என கடினமான பாதைகளில் பயணிக்கும் போது ஆரம்பத்தில் கல்முள் என பிரச்சனைகளை கடந்துவிட்டால் அருமையான அருவியோ சோலையோ கட்டாயம் தென்படும். இந்த திரைப்படத்திலும் மொக்கையான முதல் பாதியை பல்லைக்கடித்துக்கொண்டு கடந்து விட்டால் , அருமையான ஆக்சன் அட்வென்ச்சருக்கு உத்திரவாதம். யாருமே பேசாத பல பிரச்சனைகளை மேலோட்டமாக யார் மனதிலும் பதியாத அளவிற்கு பேசிய ஜனநாதனுக்கு ஷொட்டு+குட்டு.
விட்டாலாச்சார்யாவின் ஜகன் மோகினி திரைப்படத்தை சிறுவயதிலிருந்து ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் நிச்சயம் என்னை திருப்திப்படுத்தியிருக்கிறது. சிறுவயதில் பயமுறுத்தும் வெள்ளைப்பேய். கொஞ்சம் வளர்ந்த பின் மாயாஜாலம். இன்னும் வளர்ந்த பின் ஜெயமாலினியின் கவர்ச்சி. என அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்வித்த திரைப்படம் அது. (படம் மகா மொக்கையாக இருந்தாலும் IT JUST ENTERTAINING). அதே படத்தை நமீதாவை வைத்து ரீமேக்கி இருக்கிறார்கள். அதனால் பழைய படத்தின் மீதான காதலும் , நமீதாவின் மீதான ஆவலும் புதிய ஜ.மோவை காண காரணங்கள் ஆகின. படத்தின் கதை மாற்றப்பட்டுள்ளது. பழைய கதையையே எடுத்திருக்கலாம்!
நவமோகினி,கடல் மோகினி,யுகமாயினி இப்படி நாலைந்து விட்டலின் படங்களில் இருந்து ஒரு கதையை எடுத்துக்கொண்டு , நமீதாவின் ______களை நம்பியே களத்தில் இறங்கியிருக்கின்றனர். நமீதாவை பார்க்க பயமாக இருக்கிறது. பூதங்களை யாரும் விரும்புவதில்லை. அவரது நடிப்பு , மற்ற காட்சிகள் , நடிகர்களின் நடிப்பு இரண்டாம்தர பிட்டுப்படங்களைப்போல இருக்கிறது. வடிவேலு+வெண்ணிற ஆடை மூர்த்திக்கூட்டணியில் காமெடி.. பச்சை பச்சையா வசனம். ஊதி ஊதி வாய் இப்படி வீங்கிருக்கு, கைதான் பிசஞ்சுகிட்டு இருக்கே வாய்ல வச்சு செய்றதுதானே என்கிற ரேஞ்சில் அருமையான வசனங்கள். (படம் முழுக்கவே வசனங்கள் இப்படித்தான் இருக்கின்றன. வெண்ணிற ஆடை மூர்த்திதான் வசனங்கள் எழுதினாரோ என்னவோ?). அம்மன் திரைப்படம் வெளியாகி பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது , அதை விட கேவலமான கிராபிக்ஸ். டிஷ்னி சானலில் இதைவிட நல்ல கிராபிக்ஸ் வருகிறது. இசை இளையராஜா.. பாவம் இவரு.. இருக்க இருக்கு ஷகிலா படத்துக்கு கூட மியுசிக் போட்டு பேர கெடுத்துக்குவாரு போலருக்கு. பிண்ணனி இசையில் ஒரு இடத்தில் கூட இளையராஜா இல்லை. பாடல்களிலும்!. முக்கால் வாசி படத்திலேயே எழுந்து வந்து விட்டதால் இந்த படத்திற்கு இதற்கு மேல் விமர்சனம் செய்ய ஒன்றுமில்லை.
மக்கள் நலனுக்காக ஒரு பின் குறிப்பு -
பிட்டுக்கொசரமாவது ஜகன் மோகினியை பார்க்கலாம் என்று நினைப்பவர்கள் எதையும் எதிர்பார்த்து போகவேண்டாம் அங்கே ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.